Tuesday, November 6, 2012

மண்டடி தைல மரத்துப் பறவைகள்

வராது என்று நினைத்த மழை வந்துவிட்டது. முதல் சொட்டு மூக்கில் விழுந்து உதட்டின் வழி இறங்கியபோதே பஸ்&ஸ்டாண்டில் ஒதுங்கி நின்றிருக்க வேண்டும். பரவாயில்லை. எப்போதாவது நனைவது ஒன்றும் செய்துவிடாது. சில வருடங்களுக்குப் பிறகு, பிறந்து வளர்ந்த மண்ணில் கால் வைக்கும் போது ஏற்படுவதாகச் சொல்கிற எந்த பரபரப்பும் படபடப்பும் ஏற்படவில்லை. ஆனால், சொல்ல முடியாத துள்ளும் மகிழ்ச்சி உடல் முழுவதும் பரந்து விரிந்து சென்றுகொண்டிருக்கிறது. பஸ்சில் இருந்து இறங்கி, உடன் வந்த இரண்டு மூன்று பெண்கள், தலையில் சேலையை இழுத்து மூடிக்கொண்டு வேகமாக நடந்து கொண்டிருக்கிறார் கள். அவர்களில், ஒருத்தி ‘பிச்சம்மாக்கா’ என்று தெரிகிறது. ஆசையாக பேசலாம் என்றால் மழையின் பொருட்டு முன்னே சென்றுகொண்டிருக்கி றாள். பின்னால் பீடியை பற்ற வைத்துக்கொண்டு வரும் அந்த பெரியவர், நல்லகண்ணு தாத்தா என்பதாக உணர முடிகிறது. எப்போதும் எச்சியை உள்ளே இழுத்துக்கொண்டிருக்கும் அவர் அருகில் வந்தால் உற்றுப் பார்த்து உறுதி செய்ய வேண்டும் என்று நினைக்கையில், இடப்புறம் இருக்கும் கடைக்குள், ‘ஏய் சம்முவம்’ என்றபடி போகிறார்.


ரோட்டின் இடமும் வலமும் இருந்த கருவேல மரங்கள் வெட்டப்பட்டு புதிதாக கடைகள் முளைத்திருந்தாலும் அங்கு போய் ஒதுங்கி கொள்ள மனம் வரவில்லை. தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்றாலும் வேண்டாம். சாலை நனைந்து சூட்டோடு மண் மணம் கிளம்பி, மூக்கில் வந்து ஒட்டியது. இந்த மூணு மணிக்கே இருட்டிய மாதிரி கருப்பாக்கி இருந்தது மேகம்.

சொட்டு சொட்டாய் விழுந்த துளிகள் சேலையை முழுவதும் நனைக்கவில்லை. ஆனால் தடதடவென்று விழ இருக்கிற மழை நனைத்துவிடும். வேகமாக போகும் மோட்டார் சைக்கிளிலிருந்து வரும் பெட்ரோல் புகை, சுவாசத்தோடு நுரையீரலுக்குச் சென்று வந்தது. ஓடி ஆடிய சிறுவயதில் பெட்ரோல் புகை பிடிக்கும். ஆற்றுக்கு செல்லும் போது பஸ், கார், பைக் என எதிலிருந்தும் வருகிற பெட்ரோல் புகையை மூச்சுக்குள் இழுத்து இழுத்து விடுவது உற்சாக விஷயமாக இருந்திருக்கிறது. அதற்கான காரணம் தெரியவில்லை. இப்போது எதுவும் பிடிப்பதில்லை.

மழை வேகமாக வருவதற்கான அறிகுறி தெரிகிறது. குளிர்காற்று உடலை வாட்டிப் போய்க்கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் நடந்துபோனால் ரோஸ் டீச்சரின் வீடு. அங்கு ஒதுங்கிகொள்ளலாம். டீச்சர் இப்போது இருப்பாரோ மாட்டாரோ? இருந்தாலும் அவரால் அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பிருக்கிறதா? முன்பு இருந்த முகம் இப்போது இல்லை. எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிற முகம் முகமாகவும் இருக்காது. மாற்றங்களால் ஆனதுதான் எல்லாம். காது மடல்களில் முடியை வளைத்து தொங்கவிட்டுக் கொண்டு ஒற்றைக்கல் மூக்குத்தியுடன் திமிராக அலைந்த அந்த புஷ்பம் நான்தான் என்று டீச்சரால் அடையாளம் காண முடியுமா? அந்தளவுக்கு மாறிவிட்டேனா என்ன? டீச்சரால் அடையாளம் காண முடியாவிட்டாலும் பரவாயில்லை. இன்னாரென்று சொல்ல முடியாதா? சொல்லலாம்தான். ஆனாலும் தன்னை எந்தளவுக்கு டீச்சரால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரியவில்லை. ‘இங்க எதுக்கு வந்த?’ என்று முகத்தை திருப்பிக்கொண்டால்? டீச்சரின் மகள்களில் யாராவது ஒருத்தி அங்கு இருக்கலாம். பிலோமினா அக்கா இருந்தால் கட்டிப்பிடித்துக்கொண்டு அழ வேண்டும் போல இருந்தது. அவள் வளர்த்த அந்த செந்நிற முயல்குட்டிகளும் அவளின் நினைவுகளும் பல நாள் என் கால்களை சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது.

சாலையில் இருந்து தனித்து இருக்கிற ரோஸ் டீச்சரின் வீட்டில் எப்போதும் பெண்களின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் சிரிப்பை உள்ளடக்கிய அந்த சத்தத்தில் தேவதைகளின் ஒலி கேட்பதாக, கல்லூரி முடித்துவிட்டு சாலையை அளக்கும் அண்ணன்மார்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆண்களின் சத்தங்கள் அதிகார வகைகளை கொண்டது. அதில் ஆணவமும் ஏதோ ராகமாக, மேல் பூச்சுப்போல கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெண்களின் சத்தங்கள் அப்படியில்லை. அந்தக் குரல்களின் இனிமையில் அது அதிகார சத்தமாக இருந்தாலும் கூட, கோழி இறகு போல, வண்ணத்துப் பூச்சிகளின் மேனிகளைப் போல, பூக்களின் மகரந்தத் துகள் போல மென்மை உருண்டு வருகிறது. டீச்சரும் அவரது மூன்று மகள்கள் மற்றும் அவர்களது தோழிகளால் ஆன அந்த வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி சுற்றிக்கொண்டே இருக்கும். இந்த வீட்டைக் கடந்து கார்சாண்டுக்கு பஸ் பிடிக்கப் போகிற எல்லோருக்கும் அந்த மகிழ்வின் பரப்பை வியக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பூவரசம் பூக்கள் சிதறிகிடக்கிற அந்த வீட்டுவாசலில் வகை வகையான ரோஜா செடிகள் தலையை ஆட்டிக்கொண்டிருக்கும். வீட்டின் முன்னால் போடப்பட்டிருக்கிற தென்ன ஓலை பந்தலுக்கு கீழே ஆற்றிலிருந்து நான்கைந்து மூட்டைகளில் கொண்டு வந்து சிதறடிக்கப்பட்ட மணல்கள். டீச்சர் பெரும்பாலும் இங்கு ஈசி சேரில் சாய்ந்துகொண்டு எதையாவது வாசித்துக்கொண்டிருப்பார். பொதுவாக, சிறுகதை, நாவல்களின் மீது டீச்சருக்கு எப்போதும் ஆர்வம். அவை ஏதும் இல்லாத நாட்களில் பைபிள்.

பஸ்-ஸ்டாண்டுக்கு கீழ்ப் பக்கம் இருக்கிற மீனாட்சி நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்புக்கு பாடம் நடத்தும் ரோஸ் டீச்சரை எல்லோருக்கும் பிடிப்பதற்கான காரணம் அந்த அன்பு. பையன்களுக்குப் பிடிப்பதற்கான காரணம் அவளது துறு துறு மகள்களாகவும் இருக்கலாம். நினைவுக்குத் தெரிந்தவரை டீச்சர் கோபப்பட்டு பார்த்தது இல்லை. அந்த சிரித்த முகத்தில் எல்லோரையும் தன் குழந்தைகளாகப் பார்க்கிற பாசம் படிந்து கிடக்கிறது. அப்படியொரு முகம் அவருக்கு. டீச்சரின் சாரை போட்டோவில்தான் பார்த்திருக்கிறோம். திருகிய மீசையோடு இருக்கிற அவரது கருப்பு வெள்ளைப் புகைப்படத்துக்கு கீழே, கோயில் பிள்ளை கிறிஸ்டோபர் நெல்சன் என்ற பெயரோடு தோற்றம் மறைவு தேதிகள், சிறு விடி பல்பின் வெளிச்சத்துக்குள் தெரிந்துகொண்டிருக்கும்.

ஆழ்வார்க்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி மேனிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தபோதுதான் ஸ்டெல்லாவுடன் அதிக நட்பு ஏற்பட்டது. அதற்கு முன் பேசிப்பழகி இருந்தாலும் அதிக நெருக்கம் இருந்ததில்லை. இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற பள்ளிக்குப் பெரும்பாலானவர்கள் நடந்தும் சைக்கிளிலும் பேரூந்திலும் சென்றுகொண்டிருக்க அப்பா, பள்ளிப் பேரூந்தில் சேர்த்துவிட்டிருந்தார். என்னோடு ஸ்டெல்லா இருந்ததால் அந்த பேரூந்து பிடித்திருந்தது. ஸ்கூல் இல்லாத சனி, ஞாயிறுகளில் ஸ்டெல்லாவின் வீடு விளையாட்டு மைதானமானது. அவள் வீட்டுக்குப் பின் பக்கம் நெடு நெடு என்று வளர்ந்த யூக்கலிப்டஸ் மரங்கள் உண்டு. அந்த மரங்களில் இருந்து விழும் இலைகளை அம்மா உட்பட தெருக்காரர்கள் எடுத்துக்கொண்டு செல்வார்கள். கொதிக்கும் தண்ணீரில் அந்த இலைகளைப் போட்டு முகத்தை காண்பித்தால் மண்டை இடி (தலைவலி) போய்விடுமாம்.

‘மண்டடி தைல மரத்து இலை இருந்தா, நாலஞ்சு எடுத்துட்டு வாட்டி‘ என்று அம்மா சொல்லும்போது அதற்கு இப்படியொரு பெயரும் இருப்பது தெரிந்தது. தெருவெங்கும் வாசம் தந்துகொண்டிருக்கிற அந்த வளு வளு மரங்களை காரணமே இல்லாமல் பிடித்துபோனதில் இருந்து ஸ்டெல்லா வீடுதான் எனக்கு எல்லாம். அவளது அக்காள்கள் பியூலா சிவசைலத்திலும், பிலோமினா சிவந்திபுரத்திலும் டீச்சர் வேலை செய்துகொண்டிருப்பவர்கள். ஸ்டெல்லாவை விட, பிலோமினா அக்காவுக்கு என்னை அதிகம் பிடிக்கும்.

'ஏம் பிள்ள ரெட்டை ஜடை போடலை. இந்தா இந்த ரோஸை தலையில வச்சுட்டுப் போ. இப்படியா வைப்பே. வலதுபக்கம் வைக்கணும். முகத்துல ஏன் இவ்வளவு பவுடர்? கொஞ்சம் துடைட்டி. காது பக்கத்துல இந்த முடியை இப்படி இழுத்து விடணும். நாளைக்கு கண் மை போடும் போது எங்கிட்ட வா. இப்படியா அள்ளி வச்சிருப்பே. எருமை மாதிரி வளர்ந்துட்டு இன்னும் சிம்மி போட்டுக்கிட்டா அலைவ? அம்மாட்ட சொல்லி, பாடி வாங்குட்டி‘

‘ஏக்கா எனக்கு எப்படியிருக்குன்னு பாத்து சொல்லு?‘ என்று ஸ்டெல்லா கேட்டால், ‘உனக்கு எல்லாம் சரியா இருக்குடி. போ’ என்பாள், கண்டுகொள்ளாமல். ஸ்டெல்லாவுக்கு கோபம் வரும். ‘ரொம்ப ஓர வஞ்சனை பண்ணுத‘ என்று சொல்லிவிட்டு, ‘புஷ்பம், உன் மூஞ்சு நல்லாதாம்டி இருக்கு. வா‘ என்று கரகரவென்று இழுத்துக்கொண்டு போவாள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்டெல்லா வீட்டில் கருத்தப்பிள்ளையூர் சர்ச்சுக்குச் செல்வார்கள். அப்பா, எங்களை விக்கிரமசிங்கபுரம் சர்ச்சுக்கு அழைத்துச் செல்வார். நான் அண்ணனுடனும் அம்மா, அப்பாவுடனும் சைக்கிளில் செல்வோம். அந்த காலையில் அப்படிச் செல்வது சுகமானதாக இருக்கும். நான்கைந்து வாரங்களுக்குப் பிறகு நான் ஸ்டெல்லாவுடன் கருத்தப்பிள்ளையூர் சர்ச்சுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டேன்.

‘டீச்சர், உங்க வீட்டுல அப்படி என்னத்த வச்சிருக்கியே. புஷ்பம், உங்க வீட்டு புராணத்தைதான் எப்பவும் பாடிட்டு இருக்கா‘ என்று அப்பா சொன்னதும் டீச்சருக்கு சந்தோஷம். ‘நான் என்னத்தை வச்சிருக்கேன். கர்த்தர் ஏதும் வச்சிருக்காரோ என்னவோ?‘ என்று சிரிப்பார் ரோஸ் டீச்சர்.

இப்போது ரோஸ் டீச்சர் வீட்டில் நானும் ஒருத்தியாகிப் போனேன். ஸ்டெல்லாவுக்கு துணிமணிகள் எடுத்தால் எனக்கும் ஒன்று உண்டு. புதிதாக வந்திருக்கிற பவுடர், சோப்பு, பொட்டு, வளையல் உள்ளிட்டவைகளும். டீச்சர் வீட்டில் ஒரு மனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. சம்பளம் வாங்கும் முதல் வாரத்தில் பியூலா செலவில் அம்பாசமுத்திரம் கல்யாணி தியேட்டரில் படம் பார்ப்பது என்றும் அடுத்த வாரத்தில் பிலோமினா செலவில் கிருஷ்ணா தியேட்டரில் படம் பார்க்கச் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. டீச்சருக்கு சினிமாவில் ஆர்வமில்லை என்றாலும் பிள்ளைகளின் ஆசையில் அவர் எப்போதும் தலையிடுவதில்லை.

நான்கைந்து மாதங்களாக இப்படிப் பார்க்கப்பட்ட சினிமாவின் தொடர்ச்சியாக அக்கா, தங்கச்சிகளுக்குள் கிசு கிசு ஒன்று உலாவி வந்தது. அதாவது ஒவ்வொரு முறை படம் பார்க்கச் செல்வதற்காக, ஏறும் பஸ்சில் சுருட்டை தலை முடியை கொண்ட இளைஞன் ஒருவன் வருவதும் அவன் பியூலாவுடன் வேலை பார்க்கும் வாத்தியார் என்பதும் இவர்கள் எந்த தியேட்டருக்குச் செல்கிறார்களோ, அங்கு அவனும் வருகிறான் என்பதும் குத்துமதிப்பாக அறியப்பட்டிருந்தது.

ஸ்டெல்லாதான் ஒரு நாள் உளறி, ‘உங்கூட வேலை பார்க்கவர் ஒருத்தரும் படம் பாக்க வாராமே. அவரை என்ன சொல்லி கூப்பிட? வாத்தியார்னா, அத்தான்னா?‘ என்றதும் பியூலா வெட்கமும் கோபமும் கலந்த கலவையாக மாறினாள். ‘ஏட்டி லூசு, வாயை பொத்து‘ என்று எரிச்சலாகச் சொன்னவளின் முகத்தில், ரகசியம் இப்படி தெரிந்துவிட்டதே என்கிற தவிப்பு. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் தெரியத்தானே வேண்டும். முதலில் மழுப்பி வந்தவள் சில பல வாரங்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டாள். அவர்களும் கிறிஸ்தவ குடும்பம் என்றதில் சிக்கல் ஏதும் இல்லை.

ப்ளஸ் டூ முடித்ததும் பாளையங்கோட்டையில் ஸ்டெல்லாவுடன் டீச்சர் டிரைனிங் சேர வேண்டியதாகிவிட்டது. தினமும் காலை ஏழு மணிக்கு ரயிலில் ஏறி தூங்கினால், ஒன்பது மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷன். அங்கிருந்து பாளையங்கோட்டைக்கு பஸ். ஒரு நாள் பஸ்சில் ஏறும்போது ஸ்டெல்லாவின் புத்தகத்தில் இருந்து விழுந்த நான்கைந்து கடிதங்களை நான் போய் எடுத்ததும் வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டாள்.

எதிலும் வெளிப்படையாக இருக்கும் ஸ்டெல்லா, கடித விவகாரத்தில் ரகசியம் காக்க வேண்டியதன் அவசியம் என்ன? இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. பெரும் ஏமாற்றம் உள்ளுக்குள் வந்து அமர்ந்துகொண்டு இம்சை செய்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதை மறந்துவிட்டேன். திடீரென்று அதிக சந்தோஷமாகவும் திடீரென்று அமைதியாகவும் வரும் ஸ்டெல்லா இப்போது ஆச்சரியமாகத் தெரிய தொடங்கினாள். ‘உனக்கு என்னாச்சு பிள்ள?’ என்றால் சிரிப்பு மட்டுமே பதிலாக வரும். அவள் காதல் விவகாரத்தில் சிக்கிக்கொண்டாள் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. வழக்கத்துக்கு அதிகமாக உடைகளிலும் மேக்கப்பிலும் கவனம் செலுத்துவது பளிச்சென்று தெரிந்தது. திடீர் திடீரென்று சினிமா பாடல்களை பாடுவதை இப்போது வழக்கமாக்கி இருந்தாள்.

அவன் யார் என்கிற தேடல் எனக்குள் ஓடியது. கருத்தப் பிள்ளையூரில் இருந்து டாக்டருக்கு படிக்க போகும் சாலமனாக இருக்குமோ? அவனாக இருக்காது. அவனிடம் இவள் பேசிப் பார்த்ததில்லை. ரயில்வே ஸ்டேஷனுக்கு காலையில் வருகிற ஒவ்வொரு இளம் வயதுக்காரர்களின் முகங்களும் வந்து வந்து போனது. இதைத்தாண்டி உடன் படிக்கும் ஜூலியை மோட்டார் பைக்கில் டிராப் பண்ணிப்போகும் அவளது அண்ணனும் தேவையில்லாமல் வந்து போனான். அவன் இவளைப் பார்த்து பல முறை பல்லிளித்து நின்றிருக்கிறான். இவளும், ‘ஜூலியோட அண்ணன், ஸ்டைலா இருக்காம்லா’ என்று சொல்லியிருக்கிறாள். அவனாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

இதைத் தொடர்ந்த நாட்களிலும் ஸ்டெல்லாவின் காதலனை அறிய முடியாதவளாகவே இருந்தேன். தினமும் அவளை விட அதிகமான தவிப்பு எனக்கு இருந்தது. அவன் யார் என்கிற அறிதல். கேட்கக்கூடாது என்று ஒவ்வொருநாளும் தள்ளி வைத்துக்கொண்டிருந்த மனம், அன்று கேட்டு விட்டது. ஆற்றுக்கு அக்காள்களுடன் குளிக்கச் சென்ற போது, தனியாக அழைத்து கேட்டேன், ‘யாரையோ நீ லவ் பண்ணுத பிள்ள. யாருன்னு சொல்லு?‘ என்று.

ஸ்டெல்லா எதுவும் சொல்லவில்லை. என் முகத்தை பார்த்துவிட்டு தலையை குனிந்து வந்துகொண்டிருந்தாள். அதற்கு, ‘உனக்கு அது தேவையில்லாதது’ என்பதாகவோ, ‘அடுத்தவங்க விஷயத்துல உனக்கென்ன ஆர்வம்?’ என்பதாகவோ அர்த்தம் இருக்கலாம். மீண்டும் கேட்கவா வேண்டமா என்று நினைத்து அவளைப் போலவே பேசாமல் சென்றேன். அதன்பிறகு அவளிடம் பேச்சைக் குறைத்துக்கொண்டேன். நானாகக் குறைத்தேனா அல்லது அவளாக குறைத்தாளா என்பது தெரியவில்லை. ‘ஏட்டி ரெண்டு பேரும் சண்டையா? வீட்டுக்கு வாரதில்லை, ஏம்’ என்று பிலோமினா அக்கா கேட்டபோது, ‘அப்படிலாம் இல்லக்கா. வீட்டுல நிறைய வேலை’ என்று சமாளித்து வைத்தேன்.

திங்கட்கிழமை மட்டும் இருவரும் ஒரே கலர் டிரெஸ்சில் செல்வது வழக்கம். அதற்கு மேட்சாக ஸ்டெல்லா எப்போதும் கையில் வைத்திருக்கும் கைக்குட்டை அன்று தற்செயலாக என் கவனத்தை ஈர்த்தது. ‘நீல்‘ என்று எம்ப்ராய்ட் செய்யப்பட்டிருந்த அதை பார்த்ததும் இருதயம் ஒரு நிமிடம் நின்று இயங்கியது. அது என் அண்ணனுடையது. முந்தைய நாள் மாலையில் அவன் அதை அயர்ன் பண்ணிக்கொண்டிருந்தான். இப்படியொரு விஷயம் எனக்கு தெரியாமல் எப்படி? அண்ணணும் அவளும் எங்கு சந்தித்துக் கொள்கிறார்கள், எப்படி பேசிக்கொள்கிறார்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் இருவரும் காதலிக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது. இது, ஒரு புதிர்போல எனக்குள் சுற்றிக்கொண்டிருந்தது. இரவைத் தவிர பெரும்பாலான நேரத்தை ஸ்டெல்லாவுடன்தான் கழிக்கிறேன். எனக்குத் தெரியாமல் எப்படி நடந்தது இது என்று ஆச்சரியப்பட்டேன்.

எனக்கு இப்போது சிரிப்பு வந்துவிட்டது. வெட்கச் சிரிப்பு. வழக்கமாக அவள் பட வேண்டிய வெட்கம் எனக்குள் புகுந்தது. என் தோழி ஸ்டெல்லா எனக்கு அண்ணியாகப் போகிறாள் என்று நினைத்ததாலா? அல்லது இவளை எப்படி அந்த உறவுக்குள் வைத்துக்கொள்வது என்கிற குழப்பமா? எதுவும் தெரியவில்லை. நான் சிரிப்பை அடக்கிப் பார்த்தேன். ம்ஹூம் எல்லை மீறி பீறிட்டு வருகிறது. இரண்டு மூன்று முறை என்னைப் பார்த்த ஸ்டெல்லா பிறகு கேட்டாள். ‘ஏம் ஒரு மாதிரியா சிரிக்கே?‘ என்று. ‘ஒங் கள்ளத்தனம் தெரிஞ்சு போச்சுப் பிள்ள’ என்று சொல்லலாம் போலிருந்தது. ஆனால் சொல்லவில்லை. அதை எப்படி எடுத்துக்கொள்வாளோ தெரியவில்லை. ‘சும்மாதான்’ என்று சொல்லிவிட்டு கவனத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். அப்பாவி அண்ணன் நீல் ஆம்ஸ்ட்ராங்க் கண்முன் வந்தான். ‘டீச்சரு வீட்டுல இருந்து ஒங்கூட படிக்கிலா ஒரு பிள்ளை, அவா பேரு என்னது?’ என்று கேட்டதிலிருந்து அவள் தொடர்பாக அவன் விசாரித்த விஷயங்கள் ஒவ்வொன்றாக ஞாபகத்துக்கு வந்தன.

டீச்சர் வீட்டில், பியூலா அக்கா திருமணம் முடிந்து சிவசைலத்தில் குடியேறிவிட்டாள். ஸ்டெல்லா, இன்னும் அழகு கூடிக்கொண்டே இருந்தாள். அவள் வீட்டு வாசலில் வளர்கிற பூக்களில் ஒருவளாக, எல்லோராலும் தொட்டு பறிக்கக் கூடிய ஆசையை தருகிற அந்த பூக்களின் வாசனையாக மாறியிருந்தாள். எப்போதும் வீட்டு வாசலில் நின்றுகொண்டோ, அல்லது ரோஸ் டீச்சர் அமர்கிற ஈசி சேரில் சாய்ந்துகொண்டோ, எதையோ தேடிக்கொண்டிருப்பவளாக அல்லது சாலையோ, சாலையில் செல்பவர்களோ தன்னையே தேடிக்கொண்டிருப்பதாகவும் அப்படி தேடுபவர்களுக்கு தன் முகம் காட்டாதது பெரும் பாவம் என்கிற நினைப்பிலோ அவள் வாசலே கதி என்று இருந்தாள்.

ஸ்டெல்லாவின் காதலை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவளும் வெளிப்படையாக என்னிடம் சொல்லவில்லை. தெரிந்ததாகக் காண்பித்திருந்தால் இருவருக்குமான தகவல் தொடர்பு சாதனமாக மாறியிருப்பேன். அப்படியொரு புனிதப்பணி கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம்தான்.

வீட்டில் அண்ணன் தன் காதல் விஷயத்தை சொன்னபோது அப்பா மிருகமாகி இருந்தார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரும் சண்டை. என்ன நடந்ததென்று தெரியவில்லை. வெய்க்காலிபட்டி அத்தை மகளைதான் அண்ணன் கல்யாணம் பண்ண வேண்டும் என்பது அப்பாவின் விருப்பமாக இருந்ததை பிறகு தெரிந்துக்கொண்டேன். அண்ணன் தன் பிடியில் உறுதியாக இருந்தான். சொந்தங்கள் வரை விஷயம் சென்று பிரச்னை விவகாரம் ஆகியிருந்தது. டீச்சர் வீட்டுக்கு நான் செல்லக்கூடாது என்று உத்தரவு. எந்த கெட்டப் பழக்கத்தையும் கொண்டிராத அப்பா, அன்று சாராயம் குடித்துவிட்டு எங்கோ விழுந்து கிடந்ததாக நான்கைந்து பேர் கைத்தாங்கலாக கூட்டி வந்துவிட்டார்கள். ‘இந்த மனுஷனை இப்படி ஆக்கிட்டியலே?’ என்று அம்மா ஒப்பாரி வைத்து அண்ணனைத் திட்டிக்கொண்டிருந்தாள். இந்த காதல் விவகாரத்தில் எனது நட்பு சின்னாபின்னமான ஏழாவது நாள், திருச்செந்தூர் கடலில் விழுந்து ஸ்டெல்லாவும் அண்ணனும் பிணமாகி இருந்தார்கள்.

ஒரே நேரத்தில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் ஊருக்குள் வந்து முதலில் இருக்கிற வீட்டில் பெண்ணையும் கொஞ்சம் தள்ளி இருக்கிற வீட்டில் பையனையும் இறக்கிவிட்டு கூடவே பெரும் சோகத்தை விட்டுவிட்டு போனது. அப்பாவும் அம்மாவும் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள். டீச்சர் வீட்டில் வேதனை தாங்க முடியாததாக இருந்தது. இங்கிருந்தால் அண்ணனின் நினைவை அழிக்க முடியாது என்று சென்னைக்கு குடிபெயர்ந்தோம் நாங்கள்.

கிட்டத்தட்ட பதினைந்து பதினாறு வருடங்கள் ஆகிவிட்டது. மாற்றங்களைப் பழக்கப்படுத்தும் மனசு அந்த சம்பவத்தையும் ஈசியாக மறந்துவிட்டிருந்தது. எப்போதாவது நினைவு வந்தாலும் அடுத்தடுத்து வந்துவிடுகிற வேலையும் குடும்பச் சூழலும் அதை மறக்கடித்துவிடுகிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இதோ சிறு தூரலில் நனைந்துகொண்டு போய்க்கொண்டிருக்கிறேன். உறவினர் திருமணத்துக்காக பக்கத்து ஊருக்கு வந்தவள், அப்படியே பிறந்து வளர்ந்த மண்ணுக்கும் ஒரு எட்டு. அண்ணன் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் ஸ்டெல்லாவும் சென்ற சாலையில் என் கால்கள் பதிய நடந்துகொண்டிருக்கிறேன். வந்துவிட்டது டீச்சர் வீடு. வாசல் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. உள்ளே அதே ஈசி சேர். அதில் சாய்ந்து படுத்திருப்பது டீச்சர்தான். மழை தடதடவென்று ஓங்கி அடிக்கத் துவங்கி விட்டது. வேகமாக ஓடி வாசலில் கால் வைக்க தயங்கி உள்ளே போய் நின்றதும் டீச்சர்தான், ‘யாரும்மா?’ என்றார் கூர்ந்து பார்த்தபடி. பழைய கம்பீரம் இல்லை. உடல் தளர்ந்து போய் இருந்தது.

‘மழை. அதான்...’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் பார்க்கிறேன். இரண்டு மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

‘இங்க வந்து நின்னும்மா?’ என்று தார்சாவை கை காட்டுகிற டீச்சர், வீட்டுக்குள் திரும்பி, ‘பிலோமி... யாரோ வந்திருக்காவோ’ என்கிறார். சற்றே குண்டாகிப்போன பிலோமினா அக்கா, வாசலுக்கு வரவும் ஓடிப்போய் கட்டி அணைக்கிறேன். என்னையறியாமல் குலுங்கி குலுங்கி அழுகிறேன். ‘ஏட்டி புஷ்பம்...நீயாட்டி’ என்கிற அன்பும் பாசமும் குலைந்து கொஞ்சம் தள்ர்ச்சியாக வருகிற ரோஸ் டீச்சரின் குரலில் அழுகை பொங்கி எழுகிறது. கன்னங்கள் நனைந்து வழிகிறது இளஞ்சூட்டு கண்ணீர். வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள், என்னைப்போலவே அழுகிற பிலோமினா அக்காவும் ரோஸ் டீச்சரும். சேலை முந்தானையால் கண்ணீரைத் துடைத்தாலும் பொத்துக்கொண்டு வருகிறது வெள்ளமாக. இப்போது டியூப் லைட் போடப்படுகிறது. கண்ணைத் துடைத்துவிட்டு எதிரில் பார்க்கிறேன். சாரின் புகைப்படத்துக்கு அடுத்து சிவப்பு நிற விடி பல்பில் ஸ்டெல்லா புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அருகில் அண்ணன் நீல் ஆம்ஸ்ட்ராங் புகைப்படமும் சிரித்துக்கொண்டிருந்தது. இருவரும் புகைப்படங்களுக்கு கீழும் தோற்றம், மறைவு தேதி இல்லாமல் இருந்தது.

 நன்றி. தினகரன் தீபாவளி மலர்

4 comments:

paul vannan said...

Very nice narrating in village style. While reading , I have the feeling of roaming and enjoying in my village . All your writings take me to my student life ( SPKC ALWARKURICHI-22 yrs back - 1987 t0 1990 ). Almost I might have read all your postings ,But this is the first time of giving feed back . I wish to write in Tamil ,but lacking to execute in computer.( mathapadi tamil than thaimozhi, tenkasi pakathula kizhapuliyur than en oor ). MANAM KANITHA VALTHUKKAL .ALL THE BEST.If you don't mind pl initiate one test mail at paul_tenkasi@hotmail.com
thanks ,

Paulvannan.

இராஜராஜேஸ்வரி said...

இருவரும் புகைப்படங்களுக்கு கீழும் தோற்றம், மறைவு தேதி இல்லாமல் இருந்தது.//

நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ !

துபாய் ராஜா said...

வழக்கம் போல மனதை தைத்த அருமையான கதை. அம்பாசமுத்திரம், கருத்தப்பிள்ளையூர்ன்னு ஊர்,ஊரா கூட்டிட்டு போய் காமிச்சுட்டிய.

அப்புறம் இன்னொன்னு... சொல்றேன்னு தப்பா நினைக்கக்கூடாது. தீபாவளி மலருக்கு சோகக்கதைக்கு பதிலு சுகமுடிவா ஏதாவது எழுதிருக்கலாம்லா...

Robert said...

மழையோடு கொஞ்ச நேரம், பதின்ம மற்றும் பருவ வயதில் கொஞ்ச நேரம், எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்த மத்திம வயது நிரம்ப அருமை...