Thursday, August 14, 2008

சத்யமும் சில குறிப்புகளும்

நண்பன் இயக்கியதாலும், விஷால் என்னிடம் சொன்ன பில்டப்பாலும் பார்க்க நேர்ந்தது 'சத்யம்' படத்தை. வித்தியாசமான கதை களைத்தை சிந்திக்கும் அறிமுக இயக்குனர்களுக்கு மத்தியில் ஆக்சன் குப்பைக்குள் அகப்பட்டுக்கொண்ட நண்பனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

முதல் பாதியில் குழந்தைகளுடன் நயன் அடிக்கும் சின்ன சின்ன விஷயங்களை ரசிக்க முடிகிறது. வில்லன் என்ற பெயரில் கோட்டா சீனிவாச ராவ் பேசும் ஹைபீச் வசங்களில் காது ஜவ்..கிர்ர்ர்! (வில்லன்னா கத்திப்பேசணும்னு ஏதாவது விதி இருக்கா?) கன்னட ஹீரோ உபேந்திராவின் கேரக்டர் நன்றாக இருந்தாலும், மூன்று பேரை கொன்றுவிட்டு அவர் வெளியில் ஜாலியாக நடமாடுவது எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. போலீஸ் பற்றி விஷாலும் அவரும் பேசும் வசனங்கள் சுவாரஸ்யம்.

'பத்து வருசத்துக்கு முன்னால நான் பிராத்தல் கேஸ்ல உள்ள தள்ளினவ, இப்ப அமைச்சர். அவளுக்கு நாம சல்யூட் அடிக்கணும்? கேவலமா இல்ல'

ஆனால் 'போலீஸ்னா...' என்று ஆரம்பித்து விஷால் எடுக்கும் லெக்சர் கொட்டாவி. சினிமா விஷூவல் மீடியம் என்பதை எப்போதுதான் புரிவார்களோ தெரியவில்லை. கிளைமாக்ஸில் 20 நிமிடத்திற்கு வசனம் பேசியே கொல்கிறார்கள்( தெலுங்கு வாடை). வெளியில் வந்தும் மனதில் நின்றவர் உபேந்திரா மட்டுமே.

சத்யம் வெல்ல வாழ்த்துகள்!

.........


ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்துவிடுகிற சுதந்தர தினம் ஏதாவதொன்றை ஞாபகப்படுத்தி போகிறது. ஒரு நாள் லீவுக்காக வீட்டுக்குள் அடைபட்டிருந்த பள்ளி காலங்களில் ஆரஞ்சு வில்லைக்காக கொடியேற்றம் போவ விரட்டுவதுண்டு அம்மா. 5 பைசா ஆரஞ்சு வில்லை அப்போது பெரிய விஷயம் அம்மாவுக்கும் எனக்கும்.

ஒரு சுதந்திரதினத்தன்று கோயில் கொடைக்கு வரி கொடுக்காததற்காக, வீட்டிலிருந்த பித்தளை குடம், ஊர்பஞ்சாயத்தால் தூக்கி செல்லப்பட்டது. குடத்திலிருந்த தண்ணீர் வாசலில் கொட்டப்படும்போது என் கால்களை நனைத்து சென்ற தண்ணீரில் அம்மாவின் கண்ணீரே அதிகம். ஒரு சுதந்தரத்தினத்திற்கு முன் வந்த ஜாதி சண்டையில் என் வீட்டின் ஓடுகள் அடித்துநொறுக்கப்பட்டன. வேப்பமர நிழலில் கோலிவிளையாடிபடியே அம்மாவுடன் சுதந்திரத்தை கொண்டாடிய அனுபவம் யாருக்கும் கிடைத்திருக்காதது.

பத்தாவது படிக்கும் போது வந்த சுதந்திரத்தினத்தன்று மாமா வாங்கி கொடுத்த சைக்கிள் திருடுபோனது. அதை கண்டுபிடிக்க, 50 ரூபாய் கேட்ட ஏட்டின் சிரிப்பு இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

இப்போதெல்லாம் சுதந்திரத்தினத்தன்று இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுவதில்லை. பீடி சுற்றும் அம்மாவுக்கு இருமல் அதிகமாகியிருக்கிறது. பெரிய மகன் படிப்புக்காக வீட்டை விலை பேசுகிறாள் அக்கா. வாங்கிய மனைக்கான பட்டாவுக்காக வருடக்கணக்காக அலைந்து கொண்டிருக்கிறேன் நான். அடுத்த வருடமும் வரும் சுதந்திரதினம்!

................................

இரண்டு மாதத்துக்கு முன்னால் நண்பருடன் இலங்கை செல்ல நேரிட்டது. யுத்த பூமியில் நான்கு நாள். விமான நிலையத்திலிருந்து கொழும்பில் உள்ள ஹோட்டல் தாஜ்க்கு போவதற்குள் ஏழு இடத்தில் செக்கிங். ஒவ்வொரு இடத்திலும் 'வி ஆர் பிரம் இண்டியா' ரிபீட். கூடவே பாஸ்போர்ட்டையும் காண்பிக்க வேண்டும். எந்த காரண காரியமும் இல்லாத பயணம் என்பதால், ஒரு வேனையும் டிரைவரையும் எங்களுடன் இருக்க உதவியிருந்தார் உள்ளூர் நண்பர்.

கொஞ்சம் தூங்கிவிட்டு எழுந்தால் இருட்டியிருந்தது. அருகிலேயே கடற்கரை. ரத்த வாடை வீசும் காற்றுவாங்க போகலாம் என்று சென்றேன். என் குர்தாவும் லேசான தாடியும் அந்த ஆர்மி மேனுக்கு ஏதாவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். என்னை தவிர அந்த கடற்கரை ரோட்டில் யாருமில்லை. நான்கைந்து ஆர்மி வாகனங்களைத் தவிர. துப்பாக்கியுடன் வந்த ஆர்மிமேன், என் முகத்தைப் பார்த்தான். விவரம் சொன்னேன். எட்டு மணிக்கு மேல இங்க சுத்த கூடாது என்று சொல்லப்பட்டது. பக்கத்து நாட்டு அதிகாரத்துக்கு பயந்து கடற்கரையை அறையின் ஜன்னலில் இருந்துதான் பார்த்தேன்.
பாவம் உள்ளூர் மக்கள்.

காலையில் கண்டி பயணம். போகும் சாலையெங்கும் துப்பாக்கி தாங்கிய ராணுவத்தினர். ஒரு இடத்தை கடக்கும்போது, ஒரு டேப் போட்டு ரோட்டை பாதியாக்கியிருந்தனர். இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்களாம். வேதனை மனதுள் எழுந்து அடங்கியது. கண்டி பொட்டானிக்கல் கார்டன் பெரியது. உள்ளே செல்ல செல்ல போய்க்கொண்டே இருந்தது. ஒவ்வொரு மரத்தின் அடியிலும் தவிக்கும் காதலர்கள் தங்கள் தாகத்தை தணித்துக்கொண்டிருந்தார்கள். சொல்ல, எழுத ஆயிரம் இருந்தாலும் இப்போது வேண்டாம். மீண்டும் ஒரு முறை அங்கு செல்ல வேண்டும். யுத்தம் இல்லாத, ஆர்மீ இல்லாத நாட்டில், என் மக்களை பார்க்க. அவர்களிடம் பேச!
முடியுமா?

23 comments:

Anonymous said...

mmm

M.Rishan Shareef said...

உங்களுடைய எழுத்துநடை அபாரம்.அம்மாவுடனான பால்யகால சுதந்திரதின நினைவுகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தின. //மீண்டும் ஒரு முறை அங்கு செல்ல வேண்டும். // கண்டிப்பாக வாருங்கள் நண்பரே....!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சோகமான சுதந்திர நினைவுகள்..

ஆடுமாடு said...

ரிஷான் நன்றி.

ஆடுமாடு said...

அனானி, ம்ம்ம்தான்.

ஆடுமாடு said...

//சோகமான சுதந்திர நினைவுகள்//

ஆமாங்க. ரொம்ப!

ஹேமா said...

வணக்கம் ஆடுமாடு.அழகான இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.பழைய நினைவுகள் போல் இனி எதுவும் எமக்குக் கிடைக்காது.அம்மாவுடன் பகிர்ந்துகொண்ட நினைவுகள் பௌத்திரமானவைகள்.எங்கள் நாட்டு அவலத்தையும் கிளறி மனதைப் பாரமாக்கி விட்டீர்கள்.நன்றி.

//அபத்தம்...அவலம்...ஆக்கினை
இவ்வளவு நடப்புக்கும் புகார் கொடுத்தால் அவர்கள் காலடியிலேயே மண்டியிட்டு விசாரணை என்னும் பெயரில் போலி நாடகங்கள்.
பிச்சை எடுக்கிறோம் எங்கள் அழகிய எங்கள் தீவுக்குள்ளேயே.ஒரு நாளைக்கு எத்தனை தடவை உன்னை நீதான் என்று உறுதிப்படுத்த பாஸ் என்கிற அறிமுக அட்டையைக் காட்டுகிறாய்.இன்னொரு அன்னிய தேசத்தில் கூட என்றோ ஒரு நாள்தான் அறிமுகஅட்டைதேவையாய் இருக்கிறது எங்களுக்கு...//

கிருத்திகா ஸ்ரீதர் said...

என்ன ஆச்சு சும்மா கலக்கல் (கலவையான) மூடுல இருக்கீங்க போல, பகட், சோகம், அக்கறை, ஆதங்கம்... நவரசத்துக்கு ரெண்டு மூணு கம்மி தான்..

ஆமா "நம்ம ஊர் கதைகள்" என்னாச்சு.. முடிஞ்சுதா...

முரளிகண்ணன் said...

சுவராசியமாக ஆரம்பித்து சோகத்தில் முடித்துவிட்டீர்கள்

Ayyanar Viswanath said...

சத்யம் கொல்ல வாழ்த்துக்கள் னுதான் நீங்க சொல்லியிருக்கனும் :)..90 களில் வந்த தெலுங்க படங்களின் கலவையா இருந்தது..குசேல கண்டத்தில தப்பிச்சி சதய த்தில சிக்கி சின்னாபின்னமாயிட்டேன் :(

குசும்பன் said...

அடுத்த சுதந்திர தினம் நிச்சயம் நன்றாக இருக்கும்.

இலங்கை அனுபவத்தை பற்றி மேலும் எழுதுங்களேன்.

ஆடுமாடு said...

ஹேமா வணக்கம்.

உங்கள் ஊரில் நடக்கும் சம்பவங்கள் நெஞ்சை பாரமாக்குகிறது.
கோண்டாவில்ன்னா அது எங்க இருக்கு?

நன்றி.

ஆடுமாடு said...

வணக்கம் கிருத்திகா.

//ஆமா "நம்ம ஊர் கதைகள்" என்னாச்சு.. முடிஞ்சுதா?''

எங்க முடிய. ஊருக்கு போயி எல்லாத்தையும் தேடணும். இப்ப எப்படியிருக்கோ இடங்கள் எல்லாம். போய் பார்த்துட்டு வந்து எழுதணும்.

நன்றி.

ஆடுமாடு said...

முரளி கண்ணன் நன்றி.

manjoorraja said...

//வாங்கிய மனைக்கான பட்டாவுக்காக வருடக்கணக்காக அலைந்து கொண்டிருக்கிறேன் நான். //

நிலம் வாங்கிய பிறகு பட்டா கண்டிப்பாக வாங்க வேண்டுமா? அதற்காக ஏன் அலையவேண்டும். கொஞ்சம் விவரமாக எழுதினால் நலம்.
என் முகவரி: manjoorrasa@gmail.com

Anonymous said...

நல்ல பதிவு நண்பரே.
சுபாஷ்

ஆடுமாடு said...

//சத்யம் கொல்ல வாழ்த்துக்கள் னுதான் நீங்க சொல்லியிருக்கனும் :)//

நண்பனா போயிட்டான். மனசு வரலை அய்யனார்.

ஆடுமாடு said...

//இலங்கை அனுபவத்தை பற்றி மேலும் எழுதுங்களேன்//

எழுதுறேன் குசும்பன். நன்றி.

ஆடுமாடு said...

மஞ்சூர் ராசா.

டீடெய்லா மெயில்ல சொல்லிட்டேன். போதுமா?

ஆடுமாடு said...

சுபாஷ் நன்றி.

ஆடுமாடு said...

சுபாஷ் நன்றி.

ஹேமா said...

கோண்டாவில் யாழ்ப்பாணதில் இருக்கிறது.எங்கள் போராட்டுத்துக்கான சில அடையாளங்களைத் தனக்குள் வைத்திருக்கும் யாழின் ஒரு பகுதி கோண்டாவில்.

Anonymous said...

சத்யத்துக்கு ஆசிப் அண்ணாச்சி எழுதுன விமர்சனத்துல உங்கள பொகழ்ந்து எழுதீருக்காக.

ஆரஞ்சு முட்டாயி,வேப்பமர நெழலு, பித்தளை கொடம்,கோலிக்குண்டுனு பழசுக்கு போயிட்டீங்க.

கண்டி பயண அனுபவத்த கண்டிப்பா எழுதுங்க.