Sunday, May 9, 2010

நிழல் வெயில்

தூர்ந்து போயிருக்கும், கிட்டி ஐயங் கிணறில் இருந்து, இருபதடி வைத்தால், கடனாநதி ஆறு. வயல்தாண்டி, தென்னந்தோப்பு சரிவில், பன்னீர்பூக்களின் இடையில், வெண் மணற்பரப்பில் உருண்டு உருண்டு கீழே விழுந்தால் முட்டளவு தண்ணீரில் டொப்!. ஜில்லென நெளியும் உடல், குளர்காலத்தில். கோடையில் வெயிலோடு வெயிலாய் அடுப்பெரிக்காத சுடு தண்ணீராய் போய்க்கொண்டிருக்கும் எதுவும் பேசாத ஆறு. தண்ணீருக்குள், கால்பட்ட இடத்தில், விழுந்து கிடக்கும் செவ்விளநீர் காய்கள் சில தட்டுப்படவும் வாய்ப்புண்டு. குளிரில் இங்கு குளிப்பதை விடவும் கோடையில் சூட்டோடு குளிப்பதி ஏனோ பிடித்திருந்தது.

பெரு வயலில் கடலையும் சிறு குண்டில் ஈராய்ங்கமும் முளைத்து வந்த காலத்தில் அக்காவோடு நடக்கும் காவல். காவலென்ற பெயரில் பாதி கடலையை பிடுங்கி தின்பதும், எதிரில் இருக்கும், பக்கா தோப்பில், கிளிமூக்கு மாங்காயை வேட்டையாடிவிட்டு வருவதும் அம்மாவுக்கும் தெரியாமலிருக்காது.

0
'அண்ணே... இப்ப வாழை போட்டிருக்கேன். நாலு தாரு வேணா கொண்டு போறேளா?. அம்மாவுக்கு ரெண்டு சீப் கொடுத்தாலே போதுங்காவோ. செவ்விளநீ மரம், போன மழையில, ஆத்தோட சாஞ்சுட்டு. ஏற்கெனவே தண்ணி அரிச்சுருந்தது உங்களுக்கு தெரியும்லா. இப்பலாம் அக்கா இங்க அடிக்கடி வரமாட்டோவோ போலிருக்கு. ஏதாவது துஷ்டி, கல்யாணம்னாதான் வாராவோ; போன வாரம் நம்ம, மைக்செட் முருகன் செத்து போனாருலா, அன்னைக்கு பாத்தேன். தென்னைக்கு வேலி போட்டா என்னன்னு கேட்டோவோ. என்னத்த வேலி போட்டாலும் தண்ணி அரிப்புல, வேலி நிக்குமா சொல்லுங்க?. பத்து பதினைஞ்சு தாழையை கொண்டாந்து வேலியாக்கியிருந்தேன். நல்லா வளர்ந்து தாழம்பூலாம் வந்திட்டு. வயலுக்குள்ள நின்னாலே வாச்னை குப்புன்னு தூக்கும். குளிக்க வார பொட்ட புள்ளைலுவோலுக்கெல்லாம் தாழம்பூவை பறிச்சு பறிச்சு கொடுப்பேன். ஆனா, என்ன பண்ண? மழையில வந்த வெள்ளம் எல்லாத்தையும் கொண்டு போயிட்டு. உங்க எதுத்த தோப்பு பக்கா, பொண்ணு கல்யாணத்துக்காவ, அதை வித்துட்டாரு. இப்ப கருப்ப நம்பி வாங்கியிருக்கான். 'இதையும் கொடுப்பாவுளா'ன்னு கேட்டான். எங்க வந்து என்ன கேக்கலன்னு மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிட்டேன். ஏன் ஏன்னு கேட்டுட்டிருந்தான். சொல்லிட்டேன். அப்பா நினைவாம்னு.

............................................
தாத்தாவின் விறகு கடைதான் குடலுதாத்தாவுக்கும் புகழிடம். வயல், விளைகளில் வேலை இல்லாத நாட்களில் இங்குதான் அவரது கச்சேரி ஆரம்பமாகும். சைலு கிளப் கடைக்கு தாத்தா, அழைத்துகப் போகும்போது, பாதியில் என் கையை பிடித்துக்கொண்டு செல்பவர் குடலுதாத்தா. குடலு என்பது அவரது உடல் குறித்தான காரண பெயர். 'ஏ பேரப்புள்ள இதை சாப்புடுறா' என்று பதார்த்தங்களை அறிமுகப்படுத்தியவர். தாத்தா இறந்த பிறகும் தாத்தாவானவர். கல்லூரி படிக்கும்போது, பாலியல் கதைகளை சொல்லி, பரவசப்படுவார். ஒவ்வொரு கோயில் கொடைக்கும், 'ஏலே, உன்னைய சொல்ல மாடனுக்கு ஆட விடுதனா இல்லையா பாரு' என்று பாடுபேசுவார்.

0
'இப்படி அநியாயமா உம் மாமம் மாருவோ பண்ணிட்டானுவளடா. எவ்வளவு பெரிய இடம். இன்னைக்குலாம் இடம் வாங்க முடியுமாடா? நான் எவ்வளவோ சொன்னேன். கேட்டாதானே? உன் வீட்டை மட்டும் விட்டுட்டு மத்தத வித்துருக்கானுவோ. அதை உங்கிட்டயோ, உங்க அம்மகிட்டயே வித்திருக்கலாம்லா. யாருடா இப்ப சொன்ன பேச்சை கேக்கா?. இந்தாரு. வயசு எண்பதாச்சு. இன்னும் வயலுக்கும் விளைக்கும் போயிட்டுதாம் இருக்கேன். இந்தா... துண்டை உதறிட்டு போறாம்பாரு பெரியவன், இப்பவே கண்ணு தெரியலைங்காம். முந்தா நாளு, திருநெல்வேலியில கண்ணாசுபத்திரில போயி, கண்ணாடிப்போட்டுட்டு வந்திருக்காம். உடல் வலிக்க வேலை பாத்தா இப்படி வருமாடா? மாமரத்துக்கு மண் வெட்ட போன்னு சொன்னா, நாலு ஆளை வேலைக்கு விடுன்னு சொல்லுதாம். நான்லாம் ஒத்த ஆளா வேலை பாத்து அந்த விளைய உண்டாக்கியிருக்கேன். பணத்தோட அருமையே தெரியாலையடா யாருக்கும்? இன்னைக்கோ நாளைக்கோ, நான் போய் சேர்ந்துட்டம்னா தெரியும், இவனுவளுக்கு"
...........................................
புதிதாய் வாங்கிய சைக்கிளை வேகமாக மிதித்துக்கொண்டு பெரிய வாய்க்கால் பாலம் தாண்டும்போது, பார்த்துவிட்டாள், அம்மன் கோவிலில் இருந்து திரும்பும் அவள். வந்ததற்கான காரணம் முடிந்துவிட்டது என்றாலும் கண்களும் மனதும் ரெட்டைஜடைகளாய் அவளின் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தது. பெருமாள் கோவில் தாண்டி அவள் தோழிகள் பிரிந்து சென்றதும், எதிர் முக்கில் தனியாக செல்வாள் அவள். கருக்கலில் அம்மாதிரியான இடத்தை விட்டால், அவளிடம் பேசுவதற்கு மறுநாள், இதே நேரம் வரை காத்திருக்க வேண்டும். நினைத்த மாதிரியே அதே தெருவில், சைக்கிளை விட்டு இறங்கி, 'லட்சு, சைக்கிளை பாத்தியா?". 'புதுசா" என்று கேட்டு விட்டு கையிலிருந்த குங்குமத்தை எடுத்து, நெற்றியிலும் சைக்கிளிலும் வைத்துவிடுகிறாள். உலகம் மறக்கிறது. மேலிருந்து வந்து ஒட்டிக்கொள்கிறது ராட்சத சிறகுகள். அவளை அணைத்த படி பறக்கிறேன். கனவுகளையும் கவிதைகளையும் தந்துவிட்டு இறங்கிக் கொள்கிறாள்.


0
'போன தடவை கொடைக்கு வரமுடியலை. நீங்க வந்தீங்கன்னு கேள்விபட்டேன். பார்க்கணும் பார்க்கணும் தோணும். போன் பண்ணி பேச முடியலை. தாமரைக்காதான் நீங்க வந்தா, போனா சொல்லுவா. திடீர்னு அழணும்போல தோணும். ஏன், எதுக்குன்னு தெரியாது. ஒவ்வொரு தடவையும் எங்கம்மாவை பார்க்கும்போதெல்லாம், 'என் வாழ்க்கையை நாசம் பண்ணினவன்னு திட்டுவேன். அவளும் என்ன செய்வான்னு நானே சமாதானம் பண்ணிக்கிடுவேன். இன்னைக்கு வரைக்கும் பெரிய அண்ணன்கிட்ட பேச்சு வார்த்தை இல்லை. ஏன்னு உங்களுக்கு தெரியும். ரொம்ப கரைஞ்சு போயிட்டீங்க. நம்ம குழந்தைகள்னு பேச வேண்டிய வாயில, உங்க குழந்தைகள் எப்படியிருக்குன்னு கேட்க கஷ்டமாத்தான் இருக்கு. கண்ணு முட்டி, கண்ணீர் வருது. விழுற ரெண்டு சொட்டு கண்ணீர்ல, தினமும் நிம்மதியா உணர்றேன். அடுத்த வருஷ கொடைக்கு கண்டிப்பா வாங்க. நிறைய பேசணும் போல இருக்கு.

.......................................

ஊருக்குப் போயிருந்தேன் மக்களே!

15 comments:

Thekkikattan|தெகா said...

ஆடுமாடு, எப்பொழுதும் போலவே... கூடவே கூட்டிக்கிட்டு பொயித்தீக.

//கண்களும் மனதும் ரெட்டைஜடைகளாய் அவளின் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தது. //

எப்படிங்க இப்படி :) ... அந்த ராட்சச இறகும் - மீண்டும் நாளை வரை காத்திருத்தலும் பச்சக்கின்னு ஒட்டிக்கிச்சு.

ரவி said...

excellennnnnt..........

Chitra said...

////நினைத்த மாதிரியே அதே தெருவில், சைக்கிளை விட்டு இறங்கி, 'லட்சு, சைக்கிளை பாத்தியா?". 'புதுசா" என்று கேட்டு விட்டு கையிலிருந்த குங்குமத்தை எடுத்து, நெற்றியிலும் சைக்கிளிலும் வைத்துவிடுகிறாள். உலகம் மறக்கிறது. மேலிருந்து வந்து ஒட்டிக்கொள்கிறது ராட்சத சிறகுகள். அவளை அணைத்த படி பறக்கிறேன். கனவுகளையும் கவிதைகளையும் தந்துவிட்டு இறங்கிக் கொள்கிறாள்.////


.....கலக்கிட்டீங்க..... nice.

நேசமித்ரன் said...

அருமை சார்

க.பாலாசி said...

அப்பப்பா... என்ன அருமையான மண் வாசனை...

//அவளை அணைத்த படி பறக்கிறேன். கனவுகளையும் கவிதைகளையும் தந்துவிட்டு இறங்கிக் கொள்கிறாள்.//

எல்லாம் முடித்தும் இறங்காமல் நின்ற வரிகள்...

கடைசிப்பத்தியில் ஒரு பரிதவிப்பை உணர்ந்தேன்... நிறைய பேசலாம் போலருக்கு....

ஆடுமாடு said...

//எப்படிங்க இப்படி :) ... அந்த ராட்சச இறகும் - மீண்டும் நாளை வரை காத்திருத்தலும் பச்சக்கின்னு ஒட்டிக்கிச்சு//

நன்றி தெகா.
.................................

செந்தழல் நன்றி.

ஆடுமாடு said...

//கலக்கிட்டீங்க..... nice.//

சித்ராக்கா நன்றி.
.........................


நேசமித்ரன் வருகைக்கு நன்றி.

ஆடுமாடு said...

//கடைசிப்பத்தியில் ஒரு பரிதவிப்பை உணர்ந்தேன்... நிறைய பேசலாம் போலருக்கு...//


நன்றி பாலாசி. பேசலாம்.

ஆடுமாடு said...

முத்துலட்சுமி நன்றி

ஹேமா said...

எப்பவும்போல....உங்கள் கதை அருமை.
உங்கள் தமிழ்தான் இன்னும் அழகு.

ஆடுமாடு said...

//எப்பவும்போல....உங்கள் கதை அருமை.
உங்கள் தமிழ்தான் இன்னும் அழகு.//


நன்றி ஹேமா.

இரசிகை said...

azhagu......!

☼ வெயிலான் said...

கொடைக்கு போயிருந்தீகளா அண்ணாச்சி!

ஊருக்கு அடிக்கடி போய்ட்டு வாங்க. அப்பந்தான் எங்களுக்கும் ஒரு பதிவு கெடைக்கும்.

ஆடுமாடு said...

ரசிகை நன்றி.
.................

வெயிலான் நன்றி.

//ஊருக்கு அடிக்கடி போய்ட்டு வாங்க. அப்பந்தான் எங்களுக்கும் ஒரு பதிவு கெடைக்கும்//
எங்க கொடுக்கிறாங்க லீவு. ரெண்டு நாள் லீவுக்கே ஓங்கிறாங்க.
.

Balakumar Vijayaraman said...

கூடவே வந்த உணர்வு.