0
உன் சாயலைப்போல் தெரியும்
பெண்களிடமெல்லாம்
ஏதாவது பேசிவிடுகிறேன்.
ஆழ்வார்க்குறிச்சி தேரோட்டத்தில்
உன்னை போலவே தெரிந்த
பெண்ணிடம்பேச நினைக்க,
அது நீயாகவே இருந்தாய்
பேசாமலேயே திரும்பினேன்.
........................................................
0
காய்ந்த தென்னமட்டை, சில்லாட்டைகளுடன்
எப்போதாவது வந்து விழும்
தூங்கணாங் குருவி கூடு.
குருவி வீடென்பென் நான்
கூடென்று திருத்துவாள் அக்கா.
ஒவ்வொரு முறையும் தோப்புக்கு போனதில்
சேர்ந்தது பத்து பதினொன்று.
ஒரு மழை நாளில்
ஆச்சிக்கு வந்த தலைவலியில்
சுக்குதண்ணிக்காக எரிந்தன கூடுகள்.
வீடுகள் எரிவதை
வேடிக்கைப்பார்ப்பதை தவிர
வேறெதுவும் செய்யமுடியவில்லை என்னால்.
.....................
0
கடைசியாகச் சொல்லிவிடுவதென
முதலில் நினைத்து விடுகிறதென் நீள் மனது
கடைசியைப் பற்றிய சிந்தனையில்
முதலை மறந்துவிடுகிறேன்.
முதலும் இல்லாமல்
கடைசியும் இல்லாமல்
தொடங்குகிறது உரையாடல்
நீ பேசுவது எனக்கும்
என் மவுனம் உனக்கும்
புரியாமலேயே
கேட்பதாக ஆடுகிறது
அனிச்சையானதென் தலை.
புரிவதாயும் புரியாமலும் செல்லும்
வாழ்க்கை போல.
.....................
0
வட்டு ஒட்டவோ
செல்லாங்குச்சி ஆடவோ
கீழ்வீட்டுப் பிள்ளைகளுடன்
‘கொல கொலயா
முந்திரிக்கா" பாடவோ
தூண்டில் கொண்டு
தெண்டல் பிடிக்கவோ
எப்போதும்
அனுமதிக்காத அம்மா
ஆசையோடு அனுப்புகிறாள்
இன்று.
அடுப்புக்கு அரிசி வரும்வரை
அலைகழியும் தாய் மனசு.
...............
0
'எனக்கு வல்லயம்செஞ்சு போடுவியா ?'
''திருநாத்துக் கொப்பறை
எடுத்து வைப்பியா ? '
பட்றையனை கும்பிடும்போதெல்லாம்
கேட்கிறார் சாமிக் கொண்டாடி.
கோரிக்கை வைக்க போனவன்
கோரிக்கை எற்று திரும்புகிறேன்.
............
-பழைய கவிதைகள்.
30 comments:
அன்பு ஆடுமாடு,
உங்கள் பெயர் என்ன என்று சொல்லுங்களேன், அழைக்க ஏதுவாய் இருக்கும்.
புரிகிற கவிதைகளை படிப்பது ஒரு சுகானுபவம் எனக்கு, புரியாத கவிதைகள் பிரமிப்பாய் இருந்தாலும், அதில் ஒன்ற முடிவதில்லை.
உங்கள் காடு தொடரையும், இந்த கவிதைகளையும் படிக்கிற போது படிக்கிறது தான் சுகம் என்று தோன்றுகிறது, எழுதுவதை விட.
தொடர்கிறேன்
அன்புடன்
ராகவன்
ராகவன் நன்றி.
//உங்கள் பெயர் என்ன என்று சொல்லுங்களேன், அழைக்க ஏதுவாய் இருக்கும்//
பெயர் என்பது குறியீடுதான். அது எப்படியிருந்தாலென்ன என்ற அடிப்படையில் ஆடுமாடு ஆனேன்.
கவிதைகள் எழுதி 10 வருடத்துக்கும் மேல் ஆகிவிட்ட்டது. இது பழைய கவிதைகள்.
//உங்கள் காடு தொடரையும், இந்த கவிதைகளையும் படிக்கிற போது படிக்கிறது தான் சுகம்//
படிப்பது எப்போதுமே சுகம்தான்.
நன்றி ராகவன்.
எல்லாக் கவிதைகளுமே அருமையாய் இருக்கு மக்கா!
ராகவன் சொல்வது போல் எனக்கும் பெயர் சொல்லி அழைக்க விருப்பம்.நீங்கள் சொல்வது போலவும்,"பெயரில் என்னதான் இருக்கு?" எனினும்,இருக்கவே இருக்கு,
"மக்கா!" :-)
அருமை. பழசாய் இருந்தாலும் என்றும் பொருந்தும் விதமாக ....படித்து மகிழ்ந்தேன் .
மனதை தொடும் வரிகள்
உங்களுடைய ஒவ்வொரு வரிகளுமே முத்தான வரிகள். வாழ்த்துக்கள் அண்ணா.
பா.ரா. சாரை வழி மொழிகிறேன்.
அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்.
நண்பரே
மிக நுட்பமான மொழியில் பிரியத்தின் இன்மையை புளகத்தை அவசத்தை பேசும் கவிதைகள்
தொடர்ந்து பழைய டைரியை புரட்டுஙகள்
:)
//வீடுகள் எரிவதை
வேடிக்கைப்பார்ப்பதை தவிர
வேறெதுவும் செய்யமுடியவில்லை என்னால்.//
எதுவும் சொல்ல முடியாமல் வாழ்க்கையின் பலகட்டங்களில் இப்படித்தானே அசைவற்று போக வேண்டி உள்ளது அண்ணாச்சி...
-------------
//'எனக்கு வல்லயம்செஞ்சு போடுவியா ?'
''திருநாத்துக் கொப்பறை
எடுத்து வைப்பியா ? '
பட்றையனை கும்பிடும்போதெல்லாம்
கேட்கிறார் சாமிக் கொண்டாடி.//
சாமிவோ சைலண்ட்டா இருந்தாலும் இந்த திடீர் பூசாரிவோ சும்மா கெடக்க மாட்டானுவளே....
ராஜாராம்,
//எல்லாக் கவிதைகளுமே அருமையாய் இருக்கு மக்கா//
நன்றி மக்கா.
.................
பத்மா மேடம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ரவிசாந் வருகைக்கு நன்றி.
...............
//பா.ரா. சாரை வழி மொழிகிறேன்//
நன்றி சித்ராக்கா.
.............
//தொடர்ந்து பழைய டைரியை புரட்டுஙகள்//
எழுத நேரமில்லைன்னா, இப்படிதான் நேசமித்ரன் சார்.
என்னாளுக்குமான கவிதைகள்தாம். படிக்க இதமாக இருந்தது. அப்படியே இன்னும் ஏதாவது ட்ரங்கு பெட்டில இருக்கான்னு பாருங்க :)
ஆடுமாடு உங்க பேரை நான்மட்டும் கேட்கவேமாட்டேனே..
ஆனாலும்
ஆடுமாடு கவிதையின் கவிதைகள் அருமை..10 வருடமானாலும் கவிதை கவிதைதான் மிக அருமை..
//சாமிவோ சைலண்ட்டா இருந்தாலும் இந்த திடீர் பூசாரிவோ சும்மா கெடக்க மாட்டானுவளே...//
ஆமா துபாய் ராஜா சார். நன்றி.
.........
//அப்படியே இன்னும் ஏதாவது ட்ரங்கு பெட்டில இருக்கான்னு பாருங்க :)//
தேடினா, 'பழைய பனை ஓலைகள்' மாதிரி நிறைய எழுத வேண்டி வரும் அய்யனார்.
அப்புறம் உங்களுக்குதான் கஷ்டம்.
நன்றி
//10 வருடமானாலும் கவிதை கவிதைதான்//
மலிக்காம்மா ரொம்ப நன்றி.
நல்லா இருக்கு "மக்கா!"
("மக்கா" - இதுவும் நல்லா இருக்கே.)
அனைத்தும் அருமை.
பாலகுமார் சார், நன்றி.
மாதேவி நன்றி.
thookannag kuruvi kavithi nantri
//அனுமதிக்காத அம்மா
ஆசையோடு அனுப்புகிறாள்
இன்று.
அடுப்புக்கு அரிசி வரும்வரை
அலைகழியும் தாய் மனசு.//
இந்த வரிகளில் கண்களையும் சேர்த்து குளிர்விக்கிறேன்.
யதார்த்தமானதொரு கவிதை....
எப்ப தூசு தட்டினீங்க...
அத்தனையும் அருமை.........
நல்லாயிருக்குங்க...
//யதார்த்தமானதொரு கவிதை...//
நன்றி பாலாசி.
..........
//எப்ப தூசு தட்டினீங்க...
அத்தனையும் அருமை//
நன்றி விடிவெள்ளி.
நன்றி வே.ராமசாமி.
குருவி வீடு மனதில் கூடு கட்டிக் கொண்டது!
//குருவி வீடு மனதில் கூடு கட்டிக் கொண்டது!//
நன்றி அருணா மேடம்.
பழசு புதுசென்பது உணர்வுகளுக்கான அடையாளமில்லைதானே.... ரொம்ப நல்லாருக்கு...
remba pidichchathunga sir......:)
//பழசு புதுசென்பது உணர்வுகளுக்கான அடையாளமில்லைதானே...//
ஆமா, எழூதி வருஷங்களாச்சேன்னு அப்படிச் சொன்னேன்.
நன்றி கிருத்திகா.
காதல் கவிதை எவ்வளவு இயல்பாய் காதலின் உணர்வு சொட்டச் சொட்ட !
கூடுகள் எரிப்பது என் ஈழத்தை நினைக்க வைத்தது ஒரு தரம் !
Post a Comment