சைக்கிளில் இருந்து பறக்கும் வண்ணமயமான பலூன்கள் காற்றை நேசித்துக்கொண்டிருந்தன. தூரப்பார்வையில் கொலாஜ் ஓவியங்களாகத் தெரியும் அவற்றை பலவேசம் விற்பனை செய்துவந்தான். விற்பனை பிரதிநிதியாக அவனை பார்க்கும் காலம் அதுவல்ல. இது சில்லரை வியாபார பகுப்புக்குள் மிகச்சரியாய் பொருந்தும் வியாபாரம்.
அஞ்சு பைசா பத்து பைசாக்கள் சட்டை பைக்கட்டை நிரம்பி வழிய செய்த காலங்களில் அவன் பிழைப்பு இருந்தது அவனுக்கான அதிர்ஷ்டம். அது கருக்கலாகவும், இருட்டாகவும் இல்லாதிருந்ததொரு நேரம். சரியாக பன்னிரெண்டு மணிக்கு அம்மன் ஊர்வலம் வரும் என்பதால் ஆற்றுமணல்கள் போடப்பட்டிருக்கிற கோயில் வளாகம் குழந்தைகளால் நிரம்பியிருந்தது.
கொடைக்காக முளைத்திருந்த திடீர் டீக்கடைகளில் இருந்து வரும் வாழைக்காய் பச்சிகளின் வாசத்தில் பெருசுகள் திளைத்திருந்தார்கள். ஊருக்கு வந்திருந்த சொக்காரர்களின் நலன் விசாரிப்பிலும், உள்ளூரில் தங்கள் செல்வாக்கை காட்டுவதிலுமாக அவர்களின் மாயை இருந்துகொண்டிருந்தது. இந்த வீராப்பு காட்டும் விஷயத்தில் சில மான அவமானங்களையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருந்திருக்கும்.
கோயிலில் வெளியே இருந்த சுடலைமாடனின் சின்ன பூடத்தின் பின்னால்- லைட் வெளிச்சம் அதிகமில்லாத அந்த இடத்தில் இளங்குமரிகள் எடக்கும் பேச்சுமாக நின்றுகொண்டிருந்தார்கள். ஊர் பெண்களுக்கு அதை தவிர அதிகபட்ச சந்தோஷம் எதிலும் இருக்கப்போவதில்லை. அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக பிச்சம்மாள்! பலவேசத்தை தனியாக சந்திக்க வேண்டும் என்பது அவளது ஆர்வமாக இருந்தது. வேட்டியை அண்டர்வேருக்கு மேல் கட்டிய உள்ளூர் பயல்கள் இவர்களைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக பொழுது போக்கி கொண்டிருந்தனர்.
குமரிகளிடமிருந்து தனியாக வந்த பிச்சம்மா, மூக்கதாத்தா பேரனை அழைத்தாள். காதில் கிசுகிசுத்தாள். மேல் சட்டை அணியாத அச்சிறுவன், பலவேசத்தை நோக்கி போனான். சொன்னான். ஏறிட்டு பெண்கள் பக்கம் பார்த்தான் பலவேசம். அவனுக்குள் சிறு தடுமாற்றம் இருந்தது.
சைக்கிளை தள்ளிக்கொண்டு சுடலைமாடன் பூடம் தாண்டி சொன்று இருட்டாக இருந்த மந்திர தேவனின் தொழுவினருகில் நின்றான். பின்னால் பிச்சம்மாள் வருவது தெரிந்தது. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு திரும்பினான். பொடதியில் பொத்தென்று அடி விழுந்தது. பிச்சம்மாவின் அப்பா கருப்பையா நின்றிருந்தார்.
தொடர்கிறேன்
7 comments:
அதென்னவோ சரியான சமயத்துக்கு அப்பா வந்துட்டாரே.:)
கண்ணுக்கு நேர திருவிழா நடக்கிற மாதிரி இருக்கு.
Katha nalla iruku sare,,,,
Aana ivlo time delay thevaya,,, daily eluthunga...
அருமையான தொடர்..
ஆரம்பமே களைகட்டுகிறது..
அடுத்தது என்ன என்று எதிர்பார்க்கவைக்குமிடத்தில் தொடரும் போட்டிருக்கிறீர்கள்..
ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தொடருங்கள் நண்பரே :)
புது கதையா ரொம்ப நாளேச்சேன்னு பார்த்தேன் ஆரம்பமே சுவாரசியமாத்தான் இருக்கு... சீக்கிரமே பதியுங்க அடுத்த பாகத்தை
அடிக்கடி காணாமப் போகாதீரும் :)
வல்லிம்மா, பழையபேட்டை சிவா, ரிஷான் நன்றி.
//புது கதையா ரொம்ப நாளேச்சேன்னு பார்த்தேன்//
புதுசு இல்லை கிருத்திகா, போன கதையோட தொடர்ச்சிதான். நன்றி.
சுந்தர்ஜி, இனி அடிக்கடி இங்கதான்.
Post a Comment