Saturday, May 28, 2011

கதைகள் உலாவும் வளவு

‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி? ஆச்சர்யமால்லா இருக்கு’.

பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது வளவில் பீடிச்சுற்றிக் கொண்டிருந்தவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்தாதற்கு, ‘கெழவிக்கு வேலை இல்லை’ என்பதாகவோ, ‘இப்படியெல்லாமா இருக்கும்?’ என்பதாகவோ காரணமாக இருக்கலாம். இரண்டு கருப்பட்டித் துண்டுகளை வாயில் போட்டுக்கொண்ட வசந்தா, இலைக்குள் புகையிலையை வைத்து உருட்டிக்கொண்டே, ‘கெழவி, அவன் பேரனை பத்தி ஏதாவது சொன்னா கொதிப்பா. மத்தப் பயலுவோன்னா எக்காளம் பேசுவா' என்று லேசான குரலில் சொன்னாள். அவளது இந்தப் பேச்சை ஆமோதிப்பதாக, வட்டமாக அமர்ந்து பீடி சுற்றும் பிள்ளைகள், ‘ஆமாமா" என்று தலையாட்டினார்கள். பாம்படம் ஆடும் பாட்டிக்கு காது கொஞ்சமாகத்தான் கேட்கும் என்கிற தைரியத்தில் அவளை, இவர்கள் அவ்வப்போது வாறுவதை பாட்டி அறிந்திருக்கவில்லை. பாட்டிக்கு காதுதான் கேட்கவில்லையே தவிர, கண்களின் பவர், ஜாஸ்தியாகவே இருந்தது.

ஆறு ஆறு என இரண்டு பக்கமும் 14 வீடுகளை கொண்ட, ‘ப’ வடிவத்தை மாற்றிப்போட்டால் இருப்பது போன்ற வடிவிலான வளவின் முதல் வீடு, லட்சுமணப் பெருமாளுடையது. சாக்கடை ஓடும் தெருவில் இருந்து, வளவின் படியேறி நின்றால், வலப்பக்கம் தெரியும் நீ...ண்ட திண்ணையில் எப்போதும் ஐந்தாறு பேர் கதையடித்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக தாவணி அணிந்த பெண்கள். லட்சுமணப் பெருமாளும் அவரது மனைவியும் வயல் வேலைக்குப் போன பிறகு, பிச்சமாள் பாட்டிதான், வீட்டுக்கும் அவளது பேத்தி, மூக்கம்மாளுக்கும் காவல். ஏதோ காரணத்தால் கடந்த 5 வருடங்களாக திருமணம் தடைபட்டு தடைபட்டு, ‘எவன் வரப்போறானோ?’ என்று காத்திருப்பவள் மூக்கம்மாள். சைக்கிள் கடை செல்லையாவுக்கும் இவளுக்கும் அது இது என்று அரசல் புரசல் பேச்சும் ஊரில் கசிந்துகொண்டிருந்தது. இப்படி யாரையாவது பற்றி, கோள் சொல்லிக்கொண்டோ, அல்லது உண்மையை பேசிக்கொண்டோ இருக்காவிட்டால் உள்ளூர்க்காரர்களுக்கும் பொழுது போக வாய்ப்பில்லைதான்.

வீட்டின் திண்ணை சும்மாதான் இருக்கிறது என்பதாலும் இங்கே உட்கார்ந்தால் தெருவில் செல்பவர்கள், வருபவர்களை பார்க்கலாம் என்பதாலும் அக்கம் பக்கத்து குமரிகள் இங்கு பீடி சுற்ற ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் பாட்டி சொல்லும் கிளு கிளு கதைகளில் விழுந்த கிடந்தார்கள் குமரிகள். அதை ரசிக்காதவர்களாகக் காட்டிக்கொண்டாலும் இன்னைக்கு, என்ன கதை சொல்லுவா? என்கிற தொனியில் அவர்களின் ஆர்வம் இருந்தது. இந்த கிளு கிளு கதைகள் பெரும்பாலும் ஊரின் மேல, கீழ, வட, தெற்கு தெருவில் பட்டப்பெயர்களுடன் அலையும் ஏதாவது ஒருத்தியை/ஒருவனைப் பற்றியதாக இருக்கும். இந்த கதைகளின் பொருட்டு பாட்டிக்கான முக்கியத்துவம் வளவின் இளம்பெண்களிடம் அதிகமாகியிருந்தது.

ஒரு மழை காலத்தில் மூன்றாவது வீட்டு கடையநல்லூராள் மகள், கடைக்காரனுடன் ஓடிப்போனதிலிருந்து அந்த மாதிரி கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் பாட்டி. ஏதோ எடக்காக சொல்ல போய், பிள்ளைகளின் தன்னுணர்ச்சியை கீறி விடும் அவலத்துக்கு தான் காரணமாகி விடக்கூடாது என்று நினைத்ததையடுத்து பாட்டியின், அந்த மாதிரி கதைகள் அறவே நின்று போனது. ஏதாவது கல்யாணம், காட்சி என்று வளவு காலியாக இருக்கும்போது, இப்போதும் வசந்தா, ஆரம்பிப்பாள்:

‘ஏ கெழவி, நீ கதை சொல்லி எவ்வளவு நாளாச்சு, இன்னைக்கொரு கதை சொல்லு?’

‘நம்ம அம்மன் கதையை சொல்லுதேன், கேக்கேளாட்டியோ?' என்றதும் சுவாரஸ்யம் புஸ்ஸாகிவிடும்.

‘அந்த கதையை எத்தனை தடவைதான் சொல்லுவ? செரி, விடு. கதையும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்'.

‘ம்ம்ம்...உங்களுக்கெல்லாம் இடுப்ப ஒடிக்க ஒருத்தன் வந்தாதான் சரிபடுவியோ, கொழுப்பெடுத்துலா இருக்குவோ?' என்று தனக்குத்தானே பாட்டி புலம்பிவிட்டு வெற்றிலை பாக்குக்கு தாவிவிடுவாள்.

பாட்டி, இப்போது குறை சொல்லும் கல்யாணி பயல், உள்ளூர் மீனாட்சிப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவன். படிப்பின் இடையே, பீடி சுற்றும் இளங்குமரிகளுக்கு தகவல் தெளிக்கும் தன்னலமில்லா தொண்டன். தொண்டன் என்கிற பதம் சரியானதாகவே இருக்கும். ஏனென்றால் புதிதாக தெரிந்த தகவலை சொல்லிவிடவில்லை என்றால், மண்டை வெடித்துவிடும் அளவுக்கு தவித்துவிடுவான் இவன். குறிப்பாக, பீடி சுற்றும் எல்லாரும் கல்யாணத்துக்கு காத்திருப்பவர்கள் என்பதால், தெருவில் ஏதாவது பேன்ட் & ஷர்ட் அணிந்த புதுமுகம் தெரிந்தாலோ, பட்டு, வேட்டி கட்டிக்கொண்டு புகைபிடித்து அலைகிற வீராப்பு பார்ட்டிகள் தெரிந்தாலோ, அவர்களைப் பற்றிய ஏ டூ இசட் விஷயங்களை அடுத்த நிமிடமே கொண்டுவந்து பகிர்பவன் கல்யாணி. இதோடு ஊரில் யார் வீட்டுக்கு பெண் பார்க்க வர இருக்கிறார்கள், அல்லது யார் யார் வீட்டில் பிரச்னை என்பது உள்ளிட்ட தகவல்களை காலை 8 மணி வாக்கிலும் மாலை ஆறு மணி வாக்கிலும் இரண்டு பகுதியாக பகிர்பவன். இதற்காக வளவு ஏரியாவில் பீடி சுற்றுபவர்களின் செல்லப்பிள்ளையாகி இருந்தான் கல்யாணி. இந்த செய்திகளுக்கு கைமாறாக & அவன் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கொடுக்கப்படுவது, அவித்த பயித்தங்காய், பொறி அரிசி, கிளிமூக்கு மாங்காய் துண்டுகள்.

இப்போது அவனைப் பற்றிய பிரச்னை என்னவென்றால் மண் தின்கிறான் என்பதுதான். மண் என்றால் ஆற்றுமணலோ, தரையில் கிடக்கும் புழுதி மண்ணோ அல்ல. சுவற்று மண். அதாவது மண்சுவற்றில் கட்டியாக, மஞ்சள் நிறத்தில் உறைந்து இருக்கும் சாரல் மண்.

பிச்சம்மாள் பாட்டி, தொழுவில் சாணத்தை அள்ளி, எருக்கெடங்கில் போடுவதற்காகப் போகும் போது, சந்திரமய்யர் வீட்டின் பின்பக்கத்து மண்சுவற்றில் கல்யாணி, ஏதோ செய்துகொண்டிருந்ததைப் பார்த்தாள். முதலில் பார்த்தபோது அவளுக்கு எந்த சந்தேகமும் வந்ததில்லை. தொடர்ந்து நான்கைந்துமுறை அதே இடத்தில் அவனைப் பார்க்கவும் நேராக, கிட்டே போய்விட்டாள். கிழவியை பார்த்ததும், மண்ணை கீழே போட்டுவிட்டு, ‘என்ன பாட்டி?’ என்றான். அவனது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. பாட்டி பார்த்துவிட்டாள் என்பதாகவோ, நாம் செய்வது மகா தவறு என்றோ, அவன் நினைக்கவில்லை. ஆனால், பாட்டிக்கு அது மகா தவறாக தெரிந்தது.

‘இங்ஙன என்னல பண்ணுத’

‘சும்மா நிக்கேன்’

‘கட்டமண்ணு கிட்ட வந்து சும்மா நிக்கேன்னா என்னடே அர்த்தம்’

‘என்ன கெழவி பொசமுட்டிப் போச்சா ஒனக்கு?. எருக்கெடங்குல கொட்டிட்டன்னா போவியா? கேள்வி கேக்க’

‘ஏல, பொய் சொல்லாத, வாயை காட்டு’

‘இந்தா பாத்துக்கோ’ என்று நாக்கை நீட்டினான். மஞ்சள் நிற மண்ணாகி இருந்த நாக்கு, ஒப்புவித்தது.

‘மண்ணால திங்கே...’

‘போ... கெழவி, தொண்டைய போட்டு ஊரெல்லாம் கொட்டடிக்காத...’

‘ஒங்கம்மகிட்ட சொல்லுதேன்’

‘சொல்லிக்கோ’

கெழவி மட மடவென்று கிளம்பிவிட்டாள். அவள் சொன்னமாதிரி கல்யாணியின் அம்மாவிடம் இதை சொல்லவில்லை. அதற்கு அவளை நேரில் காணவில்லை என்பது காரணமாக இருந்தது. பீடி சுற்றுபவர்களிடம் சொல்லிப் பார்த்தாள்.


‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி இப்படியொரு புத்தி? ஆச்சர்யமால்லா இருக்கு". அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

'ஏட்டி, நான் என்ன சொல்லுதேன். நீங்க கேக்கேலா'’ என்று வசந்தாவின் வாயசைவை பார்த்து பாட்டி அதட்டவும், அவளை கவனித்தார்கள். அந்த இளங்கூட்டத்தில் வசந்தாதான் சீனியர் என்பதால் பாட்டி அவளிடம் கடிந்தாள்.

‘அவன் எப்படி கெழவி, மண்ணைப் போய் திம்பான். நீயும் சொல்லுதே’

‘ஏட்டி, நா என்ன பொய்யா சொல்லுதேன். கையும் களவுமாலா புடிச்சேன்’

‘அந்தப் பய வரட்டும். கேட்டுருவோம்’


மேகம் மூட்டமாக இருந்தது. இன்னும் செத்த நேரத்தில் மழை பெய்யலாம். கிழக்கே எங்கோ மழை பெய்வதை, வேகமாக வரும் குளிர்காற்று சொல்லிப்போயிற்று. வீட்டின் கொடியில் துணிகளை காயப்போட்டிருந்தவர்கள் அவசரம் அவசரமாக எடுத்துக்கொண்டிருந்தார்கள். வீட்டின் வாசலில் காயப்போட்டிருந்த விறகு கட்டைகளை, உள்ளே அள்ளிப்போட்டுக்கொண்டிருந்தனர் சிலர். லேசான மழைத்துளி ஒன்று கல்யாணியின் கன்னத்தில் விழ, கைகளை மோட்டார் பைக்காக்கி டர் டர் என்று வேகமாக ஓடி வந்தான் வளவுக்கு. வந்து நின்றதும் மூச்சிறைத்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, வாயில் ஆரஞ்சு வில்லையை எடுத்துப்போட்டான். திண்ணையில் யாருமில்லை. அவன் கால் டிரவுசர் பாக்கெட் இரண்டும் புடைத்துக்கொண்டிருந்தது.

வீட்டுக்குள்ளிருந்து நனைய வைத்த அரிசியை தின்றுக்கொண்டு வந்த வசந்தா, அவனை அழைத்து, ‘ஏடே மண்ணு திங்கியாமே, நெசமா?’ என்றாள்.

‘ஆமா’ என்று லேசாக சிரித்துக்கொண்டே, தலையாட்டினான் கல்யாணி.

‘ஏல, புள்ளத்தாச்சி பொம்பளைலுவோ, மாங்கா, சாம்பல், சார மண்ணுன்னு திம்பாவோ. ஒனக்கெதுக்கு? நீ பிள்ளையால பெக்க போறே?’

‘அந்த அக்காளுக்காவ, கொண்டு போயி, கொடுத்து கொடுத்து எனக்கும் பழவி போச்சு’

அவன் சொல்ல சொல்ல வசந்தாவின் பின்னால் நின்று நாக்கைத் துறுத்தியும் கையை ஆட்டியும் சொல்லாதே என்று சைகை காட்டிக்கொண்டிருந்தாள் மூக்கம்மாள்.

11 comments:

Balakumar Vijayaraman said...

அட, அப்படி போகுதோ அவ கதை :)

காமராஜ் said...

வணக்கம் தோழா ....
நலமா...
இது முகமன் கூற மட்டும் ஆன பின்னூட்டம்.கதை படித்து பின் எழுதுவேன்.

ஆடுமாடு said...

பாலகுமார் நன்றி.
................

//இது முகமன் கூற மட்டும் ஆன பின்னூட்டம்//
நன்றி தோழர் காமராஜ்.

நாடோடி said...

உல‌வும் க‌தைக‌ள் சில‌ நேர‌ங்க‌ளில் நிஜ‌மாகியும் போகிற‌து... :)

ஆடுமாடு said...

நாடோடி, சங்கரலிங்கம் சார் நன்றி.

க. சீ. சிவக்குமார் said...

ச்சே! பாவம் மூக்கம்மா... அவள் கதை இப்படி ஆரம்பிக்க வேண்டாமாயும் உங்க கதை இப்படி முடிய வேண்டாமையாவும் இருந்தது.

ஆடுமாடு said...

நன்றி, க.சீ சாமியோவ்!

ராகவன் said...

அன்பு ஏக்நாத்,

எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளைக்கப்புறம் இது போல எழுத்தப்பாக்க நல்லாத்தேன் இருக்கு! சொல்லாட்சியும், வட்டார மொழியும்... காடுகளுக்கு அழைத்துச் செல்கிறது...

இன்னும் கொஞ்சம் கதை சொல்லியிருக்கலாம்... வயசான கெழவியெல்லாமே சரோஜாதேவி ரேஞ்சுக்கு கதை சொல்வதாக நிறைய பேர் சித்தரிப்பது வழக்கமாயிருக்கு...

அது என்னமோ குமரிகள்...கிழவிகளின் உறவு இப்படிக் கதைகள் சொல்வதிலும், கேட்பதிலும் தான் பிணைக்கப்பட்டிருக்கு போல...முதலும் மூன்றாம் தலைமுறை இனைப்புப்பாலம் கதைகள்!!

அன்புடன்
ராகவன்

ஆடுமாடு said...

நன்றி ராகவன்,
ஒரு வேளை கென்ய பாட்டிகள் வேறு கதைகள் சொல்லியிருப்பார்களோ என்னவோ?

நன்றி.

☼ வெயிலான் said...

திண்ணையில பொரணி பேசுதவுகளோட ரொம்ப நாளைக்கப்புறம் இங்குட்டு வந்திருக்கீயளே அண்ணாச்சி!

இராஜராஜேஸ்வரி said...

கதையல்ல நிஜமா??