Wednesday, March 6, 2013

கோரிக்கை சாமிகள்

ஊரில் அனாதையாக நிற்கிற கருவை முட்களை வெட்டி விறகு விற்கிற கந்தன்தான் மந்திர மூர்த்தி கோவிலில் பட்றையன் சாமிக்கு ஆடுகிறவர். திருகிய மீசையும் ஒடுங்கிய கண்களுமாக இருக்கிற அவருக்கு விறகு வெட்டி விற்பது தொழில். என்றாலும் சாமிகொண்டாடி என்று அழைப்பதை அதிகம் ரசிப்பார். மற்ற எதிலும் கிடைக்காத மரியாதை இதில் கிடைப்பதால் ‘சாமிகொண்டாடி’யை பிடித்திருந்தது. வலது காலை கெந்தி கெந்தி நடக்கிற அவருக்கு தெய்வம்தான் எல்லாம். எல்லாவற்றையும் தெய்வத்திடம் கேட்டே செய்வதாகச் சொல்வார்.

அவர் சாமியாடுகிற கோவிலில் மந்திரமூர்த்தி, சங்கிலி பூதத்தார், பலவேசக்காரன் உள்ளிட்ட மெயின் சாமிகள் பல இருக்க, பட்றையன் சாமிக்கும் தூண்டில் மாடன் சாமிக்கும் ஒரு ஓரமாக சிறு பீடம் அமைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த சாமிகளுக்கு மட்டும் ஏன் ஓரமாக பீடம் என்றால், இது ஏவல் சாமிகள். அதாவது வீட்டில் முதலாளி இருந்தால் வேலைக்காரர்கள் வெளியில்தான் நிற்க வேண்டும். அவர் வருகிறார் என்றால் ஓடி போய் ஓரமாக நின்று வழியனுப்பும் வேலையை பார்க்க வேண்டும். அதே போலதான் இந்த சாமிகளும். மந்திரமூர்த்தி என்கிற முதலாளியின் ஏவலாளாக பட்றையனும் தூண்டில் மாடனும் இருந்தார்கள்.

தான் ஒரு ஏவல் சாமி என்கிற விஷயம் கந்தனுக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் சாமி என்றால் எல்லாம் ஒன்றுதான் என்பதே. அப்படி அவருக்குப் புரிந்தால், மந்திரமூர்த்தி என்கிற பெரிய சாமிக்கு ஆடுகிற முத்தையாவை எப்படி எதிர்கொள்வார் என்று தெரியவில்லை. ஏனென்றால் அவரை விட வயது குறைந்த முத்தையா இவரை எப்படி ஏவலாம்? என்கிற கேள்வி வரக்கூடும். ஆனால் அந்த சிக்கல்களுக்குள் எல்லாம் அவர் சிக்கவில்லை. தினமும் கோயிலுக்கு வந்து எல்லா சாமிகளையும் கும்பிட்ட பிறகுதான் கந்தன் அரிவாளைத் தூக்கிக் கொண்டு விறகுக்குப் போவார்.

பெரும்பாலும் ஊருக்கு வெளியே குளத்தங்கரையில் இருக்கிற கருவை முட்கள் மற்றும் சாலையோர வாகை, புளி உள்ளிட்ட மரங்களின் கிளைகளை வெட்டுவதுதான் வேலை. பச்சையாக இருக்கிற இவற்றை வெட்டி வீட்டு வாசலில் காய வைப்பார். ஆற்றோரம் சென்றார் என்றால் அங்கு மரக்கிளைகளை வெட்டி, வேலி ஓரமாக காயப்போட்டுவிட்டு வருவார். அந்த கிளைகள் கொஞ்சம் காய்ந்ததும் வீட்டுக்கு கொண்டு வந்துவிடுவார். பிறகு கேட்டவர்களுக்கு விற்பார். கல்யாண நாள்களுக்கென்று அதிகமாக விறகுகளை சேர்த்து வைத்துக்கொள்வார் கந்தன். திடீரென அதிகமாகக் கேட்டால் எங்கு போய் விறகு வெட்டுவது? மற்ற நாளில் ஒரு கட்டு இருபது ரூபாய் என்றால் கல்யாண சீசன்களில் இருபத்தைந்து ரூபாய். பந்தி சோறாக்க விறகு கண்டிப்பாகத் தேவை என்பதால் கேட்டதை கொடுத்துவிட்டு வாங்கிப் போவார்கள்.

தெருக்கார இளசுகள் கருத்தப்பிள்ளையூர் மலைகளில் போய் விறகு பொறுக்கிவிட்டு வருகிறார்கள். அதில், ஆண் கட்டுக்கு இருபத்தைந்து ரூபாய். பொம்பளை கட்டுக்கு இருபது ரூபாய். அவர்கள் பெரும்பாலும் தாட்டாம்பட்டி, கோவன்குளம், பூவன்குறிச்சிகளில் விற்றுவிட்டு காசோடு வருவார்கள். அங்கு இல்லை எனில் உள்ளூர் கருவேலப்பிறை சுவரில் சாய்த்து வைத்திருப்பார்கள் கட்டுகளை. அதன் அருகில் சும்மாட்டோடு உட்கார்ந்திருக்கும் அவர்களிடம் பேரம் நடக்கும். இருட்டுவதற்குள் விற்றால்தான் வீட்டில் உலை ஏறும் என்பதால் அதுவரை பார்ப்பார்கள். பிறகு கேட்ட விலைக்கு கொடுத்துவிட்டு நகர்வார்கள். கந்தன் அப்படியில்லை. தனது விலையில் இருந்து எப்போதும் குறைத்துக் கொடுத்ததில்லை.

‘முள்ளு வெட்டுதது என்ன சும்மாவாடே? ரத்தத்தை சிந்தியாங்கும் வெட்டுது. கையில பாரு முள்ளு தச்ச எடங்களெ. அதை வெட்டி காயப் போட்டு, ஆயிரம் வேல பாக்க வேண்டியிருக்கு. பெறவு எதுக்கு அவனுவ கேட்ட வெலக்கு விய்க்கணும்?‘ என்பார்.

கந்தனும் கருத்தப்பிள்ளையூர் போய் விறகு வெட்டி வந்தவர்தான். இப்போது முடியவில்லை. அவ்வளவு தூரம் நடக்க முடியவில்லை. உடலில் வலு இருந்தாலும் சடவு வந்துவிடுகிறது. ‘இங்கயே இவ்வளவு கருவை கெடக்கு. இத வெட்டவே ஆளில்ல. எதுக்கு அவ்ள தூரம் போவான?‘ என்று நினைத்துக்கொள்வார். ஆனால், மலையில் கிடைக்கிற விறகுகள், கருவையை விட நன்றாக எரியும் வகையை சார்ந்தவை என்கிற நுட்ப விஷயங்களை ஊர் மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.

இப்படி விறகு விற்று காலம் தள்ளுகிற கந்தனுக்கு சாமியாடி என்பதால், வீட்டில் எப்போதும் தனி மரியாதை. அவர் மனைவி கூப்பிட்ட வேலைகளுக்கு சென்று வருபவள். களை எடுக்க, சிறு கிழங்கு எடுக்க, கடலை பிடுங்க என்று அக்கம் பக்கத்து ஊர்களுக்கு கூட தூக்குச் சட்டியில் சோற்றைக் கட்டிக்கொண்டு செல்வாள். அவர்களின் மகன் சுடலையும் அம்மாவுடன் வேலைக்கு செல்கிறவன்தான். இந்த சின்ன குடும்பத்துக்கு கிடைக்கிற காசே போதுமானதாக இருந்தது. ஆனால், பிழைப்புக்காக வெளியூருக்கு இடம் பெயர்ந்துவிட்ட உள்ளூர் சாமியாடிகள், அவ்வப்போது கந்தனுக்கு ஏதாவது செய்துவந்தனர்.

ஏனென்றால் கோயில் கொடை, அது தொடர்பான கால்நாட்டு மற்றும் உள்ளூர் தகவல்களை சரியாக அவர்களுக்கு தெரிவிக்கும் வேலையை செய்துவந்ததால் இந்த உதவி. இவரது தகவல் காரணமாக சொந்தங்கள் தங்கள் வேரை விட்டுவிடாமல் பாதுகாத்து வந்தனர். அவர்கள் ஊருக்கு வரும்போது, கந்தனுக்கு புது வேட்டி, துண்டு நிச்சயம் உண்டு. பிறகு கந்தனுக்கு செய்கிற உதவியாக ஒரு சாமியாடி, அவர் மகன் சுடலையை சென்னைக்கு அழைத்து சென்றார் வேலைக்காக.

கொடை இல்லாத நாட்களில் வெயில், மழையில் நனைந்து கரைந்து போகும் கோயில் பீடங்கள், மீண்டும் கொடை காலங்களில் மட்டுமே புதுப்பிக்கப்படும். பீடம் எப்படி சிதைந்திருந்தாலும் கந்தனுக்கு கவலை இல்லை. ஏனென்றால் சாமி தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மற்ற பீடங்கள் அப்படியே இருக்க, பட்றையன் சாமிக்கு மட்டும் சூடம் (கற்பூரம்) காட்டி கும்பிடுவார் கந்தன். அந்த வழியாகப் போகிற அல்லது வருகிற மற்ற சாமியாடிகள் இதைக் கண்டுகொள்வதில்லை. கொடை நேரம் மட்டுமே அவர்களுக்கு கோயிலும் சாமிகளும். இவர் இப்படி செய்கிறார் என்பதற்காகவே பெரிய சாமி கொண்டாடியும் அவ்வப்போது இங்கு வந்து சாமி கும்பிட்டுப் போவார்.

கொடையின் போது பத்து நாளுக்கு முன்பே தெரு களை கட்டிவிடும். கோயிலுக்கு சிமெண்ட் பூச்சு, வெள்ளையடித்தல், கோயில் மரக்கிளைகளை பந்தலுக்காக வெட்டுதல், வில்லுப்பாட்டுக்காரர், மைக் செட் காரர்களுக்கு அட்வான்ஸ் என்று பரபரப்பாகும் ஊர். அதிலும் சாமியாடிகளுக்கு கேட்கவே வேண்டாம். விரதம் இருக்கத் தொடங்கி இருப்பார்கள். கடைகளில் காபி, தண்ணீர் குடிப்பதில்லை என சுத்த பத்தம் பார்க்கப் படும். பிறகு தொடங்கும் கொடையில், கொண்டாட்டம்தான்.

கொடையின் இரண்டாம் நாள் பக்தர்கள் சாமியிடம் ஆசி வாங்குவார்கள். அப்படி வாங்கும்போது மெயின் சாமிகளிடம் ஆசி வாங்கும் பக்தர்கள், பட்றையனுக்கு ஆடும் கந்தனிடம் மட்டும் யோசித்தே செல்வார்கள். யாராவது ஆசி வாங்க போனால், அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு சாமியாடுவார் பட்றையன் சாமியான கந்தன். பிறகு, ‘ஒம் பிரச்னய எல்லாம் நா பாத்துக்கிடுதென். எனக்கு வெள்ளியில சூடன் தட்டு வாங்கி வைப்பியா?‘ என்று கேட்பார். ‘அடுத்த கொடைக்குள்ள எம் பிரச்னை தீந்தா, சாமிக்கு செய்தேன்‘ என்பார்கள் பக்தர்கள். பிறகு பட்றையன் பீடத்தை பார்த்து பல்லைக் கடித்துவிட்டு திருநீறு பூசுவார். பின் ‘சூடன் தட்டு வெள்ளியில என்ன வெல வரும்?‘ என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டே செல்வார்கள் பக்தர்கள்.

போன கொடையில் இவர் கோரிக்கை வைத்து, சிலர் மட்டுமே கேட்டதை கொண்டு வந்திருப்பார்கள். கொடுக்காதவர்களிடம், ‘நா அத கேட்டேன். கொடுக்கலயே?‘ என்று ஞாபகமாகக் கேட்பார்.

‘என்னய நல்லா வச்சிருந்தா தாரென்னு சொன்னேன். சாமி அப்டி ஒண்ணுஞ் செய்யலயே?‘ என்பார்கள். பிறகு, ‘சரியா போவும். அடுத்த கொடைக்கு கொண்டாந்து தா‘ என்பார்.

மற்ற சாமிகள் இப்படி ஏதும் கோரிக்கை வைப்பதில்லை. கொஞ்சம் வதியான உள்ளூர் ஆட்களே, கொடைக்கு முன்பு, ‘கோயிலுக்கு ஏதும் வேணுமாய்யா?‘ என்று சமூகத்து ஆட்களிடம் கேட்டு வாங்கிக் கொடுப்பார்கள். அவர்கள் அப்படிக் கேட்பதற்கு கொடுக்கப்படும் பொருளில், அன்பளிப்பு என்று அவர்கள் பெயர்களை பெரிதாக எழுதிக்கொள்ளலாம் என்பது காரணம்.

இப்படித்தான் ஒரு கொடையில், தென்னையில் இருந்து விழுந்து, கால் ஒடிந்து அவதிப்பட்டு வந்த பலவேசம், கந்தனிடம் திருநீறு பூச வந்தான். வழக்கம் போல அவரும், ‘எனக்கு வெள்ளியில செம்பு வாங்கி வை. ஒங்கால சரியாக்கிருதென்‘ என்றார் சாமியாடிக்கொண்டே. ஏற்கனவே வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த பலவேசத்துக்கு எரிச்சல். தன் கையை பிடித்திருந்த கந்தனின் கையை வெடுக்கன தட்டிவிட்டு விட்டு ஒன்றும் சொல்லாமல் பெரிய சாமியிடம் திருநீறு வாங்க போய்விட்டான். இதை கந்தன் எதிர்பார்க்கவில்லை.

‘நானே என்னா கெட கெடந்து, கஞ்சி தண்ணி குடிக்காம கஷ்டப்பட்டுட்டு இருக்கென். எனக்கு அத கொடு இத கொடுன்னா, எங்க போயி கொடுப்பென்? வீட்டுல பொண்டாட்டிட்ட தாலி கூட இல்ல. சாமின்னாலும் ஒரு இது வேண்டாமாய்யா?‘ என்று ஒருவர் பிடித்துக்கொள்ள, கால் வலியோடு நடந்துகொண்டே சொன்னான் பலவேசம்.

‘ஒங்க சித்தப்பன்தானடெ அவரு?‘

‘அதுக்கு? மனுஷன் கஷ்டம் தெரியலன்னா, பெறவு என்ன சாமிடெ? நாமதான் சாமிட்ட, ‘எனக்கு அது வேணும் இது வேணும்’னு கேக்கணும். சாமியே கேட்டா, நாம எங்க போவ?‘ என்று பலவேசம் சொன்ன பிறகுதான் பட்றையன் சாமி பக்தர்களிடம் வைக்கும் ‘கோரிக்கை’ பற்றி எல்லாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து ஒவ்வொரு கொடையின் போதும் அவரது குடும்பத்தினர் மட்டுமே கந்தனிடம் திருநீறு பூசிக்கொண்டு குறி கேட்டனர். அல்லது வெளியூரில் இருந்து வந்திருக்கும் சொந்தங்கள். மற்றவர்கள், அவர் ஏதும் கேட்டுவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே திருநீறு பூசலானார்கள். ஆனாலும் அவர் விடவில்லை. முன்பு எல்லோரிடமும் கேட்பவர், இப்போது ஆள் பார்த்து கேட்கத் தொடங்கினார்.

இப்போது அப்படியில்லை. பார்வை மங்கி உடல் தளர்ந்து போன கந்தன், கொடையின் போது பீடத்துக்கு அருகில் உட்கார்ந்துகொள்கிறார். சென்னையில் வேலைபார்க்கும் மகன் அவர் இடத்தில் சாமியாடுகிறான். திருநீறு பூச வருகிறவர்களிடம் ‘எல்லாத்தையும் சாமி பாத்துக்கிடுவாரு. போங்கெ‘ என்று நம்பிக்கை விதைக்கிறான். கோரிக்கை வைக்காத பட்றையனை குதூகலமாகப் பார்க்கிறார்கள் பக்தர்கள்.

நன்றி: குங்குமம் வார இதழ்

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

நல்ல கதை! பகிர்வுக்கு நன்றி!

P.PAUL VANNAN said...

kovil kodai , nalla rasanai thanmai kondavar neenkal . naan adhikamaga makilvu kondathu ithu ponra kovil kodai ( kula kovil ) vilakkalain pothuthan. indrum kula kovil kodaiyil thavaramal pankukolla aasai, aanal mudivathilai , SAUDI KAPILU LEAVE KODUKKAMATTAN ,,,, WELL DONE BROTHER.