Friday, March 7, 2014

சினிமா : ஒரு புதிய முயற்சி

கனவுகள்தான் வாழ்க்கையை அழகாக்குகிறது. அதற்கு கட்டுப்பாடுகள் இல்லை. காலங்கள் இல்லை. எல்லையின்றி விரியும் விசித்திர இயந்திரம் அது. மனித கனவுகளின் உச்சத்தை அல்லது யாதார்த்த வாழ்வின் ரசனையை, திரை வழி கொண்டு வருகிறது சினிமா. அந்தக் காட்சியின் வழி மனம் லேசாகிறது அல்லது கனமாகிறது. அதனால்தான் அதற்கு கனவுத் தொழிற்சாலை என்றும் பெயர்.

கோடிகளில் ஆட்டம் ஆடும் திரையுலகம் அவ்வப்போது மாற்றங்களை ஏற்றுக்கொண்டே வந்திருக்கிறது. சமீபத்தில் பிலிம் யுகம் முடிந்து டிஜிட்டலுக்கு மாறியிருக்கிறது சினிமா. டிஜிட்டலின் வழி சினிமா எளிமையாகி இருக்கிறது. புகைப்படம் எடுக்கும் கேமராவில் கூட இன்று சினிமா எடுத்துவிட முடியும் என்கிற டெக்னாலஜி நமக்கு வரம். இதன் மூலம் புதிய இயக்குனர்கள் உருவாகி இருக்கிறார்கள். அவர்களின் வழி, புதிய சிந்தனைகள் வெளிப்பட்டிருக்கின்றன. இன்னும் பலர், கனவுகளை கண்களில் வைத்துக்கொண்டு தயாரிப்பாளர்களுக்கு காத்திருக்கிறார்கள். கோடம்பாக்கம் இவர்களாலும் நிரம்பி இருக்கிறது. இவர்களின் அடுத்த நம்பிக்கையாக வந்திருக்கிறது, ‘கிரவுடட் பண்ட்’ சினிமா.

பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் வாங்கி அதை கொண்டு படம் பண்ணுவது. படத்தின் வியாபாரத்துக்குப் பிறகு அவர்கள் பணத்தை லாபத்துடன் திருப்பிக்கொடுப்பது. இதற்காகவே சில இணையதளங்கள் இப்போது உருவாகி இருக்கின்றன. அதில் விவரங்களை ஏற்றிவிட்டால் போதும். பிடித்திருந்தால் எங்கிருந்தோ முகம் தெரியாத பலர் முதலீடு செய்கின்றனர். அப்படி உருவாகி வெற்றி பெற்ற கன்னட படம், ‘லூசியா’. (இது, தமிழில் ரீமேக் ஆகிறது). இந்தியில் ‘லஞ்ச்பாக்ஸ்’, ‘ஐ எம்’ உட்பட சில படங்கள் இப்படி உருவாகி இருக்கின்றன.

ஒரு வகையில் இது திரைப்புரட்சி மாதிரி தோன்றினாலும் இதிலும் இருக்கிறது சிக்கல்கள்.

‘கிரவுடட் பண்ட் புதிய விஷயமில்லை. தமிழில் பல படங்கள் அந்த முயற்சியில் நடந்திருக்கின்றன. ஆனால் இதற்கு திட்டமிடல் முக்கியம். ‘லூசியா’ 85 லட்சம் ரூபாயில் எடுக்கப்படம். படத்தின் இயக்குனரே பணத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சொன்ன நாளில், சொன்ன தேதியில், சொன்ன முதலீட்டில் அவரால் படத்தை எடுக்க முடிந்தது. தமிழில் அது சாத்தியமா?’ என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.

சரிதான். நாற்பது நாளில் படத்தை முடிக்கிறேன் என்று சொல்லும் பல இயக்குனர்கள், ஐம்பது நாள், ஐம்பத்தை நாள் என்றுதான் முடித்திருக்கிறார்கள். இதனால் பட்ஜெட் ஏறியதுதான் மிச்சம். அப்படி பட்ஜெட் ஏறினால் இதில் சிக்கல்தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சரியான திட்டமிடல் இருந்தால், கிரவுடட் பண்ட் புதிய இயக்குனர்களுக்குச் சரியான வாய்ப்பு.

குறைகள் இல்லாமல் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் டிஜிட்டல் வந்த போது அதில் பிக்சல் பிரச்னைகள் இருக்கத்தான் செய்தன. இப்போது டிஜிட்டல் முழுமையாக ஆக்ரமித்த மாதிரி, கிரவுடட் பண்ட் சினிமா ஆக்கிரமிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஆரம்பித்தால், பல புதிய இயக்குனர்களின் கண்களில் தேங்கும் கனவுகள், திரையில் வெளிப்படும்.

தினகரன் தலையங்கம் 17.02.2014.

1 comment:

PAUL VANNAN said...

I NEED YOUR PADIYAL SAPPADU , NOT FIVE STAR HOTEL FOOD ( THOUGH IT IS DELICIOUS).

WITH LOVE ,
P.PAUL VANNAN