Monday, February 11, 2013

களவு போகும் நிலம்

மாடுகளுடன்தான் செவனுவை எப்போதும் பார்க்க முடியும். அவை இல்லையெனில் ஏதாவது வெள்ளாட்டுக்குட்டியுடன் காணலாம். அப்படியொரு பிரியம் அவனுக்கு. அவனது உலகம் மாடு, ஆடுகளுடனாகவே இருக்கும். ‘‘நம்ம செவளைக்கு கால்ல புண்ணு. மஞ்சள போட்டும் கேக்கலெ. என்ன செய்லாம்?’’ என்று கேட்டால், திண்ணையில் உட்கார்ந்து மதியம் வரை பண்டுவம் சொல்வான் செவனு. ஊரில் அவனை கிட்டத்தட்ட வெட்னரி டாக்டராகவே பார்த்தார்கள். சிறுவயதில் இருந்தே மாடுகள் மேய்ப்பதை மட்டுமே செய்து வருவதால் ஆடு, மாடுகள் விஷயத்தில் அவன் அத்துபடி.

மேலத்தெருவில் இருக்கிற பெரும்பாலான மாடுகளில் பாதியை இவனும் மீதியை குத்தாலமும் மணியும் பிரித்து மேய்த்து வந்தார்கள். செவனுக்கு சொந்தமாக பத்து மாடுகள் இருந்தாலும் பிற மாடுகளை கூலிக்காக மேய்த்துவந்தான். ஒரு மாட்டுக்கு மாதம் 30 ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது. இவர்கள் தவிர, கிழக்கே இருந்து கிட்டுவும் சுடலையும் மாடு மேய்ப்பவர்கள். இவர்களோடு ஆடுகள் மேய்க்க, இருக்கிறான் பரமசிவன். இதில் செவனு சீனியர் என்பதால் அவனுக்கு மரியாதை இருந்தது. ஒன்பது, பத்துமணி வாக்கில்தான் இவர்கள் மாடுகளை பத்த ஆரம்பிப்பார்கள். வீட்டுக்காரர்கள் கருவேலப்பிறை அருகே மாடுகளை கொண்டு வந்து விடுவார்கள். கையில் கம்புடனும் சோற்றுச் சட்டியுடனும் செவனு, குத்தாலம், மணி வந்துவிடுவார்கள். பாட்டையா கடையில் டீ குடித்துவிட்டு சிறுது நேரம் ஊர்க்கதை நடக்கும். பிறகு ஆடுகளை பத்திக்கொண்டு பரமசிவம் வந்து சேர்ந்ததும் மாட்டைப் பத்துவார்கள்.

தெருவை அடைத்துக்கொண்டு மாடுகள் போகும். மரகதமாச்சி பிரம்பு கூடையைத் தூக்கிக்கொண்டு மாடுகளோடு வருவாள். ஏதாவதொரு மாடு சாணம் போடப்போவது தெரிந்தால் ஓடிப்போய் அதில் கூடையை ஏந்துவாள். அப்படியே பஞ்சாயத்து போர்டு திண்டு வரை வருவாள். அதுவரை மாடுகள் போடும் சாணம் அவள் கூடைக்கு.

பாபநாசம் ரோடு வழியாக மாடுகள் போகும். நேராக ரயில்வே கேட் தாண்டியதும் வலதுபக்கம் திரும்பினால் குளத்துக்கருகில் புற்கள் முளைத்து கிடக்கும். அங்கு மேய்க்கலாம். ஆனால், இவர்கள் வழியிலேயே வாத்தியார் வயல்களை கடந்து தோப்புக்குள் மேய்க்க விடுவார்கள். இடையில் வந்து சேர்ந்துகொள்வார்கள் கீழத்தெரு கிட்டுவும் சுடலையும். புற்களும் செடிகளும் ஏகமாக வளர்ந்து நிற்கும். பெரிய தோப்பு. உள்ளே யார் நின்றாலும் வெளியே தெரியாத அளவு மரங்கள். அங்கு எதையாவது பயிர் வைக்கலாம். ‘இப்பலாம் முன்ன மாரி வேல பார்க்க முடியல’ என்று அங்கு எதையும் பயிர் வைக்கவில்லை வாத்தியார். அவர் வெளியூருக்கு போயிருக்கிறார் என்று தெரிந்தால் தோப்பில் ஐந்தாறு இளநீர்களை பறித்துவிடுவார்கள். ஒரு குலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறித்தால் தெரியாது. அரவம் இல்லாமல் இளநீரை குடித்துவிட்டு கூந்தல்களை வாய்க்கால் கரையில் வீசிவிடுவார்கள். செத்தைக்குள் கிடக்கும் என்பதால் யாருக்கும் தெரியாது. அடுத்த சில நிமிடங்களில் அங்கு எதுவும் நடக்காத மாதிரி இருக்கும். இது அரசல் புரசலாக வாத்தியாருக்கும் தெரியும் என்றாலும் கண்டுகொள்ள மாட்டார்.

உச்சி வெயில் அடிக்கும்வரை அங்குதான் மேயும். பிறகு அடுத்த தோப்புக்குள் மாடுகள் போகும். அது வேலுவின் மாந்தோப்பு. அத்தோப்பின் ஒருபகுதியில் ஈராய்ங்கமும் வாழையும் போட்டிருந்தார். ஈராய்ங்கச் செடிகள் பச்சை ரப்பர் டியூப் மாதிரி முளைத்து நிற்பதை பார்க்க அழகாக இருக்கும். சேட்டை பிடித்த நீட்டுக்கொம்பு எருமையும் கிடாரியும் அதில் புகுந்து சிதைத்து விட்டு போவதை வழக்கமாக வைத்திருக்கும். ‘‘தெனமும் இப்டிலா பண்ணுதுவோ’’ என்று அடி துவைத்து எடுத்தான் செவனு. அது கேட்பதாகத் தெரியவில்லை.

ஒரு முறை, ‘‘ஏலெ செவனு. இன்னொரு தட வயலுக்குள்ள விழுந்தா பவுன்டிக்கு பத்திட்டு போயிருவென். பெறவு ஆத்தான்னாலும் முடியாது. ஐயான்னாலும் முடியாது’’ என்றார் வேலு. இதன்பொருட்டு மேய்க்கும் இடத்தை ஆற்றுபக்கமாக மாற்றினான். நான்கைந்து நாட்கள் அங்கு மேய்க்கப் போனான். அங்கும் பிரச்னைதான். தோப்புக்கருகில் ஏகப்பட்ட புற்கள் கிடந்தாலும் நீட்டுக்கொம்பு எருமைக்கு நெற்பயிர்கள் மற்றும் கீரைகள் மீதுதான் குறி. அங்கும் சுப்பையாவின் கீரைத்தோட்டத்தில் வாயை வைத்து பிரச்னையாகிவிட்டது. மாடுகள் பண்ணிய பிரச்னைக்கு செவனுக்கு ஏச்சு. நீட்டுக்கொம்பு எருமையின் உரிமையாளரான சுப்பிரமணியிடம், ‘‘இதையெல்லாம் வீட்டுல கெட்டிப்போட்டுதான் வளக்கணும். சனியன், எம் பிராணனல்லா வாங்குது’’ என்று விட்டுவிட்டு போய்விட்டான். பிறகு அந்த மாடு குத்தாலத்தின் கைக்குப் போனது வேறு கதை.

பெரிய வாய்க்கால் பகுதி வயல்களில் உளுந்து விதைத்திருந்த நேரத்தில், செவனுவின் கிடாரி ஒன்று இரவில் கயிற்றை அத்துக்கொண்டு வயலில் விழுந்துவிட்டது. ராத்திரி நேரத்தில் அங்கு யாரும் வருவதில்லை. ஆனால் எதற்காகவே அந்த நேரத்தில் வந்து தொலைத்த வயல்காரன் கண்ணன் பார்த்துவிட, பிரச்னைதான். மாட்டை அப்படியே பிடித்து ஆழ்வார்க்குறிச்சி பவுன்டியில் கட்டிப்போட்டுவிட்டான். காலையில் செவனு மாட்டைத் தேடினான். பகல் முழுவதும் தேடிவிட்டு வீட்டுக்கு வந்தபோதுதான் விஷயம் தெரிந்தது. பிறகு ஊர்த் தலைவரில் முன்பு விவகாரம். மாடு தின்ற பயித்துக்கு தெண்டம் விதிக்கப்பட்டது. கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு மாட்டை வீட்டுக்கு இழுத்த கதை அவனுக்கு மறக்கவில்லை.

தோப்பை தாண்டியதும் பம்புசெட் அறை இருக்கும். அங்கு வந்ததும் ரெண்டு மணி கொல்லம் ரயில் போவது தெரியும். அந்த ரயில்தான் இவர்களுக்கான சாப்பாட்டு நேரத்தை தீர்மானிப்பது. ரயில் தாமதமாகப் போனால் கூட, ‘இன்னும் ரயிலே வரலை, பெறவு எப்டி சாப்பிட?’ என்று காத்திருப்பார்கள்.

கஞ்சித் தண்ணீருக்காக மாந்தோப்பில் கிளி மூக்கு மாங்காய் ரெண்டு பறித்து வந்திருப்பார்கள். சாப்பிட்டு முடிப்பதற்குள் செண்டு சித்தி வயலில் மாடுகள் வாயை வைத்திருக்கும். ‘‘ஏல மாட்டை பத்துங்கெ. வயல்ல வாய வக்கி’’ என்று அவள் சத்தம் கொடுப்பாள். எச்சிக் கையோடு மெதுவாக நடந்து பத்துவான் குத்தாலம். ‘‘வாயில்லா ஜீவனு, ரெண்டு பயித்த தின்னாதான் என்னா? இப்டி அவயம் போடுதியெ சித்தி?’’ என்பான்.

‘‘சர்தாம்ல. அப்பம் ஒங்க வெதப்பாட்டுலயே நீ மாட்டெ மேய்க்கலாம்லா. ஏங் அங்க இங்கனு அலையுத?’’ என்பாள் அவள். சிரித்துக் கொண்டே வருவான். சாப்பிட்டு முடிந்ததும் மரங்களின் நிழலில் தூங்கலாம் போலத் தோன்றும். துண்டை தரையில் விரித்து லேசாகக் கண்ணை மூடுவார்கள். காற்று ஜிலு ஜிலுவென்று அடிக்கும். செவனும் பரமசிவனும் பீடியை பற்ற வைப்பார்கள். இவர்களில் பரமசிவன், செவ்வாரம் முறையில் ஆடு வளர்த்து வந்தான். இதில் அவனுக்கு கொள்ளை லாபம். அதாவது ஒன்றிரண்டு ஆடு வைத்திருப்பவர்கள் மேய்க்க இயலாது என்றால் பரவசிவனிடம் கொடுத்துவிடுவார்கள். அவன் மற்ற ஆடுகளோடு இதையும் மேய்ப்பான். இதற்கு கூலி கிடையாது. ஆனால், அந்த ஆடுகள் குட்டிப் போட்டால்&அதாவது ரெண்டு குட்டிப் போட்டால் ஒன்று பரமசிவத்துக்கு கொடுத்துவிட வேண்டும். இந்த முறையில் ஏகப்பட்ட குட்டிகள் பெருகிவிட்டது அவனுக்கு. ஆத்திர அவசர காசுக்கு வீட்டுக்குத் தெரியாமல் குட்டிகளை விற்றுவிட்டு குதூகலிப்பவன்.

மாடுகளும் ஆடுகளும் ஏரியாவை தாண்டி குளத்துக்கு அருகில் சென்றிருக்கும். அங்குதான் பக்கத்தூர்க்காரிகள் துணி துவைத்துக் குளித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களில் ரோஸ்மேரியை செவனுக்கு நன்றாகத் தெரியும்.

''என்னெ, மாடு எப்படியிருக்கு’’ என்றுதான் பேச்சை ஆரம்பிப்பாள். ‘‘அதெ மாட்டுட்டலா கேக்கணும்?’’ என்பான் செவனு. அவன் கிண்டலாகப் பேசி முடித்துவிட்டு குளத்தின் பாறைக்கு வந்ததும் குத்தாலமும் பரமசிவமும், ‘‘பேச்செல்லாம் ஒரு மாதிரியாதான் போது. ஊர்ல அத்தை மவா இருக்கா. மறந்துராதெ’’ என்பார்கள். ‘‘ச்சீ. சும்மா பேசுனா பொண்டாட்டி ஆயிருவாளோல. கூறுகெட்டவனுவளா?’’ என்று சொல்லிவிட்டு குளிக்க இறங்குவான். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் இறங்குவார்கள். இவர்கள் குளிப்பதற்கு அருகில் பெண்கள் குளித்துக்கொண்டிருப்பார்கள். அப்படியே முங்கு நீச்சலில் போய் அவர்களின் காலை கிள்ளிவிட்டு வர இருப்பதாகச் சொல்வான் மணி. அவனை அடக்குவான் செவனு.

கரைக்கு மேலே பரந்து விரிந்த பகுதியில் எள்ளு விதைத்திருக்கும் சண்முகம் மாமா, பனையோலை குடிலுக்குள் இருந்துகொண்டு எட்டிப்பார்ப்பார். ‘‘செவனா குளிக்காம்’’ என்று கண்களின் மேல் கையை வைத்துவிட்டு சத்தம் கொடுப்பார். இவன் ஆமா என்றதும் ‘‘சீக்கிரம் குளிச்சுட்டு வா. ரெண்டு மரத்துல ஏறணும்’’ என்பார். குளித்துவிட்டு அவரது தென்னை மரத்தில் ஏறி காய்ந்த தென்னஓலை மற்றும் சில்லாட்டைகளை இழுத்து போட்டுவிட்டு, தேங்காய்களைப் பறிப்பான். இதற்கு கூலியாக மரத்துக்கு மூன்று தேங்காய்கள். அதில் மற்றவர்களுக்கும் சும்மா பங்கு கொடுப்பான். பிறகு அங்கிருந்து மாடுகளைப் பற்றிக்கொண்டு சாஸ்தா கோயில் அருகே போவார்கள். கோயில் திண்டில் தாயம் விளையாட்டை ஆரம்பிப்பார்கள். தாயக்கட்டைக்குள் மனசு இருந்தாலும் அடிக்கடி ஒரு கண்ணால் மாட்டையும் பார்த்துக்கொள்வார்கள். சிறிது நேரம் போகும் ஆட்டம்.

மாடுகள் பக்கத்து கரைகளில் மேய்ந்துகொண்டிருக்கும். சூரியன் மேற்கே இறங்கத் தொடங்கியதும் ரயில்வே லைன் பக்கமாக மாட்டை பத்துவார்கள். இந்நேரத்தில் ரயில் கிடையாது என்பதால் சாவகாசமாக ஆற்றை நோக்கி மேய்ந்துகொண்டே போகும். ரயில்வே பாலத்தின் கீழே மாட்டை இறக்குவார்கள். அப்படியே தண்ணீருக்குள் இறங்கி படுத்துக்கொள்ளும். வயல்களில் விளைந்திருக்கும் கடலை, பயித்தங்காய் உள்ளிட்டவற்றை கொறித்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள். சிறிது நேரத்தில் மாடுகள் கரைக்கு ஏறும். அதட்டலிலேயே அவற்றை கரையில் மேய்த்துக்கொண்டு நடப்பார்கள்.

இதெல்லாம் கதையாகிவிட்டது. ஆடு, மாடுகளோடு அடைந்துகிடக்கும் ஊர், இன்று அவை ஏதுமின்றி பளிச் என இருக்கிறது. நடுரோட்டில் நின்று பஸ் டிரைவர்களின் பிரஷரை ஏற்றும் எருமைகளை காணமுடியவில்லை. அவற்றை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் கொத்தனார் வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.‘‘இங்கரு. முன்னால மாரி இல்லப்பா. எல்லா எடத்தயும் ப்ளாட் போட்டுட்டானுவோ. மாடு மேய்க்க எடமே இல்ல பாத்துக்க. ஒரு மாடுக்கு எரநூறு ரூவா தாரம்னாலும் மேய்க்கதுக்கும் ஆளில்லை. பேருக்கு ஒண்ணு ரெண்டை வச்சுக்கிட்டு எல்லாரும் மாடுவோள வித்துட்டாவோ. நானும் வித்துத் தொலைச்சுட்டு நம்ம குட்டி கூட கையாளா போயிட்டிருக்கேன்’’ என்கிற செவனின் கண்களில், காணாமல் போன மேய்ச்சல் நில ஏக்கம் அதிகமாகவே தெரிகிறது.

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

காணாமல் போன மேய்ச்சல் நில ஏக்கம்

நிதர்சனமாக மனதில் அறைகிறது ...

SURYAJEEVA said...

தட்டச்சு கருவி, சுவர் ஓவியங்கள், பாஜெர் கருவி, தந்தி தொடர்பு முறை, காணாமல் சென்று கொண்டிருக்கும் பட்டியலில் மேய்ச்சல் நிலம்... விரைவில் உழவு நிலமும்

P.PAUL VANNAN said...

அத்தோப்பின் ஒருபகுதியில் ஈராய்ங்கமும் வாழையும்- very nice to hear .

ore respectable face book comment-
ippo thanni illa - vivasaye prachinai, naalaikku vivasayeyee irrukka mattan -ithu yaroda prachinai ?

adutha kannamal pokum periya sothu " vivasiye than "
vethanai ,perum vethanai ,
Good registration , valka valamudan.

மதுரை அழகு said...

மனதை கனக்கச் செய்யும் பதிவு!

ஆடுமாடு said...

இராஜராஜேஸ்வரி, சூர்யஜீவா நன்றி.

ஆடுமாடு said...

பால்வண்ணன் சார், மதுரை அழகு வருகைக்கு நன்றி.