Friday, March 16, 2012

பூகம்ப பூமியில் மூன்று நாள் - 2

டெல்லியிலிருந்து அதுல் வந்திருந்தார். இதற்கு முன் அறிமுகமில்லை. ஆனால், பல வருடம் பழகிய முகமாக தெரிந்தது. முன்பின் தெரியாதவர்களிடம் முகம் கொடுத்து பேசவும் பேசாமல் இருப்பதற்கும் முக்கியமானதாகவே இருக்கிறது முகம். இரண்டு நாட்களுக்கு முன்பே ஹாங்காங் சென்றுவிட்டு அங்கிருந்து இங்கு வந்ததாகச் சொன்னார். பிறகு அவர் சாப்பிடும்வரை நிறைய பேசிவிட்டு, அறைக்குச் சென்றோம். எனது அறைக்கு அடுத்து அவரது ரூம். தூக்கம் பொங்கி வழிந்துகொண்டிருந்தாலும் படுத்தால் தூக்கம் வராமலேயே இருந்தது. பிறகு, 'நைட் ரவுண்ட்ஸ் போலாமா?' என்று அதுலிடம் கேட்டதும் ,'ம்ம்' என்றார். இறங்கினோம். இரண்டு கைகளையும் பேண்டுக்குள் விட்டுக்கொண்டு நடுங்கி கொண்டே சென்றிருந்தோம். ஓட்டலில் இருந்து இறங்கியதுமே ஏரியா பளிச்சென்று இருந்தது. மணிரத்னம் படங்களில் வருவது போலான அழகான மரங்களும் அதற்கு கீழே வண்ணங்கள் பூசப்பட்ட பெஞ்ச்களும் இருந்தன. அமர்ந்து கால் மேல் கால் போட்டு இருக்க நினைத்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு முடியவில்லை. குளிர். அதுலை இந்தக் குளிர் அதிகம் வாட்டவில்லை. 'டெல்லி குளிரை நீங்க பார்த்ததில்லையா?' என்றார். ம்ஹும் என்றேன்.


எதிரில் நான்கைந்து இந்திய முகங்கள், பாருக்குள் அவசரமாகச் சென்றன. எனக்கும் ரெண்டு பெக் போடலாம் எனத் தோன்றியது. ஆனால், கேள்விபட்ட விலைவாசி தன்னால் போதையாக்கியிருந்தது என்னை. சாலைகள் அவ்வளவு அகலமாக இல்லை. ஆனால், சுத்தமாக, அழகாக இருந்தன. அந்த இரவிலும் மக்கள் அவசரமாக எங்கோ போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். சாலையை கடக்க சிக்னலுக்காக காத்திருந்தோம். இறக்கமும் ஏற்றமுமாக சாலை இருந்தது. பச்சை சிக்னல் விழுந்த பின்னும் மெதுவாக சென்றுக்கொண்டிருந்த வயதானவர்களுக்காக, வாகனங்கள் அப்படியே அங்கு நின்றது ஆச்சர்யமாக இருந்தது. எல்லை மீறல்தான் என்றாலும் இதைப் பயன்படுத்தி நாங்களும் மெதுவாக நடந்தோம். '''ஏய்...சாவுக்கிராக்கி. வூட்டாண்ட சொல்லிட்டுவந்துட்டியா?' என்பது மாதிரியான எந்த திட்டும் அந்த சாலையில் கேட்கவில்லை. மாறாக இனிமையான புன்னகை. சக மனிதனை மதிக்கிற அல்லது மரியாதை கொடுக்கிற அந்த மக்களின் அன்பில் சின்னதாக கரையலாம் போலிருந்தது. அதுல், 'டெல்லியில இப்படி கிராஸ் பண்ண முடியுமா?" என்பதை சொல்லிக்கொண்டு வந்தார்.

வரிசையாகத் தெரிந்த கடைகளில், நாய்க்குட்டிகள் விற்கும் கடையைப் பார்த்ததும் அதுலுக்கு போட்டோ எடுக்க வேண்டும் போல் இருந்தது. அது மட்டுமல்லாமல், ஓவர் குளிரைச் சமாளிக்க ஏதாவது கடைக்குள் நுழைந்தால் ஹீட்டர் போட்டிருப்பார்கள் என்கிற நப்பாசைதான். உள்ளுக்குள் நுழைந்து, ஒவ்வொரு நாய்க்குட்டியாகப் பார்த்துவிட்டு, நம்மூர் தெருநாய் குட்டிக்கு 13 ஆயிரம் எண் என்று போடப்பட்டிருந்த போர்டை பார்த்ததும் எனது வீட்டுக்கு அருகில் வளரும் விருமாண்டி ஞாபகத்துக்கு வந்தது. கண்ணாடி கூண்டு மாதிரியான கடைக்குள் நின்றுகொண்டு அங்கும் இங்குமாக மாற்றி மாற்றிப் புகைப்படம் எடுத்தார் அதுல். கடையில் இருந்த பெண்மணி, அதிகம் பேசவில்லை. குறைந்தபட்சம் ஏதாவது வேண்டுமா என்று கூட கேட்கவில்லை. புகைப்படம் எடுத்துவிட்டு வெளியில் போகும்போது, சிரிப்பு. 'இவங்க என்னத்தை வாங்குவாங்க' என்று முதலிலேயே நினைத்திருப்பாரோ என்னவோ? நடக்க நடக்க வளைந்து நெளிந்து போய்க்கொண்டிருந்தது சாலை. கால் வலிக்க ஆரம்பித்தது. அதுல், அறைக்குப் போகலாம் என்றார். திரும்பினோம். படுத்ததும் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

காலையில் கான்பரன்ஸ். பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்கு முடித்துவிட்டார்கள். கான்பரஸ் நடந்த அறைக்குள் அவ்வப்போது வந்து தன் இருப்பை ஞாபகப்படுத்திச் சென்றது குளிர்.

மும்பையிலிருந்து வரவேண்டிய அஜய் வந்ததும் மூவரும் ஒன்றாக உட்கார்ந்திருந்தோம். கான்பிரன்ஸ் முடிந்து வெளியே வந்ததும், ஹாலின் கண்ணாடி வழியாக எதிரில் பார்த்துக்கொண்டிருந்தோம். முழுவதும் உடலை மூடியிருந்த பெண், தனது மகனை (இரண்டு வயதிருக்கலாம்) தள்ளுவண்டியில் கொண்டு வந்து இறக்கினாள். குழந்தை இறங்கி கொஞ்சமாக நடந்து கொஞ்சமாக விழுந்து சிரித்தது. அந்தப் பெண் தூக்கி விட்டு மீண்டும் நிறுத்தினாள். அதற்கு அருகிலேயே, இந்த ஒரு மணிவாக்கிலும் ஜாக்கிங் சென்றுகொண்டிருந்தார்கள் இரண்டு பேர். அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பிறகு எங்களை ஒவ்வொரு குரூப்பாகப் பிரித்தார்கள். என்னுடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த லிஸா, மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த ஒருவர். பார்த்த பத்து நிமிடத்திலேயே லொட லொடக்க ஆரம்பித்தாள் லிஸா. 'உங்க கூட நின்னாங்களே... அவங்களும் இந்தியாதானே? அப்புறம் ஏன் இங்கிலீஷ்ல பேசறீங்க?" என்ற நியாயமான கேள்வியைக் கேட்டாள். 'இந்தியாவுல அறுபதுக்கும் மேற்பட்ட மொழி இருக்கு தெரியுமா?' என்றதும் ஷாக் ஆனாள். நிஜமாவா சொல்றீங்க? என்று நினைத்து நினைத்துக்கேட்டுக்கொண்டிருந்தாள். 'பிறகு எப்படி எல்லாரும் கம்யூனிக்கேட் பண்ணுவீங்க?' என்றாள். அதான் எங்க திறமையே. 'நான் தமிழ்...'என்றதும், உங்க மொழியை நான் கேள்விபட்டிருக்கேன் என்றார். ஸ்ரீலங்காவிலும் தமிழ் இருக்கில்லையா? என்றாள். அங்கு மட்டும்தான் சரியாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கையில், 'ஹாய்' என்று வந்து சேர்ந்தார் ஹீரோயின். சின்ன அறிமுகத்துக்குப் பிறகு பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம்.

'உங்க ஹேர் ஸ்டைல் ஏன் போன படத்துல இருந்த மாதிரி இல்லை'

' ஹேருக்கு இப்ப கலரை மாத்திட்டீங்களா?'

'ரொம்ப ஸ்லிம் ஆனதால, ஸ்வீட்டாயிருக்கீங்க தெரியுமா?

'உண்மையை சொல்லுங்க... நீங்க அந்த ஹீரோவோட டேட்டிங் போறீங்க தானே?'

'இந்த படத்துல உங்க கிஸ்ஸிங் சீனை ரொம்ப ஆவலா எதிர்பார்த்துட்டிருக்கேன்'
-இப்படியான 'உருப்படியான' கேள்விபதில்களாகப் போய்க்கொண்டிருந்தது. 'இந்தியாவுல எனக்கு ரெண்டு பேரை தெரியும்...' என்று பார்த்த ஹீரோயின், 'ஒருத்தர் ஐஸ்வர்யா ராய். இன்னொருத்தர் நீங்க' என்று சொல்லிவிட்டு குழந்தையாகச் சிரித்தார். இளம் பெண்கள் சிரிக்கும் போது இயல்பாகவே சிலிர்க்கும் உடல் ஹீரோயின் சிரித்தால் சும்மா இருக்குமா? எனக்கு வலதுபுறம் இருந்த அவரிடம், 'தேங்க்ஸ்' என்று கைகொடுத்துவிட்டு கைவிரல்களை பார்த்தவாறு இன்றுவரை பூரிப்பில் இருக்கிறேன். அந்த ஸ்வீட் ஹீரோயின் emma stone.

மதியம் லஞ்ச் முடிந்து ரிசப்ஷனில் உட்கார்ந்ததும், அஜய் சொன்னார்.

'என் பிரண்ட் இங்க ஒர்க் பண்றார். பெயர் சஞ்சய் பாண்டே. எகனாமிஸ்ட். மூணு மணிக்கு வர்றதா சொல்லியிருக்கார். வந்ததும் ஊர் சுற்றப்போறோம்'.

ஓகே. முன்பின் தெரியாத ஊரில், தெரியாமல் அலைவதை விட, தெரிந்த ஒருவருடன் தெரியாமல் அலைவது சுவாரஸ்யமானது என்பதால் அவருக்காகக் காத்திருந்தோம்.

நாளை தொடர்கிறேன்.

2 comments:

இரசிகை said...

முன்பின் தெரியாதவர்களிடம் முகம் கொடுத்து பேசவும் பேசாமல் இருப்பதற்கும் முக்கியமானதாகவே இருக்கிறது முகம்.

:)

துபாய் ராஜா said...

//'உங்க கூட நின்னாங்களே... அவங்களும் இந்தியாதானே? அப்புறம் ஏன் இங்கிலீஷ்ல பேசறீங்க?" என்ற நியாயமான கேள்வியைக் கேட்டாள். 'இந்தியாவுல அறுபதுக்கும் மேற்பட்ட மொழி இருக்கு தெரியுமா?' என்றதும் ஷாக் ஆனாள். நிஜமாவா சொல்றீங்க? என்று நினைத்து நினைத்துக்கேட்டுக்கொண்டிருந்தாள். 'பிறகு எப்படி எல்லாரும் கம்யூனிக்கேட் பண்ணுவீங்க?' என்றாள். அதான் எங்க திறமையே.//

நான் போன நாடுகளில் எல்லாம் இதே கேள்விதான்.இதே பதில்தான். :))