Sunday, November 16, 2008

கனவு பூச்சி அல்லது கனவுகளை பெய்யும் மழை

வானம் கூராந்து இருந்தது. பெரும் மழை பெய்யலாம். கூரையிலிருந்து மழைத்துளி இன்னும் சொட்டிக்கொண்டிருந்தது. விழுந்த மழை நீரால் வீட்டைச் சுற்றி வரிசையாக சிறிய பள்ளங்கள் உருவாகியிருந்தன. அதிலிருந்து தெறிக்கும் நீர் பட்டு கூட்டுக்கு போகாத கோழி குஞ்சொன்று நடுங்கிகொண்டிருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்யும் மழையால் வீட்டில் வடபக்கம் இருக்கும் முருங்கை மரத்தின் அருகில் கொத்தமல்லி, தக்காளி செடிகள் முளைத்திருந்தன புற்களோடு. மரமும் மரம் சார்ந்த இடமும் பச்சையாக இருந்தன. கால் துடைக்க வாசலில் போடப்பட்டிருந்த சாக்கு, பாதி நனைந்தும் நனையாமலும் இருந்தன.

தாவணியை இழுத்து உடல் முழுவதும் மூடிக்கொண்டு வீட்டுக்குள் குத்த வைத்திருந்தாள் பிச்சம்மாள். நேற்றிரவு முழுவதும் தூங்காத கண்களில் அசதி. அருகில் அவளை போலவே அமர்ந்துகொண்டு வாசலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மா சடச்சி.
கருப்பையாவின் வரவுக்காக இருவரும் காத்திருந்தார்கள். லேசான குளிருக்குள் பெரும் மவுனம் மறைந்து கிடந்து இறைந்துக் கொண்டிருந்தது.

‘சுக்காப்பி போடட்டா’ சடச்சி கேட்டாள்.
‘மொதல்ல இதுக்கொரு முடிவு தெரியட்டும். பெறவு பாப்பும் குடிக்கதையும் திங்கதையும்’.
‘அதுக்கும் இதுக்கும் என்னட்டி இருக்கு’
‘சும்மாரீ. நீயும் பொம்பளைதான. உனக்காவது தெரியாண்டாம்.’
‘நான் என்னய்ய முடியும். இவ்வளவு காலமா இங்க கஞ்சி தண்ணி குடிச்சது போதும், அங்க போயாவது நல்லாருக்கட்டும்னுதான் பேசுச்சு. பெத்தவ்வோ கெணத்துல கொண்டியா போடப் போறாவா’
‘இங்கரு, சொன்னதையே சொல்லிட்டிருக்காத. பொல்லாதவளாயிருவேன்’

வெய்க்காலி பட்டிக்கு மாடு விற்க சென்று வந்த பிறகுதான் விஷயம் வீட்டுக்குள் வந்தது. மாட்டை விற்றுவிட்டு நடந்து வரும்போது, மேட்டூர் ரயில்வே கேட் அருகே, தூரத்து சொந்தக்காரனான மாசானத்தை பார்த்தார் கருப்பையா. ஒரு அறுவடை காலத்தில் நெல் கொண்டு சென்ற மாட்டு வண்டி, வாய்க்காலுக்குள் கவிழ்ந்ததில் மாசானத்தின் இடது கால் துண்டானது. பழைய மாதிரி வேலை எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் மரக்கட்டை காலோடு தனது கணீர் குரலில் ஊரை மிரட்டிக்கொண்டிருப்பவர். இருவரும் சுக்காப்பியை குடித்துவிட்டு குடும்ப நலம் விசாரிக்கும் போதுதான் மாசானம் இப்படியொரு விஷயத்தை ஆரம்பித்தார்.
‘இங்கரு, ஒத்த பொட்டபுள்ளைய வச்சிருக்கே, இன்னைக்கு நெலமைக்கு உன்னால சீரு செஞ்சு முடியாது’
‘ஆமா, கழுதை, எல்லாம் நம்ம கையிலயா இருக்கு. சொல்லமாடனைதான் கும்புட்டுகிட்டிருக்கேன்’
‘அவரா வந்து கெட்டி வைக்க போறாரு, நம்ம கையில எதும் இருந்தாதான் சாமியும் சிரிக்கும்’.
‘சர்தான்’
‘பின்ன’
‘.......’
‘இங்கரு நான் சொல்லுததை கேளு, நம்ம சொக்கார பய இருக்காம்’
‘யாரு’
'கல்றகுறிச்சா மவன்'
'ரெண்டாந்தாரமா? என்ன பேச்சு பேசுத. அவன் வயசு என்ன, எம்புள்ள வயசென்ன'
'கூறுகெட்டால பேசாத, ரெண்டாந்தாரம்னா, வேறு யாருக்குமாவே கொடுக்க. ஒனக்கு ஒரு மொறயில மருவந்தானே...'

பீடியை எடுத்து பற்ற வைத்தார் கருப்பையா. கேட் அடைக்கப்பட்டு ரயில் வருவதற்கான அறிகுறி தெரிந்தது. அதற்கு மேல் பேசவில்லை. சூழ்நிலைகள் சில நேரம் மூச்சடைத்துவிடும். சில நேரம் மூர்ச்சையாக்கிவிடும். கருப்பையாவுக்கு இதில் எந்த நிலை என்று தெரியவில்லை.
மாசானமும் கருப்பையாவை விடுவதாக இல்லை.
'இங்கரு... நீ யோசிச்சுக்கோ. இன்னைக்கிருத்த வெலவாசில என்ன செய்ய போறன்னு பாத்துக்க, இவனுக்கு கெட்டிக்கொடுக்கலாம்னா எல்லா செலவையும் நாங்க பாத்துக்கிடுதம்'

ஊருக்கு வந்துவிட்டு அன்றிரவு முழுவதும் தூங்கவில்லை கருப்பையா. மனைவியுடமும் மகளிடம் இதை எப்படி ஆரம்பிப்பது என்பதில் தடுமாற்றம். மனைவியையாவது சம்மதிக்க வைத்துவிடலாம். எப்போதும் துறு துறுவென்று அலையும் மகளை?
மறுநாள் இந்த பொறுப்பை மனைவியிடம் விட்டுவிட்டு சென்றுவிட்டார் கருப்பையா.
'நீ பக்குவமா சொல்லு. எனக்கும் விருப்பமில்லைதான். வேற வழியில்ல"

சடச்சி இதை சொன்ன நேரத்திலிருந்து காளி ஆகியிருந்தாள் பிச்சம்மா.
'செத்தாலும் சாவேன தவிர அந்த அர்தலி குடிகார பயலுக்கு கழுத்தை நீட்ட மாட்டேன்"

(தொடர்கிறேன்)

10 comments:

துளசி கோபால் said...

மேய்ச்சலுக்குப்போன ஆடுமாடு திரும்ப வீடு வந்தாச்சா?

எம்புட்டு நாளக்கு எம்புட்டு நாளு!!!!

குடிகாரப்பயலைக் கட்டுறதைவிடச் சும்மா இருக்கலாம். பொண்ணு சரியாத்தான் சொல்றா.

Anonymous said...

அண்ணாச்சி!

வணக்கம். என்ன ஆளையே காணோம்? ஊருக்கு போயிட்டு வந்திருப்பீய போல! அதான் புதுப்பதிவு. மழை....தண்ணி உண்டா?

குசும்பன் said...

:)) போன ஆடுமாடு திரும்ப வந்துட்டுட்டோய்!!


//வானம் கூராந்து இருந்தது//
அப்படின்னா?

கதை முடிஞ்சுட்டா இல்லை இன்னும் இருக்கா?

ஆடுமாடு said...

துளசி டீச்சர், வணக்கம். கொஞ்சம் சொந்த பஞ்சாயத்து. அதனால இந்தப் பக்கம் வரமுடியலை. நன்றி டீச்சர்.

ஆடுமாடு said...

//என்ன ஆளையே காணோம்? ஊருக்கு போயிட்டு வந்திருப்பீய போல! அதான் புதுப்பதிவு. மழை....தண்ணி உண்டா?//

வணக்கம் வெயிலான். ஊர்ல மழையில்லை. தண்ணி உண்டு. நன்றி

கிருத்திகா ஸ்ரீதர் said...

"பெரும் மவுனம் மறைந்து கிடந்து இறைந்துக் கொண்டிருந்தது."

கவிஞரே... கவிதை கொஞ்சுது கதையில... அடுத்து எப்போ..

ஆடுமாடு said...

//வானம் கூராந்து இருந்தது//
அப்படின்னா?

மழை வர்ற நேரத்துல வானம் மேக மூட்டமா கருப்பா இருக்குமில்ல. அதைதான் இப்படி சொல்வோம்.

கதை இன்னும் முடியலை குசும்பன்.
நன்றி.

ஹேமா, said...

ஆடுமாடு வணக்கம்.நீண்ட விடுமுறை எடுத்துவிட்டீர்கள்.புதுத் தொடர் ஆரம்பித்துவிட்டீர்கள்.
வாசித்தேன்.கதை புரிகிறது.சில சொற்கள் விளங்காமல் இருக்கிறது.
தொடருங்கள்.வருவேன்.

ஆடுமாடு said...

//கவிஞரே... கவிதை கொஞ்சுது கதையில... அடுத்து எப்போ...//

நன்றி கிருத்திகா. விரைவில்.

ஆடுமாடு said...

//சில சொற்கள் விளங்காமல் இருக்கிறது//

என்னன்னு சொல்லுங்க ஹேமா. விளக்கிடறேன்.

நன்றி.