Saturday, July 17, 2010

ஏதாவது சொல்லிவிட்டு போயேன்

சொல்லென்பது சொல்லல்ல. அது உயிரில் பாய்வதும் உயிரை மீட்பதுமான ராட்சச இயந்திரம். நீ சொல்லும் சொற்களை கேட்கும் செவிகள், சில நேரம் மிதக்கின்றன. சில நேரம் முங்குகின்றன.

உதிர்ந்து விழுகின்ற சொற்களில் இருந்து முளைக்கிறது கனவென்னும் காட்சி. இடையே புகுந்து கையில் எடுத்துக்கொள்கிறாய். காட்சிகளாகும் சொற்களை தாங்குகிறது உன் கைகள். காட்சி விரிந்து விரிந்து உலகெனும் எல்லை எங்கும் நீள்கிறது. காட்சியின் கனம் தாங்காமல் உன்னிடமிருந்து மீள முற்படும் சொற்களின் முயற்சி தோல்வியில் முடிகிறது.


எனது நடு உச்சியில் இருந்து உருண்டு விழும் எனது சொல்லால் உன் சொற்களை இழுக்கப் பார்க்கிறேன். கோபமாகிறாய் நீ. உன் கண்களில் இருந்து உதிர்ந்து வரும் வேற்றுச்சொல்லுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
 
உனக்கும் எனக்குமான கோபத்தில் சொற்களுக்குள் வருகிறது காதல். உன் கை தாங்கும் சொற்களை, என் உச்சி சொற்கள் கட்டித்தழுவுகின்றன. தாங்க முடியாத கோபமும் சொற்களாக உதிர்கிறது. சொற்களின் மூன்றாவது காதல் தொடர்கிறது. உன் சொற்களை பொறுக்கிக்கொள்ள துடிக்கிறாய். அவை துள்ளி, துள்ளி ஏதும் சொல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நீயும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். ஏதும் சொல்லாமல் போகிறாய், கூந்தல் விரித்து.
 
'ஏதாவது சொல்லிட்டு போயேன்' என்கிறது எனது காய்ந்த சொற்கள். சொற்களுக்கும் தெரியாது, நீயென்பதும் சொல்லல்ல.

pic courtesy: http://non-formula-art.en.made-in-china.com/

10 comments:

காமராஜ் said...

தோழா....
சுண்டச் சுண்டக் காய்ச்சிய பாலாக
தேய்க்க தேய்க்க மிளிரும் பளபளப்பாக
சொற்கள் சுருக்கி உயிரை உருக்குது.
அழகு....

பத்மா said...

புதிய வடிவு..
சொல்லாத வார்த்தைகளின் கவர்ச்சியே தனி தான்
சொல் என்று ஏங்கி நின்றாலும் சொல்லாமல் இருக்கும் போது பலவற்றை யூகித்து மகிழ முடிகிறது .....
இது தான் சொல்லாமல் கொல்லும் கலை
நல்லதொரு வாசிப்பாக அமைந்தது

மதுரை சரவணன் said...

அருமைங்க...வாழ்த்துக்கள்

ஹேமா said...

காதலின் சொற்களுக்காய் ஏங்கும் சொற்கள் கோர்த்த சொற்கோர்வைகள்.அருமை.

ஆடுமாடு said...

//சுண்டச் சுண்டக் காய்ச்சிய பாலாக
தேய்க்க தேய்க்க மிளிரும் பளபளப்பாக
சொற்கள் சுருக்கி உயிரை உருக்குது.
அழகு...//

நன்றி தோழர்.

ஆடுமாடு said...

//சுண்டச் சுண்டக் காய்ச்சிய பாலாக
தேய்க்க தேய்க்க மிளிரும் பளபளப்பாக
சொற்கள் சுருக்கி உயிரை உருக்குது.
அழகு...//

நன்றி தோழர்.

ஆடுமாடு said...

//இது தான் சொல்லாமல் கொல்லும் கலை
நல்லதொரு வாசிப்பாக அமைந்தது//


நன்றி பத்மா மேடம்

ஆடுமாடு said...

மதுரை சரவணன், ஹேமா, நன்றி.

க.பாலாசி said...

இது முற்றிலும் கவிதை... இதைபடிக்கும் நேரத்தில் ஏனோ தெரியவில்லை உங்களின் இந்த கவிதைதான் மனதை கவ்விக்கொள்கிறது... இந்த சாயலை அல்லது சாயத்தை எப்படி அகற்றவென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

உன் சாயலைப்போல் தெரியும்
பெண்களிடமெல்லாம்
ஏதாவது பேசிவிடுகிறேன்.
ஆழ்வார்க்குறிச்சி தேரோட்டத்தில்
உன்னை போலவே தெரிந்த
பெண்ணிடம்பேச நினைக்க,
அது நீயாகவே இருந்தாய்
பேசாமலேயே திரும்பினேன்.

ஆடுமாடு said...

பாலாசி நன்றி. எனக்கும் பிடித்தமான கவிதை அது.