Wednesday, June 19, 2013

பத்து தலைப்பில் ஷாரூக் !

சாதாரண சக மனிதனை சந்திக்கப் போகும் மனநிலைதான் ஷாரூக் கானை சந்திக்கும் வரை.
 'தாரே ஜமின்பர்' நேரத்தில் ஆமீர்கானை சந்திக்கும்போது நெஞ்சுக்குள் இருந்த படபடப்போ, அல்லது ஆரவாரமோ சுத்தமாக இல்லை.  சேனல்களில் பார்க்கும் ஷாரூக்கின் பேட்டிகளில் அவரது காமெடியான பேச்சு வசீகரித்திருந்தாலும் அவரை சந்திக்கும் போது பெரிய ஈர்ப்பு ஏதும் இல்லை.

மும்பை பாந்த்ராவிலுள்ள தாஜ் ஹோட்டலில் மதியம் இரண்டரை மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு. ஆனால் வழக்கம் போல் ஷாரூக் வந்தது மூன்றரை மணிக்கு. அதுவரை எதிரில் வந்துபோகும் கடல் அலைகளை கண்ணாடி ஜன்னலுக்குள் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். கருமேகங்கள் சூழ்ந்திருக்க, இலேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. குடைபிடித்தபடியே காதல் ஜோடிகள் அந்த மழையிலும் சுற்றுச்சுவரில் அமர்ந்து தங்களை நனைத்துக்கொண்டிருந்தனர். பின்பக்கம் கடந்து செல்பவர்கள் பற்றியோ அல்லது அருகருகிலேயே அமர்ந்திருக்கும் பிற காதல் ஜோடிகள் பற்றியோ கவலைப்படமால் லிப்லாக்கில் இருந்தது ஒரு ஜோடி. சென்னை மெரீனாவில் இப்படி ஓபனாக இல்லாமல் கொஞ்சம் ஒளிவு மறைவாக முத்தம் கொடுக்கிறார்கள் என்பதில்  மகிழ்ச்சிதான்.

முன்பு மும்பை செம்பூர் பகுதியில் வேலைக்காகச் சுற்றித்திரிந்த காலத்தில் எந்த இந்தி நடிகரையும் எனக்குப் பிடித்ததில்லை. ஓவர் மேக்கப்போடு பக்கம் பக்கமாக வசனம் பேசும் ஹீரோக்களை கண்டாலே குமட்டிக்கொண்டு வரும் என்பதால் இந்திப் படங்களை அப்போது அதிகம் பார்ப்பதில்லை. உடனிருந்த நண்பன் தொல்லையால் அமிதாப் நடித்த சில படங்களை பார்த்ததுண்டு.

சுடச்சுட தமிழ் படங்கள், தெருவெங்கும் முளைத்திருக்கும் வீடியோ தியேட்டர்களில் ஒளிபரப்பாகும் என்பதால் அதுவே போதுமானதாக இருந்தது.
காலம் என்னை மீண்டும் சென்னைக்கு விரட்ட, அண்ணாசாலை தேவி காம்ப்ளக்ஸ் பின்பக்கம் அறை என்பதால் இரவுகளில் நண்பர்களுடன் இந்தி படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அப்படிப் பார்த்த படங்களில் அப்போது என்னை கவர்ந்த படமாக இருந்தது, 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே'. ஷாரூக்கை விட என் விருப்ப நாயகியாக மாறிப்போனார் கஜோல். அவரது எக்ஸ்பிரசன்களும் காதல் காட்சிகளில் அவர் கண்களில் தெரியும் தவிப்பும் இன்ன்னும் மனதுள் வந்து நிற்கிறது. அந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் பிடித்திருந்தாலும் எல்லோருக்கும் விருப்பமான, 'துஜே தேகா துயே ஜானா சனம்' பாடல் அடிக்கடி மனதுள் வந்து வந்து போகும். ஷாரூக் எனக்குள் அடைக்கலமானது இந்தப் பாடலின் வழிதான்.

முந்தின நாள் மாலையில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் டிரைலரை ஆரவாரமாக வெளியிட்டிருந்தார்கள். ஐந்து மணியளவில் தேசிய சேனல்களுக்கு பேட்டிக்கொடுக்க ஆரம்பித்த ஷாரூக், இடையில் ஒரு மணிநேரம் மகளை லண்டனுக்கு அனுப்பிவிட்டு வந்து திரும்பவும் தொடர்ந்திருந்தார்  பேட்டியை. நள்ளிரவு ஒரு மணிவரை பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். பத்து மணி பார்ட்டிக்கு வருவதாகச் சொன்னவரை எதிர்பார்த்து பதினோரு மணிவரை காத்திருந்துவிட்டு என்னை போல சிலர் ரெண்டு பீர்களோடு அறைக்கு நடையை கட்டினார்கள். விடிந்து, எழுந்து இதோ இனந்த நண்பகலில்  மீண்டும் பேசப்போகிறார் ஷாரூக்.

மூன்றரை மணிக்கு 'ஸாரி' என்றபடியே சிகரெட் பாக்கெட்டும் லைட்டருமாக வந்தமர்கிறார். 'ஹோட்டல் ரூமுக்குள்ள இவர் ஏன் கண்ணாடி போட்டிருக்கான்னு பார்க்காதீங்க. இது ரீடிங் கிளாஸ்' என்றபடியே சிகரெட்டை பற்ற வைக்கிறார்.

எனக்குப் பின்னால் ராஜஸ்தான், குஜராத், கொல்கத்தா மாநிலங்களை சேர்ந்த மீடியாவும் துபாய் கலீஜ் டைம்ஸ்லிருந்து இருவரும் காத்திருந்தனர். இன்றும் இரவு ஒரு மணிவரை ஷாரூக் பேசுவார். ஒரு கேள்விக்கு குறைந்த படசம் ஏழு நிமிடங்கள் பதில் சொல்கிறார் ஷாரூக். என்ன கேள்வி கேட்டாலும் சிரித்துக்கொண்டே பதில் வருகிறது சீரியசாக.

 'இவ்வளவு வயசுலயும் சின்ன பொண்ணுங்களை லவ் பண்றீங்களே... ஒரு மாதிரியா இல்லையா?' என்றதும், 'ஏன் எங்கிட்ட மட்டும் இதை கேட்கிறீங்க. ஆங்கில படத்துல இல்லையா? உங்க ஊர் ஹீரோக்கள் பண்ணலையா?' என்று கேட்டுவிட்டு சிகரெட்டை இழுக்கிறார். பிறகு, 'உண்மையிலேயே நான் நல்லா லவ் பண்றேன்னு எல்லாரும் சொல்றாங்க தெரியுமா?' என ஜாலியாகிறார். சில ஹீரோக்கள் பேசினால் தலைப்பு வைக்கவே விஷயம் இருக்காது. தேடி, சேர்த்து எதையாவது எழுதுவதற்குள் குறைந்தபட்சம் ரெண்டு டீ காலியாகியிருக்கும். ஷாருக் பத்து தலைப்புக்குப் பேசிகிறார். பத்து தலைப்பில் பேசுகிறார்.

நாளை லோக்கல் மீடியா மீட் இருக்கிறது என்றார்கள். எனக்குள் எழுந்த கேள்வியெல்லாம் ஒரே படம் பற்றி, ஒரே கதை பற்றி, எப்படி இத்தனை நாள் வெவ்வேறு தகவல்களோடு ஷாரூக்கால் பேசமுடிகிறது என்பதுதான். 

No comments: