தண்ணீர் குடிக்க இறக்கிவிடப்பட்ட மாடுகள், ஆற்றுக்குள் இறங்கி முங்கிகொண்டிருந்தன. எதிரில், முதலை ஒன்று வாயை பிளந்துகொண்டு நின்றது. வாய்க்குள் சோற்றை வைத்துக்கொண்டு, பெரிய கல்லை எடுத்து வீசினான் உச்சி மகாளி. குறி தப்பிவிட்டது. கப்பை கொம்பு மாடு கொஞ்சம் விலகி பின்பக்கம் திரும்பி வர ஆரம்பித்தது.
''க்கியே... க்கியே...சனியனுவோ அங்க எங்க போச்சு" என்றவாறே மற்றுமொரு கல்லெடுத்து வீசினான் தவிட்டான். இந்த முறை முதலையில் மண்டையில் விழுந்து துள்ளியது கல். மாடுகள் கரைக்கு வந்துவிட்டன. முதலை தண்ணிக்குள் முங்கி எதிரில் அடர்ந்திருந்த தாழைக்குள் நுழைந்துகொண்டது. தாழைகளின் பின்பக்கம் தென்னந்தோப்பு.
தோப்புக்காரனிடன் இதை தெரிவிக்காவிட்டால் உயிர்பலி விழுவதை தவிர்க்க முடியாது என்று நினைத்தார்கள்.
இந்த இடத்தில் இதற்கு முன் முதலைகளை பார்த்ததில்லை, அல்லது கேள்விபட்டதுமில்லை. போன முறை அடித்த மழையில் வந்த வெள்ளம், இதை எங்கிருந்தோ கொண்டு வந்திருக்கலாம். உச்சிமகாளி , ஏர்க்கலைப்பையுடன் செல்லும் உள்ளூர்க்காரனை அழைத்தான்.
'ஏண்ணே, இங்க எப்பண்ணே முதலை வந்தது?"
'முதலையா இங்கயா?.என்ன சொல்லுதியோ?'
'இன்னா மாடுவோ கலைஞ்சு வருது பாருண்ணே... முதலைலா கிடக்கு'
'இவ்வளவு நாளும் இந்த வழியாதான் போறேன் வாரேன். இப்பதானே கேள்விபடுதேன். சரியா போச்சு. சின்ன பிள்ளைலயிருந்து அம்புடு பேரும் இங்கதா புழங்குதாவோ... எப்படி தெரியாம போச்சு.'
'தோப்பு யாருக்குள்ளதுண்ணே... அவங்ககிட்ட சொல்லிருங்கோ...ராத்திரி கீத்திரி போற வழியில என்னமும் ஆயிரபோவுது'
'இன்னா போற வழியிலதான வீடு. நம்ம யேசுபய தோப்புதான்... நீங்க ஆய்ம்பூரு ஆளு மாதிரிலா தெரியுது'
'ஆமாமா'
உ.மகாளி உள்ளிட்டவர்கள் சாப்பாட்டை முடித்திருந்தார்கள். சுண்டக்கறியை நக்கிக்கொண்டிருந்த தவிட்டான், 'என்னல, முதலை கிடக்கது தெரியாதுங்காம் உள்ளுக்காரன்' என்றான்.
'அது என்னல, என்னைய வந்து பாருன்னு கரையிலயா வந்து கெடக்கும்'
'நம்ம தண்ணிக்குள்ள முங்கிட்டிருக்கும்போது தலைய புடிச்சுட்டுன்னா என்னல பண்ண முடியும்?'
'அதான் போயிட்டுலா, வேண்டாததை நினைச்சு எல்லாரையும் பயங்காட்டிருவே போலிருக்கே"
போகும் இடத்தில் எல்லாம் இந்த முதலை பற்றிய கதையை இவர்கள் பரப்பிவிட்டுப் போக, பயத்தில் இருந்தது கருத்தப்பிள்ளையூர் கிராமம். முதலை பயம், செம்மண் தரையில் போகும் போது அங்கிங்கு அதிகம் கவனிக்க வைத்தது. கவனிப்புக்கு காரணம் பாம்புகள்.
நொடிஞ்சான் ஒரு முறை இங்கு பாம்புக்கடியிலிருந்து தப்பித்திருந்தான். கோவிந்தபேரிக்கு சைக்கிளில் வாழை இலை கொடுத்துவிட்டு திரும்பும்போது, இந்த வழியாகத்தான் வந்தான். அப்போது செம்மண் சாலை புதிதாகப் போடப்பட்டிருந்தது. வேகமாக வந்தவனின் சைக்கிள் திடீரென்று ஏறி இறங்க... கீழே பார்த்தால்... மலைப்பாம்பு வலது பக்கம் வாய்ப் பிளந்து முகத்துக்கு நேராக வந்தது. அடித்து பிடித்து உருண்டு ஓடி, நினைக்கவே கெதக் என்றிருந்தது.
'ஏல... எடம் ஞாவம் இருக்கா' என்றான் நக்கலாக தவிட்டான்.
'மறக்க முடியுமால...'
'இதுக்குதாம், சைக்கிள்ல போனா, நான் எப்பவும் ஒரு அருவாளை போட்டுக்கிடுதது... அந்தானி அந்த பாம்பு ஏறும்போது, தலையில சீவியிருப்பேன்'
'சொல்லுததுக்கு நல்லாதாம்ல இருக்கு... அந்த நேரத்துல ஓடுனா போதும்னுலா இருந்துச்சு'
'மயிர...நல்ல பாம்புன்னா வேகமா மூஞ்சியில வுழும். இது மலைபாம்பு. இதுவோலுக்கு அந்த உடம்பைகொண்டுட்டு நடக்கவே முடியாதல... பின்னாலயே போயி நங்குன்னு ஒரு வெட்டைப் போட்டம்னா, அது எங்க நவுல?'
சாப்பாட்டு பாத்திரம் மற்றும் அரிசி, காய்கறிகளை தூக்கிக்கொண்டு வந்த நொடிஞ்சான், அதை இப்போது உ.மகாளிக்கு மாற்றினான்.
மாடுகள் முன்னே சென்றுகொண்டிருந்தன். ஊர் எல்லை தாண்டி காடு ஆரம்பித்துவிட்டது. தார்ச்சாலையின் மேல் பக்கம் மரங்கள் அடர்ந்திருந்த கனவு வனம். சாலையை கடந்து மாடுகள் தேக்கு மரக்காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தன. அதன் வடபுறத்தில் ஒரே ஒரு ஆல மரம் தனியாக கிளை பரப்பி நிழல் பரப்பிக்கொண்டிருந்தது. கொளுத்தும் வெயிலில் செத்த உக்காரலாம் என்றிருந்தது அவர்களுக்கு.
'ஏலே மாடுவோள படுக்க போடுமா? நீத்தண்ணி குடிச்சுட்டு போலாம்'
ம்ம்ம் என்றார்கள். மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தார்கள்.
உச்சிமகாளி, சாக்கில் இருந்த காய்கறிகளில் இரண்டு கேரட்டுகளை உருவி கடிக்க ஆரம்பித்தான். காடுகளில் அமர்ந்து சாப்பிடும்போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்கிற கணக்கு வழக்கு தாண்டி சோறு செல்லும். இரண்டு கேரட்டுகள் நான்காகியிருந்தது இப்போது. கேசரி, தனக்கு ஈராய்ங்கம் வேண்டுமென்று கேட்டான். கந்தையா எதை தின்பது என்பதில் குழம்பி, புளியங்காய் துவையலை தேடினான்.
'ஆமா, இங்கயே காலிபண்ணிட்டு அங்க போயி என்னத்த திங்க" என்றான் தவிட்டான்.
மூன்று நாள் சாப்பிடும் அளவு புளியோதரையும் ஊசாமல் இருக்கும் புளித்துவையல் உள்ளிட்ட வகையறாக்களும் அதிகமாகவே இருக்கும் தகவலை சொன்னான் உ.மகாளி.
நொடிஞ்சான் அப்படியே தரையில் படுத்தான்.
'ச்சே இந்த காத்துக்கு இப்டியே தூங்கிரும் போல்ருக்கு'
'யாரு வேண்டாங்கா. நீ படுத்து எந்திரிச்சு வா'
பேசிக்கொண்டிருக்கும்போது, விறகு பெறக்கிவிட்டு கீழிறங்கிய ஒரு இளம் பெண் உட்பட நான்குபேர். மரத்தில் விறகு கட்டை சாய்த்துவிட்டு, 'உஸ்...என்னா வெயிலு' என்று அமர்ந்தார்கள். வந்திருந்த ஆம்பளைகள் பீடியையும், பெண்கள் ஓடையில் தண்ணீரையும் குடித்துக்கொண்டிருந்தார்கள்.
தவிட்டான், பீடிக்குடித்துக்கொண்டிருந்தவரிடம், 'ஏண்ணே... மேலே செங்குத்தாம் பாறை
பக்கத்துல மண் சரிஞ்சதுன்னு சொன்னாவளே.... இப்ப எப்படிண்ணே இருக்கு'
'இப்ப போலாம்... அதெல்லாம் எப்பவே சரியாக்கிட்டாவோ. எங்க குள்ராட்டிக்கு போறேளோ'
'ஆமா, ஆத்துக்குள்ள தண்ணி எப்படியிருக்கு. நடந்து போயிரலாட்ம்லா'
' தண்ணி கொஞ்சமாதான் இருக்கு... நடந்திரலாம்... எந்தூர்லருந்து வாரியோ?'
'ஆய்ம்பூரு'
'அப்டியா... நாங்க தாட்டாம் பட்டிதான். ஆய்ம்பூர்ல எங்க? மேல தெருவா?'
'ஆமாமா'
'உங்கூர்ல குரங்குவோ அட்டகாசம் பண்ணுதுவோலாமே'- உ.மகாளி கேட்டான்.
இளம்பெண், மரத்தின் பின்பக்கமிருந்து அவனை எட்டிப்பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள். இந்த திரும்பல், பல சங்கடங்களை உண்டாக்குபவை என்பதை தெரியாமலேயே அவள் அமர்ந்துகொண்டாள்.
உ.மகாளி கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொன்னாரா இல்லையா என்பதை அவன் உணரவில்லை. திரும்பி பார்த்த பெண், அவனது பழைய காதலியை ஒத்திருந்தாள். ஒற்றைக்கல் மூக்குத்தியோடு அவளது ஜாடையே இவளிடமும் இருப்பதை அறிந்தான். எழுந்து சோம்பல் முறித்தவாறே,வட தென்புறங்களில் அலைந்து, சாதாரணமாக வந்தது போல், அவளின் எதிரில் நின்று பார்த்தான். அவள், ராமலட்சுமியின் ஜாடையில் இருந்தாள். உ.மகாளி கனவுலகில் சஞ்சரிக்க தொடங்கினான்.
தொடரும்...
8 comments:
ஆடுமாடு சுகம்தானே நீங்க.ரொம்பக் காலாமாச்சு உங்களைப் பாத்து.
உங்க பதிவுகளை விளங்கிச்சோ இல்லையோ உங்க வழக்குத் தமிழுக்காவே வாசிப்பேன்.நிறையப் பிடிக்கும்.இப்போ கூட அப்பிடித்தான்.
கதையா இல்ல அனுபவமான்னு தெரில.ரசிச்சு வாசிச்சேன்.
நன்றி உங்களுக்கு.
சரி அப்புறம்!.....
ஹேமா, நல்லாருக்கேன்.
//உங்க பதிவுகளை விளங்கிச்சோ இல்லையோ உங்க வழக்குத் தமிழுக்காவே வாசிப்பேன்//
அந்தளவு புரியாமலா எழுதறேன். உங்க கோண்டாவில்லும் எங்க கிராமம் மாதிரிதான்னு கேள்விபட்டேன். சில வார்த்தைகள் புரியாமல் இருக்கும்னு நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி.
"காடு" நன்றாகப் பிடித்தது.
அன்புடன் அருணா, அப்புறம் நாளைக்கு.
நன்றி.
தெற்குப் பக்கம் உலா வந்தது போல ஒரு உணர்வு, உங்க நடை.
தொடருங்கள்.
மாதேவி varukaiku நன்றி.
வி.பாலகுமார் சார் நன்றி.
Post a Comment