Friday, June 27, 2014

கெடை காடு நாவல் பற்றி சுகா

அன்புள்ள ஏக்நாத்,

நேற்றிரவு முழுமூச்சாக அமர்ந்து  ‘கெடை காடு’ நாவலைப் படித்து
முடித்துவிட்டேன். குள்ராட்டிக்கு எப்போது போகக் கொடுத்து வைக்கப்
போகிறதோ என்று மனம் ஏங்கியது. அதுவே உங்களின் வெற்றி. புழங்கிப் பல
வருடங்கள் ஆகிவிட்ட, மனசுக்குள் ஒளிந்திருந்த பல வார்த்தைகளை மீண்டும் நினைவுப்படுத்தி வெளியே கொண்டு வந்து விட்டீர்கள். குறிப்பாக
சொல்வதானால், ‘ஈராய்ங்கம்’. எத்தனை வருடங்கள் ஆயிற்று, அந்த வார்த்தையைக் கேட்டு! அதற்காகவே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நாவலின் பல இடங்களில் உங்களை மீறிய வரிகள் வந்து விழுந்திருக்கின்றன.
‘மண்ணுக்குள் அமிழ்ந்தும் வெளிப்பட்டும் , மீண்டும் அமிழ்ந்தும் கிடக்கிற
வேர்களில், நம் முன்னோர்களின் கால்ரேகைகள் பதிந்துக் கிடக்கலாம்.வேரோடு வேராக, நம் மூதாதையர்களின் வேர்வைகளும் வளர்ந்திருக்கலாம்’ போன்ற வரிகள், படிக்கும் போதே உணர வைத்த வரிகள்.

’கூட்டாஞ்சோற்றின் மணம் காடுகளின் காற்றில் வேறொரு வாசனையை வீசிச் சென்றது. இவ்வாசனை அப்படியே கீழிறங்கி எதுவரை போகுமோ?’ என்று எழுத எல்லோராலும் முடியாது. கண்டதையும் யோசிக்கிற ஒரு கோட்டிக்காரனால்தான் அப்படி எழுத முடியும். நவ்வாப்பழம் தின்ற தீப்பெட்டி வண்ணதில் இருக்கிற பற்கறைகள் வேண்டுமானால், காலையில் உமிக்கரி கொண்டு  பல் தேய்க்கும் போது காணாமல் போய்விடலாம். ஆனால் உங்கள் மனசுக்குள் இருக்கிற ஆம்பூர்க்காரன் ஒருநாளும் சாகவே மாட்டான் என்பதை இந்த நாவலைப் படித்து முடித்ததும் உணர்ந்து கொண்டேன்.

மீனாட்சி நடுநிலைப்பள்ளிக்கு எதிரே கார் மோதி ரத்தவெள்ளத்தில் கிடந்த மணி ஆசாரி பற்றி ஒரு சிறு குறிப்புதான் நாவலில் வருகிறது. ஆனால், அவரை ஓடிப் போய்த் தூக்கிய காசி சார்வாளிடம், ‘என் பொண்டாட்டி, புள்ளைல யாரு பாப்பா சார்வாள்?’ என்று கேட்ட அவரது குரல், இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. இப்படி கலங்க வைத்த இடங்களைப் போல, ரசிக்க வைத்த இடங்களும் ஏராளம்.

ஆழ்வார்குறிச்சி தேரோட்டத்தின் போது உச்சியும், மூக்கம்மாவும் சேர்ந்து
நிற்க யானை அவர்களிருவரையும் ஆசீர்வதிக்கிற இடம், அப்படியான ஒன்று.
அதுவும், அந்த நிமிடம் இருவருக்குமே திருமணம் முடிந்துவிட்டதைப் போலவும், கணவன் மனைவியாக இப்படியே ஊருக்குள் போகலாமா என்று உச்சி யோசிப்பதும், அந்த வயதுக்கேயுரிய இயல்பான ஒன்று. குள்ராட்டியில் மல்லாந்துப் படுத்துக் கிடக்கும் உச்சி, நிலவில் பாட்டி சுடுவது ஆம வடையா, உளுந்த வடையா என்று யோசிப்பதும் மிகையேயில்லாத யதார்த்தம்.

ஒரு எழுத்தாளனாக பல இடங்களில் உங்கள் குரல் கேட்கிறது. அது குறையல்ல. அப்படி கேட்பது பல இடங்களில் நன்றாக வந்திருக்கிறது என்பதற்கு உதாரணம், கல்யாணியையும், அவள் மாட்டையும் பற்றிக் குறிப்பிடுகிற இடம். ‘வாயில்லா ஜீவன், காப்பாற்றுகிறது வாயுள்ள ஜீவனை’.

கந்தையாவும், தவிட்டானும், உச்சிமகாளியும் காட்டில் இருந்து இறங்கி வரும்
போது ஊர் அவர்களை நோக்கி வருவது போல, நாவலைப் படித்து முடிக்கும் போது, நான் பிறந்த ஆழ்வார்குறிச்சி என்னை நோக்கி வருவதை உணர்ந்தேன், ஏக்நாத்.

வீட்டுக்கு வந்த உச்சியை, தேக்கி வைத்திருந்த சந்தோஷச் சிரிப்புடன்
வரவேற்கும் அவன் தாய் புண்ணியத்தாயி, ‘காட்டுல என்னத்தல கண்ட?’ என்று கேட்கும் போது, அவிழ்ந்து விழுந்த சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்ட
உச்சிமகாளி சொல்கிறானே, ‘காட்டையே பாத்தாச்சு. வேற என்னத்த பாத்தியான்னு கேக்கே?’ என்று. அந்த ஒரு பதிலுக்குள், ‘கெடை காடு’ நாவல் அடங்கி விடுகிறது.

வாழ்த்துகள்.

சுகா

2 comments:

Venkatesh said...

Where to buy this book, online?

ஆடுமாடு said...

வெங்கடேஷ் சார்,
இந்தியாவுக்குள் என்றால் விபிபியில் வாங்கலாம்.
முகவரி:

காவ்யா,
16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்
கோடம்பாக்கம்
சென்னை- 24

வெளிநாடு என்றால் உடுமலை.காம்,
discoverybookpalace.com ல் வாங்கலாம்.