Thursday, June 17, 2010

கேரக்டர் 10: கிட்னம்மா

'இன்னா அன்னான்னு இழுத்துட்டுல்லா கெடக்குதாம். நாளைக்கு வரைக்கும் தாங்குமான்னு தெரியல. பேச்சு மூச்சு இல்ல பாத்துக்கோ. கண்னு சொருவிட்டு சொருவிட்டு வருது. வாயில தண்ணி கூட இறங்கலை. தலைக்கு பின்னால பேரனுவ. நின்னுக்கிட்டு ஆச்சி ஆச்சிங்கானுவோ. முழிக்குத மாதிரி இருக்கு. அந்தானி உள்ள இறங்கிருது கண்ணு. சொள்ளமுத்து தாத்தா சாவும் போது இப்படித்தான் இருந்தாரு. ராத்திரி பாத்துட்டு வந்துருக்கேன். காலையில உசுரு போயிட்டு. கிட்னம்மாவும் அப்டி போனா, நல்ல சாவுதாம்'....

அனச்சி கிழவி, கிட்னம்மா வீட்டு வாசல்ல இருந்து சொல்லிட்டிருக்கா. மேலத்தெரு பொம்பளைலுவோ வாயில சேலை நுனியை வச்சுக்கிட்டு, பாவமா பாத்துட்டிருக்காவோ. வீடுன்னா குடிசை வீடுதான். சாணி வச்சு மெழுகிருக்கு வாசல். அதுக்கு இடபக்கமும் வலப்பக்கமும் வேலி மாதிரி பெரிய பெரிய கல்லுவோ அடுக்கி வச்சிருக்கு. வாசலுக்கு எதுத்தால முருங்கை மரம். மரத்து வேர்கிட்ட கோழி கூடு. நாலைஞ்சு கோழிய வெளிய போனாலும், அடை கோழி, அங்கனயே சுத்தி சுத்தி, 'பக் பக் பக'னுட்டுவருது. கல்லுல உக்காந்துட்டுதான் அனச்சி கிழவி, இப்படி சொல்லிட்டிருக்கா. செல்லையாதேவன் வீட்டுகாரியும் கிட்னம்மாவும் ஒரே ஊர்லயிருந்து வாக்கப்பட்டு வந்தவோ. அவளுக்கு அடக்க முடியலை அழுகைய. உள்ளபோய் அவளை பாத்துட்டு வந்தவா, வெளிய வந்து ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிச்சுட்டா.

கிட்னம்மாவோட மவன், தூணை புடிச்சுட்டு குத்த வச்சுட்டிருக்கான். வழக்கமா, காலையிலயே சலூன் கடையை தொறந்துட்டு நிற்கிறவன். இவன் கூட்டாளி மணிப் பய, தண்ணி போடுததுக்கு அடி போட்டுட்டிருக்கான். திடீர்னு போயிட்டான்னா, அப்படி போதையில நிக்க முடியாதுடான்னு இவன் சாமாதானம் சொல்லிட்டிருக்கான்.

கிட்னம்மாவை யாரோன்னு ஒதுக்கிர முடியாது. ஊர்ல என் சேக்காளியோ பாதி பேருக்கு இன்னொரு அம்மா மாதிரிதான். ஏழாப்பு, எட்டாப்பு படிக்கையில, சுப்பையா கோனார் தோப்புல அம்மணமா குளிச்சிட்டிருந்தோம். இவா, கெணத்து மேல நின்னுக்கிட்டு எட்டிப் பாக்கா, யாருலாம் குளிக்கோம்னு.

'எல்லார் வீட்லயும் போயி சொல்லப்போறேன். ஏ செவத்த குண்டி, உங்கம்மாட்ட பாரு. விளக்கு மாத்த எடுத்துட்டு எல்லாரும் வரபோறாவோ'

டமார்னு படியில ஏறி, அவ கால்ல எல்லாருமே பொத்துன்னு விழுந்தோம், 'சொல்லாண்டாம் சொல்லாண்டாம்'னு .அவளுக்கு சிரிப்பு வந்துட்டு. 'செரி, செரி சொல்லலை. இனும இப்படி உச்சி வெயில்ல வந்து, கெணத்துல குளிக்கக் கூடாது"ன்னு அதட்டலை போட்டா. பெறவு, வீட்டு பக்கம் கிட்னம்மா வந்தான்னா கெதக்குனு இருக்கும். அம்மாட்ட சொல்லிரவாங்குத மாதிரி பாப்பா.

ஒரு, நாளு அம்மாதான் சொன்னா. 'ஏல, கிட்னம்மா மட்டும் இல்லனா ரெண்டு பேரும் போய் சேர்ந்திருப்பொம்'னு. ஏன் எதுக்குன்னு எனக்கு புரியலை. பெறவு, கிட்னம்மா ஆரம்பிச்சா. 'ஆமா, நாந்தான் பிரசவம் பாத்தேன். தலை, மேலபாத்து போயிட்டு. கொடிவேற சுத்திட்டு. சாயந்திரம் ஆறு மணிக்கு ஆரம்பிச்சு, விடிய காலைல நாலு மணிக்குதான் பொறந்தீரு. உங்க பெரியம்மயும், ஆச்சியும் வீட்டுக்கு வெளியில உக்காந்து ஒப்பாரிய ஆரம்பிச்சுட்டாவோ. எனக்கே நம்பிக்கையில்லாம போச்சு. ஒரு உசுரையாவது காப்பாத்திரணும்னு போராடுனேன். உங்க மந்திரமூர்த்தி சாமிதான் காப்பாத்திருக்காருன்னு நினைச்சுக்கிட்டோம்'.

இதுக்குப் பெறவு, பிள்ளைப்பெக்கும்போது செத்துபோன பத்தையூரா மவா, மண்ணென்னைகாரி மவா...இவங்களை பத்தி கேள்விபட்ட பெறவு, கிட்னம்மா மேல மரியாதை அதிகமாயிட்டு. ஏழாப்பு படிக்குத வரைக்கும் அவ மவன் சைலுதான் முடி வெட்டிவிடுவான்.

'என்ன, தலைய அங்க இங்க ஆட்டுதே... கையில கத்திரியாங்கும் இருக்கு. எங்கயாவது கிழிச்சுட்டுன்னா, ஐயான்னாலும் முடியாது. ஆத்தான்னாலும் முடியாது'ம்பான். சரின்னுட்டு திரும்பவும் தலையை பரபரக்க ஆட்டிட்டு இருப்பேன். அப்பலாம் கடை போடலை சைலு. வீட்டு திண்ணைதான். முடிவெட்ட, சவரம் பண்ண வரும் ஐயாமாரு வீட்டு ஆளுவோள்ல இருந்து, தெருக்காரவோ எல்லாரும் வெளியில முருங்கை மரத்துக்கு கிழ உக்காந்துட்டு கதைதான் பேசணும். ஒவ்வொருத்தரா முடிச்சுட்டு சைலு வருவான். இதுல ஐயமாருவோலுக்குதான் முதல்ல வெட்டணும். அவ்வோளுக்கு வேலை சோலி அதிகமாம்.

இல்லன்னா கோவப்படுவாவோ. ஒவ்வொரு பூவுக்கும் ரெண்டு மரக்கா நெல்லு கூலி. ஊர்ல எல்லாருமே இதைதான் கொடுப்பாவோ. எட்டாப்பு வந்த உடனே, சைலுட்ட முடி வெட்டறதில்ல. அப்ப ரஜினி டைல்ல முடி வெட்டணும்னா, பாம்பேலருந்து வந்திருந்த அண்ணாதான் வெட்டுவான். அதனால அவன்கிட்ட போயிட்டோம்.

சைலு முடிவெட்டலைன்னாலும் நெல்லு உண்டு. காலங்காலமா கொடுத்துட்டு வாரதை விட்டுர முடியுமா?

கிட்னம்மா வீட்டுக்கு நாலு வீடு தள்ளிதான் மந்திரமூர்த்தி கோயிலு. கொடைன்னு வந்துட்டா, அவதான் சாமிகொண்டாடி மாதிரி விரதம் இருந்து, வீட்டுக்கு வெள்ளையடிச்சு சுத்தமா இருப்பா. கொடைக்கு மட்டும் ஊருக்கு வரும் திருநெல்வேலி மாமா, கிட்னம்மாவை பார்த்தாருன்னா, சட்டை பையில இருந்து 50, 100ன்னு ரூவாயை எடுத்து கொடுப்பாரு. ஒரு தடவை, சேலை வாங்கிட்டு வந்தாரு. இதுக்கிடையில சைலு, சேராத ஆளுவளோட சேர்ந்து குடிகாரனாயிட்டாம். தெனமும் குடிச்சுட்டு வந்து கிட்னம்மாவை ஏசிட்டு இருப்பாம். அக்கம் பக்கத்துல இருக்கவோ வந்து அவனை சத்தம் போடுவாவோ.

'இவனை திருத்தணும்னா கல்யாணம் பண்ணி வையு"ன்னு எல்லாரும் சொல்ல, சாத்தூர்ல இருக்குத அவளோட அண்ணன் மகளை கெட்டி வச்சா. குடி இன்னும் அதிகமாயிட்டு. அவன், யாரு சொல்லையும் கேட்டபாடில்லை. பொண்டாட்டிக்காரி, இவன் திருந்துத மாதிரி தெரியலைன்னு, அவ ஊரோட போயிட்டா. ஒரு வாரம் பொருத்திருந்துட்டு, இவன் அவளை கூப்புட போனான். மாமனாரு, அங்கயே இருக்கதா இருந்தா கடை வச்சுதாரேன்னு சொல்லிருக்காரு. சரி சரின்னு தலையாட்டிட்டு ரெண்டு மூணு மாசம் இருந்தான். அதுக்கு பெறவு இருக்க முடியலை. ஊருக்கு திரும்பி, அதே குடி, குதியாட்டம்னு ஆயிட்டான்.

கிட்னம்மாவுக்கு கவலையெல்லாம் மவன் மேலதான். ஒத்த பயல பெத்துவச்சுட்டு, இந்தா மாதிரி ஆயிட்டானேன்னு. ஊர்ல பிரசவம் பாக்குததுக்கு ஏதாவது ரூவான்னு கொடுக்கத வச்சு, அவ பொழப்பு ஓடிட்டு இருந்தது. அந்த ரூவாயை அடுக்களையில ஒழிச்சு வச்சாலும் நோண்டி எடுத்துட்டு போயிருவான் சைலு. தெரிஞ்சாலும் கண்டுக்க மாட்டா கிட்னம்மா.


நாளைக்கு முடிக்கிறேன்.

11 comments:

AkashSankar said...

பிரமாதம்...

vasu balaji said...

இந்தா எதிரில நிக்கிறா கிட்னம்மா எழுத்தில:)

Chitra said...

கிட்னம்மா கவலை தீர்ந்துச்சா னு தெரிஞ்சிக்கணும்.....

ஆடுமாடு said...

ராசராசசோழன் சார் நன்றி.

//இந்தா எதிரில நிக்கிறா கிட்னம்மா எழுத்தில:)//

நன்றி வானம்பாடிகள் சார்.

........................

//கிட்னம்மா கவலை தீர்ந்துச்சா னு தெரிஞ்சிக்கணும்...//

நாளைக்கு சொல்றேன், சித்ராக்கா. நன்றி.

நேசமித்ரன் said...

ஆத்தீ !சொன்ன மாரிக்க எதுத்தாப்ல னெகு நெகுன்னு நிக்கிது அந்தத் தாயி

மாதேவி said...

கிட்னம்மா.... தொடருங்கள்.

பனித்துளி சங்கர் said...

கிட்னம்மா பாவம்ங்க பார்த்து .

ஆடுமாடு said...

//ஆத்தீ !சொன்ன மாரிக்க எதுத்தாப்ல னெகு நெகுன்னு நிக்கிது அந்தத் தாயி//

நன்றி நேசமித்ரன் சார்.

ஆடுமாடு said...

மாதேவி, பனித்துளி சங்கர் நன்றி.

ஃபஹீமாஜஹான் said...

கிட்னம்மா பற்றிய இன்னும் பல சங்கதிகளோடு மிகுதியை வாசிக்கும் ஆர்வத்தோடும் ஆவலோடும் காத்திருக்கிறேன்.

ஆடுமாடு said...

//மிகுதியை வாசிக்கும் ஆர்வத்தோடும் ஆவலோடும் காத்திருக்கிறேன்//


நன்றி ஃபஹீமா.