Thursday, July 30, 2009

மூனு பொட்டு செவளை

மழை விட்டபாடில்லை பாத்துக்கிடுங்க. வீட்டை விட்டு அங்க இங்க நகரமுடியலை. ஜிலுஜிலுன்னு ஊதக்காத்து. சும்மாவே வெறயல்னா தாங்க முடியாது. இப்ப மழை வேறயா. ரெண்டு சாக்கை இழுத்து மூடிட்டு, இருக்க வேண்டியாதா போச்சு. குடிச வேற டொப்பு டொப்புனு ஒழுவிட்டு இருக்கு. கூரையிலயிருந்து தண்ணி விழுத எடத்துல எல்லாம் தம்ளரு. தூக்குச்சட்டி, கொடம், குத்துப்போணின்னு வரிசையா வச்சிட்டேன். இன்னும் ரெண்டு எடத்துல தண்ணி விழத்தான் செய்யுது. வைக்கதுக்கு பாத்திரம் இல்ல.

துணி மணியயெல்லாம் கட்டுலு மேல தூக்கி வச்சிட்டேன். தூக்கம் வேற கண்ணை இழுத்துட்டு இருக்கு. செத்த நேரம் படுக்கலாம்னு பாத்தா இந்த தண்ணிக்குள்ள எங்க போயி படுக்க?
நமக்கே இப்படி இருக்கே , தொழுவுல மாடுவோ என்ன பாடுபடும்னு எட்டிப்பாத்தேன். தொழுவுக்குள்ள தண்ணி எட்டிப்பாக்கு. இன்னும் செத்த நேரம் மழை பெஞ்சா தண்ணி நெரம்பிரும். சள சளன்னு இந்த தண்ணிக்குள்ள அதுவோ என்ன பாடுபடும், பாவம்னு நினைச்சா அதுவோ பாட்டுக்கு வாலை ஆட்டிகிட்டு படுத்துகெடக்குவோ. அட ஆக்கங் கெட்டதுகளா... குளிரு கொஞ்சங் கூட ஒரைக்கல பாருங்களென்.

இருக்குத எட்டு மாடுவோல்ல அந்த எருமைக்கு பின்னால வாயசைச்சுட்டு கெடக்கு பாருங்க, மூனு பொட்டு செவளை, சரியான திமுரு புடிச்சது. திமுருன்னா சும்மா இல்ல. எமகாதகன். பாருங்களேன்... சூலி பொத்தை பக்கத்துல மேய்க்கதுக்கு பத்திட்டுப் போனேன். எல்லா மாடுவோளும் கம்முனு வருது. இந்த ஆக்கங்கெட்ட மூதியும் அப்படி வரவேண்டியதுதான.

பெரிய தெரு வம்பன், வயல்ல கடலை போட்டிருந்தான். சும்மா போயிட்டிருந்த இது, திடுக்குன்னு வயல்ல போயி விழுந்துட்டு. மாடுன்னா வயல்ல விழத்தானய்யா செய்யும்னு நீங்க சொல்லுவியோ! நானும் இல்லங்கல. ஆனா, இது என்ன பண்ணிச்சு கேட்டேளா? வரப்போரமா தின்னுட்டிருந்த மாட்டை பத்துனா பயந்து ஓடும்னு கண்டிருக்கோம். இது உள்ள பூந்து வயக்காட்டை உண்டு இல்லைன்னு பன்னிட்டு. அந்த அறுவது வயசுல நான் எவ்வளவுதான் ஓடி வெரட்ட முடியும் சொல்லுங்க. கூடுன மட்டும் வெரட்டுனேன். வெரட்ட வெரட்ட வெளிய வரல. மொத்த வயலையும் நாசம் பண்ணிட்டு.

மண்ணுக்குள்ள இருக்கதால கடலைக்கு ஒண்ணும் சேதமில்லைன்னு வையுங்க. ஆனா, அந்த பய விடலை. பேரே வம்பம்னு வச்சிருக்கான். விட்டுருவானா என்ன? ஊரக்கூட்டி வெவாரத்தை வச்சிட்டான்.

இந்த அளவுக்கு போன பெறகு நானும் விடலை பாத்துக்கிடுங்க. இதுக்கு முன்னால இப்படி எதுவும் நடக்கலங்கதால, இந்த தடவை மட்டும் முத்தாரம்மனுக்கு ஒரு லிட்டரு எண்ணெய் வாங்கி ஊத்த சொல்லிட்டாவோ. அம்மனுக்கு அதை ஊத்திட்டு பெருசா ஒரு கும்புடு போட்டேன். இந்த அர்தலிக்கு நீதான் புத்தி சொல்லணும்னு.

வெவாரம் முடிஞ்சு ரெண்டு நாளு, அவன் வய பக்கமா மாடு பத்திட்டு போவல. மூணாவது நாலு அந்தப் பக்கமா போனேன். இந்த அர்தலி புத்திதான் தெரியுமேன்னு மூக்குல மூக்கணாங்கயிறு போட்டு இழுத்துட்டு போனேன். வாய்க்கா பாலம் தாண்டிச்சி பாருங்க, இந்த வம்பன் பய எதிர்ல வந்தான். வந்தவன் கம்முனுலா போவணும்?

‘இனும மாடு வயல்ல விழுந்தா பவுண்டிக்குப் பத்திட்டு போயிருவேன்னு சொன்னாம். இதுலதாங்க எனக்கு ரோசம் வந்துட்டு. பிரச்னை அன்னக்கே முடிஞ்சு போச்சு. இன்னும் என்ன வீராப்பு வேண்டி கெடக்கு? எம்மாட்டை இவன் எப்படி பவுண்டிக்கு பத்திட்டுப் போவான்? மூஞ்சியில அடிச்சாப்ல சொன்னேன்,‘அப்படி நடந்தா எங்காதை அறுத்துட்டு ஊருக்குள்ள அலையுதேன்'.ன்னு.

‘நீ ஒரு அப்பனுக்கு பொறந்தென்னா இன்னொரு மாடு வயல்ல விழட்டும், அது நடக்கா இல்லையானு மட்டும் பாரு,

‘நீ பாருல வெறுவாகெட்டவன'

‘யார வெறுவா கெட்டவனங்க'

‘ஒன்னயதாம் சொன்னேன்'

‘உன்னய என்ன செய்யுதம்னு பாரு'

‘பேசாத செய்யு'.

போய்ட்டாம் அந்தப் பய. ஒரு நாலஞ்சு நாளு கழிச்சு கருக்கல்ல மாடுவோளை தொழுவுக்குள்ள பத்திட்டு நான் அருணாச்சலம் சுக்காப்பி கடைக்கு போயிட்டேன். அங்க போனா சீக்கிரம் வர முடியுமா சொல்லுங்க... மாட்டுக்கு போன எல்லா பயலுவோளும் அப்பதான் வருவானுவோ. காலையில போயிட்டு அடஞ்சிதான் வாரதால, ஊருக்குள்ள என்னமும் கதை நடந்தா அப்பதான் பேசுவாவோ.

அன்னைக்கு பாத்து பத்தமடையா மவ, அப்பளப்பு விக்குதவன் கூட ஓடிபோயிட்டாளாம். கதை சீக்கிரம் முடியுமா? ரொம்ப நேரம் ஆயிபோச்சு. எல்லா கதையும் பேசிட்டு, வீட்டுக்கு வந்தா அளிக்கதவு தெறந்து கெடக்கு. அந்த அர்தலிய காணலை. அந்த அர்தலின்னா மூனு பொட்டு செவளை.

ஒரு பக்கமும் போவாத... எங்கபோயிருக்கும்னுட்டு, சோமுதாத்தா வைக்கப்படப்பு, பெராமாச்சி தேவரு தோட்டம், சுப்பையா கோனாரு தொழுவுன்னு தேடுதேன், தேடுதேன், கண்டுபிடிக்க முடியலை. நான் தேடுததை பாத்துட்டு பக்கத்தூட்டு பச்சை பய, 'என்ன தாத்தா என்ன தேடுதியோ'ன்னான். வெஷயத்தை சொன்னதும் வாரும்யா நானும் வாரேன்னு வந்தாம். எனக்கு சின்ன சந்தேகம் வந்துச்சு. வம்பன் வயலுக்கு கண்டா போயிருக்குமோன்னுட்டு. கடலை எல ருசி இதை அங்க இழுத்திருக்கும்னு நெனச்சேன். வேக வேகமா போய் பாத்தா... வயலுக்குள்ள முள்ளம் பன்னி மாதிரி முதுவு தெரியுது. தலையை கவுத்து போட்டுட்டு செடிய நொறுக்கிட்டு இருக்கு. எனக்கு கெதக்குனு ஆயிபோச்சு.

சனியன் மாடு, எங்காதை அறுக்கணும்னு முடிவுபண்ணிட்டுதான்னு,  கல்லை எடுத்து போட்டேன் ஒரு போடு. மூஞ்சியை தூக்கி பாத்துது. எனக்குன்னா கோவம் தாங்க முடியலை. பச்சை பய பின்னாலயே போயி கயித்தை புடிச்சுட்டான். அந்தானி புளிய விளாரு கையில இருந்துச்சு. சளார் சளார்னு சாத்தி போட்டேன் சாத்தி. அந்தாப்ல, அது ஒரு பார்வை பார்த்தது பாருங்க, கண்ணுல தண்ணி எட்டிப்பாத்துட்டு. எம் பொண்டாட்டி, ஏதாவது கோவத்துல நான் ஏசிட்டம்னா இப்படித்தான் பாப்பா. அதே மாதிரி இருந்துச்சு. எனக்கு அவ ஞாபகம் வந்துட்டு.

புளிய விளாரை தூரவீசிட்டு பச்சைட்ட, மாட்டை பத்தியார சொன்னேன். வயல்ல விழுந்ததை யாரும் பாக்கலை; பிரச்னை இல்லன்னு நெனச்சா, கருப்பசாமி பய வந்துட்டாம். இவன், வம்பனுக்கு மச்சினன். சொல்லாம விடுவானா? பயலுவோ எங்க கோளு மூட்டலாம். எவனை கவுக்கலாம்னு நினைச்சிட்டிக்கானுவோ. இவன் எப்படி சொல்லாம இருப்பான்? ராவோட ராவா போயி ஊதிருப்பாம்.

காலைல விடிஞ்சும் விடியாம இருக்கும் போது வந்துட்டான் வம்பன். கெட்ட கெட்ட வார்த்தையில ஏசுதாம். கோவம் கோவமா வருது. என்ன செய்ய முடியும்? இந்த அர்தலி தப்பு பண்ணிட்டுலா வந்திருக்கு. நான் வாயே தெறக்கலை. மத்த நேரமா இருந்தா கொரவளைய அறுத்திருப்பேன்.

என்னைய ஏசிட்டு, நேரா தொழுவுக்குள்ள போயி வம்பன் மாட்டை அவுத்தாம் பாருங்க, இந்த அர்தலி கொம்பை லேசா சிலுபிட்டு. கொம்புகிட்ட போயா மூஞ்சியை வச்சிருப்பாம்? மோற கட்டைக்கு கீழ ஒரு இழு. குபுக்குன்னு ரெத்தம். கட்டை வெரலு நீளத்துக்கு பொந்துபோட்டுருக்கும்.

‘ஏ பேதில போவாம், மாட்டை வச்சி கொல்ல பாக்கானே'ன்னு அவயம் போடுதான். மொகம், நெஞ்சுன்னு ரெத்தமா வடியுது. வேகமா போயி துண்டை எடுத்து ரெத்தம் வார இடத்துல பொத்துனேன். ‘நீ அமுக்காத, துண்ட எடு. நான் பாத்துக்கிடுதே'ங்கான். நானும் விடலை. ‘எம்மேல உள்ள கோவத்தை பெறவு காட்டுன்னுட்டு, பாய் டாக்டரு வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டேன். டாக்டரு, தையலுதான் போடணும். முன்னூரு ரூவா ஆவும்னு சொன்னாரு. எம்மாடு முட்டுனதுக்கு அவ எங்க துட்டை அவுப்பான்? இருநூத்தி நாப்பது ரூவாதான் இருந்துச்சு எங்கிட்ட. கொடுத்தேன்.

இதுக்குள்ள வெஷயம் வேற மாதிரி பரவி, டாக்கரு வீட்டுல கூட்டம் கூடிட்டு. அவன் சொக்காரனுவோலாம் என்னை அடிக்க வந்துட்டானுவோ. பெறவு வெவரமா சொன்னேன். மானங்கெட்ட கேள்வி கேட்டனுவோ.

எனக்கும் ஆதரவா ரெண்டு பேரு பேசத்தான் செஞ்சாம். 'என்னதான் பிரச்னைனாலும் தொழுவுக்குள்ள போயி இவன் ஏன் மாட்டை அவுக்காம்'னு கேட்டானுவோ. ஆனா, பிரச்னை இதோட முடியலை.

வம்பன் பயலுக்கு வேற என்னவோ நோயிருந்துருக்கு. சக்கரை சக்கரைன்னானுவோ. நான் என்னத்தை கண்டேன். புண்ணும் ஆறலை, நோயும் தீரலை. மூனே மாசத்துல பொட்டுனு போயிட்டாம்யா. என் நேரத்தை எங்க போயி சொல்ல? எனக்கு ஒரு வாரத்துக்கு தூக்கம் வரலை. பாவமா போச்சு. நாந்தான் கொன்னுப்போட்டேன்னு ஊரெல்லாம் பேசுதாவோ. நீங்களே சொல்லுங்க. இதுல நான் ஏதாவது பண்ணுனனா?

செத்த வீட்டுக்கு போனா, இங்க எதுக்கு வந்தாம்னு பேச்சு நடக்கு. நாலஞ்சு எளவட்ட பயலுவோ மாட்டை காலி பண்ணனுங்கான்னுவோ. அந்த எடத்துல எவன் என்ன பேசி எடுபடுங்கியோ?

பெறவு ரெண்டு மூனு மாசத்துல இந்த பிரச்னையெல்லாம் அடங்கிபோச்சு. இந்த அர்தலி என்ன செஞ்சது தெரியுமா? நம்ம காக்கநல்லூராம் வீட்டுப் பசு பின்னாலயே அலையுது. ஊருல பசுமாடாயா இல்லை? அது சரியான பசு. சும்மா கொழு கொழுன்னு லட்சணமா இருக்கு பாத்துக்கிடுங்கோ. நெறய வெல கொடுத்து வெளிய எங்க இருந்தோ வாங்கிட்டு வந்திருக்கான். பாலும் அதிகமா கொடுக்குமாம். நல்ல தெடமான பசுதான். இருந்தாலும் ஒரு இது வேண்டாமா?
அது ஈனி, மூனு நாளுதான் இருக்கும். அதுக்குள்ள அது பின்னாலயே மூக்கை வச்சுட்டு சுத்துனா, அவன் சும்மா வுடுவானா? நாளுநாளு வெரட்டுனாம். அஞ்சாவது நாலு அவன் வீட்டு தொழுவுல புடிச்சு கெட்டிப்போட்டுட்டாம். அவங்கிட்ட வெவாரமெல்லாம் கெடயாது. வெட்டுக்குத்துதான். இது கெடக்குமா? மத்தியானத்துலயிருந்து ராத்திரி வரை கெடந்திருக்கு. வைக்கலு கூட போடலை.

நான் மாட்டை காணலைன்னு நாயா பேயா தேடுதேன். திடீர்னு பாத்தா கயித்தை அத்துக்கிட்டு அவன் வீட்டு வைக்கப்படப்பை நாசம் பண்ணிட்டு இங்க வருது. எங்க என்ன பண்ணிட்டு வருதுன்னு தெரியலையேன்னு நான் முழிச்சுட்டு இருக்கேன். காலையில காக்கநல்லூரான் தேடி வாராம். ஒரே பிரச்னை போங்க. நல்லவேளை வயசாலிகிட்ட என்னத்தை சண்டை போடன்னு நெனச்சானோ என்னவோ? பெரிசு பண்ணாம போயிட்டாம்.

பெறவு எல்லாரும் காயடிச்சு போடுன்னாவோ. மனசு கேக்கலை. அது பாவமில்லையா? சரி, இதை இனும மேய்க்கதுக்கு பத்திட்டு போவாண்டாம். கெட்டியே போட்டுரலாம்னு நெனச்சேன். கெட்டிப்போட்டாலும் கெடக்கணும்லா? அத்துட்டுலா போயிரும்னு நெனச்சிட்டு இருக்கும்போதே பச்சை பய, அவன் வீட்டுல இரும்பு சங்கிலி கெடக்குன்னு சொன்னான். கொண்டான்னு வாங்கி கெட்டி போட்டுட்டேன். ராத்திரியானா ‘ம்ம்மா'ன்னு கத்தும். ரெண்டு நாளா மனசை தெடபடுத்திட்டு இருந்துட்டேன். மூணாவது நாளு முடியலை. புலி குட்டி மாதிரி சுத்துன மாட்டை இப்படி கெட்டுல போட்டா என்னாவும்? நம்ம பிள்ளைய இப்படி போட முடியுமா?ன்னு யோசனை. மாட்டை பாக்க பாவமா இருந்துச்சு. அவுத்து விட்டுட்டு, மறு நாளு மாடுவோளோட மேய்க்க பத்திட்டு போனேன்.

மஞ்சப்புளி கொளத்துல மாடுவோ மேய்ஞ்சிட்டு இருந்ததுவோ. மேலத்தெரு கண்ணம்பி பயலும் மாடு பத்திட்டு வந்திருந்தான். நல்ல புல்லும் கோரையுமா இருந்ததுல மாடுவோளுக்கு நல்ல வேட்டை.
பக்கத்துல பட்றையன் கோயில் திண்டுல அரச மரத்து காத்து ஜிலு ஜிலுன்னு வருது. கண்ணம்பி பய ரெண்டு பீடியை ஊதிட்டு துண்டை விரிச்சுப் படுத்தாம். நானும் அவன் கூட கதை பேசிட்டுப் படுத்தேன். முழிச்சுப் பாத்தா மாடுவோளை காணும். எங்க போயி தொலைஞ்சதுன்னு பாத்தா கொளத்து கரைமேல மாடுவோலாம் நிக்கு. இந்த அர்தலியை காணலை. திரும்பவும் வில்லங்கத்துல கொண்டு விட்டுட்டான்னு முழிச்சுட்டு இருக்கேன்.

கீழ பத்து கரையில ஒருத்தன் மாட்டை இழுத்துட்டு போயிட்டிருக்கான். இது மாதிரியும் தெரியுது. இல்லங்கத மாதிரியும் இருக்கு. போய் பாக்கலாம்னு போனா, நம்ம செவனாண்டி பய, இந்த அர்தலிய இழுத்துட்டு போறான். நெனச்சது நடந்து போச்சு. என்ன எழவை பண்ணிச்சோ தெரியலையே. ஒரே எரிச்சலா இருந்தது. இப்படியா ஒரு மனுஷன் தெனம் தெனம் இதோட அழுவாம்? ஊரு ஒலகத்துல இப்ப்படியாய்யா மாடுவோ இருக்கு. அவன் என்ன சொல்ல போறாம்னு தெரியலையேன்னு மஞ்சப்புளிச்சேரிக்கு போயிட்டேன்.

செவனாண்டி பய கம்யூனிஸ்ட் கொடி கம்பத்துக்கு கீழ உக்காந்திருக்கான். என்னைய பாத்ததும், ‘யோவ் வாரும். என்னய்யா எங்க ஊருக்கு அதிசயமா வந்திருக்கீரு"ன்னான். எம்மாடுதான் அதுன்னு தெரிஞ்சா என்ன ஆவான்னு தெரியலையேன்னு யோசனை. அவன் பக்கத்துல உக்காந்தேன். ‘காபி சாப்பிடுதேளா'ன்னான். வேண்டாம்னு தலையாட்டிட்டு, ஒரு மாட்டை புடிச்சுட்டு வந்தியேன்னேன் பாருங்க. சுருக்குனு கோவம் வந்துட்டு.

‘ஆமா, சனியன் புடிச்ச மாடு. கீரைய பூரா காலிபண்ணிட்டு. நானே ராசா ஐயருட்ட வட்டிக்கு வாங்கி இதை போட்டிருக்கேன்'

‘மாடு நம்ம மாடுதாம்'

‘என்னது நம்ம மாடா... இங்கரும் நான் இதுவரை செலவழிச்ச துட்டை வச்சிட்டு மாட்டை கூட்டிட்டு போரும். நீரெல்லாம் ஏம்யா மாடு வளக்கேரு. ஊரான் வயக்காட்டுல தின்னுட்டு வரும். நீரு பாத்துட்டு இருப்பேருன்னா?'

‘இப்படி வெட்டு ஒண்ணு ரெண்டு துண்டுன்னு பேசுனா எப்படி?'

‘பெறவு எப்படி பேசணும்?'

இப்படி பேசிட்டிருந்ததை கேட்டுட்டு நல்லமுத்து நம்பியாரு வந்தாரு, பேச்சு சூடா போவது வரை சும்மா நின்னுட்டு, நானுறு தெண்டம் கொடுக்கணும்னு சமானம் பேசுனாரு. நானும் ஒண்ணும் சொல்லலை. போய் தொலையுதாம்னு, ‘நாளைக்கு தாரேன்,னு சொல்லிட்டு மாட்டை அவுத்துட்டு வந்துட்டேன்.

ஊரு பூரா இந்த மூனு பொட்டு செவளை மேல எரிச்சலா இருக்காவோ. ஒரு ரெண்டு பேரு வந்து, ‘அதுதான் இந்தா வரத்து வருதுலா. வித்து தொலைக்க வேண்டியதுதானே'ன்னானுவோ. எனக்கு சுள்ளுனு கோவம் வந்துட்டு. விக்கதுக்காயா நான் மாடு வளக்கேன். பேச வாரானுவோ பாருங்க.


மழை இன்னும் விடலை. தூறிட்டே இருக்கு. இன்னைக்கு மேய்க்கதுக்கு போவ முடியாது. கொஞ்சம் போல வைக்கலு கெடக்கு. அதை அள்ளி, எல்லா மாடுவோளுக்கும் வச்சிர வேண்டியதுதாம். சுக்காப்பி கடைக்குப் போவலாம்னா கொங்காணி கிழிஞ்சு போயி கெடக்கு. சாக்கை மூடிட்டு போலாம்னா அங்க எல்லா பயலும் சிரிப்பானுவோ.
அங்கென்னமோ சத்தம் கேக்குத... என்னயா அது? ஏ பேதில போவாம் மாடு, கெடுத்துபோட்டே. எய்யா அந்த அர்தலி அத்துட்டு போவுதுயா... எவன் தாலிய அறுக்க போதுன்னு தெரியலையே...
‘க்கிய... க்கிய... வந்தம்னா முதுகு தொலிய பிச்சிருவேன். க்கிய... க்கிய... பய மாடு கேக்காம வேகமாலாயா போவுது... எய்யா யாராவது புடிங்களேன்.

- என் தொகுப்பிலிருந்து

17 comments:

நாடோடி இலக்கியன் said...

பத்து வருஷத்துக்கு முன்பு இப்படி ஒரு மாடு எங்க வீட்டிலயும் இருந்துச்சு பாத்துகிடுங்க,ஆனா அது பசு.

என்ன சொல்றது வட்டார வழக்கில் அசத்தலா எழுதியிருக்கீங்க.

M.Rishan Shareef said...

மிக மிக அருமை.

அந்த மாட்டைப் போலவே, சொல்பேச்சுக் கேட்காமல் பிரச்சினைகளை வீட்டுக்கு இழுத்துவரும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

மொழிநடை வழமை போலவே அருமை !

ஆடுமாடு said...

//பத்து வருஷத்துக்கு முன்பு இப்படி ஒரு மாடு எங்க வீட்டிலயும் இருந்துச்சு பாத்துகிடுங்க,ஆனா அது பசு//

நிறைய மாடு வளர்க்கிறவங்க வீட்டுல இப்படி ஏதாவது ஒரு மாடு கண்டிப்பா இருக்கும். பழகிட்டோம்னா பாசக்கார மாடாயிடும்.

நன்றி நாடோடி இலக்கியன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு ஆடுமாடு!

அ.மு.செய்யது said...

பல வேளைகளுக்கு மத்தியில பிட்டு பிட்டா ஒருவழியா படிச்சி முடிச்சிட்டேன்.

உங்க நெல்லை தமிழ படிச்சிட்டு எனக்கும் அந்த மாதிரி தான் பின்னூட்டம் போட வருது.என்ன பண்ண ??

அந்தால போயி காபி தண்ணி குடிச்சிட்டு வாரோம்..உங்க மாட்ட பாத்துகிடுங்க..

நட்புடன் ஜமால் said...

வட்டார மொழி அருமை.

வெருவாகெட்டவனே -
எங்க ஊர்லையும் இந்த வார்த்தை அதிகம் புழங்கும்

நல்லா மேயுதுங்க ...

ஆடுமாடு said...

ரிஷான் நன்றி.

ஆடுமாடு said...

சுந்தர்ஜி நன்றி. நட்புடன் ஜமால், நல்ல வெறுவாகெட்ட வார்த்தையில்ல!

நன்றிங்க,

ஆடுமாடு said...

//அந்தால போயி காபி தண்ணி குடிச்சிட்டு வாரோம்..உங்க மாட்ட பாத்துகிடுங்க...//

நன்றி செய்யது.

கிருத்திகா ஸ்ரீதர் said...

மாட்டு தொழுவமும், மாடும்... கூடவே அந்த வார்த்தை அர்தலியும் வருதுங்க... இதுதான் உங்க எழுத்து...

ஆடுமாடு said...

//மாட்டு தொழுவமும், மாடும்... கூடவே அந்த வார்த்தை அர்தலியும் வருதுங்க//

நன்றி கிருத்திகா.

ESMN said...

அண்ணாச்சி,
இதுக்கு அர்த்தம் என்ன?

கொங்காணி

முன்னால் பின்னால இருக்கிற வார்த்தைய வைச்சு பார்த்தா ‘குடை’ னு நினைக்கிறேன்...

எங்க வீட்டு எருமைமாடு ரொம்ப நல்ல மாடு..
ரோட்டுல போகும் போது கூட லைன்ல தான் போகும் பார்ர்த்துங்கோளேன்..

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தெற்கிருந்து வடக்க போறத பார்த்துட்டு கரெக்டா மாட்டு குட்டையிலிருந்து எழுந்து வீட்டு கிளம்பிவிடும்..

ஆடுமாடு said...

//கொங்காணி//

எருமை மாடு அண்ணேன், குடை மாதிரிதான. அதாவது, ஓலைப்பாயி இருக்குல்லா, அதை தலைக்குமேல வைக்கிற மாதிரி பின்னி, முதுகுவரை தொங்க விட்டுட்டு போவாவோ. அதுதான் கொங்காணி.

//கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தெற்கிருந்து வடக்க போறத பார்த்துட்டு கரெக்டா மாட்டு குட்டையிலிருந்து எழுந்து வீட்டு கிளம்பிவிடும்..//

ஆமா, சில மாடுவோ, நம்ம கூட தாயா புள்ளையா சேர்ந்துக்கிடும். சிலது, நம்ம அர்தலி மாதிரிதான்.

நன்றிண்ணேன்.

☼ வெயிலான் said...

பழய கழனித் தண்ணின்னாலும் சுவை அருமை அண்ணாச்சி!

ஆடுமாடு said...

வெயிலான் நன்றி.

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்குங்க!

வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கா.

ஆடுமாடு said...

நன்றி ராஜாராம்.