Tuesday, July 20, 2010

காடு 14

பெரும் வனம் தந்திருக்கிற அமைதிக்குள் பிச்சம்மாள், உச்சிமகாளியின் கண்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக்கொண்டிருந்தாள். நடந்துபோனவற்றை நெஞ்சுக்குள் அலையவிடுவதில் சில நேரம் மனம் குளிரலாம். சில நேரம் கொதிக்கலாம். உ.மகாளி குளிர்ந்து, கொதித்துக் கொண்டிருந்தான்.


பிச்சம்மாள், தயிர்க்காரியின் மகள். தயிரிலும் மோரிலும் தண்ணீரை கச்சிதமாக கலக்கும் கலை பெற்றவள். தண்ணீர் கொஞ்சம் அதிகமானாலும் தயிர், மோராகும் வாய்ப்பிருக்கிறது. உ.மகாளிக்கு பிடித்தது கொஞ்சம் புளித்த மோர். புளிக்கும் மோர் எங்கும் கிடைக்குமென்றாலும் புளிப்பு அதிகமல்லாத, புளிக்கவும் செய்கிற பக்குவான மோரை பிச்சம்மாள் வீட்டில் மட்டுமே வாங்க முடியும். அவள் வீட்டு மோருக்கு ஐயமார் தெருவில் கொஞ்சம் கிராக்கி.

மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற பிறகு, பதினோரு மணி வாக்கில் மோர் விற்க தொடங்குவாள். கூவி கூவி, மோரு... மோரு என்ற விற்பனை கிடையாது. பஜனை மடத் தெருவில் இருக்கும் சுடலைமுத்து நம்பியார் தாத்தா வீடு, அவர் வீட்டுக்கு பின்புறம் இருக்கிற விவசாய சங்க தலைவர் பரமன் வீடு, இன்னும் நான்கைந்து வீடுகளுக்கு கொடுத்துவிட்டு, நேராக அக்ரஹாரம். முனையில் இருக்கிற காசி வாத்தியார் வீட்டிலிருந்து பத்து பதினைந்து வீடுகளுக்கு பிச்சம்மாள் வீட்டு மோர்தான். சில வீடுகளில் கேட்டால், பசு நெய்.

இந்த பதினைந்து வீடுகளை தாண்டி கீழப்பக்கம் இருக்கிற வீடுகள், மேலத் தெரு துரையப்பா மனைவிக்கு பாத்தியப்பட்டது. பாத்தியப்பட்டது என்பது இந்த தெருவில் இந்த குடும்பம்தான் மோர் விற்க வேண்டும் என்கிற நியதி அந்த காலத்திலிருந்தே வந்திருந்தது. இந்த மோர் விற்பனைக்கு பிறகு, சாணம், மற்றும் மாட்டு மூத்திர வாச்னைகளை சுமந்துகொண்டிருக்கும் தொழுவை சுத்தப்படுத்துவது, வைக்கோல் படப்பிலிருந்து மாடுகள் கட்டப்படும் இடத்துக்கு முன்னால் இருக்கிற இடத்தில் வைக்கோலை வைப்பது உட்பட இன்ன பிற வேலைகள் பிச்சம்மாளுக்கானது.

கோடையில் மாலை வேளையில் மாந்திராங்குளத்து பொததைக்கருகில் விழுந்து கிடக்கிற மரக்கிளைகள், தென்னந்தட்டிகளை விறகாக கொண்டு வருவதும் இவள் வேலையாக இருந்தது. அப்படியானதொரு பொழுதில் உ.மகாளி பிச்சம்மாளை எதிரெதிர் சந்தித்தான்.

'தென்னமட்டைக்குள்ள, நாலஞ்சு தேங்காயை களவாண்டு போன மாதிரி இருக்கு"

'யாரை களவாணிங்க...?'

'உன்னைதான்'

'வாரிய பிஞ்சிரும். என்ன எளக்காரமா போச்சோ. அப்படி களவாண்டு திங்கணும்னு அவசியமில்லை'

'ச்சீ... கிண்டலுக்கு சொன்னா, உடனே மூக்கு சிவக்கு'

'கிண்டலுக்கும் வர முறை வேண்டாம்'

'ஏம், உங்கிட்ட நான் கிண்டல் பண்ணக்கூடாதா'

'ம்ம்ம்...'

தொடர்ந்தது பேச்சு. சில நாட்கள் பொத்தையில் உ.மகாளி இல்லாத நாட்களில் பிச்சம்மாள் தேடுவதும், அவள் வராத நாட்களில் இவன் தேடுவதும் தொடர்ந்தது. இதற்கு காதலென பொருள் கொள்க. ஆனால், உ.மகாளியின் இந்த காதலும் கைகூடாமலேயே போனது.

காதலிப்பவர்கள் சொர்க்கத்தில் வாழ்பவர்களாகவும் அவ்வாய்ப்புக் கிடைக்காதவர்கள் நரகத்தில் இருப்பவர்களாகவும் கற்பனை பண்ணிக்கொண்டான் உ.மகாளி. காதல் நினைவுகள், ஏக்கங்களாக நடு மண்டைக்குள் இறங்கி படுத்தும் பாடுகள் பயங்கரமானவை.

விறகுகளை அடுக்கிக்கொண்டு வந்து பழைய குடிலின் அருகே வைத்தார்கள். கருக்கலாக இன்னும் நேரமிருக்கிறது என்றாலும் அதற்குள் இருட்டை கொண்டு வந்திருந்தது காடு. கொஞ்சம் கொஞ்சமாக காட்டின் மரங்கள் கருநிற வண்ணத்துக்கு மாறத் துடித்துக்கொண்டிருந்தன. கந்தையாவும் தவிட்டானும் கோங்கு கம்புகளை ஊனினான். ஆளுக்கொரு வேலையாக குடிலமைப்பதில் மும்முரமாகியிருந்தார்கள். மாடுகள் சாவகாசமாக அசை போட்டுக்கொண்டு கிடந்தன. அவை, வனத்தில் வாசனையை முகர்ந்துகொண்டும் வனத்தில் குளிரை எதிர்கொண்டும் இனிமையாக கிடந்தன.

வேலி மாதிரியான, குத்து மதிப்பாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, சுற்றி செத்தைகளையும் சில மரத்துண்டுகளையும் அடுக்கிக்கொண்டிருந்தான் உச்சி மகாளி. முகத்தில் விழுந்த செத்தையை அப்புறம் படுத்துவதற்காக தலையை நிமிர்த்தியவன் பார்த்தான். எதிரில் யாரென்று தெரியாத மூன்று பேர் வந்துகொண்டிருந்தார்கள்.

தொடர்கிறேன்.

10 comments:

பத்மா said...

காதலிப்பவர்கள் சொர்க்கத்தில் வாழ்பவர்களாகவும் அவ்வாய்ப்புக் கிடைக்காதவர்கள் நரகத்தில் இருப்பவர்களாகவும் கற்பனை பண்ணிக்கொண்டான் உ.மகாளி. காதல் நினைவுகள், ஏக்கங்களாக நடு மண்டைக்குள் இறங்கி படுத்தும் பாடுகள் பயங்கரமானவை.


ஹ்ம்ம் போகிற போக்கில் செமத்தியா ஒரு அடி ....யதார்த்தமான் உண்மை

காமராஜ் said...

ஆவலோடு காத்திருக்கிறோம்.தொடருங்கள்.

vasu balaji said...

சௌலப்யம். சுகம். தொடருங்கள்.

ஆடுமாடு said...

நன்றி
பத்மா மேடம்,
தோழர் காமராஜ்,
வானம்பாடி ஐயா.

Balakumar Vijayaraman said...

யார் அந்த மூன்று பேர் ?

கிறுக்கன் said...

அருமை ஐயா விரைவில் தொடருங்கள்!!!!

கொஞ்சும் தமிழால்
வாசகர் நெஞ்சில்
தஞ்சம் புகுந்து
தொடர கெஞ்ச
வைத்து விட்டீர்கள்!!!!

-
கிறுக்கன்

ஆடுமாடு said...

பாலகுமார் நாளைக்கு சொல்லிடறேன். நன்றி

ஆடுமாடு said...

//அருமை ஐயா விரைவில் தொடருங்கள்!!!//

நன்றி நண்பரே.

ராசராசசோழன் said...

காத்திருக்கிறோம்...அடுத்த பகுதிக்கு...

ஆடுமாடு said...

//காத்திருக்கிறோம்...அடுத்த பகுதிக்கு...//

நன்றி ராசராசசோழன் .