Friday, July 24, 2009

அலையில் நீந்தும் மனவெளி (அ) அவஸ்தையின் ரசிகை

இன்னும் எழ முடியாமல் இருக்கிறது உன் ஞாபகங்கள் அழுத்தும் மனசு. இமைகளை அறுத்து கண்களை எடுத்து செல்லும் உன் நினைவுகள், ஆயுதமானது பற்றிய யோசனை வரவே இல்லை. சாணம் மெழுகிய மண் தரை முற்றத்தில் மல்லாந்து படுத்தபடி வான் பார்த்து பேசுகிறேன். வானம் பூமியை காதலிப்பதாய் ரகசியம் சொல்கிறது.

வலிகளை உணர்ந்த வானுக்கு நானும், எனக்கு வானும் ஆறுதல் பரிமாறிக் கொண்டோம். ஊடே, தெரிந்தோ தெரியாமலோ பாய்ந்து வந்த அருவம் காற்றாகவும் இருக்கலாம். அப்போது அதை தென்றல் என்றேன். அது நான் நானாக இருந்த காலம்.

சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருகிறது என் உயிர் குடிக்கும் உன் வாசம். வானிடம் பேச்சை நிறுத்திவிட்டு கண்கள் மூடி வாசனை நுகர்கிறேன். விழி திறக்கையில் மண் தரை முற்றமெங்கும் உன் வார்த்தைகள் சிதறி கிடக்கின்றன. ஒவ்வொன்றாய் பொறுக்குகிறேன். கைகளுக்குள் அகப்படாமல் கீழே விழுவதில் ஒன்று என் முகமாக இருக்கிறது.

உன் கூந்தலில் சிந்தும் நீர் பட்டு, மீண்டும் முளைக்கிறது முகம். உன் வேடிக்கைப் பார்த்து ஆளரவமற்ற மனவெளியெங்கும் சிரிப்பலைகள். அதில் என்னால் நீந்த முடிகிறது. ஆழ்கடல் இருட்டில் திசையின்றி செல்கிறது பயணம். திடீரென முளைக்கும் மரத்திலிருந்து அழைக்கிறது உன் கைகள். நீந்திய களைப்பில் உன்னருகே அமர்கிறேன்.

கண்களில் நீ தீட்டிய மை பெயர்ந்து என் கைகளில் விழுகின்றன. ஒவ்வொன்றும் கனம். தாங்கும் சக்தியற்று நடுங்குகின்றன கைகள். ‘விழப்போகிறது... விழப்போகிறது... ம்... எடுத்துக்கொள்’ என்கிறேன். நீ என் அவஸ்தையை ரசிக்கிறாய். உடல் கோணலாகி, என் பாதத்திலேயே விழுகின்றன மை.

கனம் தாங்காத நோஞ்சான் கால்கள் வலியால் அலறி தனியாக அமர்கிறது. உன் சிரிப்பின் சத்தத்தில் ஆல மர இலைகள் அந்தரத்தில் தொங்கின்றன. விடாமல் தொடர்கிறது சிரிப்பு. சுற்றும் முற்றும் பார்க்கிறேன். நீ மட்டுமே சிரிக்கிறாய். வானம் அதிர்ந்து அங்கிருந்து ஒரு துண்டு நிலம் பெயர்ந்து வருகிறது. என் மீது விழுமோ என் அருகில் விழுமோ தெரியாது.

( பழைய பதிவுதான்)

7 comments:

நட்புடன் ஜமால் said...

வானம் பூமியை காதலிப்பதாய் ரகசியம் சொல்கிறது. ]]

கைகளுக்குள் அகப்படாமல் கீழே விழுவதில் ஒன்று என் முகமாக இருக்கிறது.]]


உன் கூந்தலில் சிந்தும் நீர் பட்டு, மீண்டும் முளைக்கிறது முகம். ]]

திடீரென முளைக்கும் மரத்திலிருந்து அழைக்கிறது உன் கைகள்.]]

உடல் கோணலாகி, என் பாதத்திலேயே விழுகின்றன மை. ]]

என் மீது விழுமோ என் அருகில் விழுமோ தெரியாது.]]



கவிதை படைக்க வேண்டிய வரிகள்.

அ.மு.செய்யது said...

//கைகளுக்குள் அகப்படாமல் கீழே விழுவதில் ஒன்று என் முகமாக இருக்கிறது.//

கிளாஸ்......ரசித்து வாசித்தேன்..முழுபதிவும் அட்டகாசம்.

இப்படி பழைய பதிவுகள் ஒவ்வொன்றாக எடுத்து வுடுங்க தல....

( ஆனா இந்த பதிவுல ஏன் உங்க ஆடு,மாடுகள் மிஸ்ஸிங் ?? )

மாதவராஜ் said...

ஒவ்வொரு வரியையும் ரசிக்க முடிகிறது.அருமை நண்பரே!

ஆடுமாடு said...

ஜமால்ஜி,நன்றி.

ஆடுமாடு said...

செய்யதுஜி, லவ்வுல எப்படி ஆடுமாடை ஓட்டுறது. நன்றி

யாத்ரா said...

மிகவும் ரசித்தேன், உங்கள் புனைவுக்குள் உருகிக் கரைந்து போய் விட்டேன்.

ஆடுமாடு said...

யாத்ரா நன்றி.