Saturday, August 30, 2008

கேரக்டர் 8 - பூழாத்தி -4

சொந்தக்காரங்க கல்யாணம் காட்சின்னா, பூழா ஒரு திருட்டுதனம் செய்வா. யாரு வீட்டுல புது சேலைய வெளுக்க போட்டுருக்காவலோ அந்த சேலைய எடுத்து உடுத்திக்கிடுவா. இந்த திருட்டுத்தனத்தை மறைக்க, காலையிலயே மொத பஸ்ல ஊருக்கு கெளம்பிரணும். கல்யாணம் காட்சி முடிஞ்சு ராத்திரி போல கடைசி பஸ்லதான் திரும்புவா.

இப்படித்தான் ஒரு நா வரும் போது, மாடத்தி பாத்துட்டா. அம்பாசமுத்ரம் கல்யாணி தியேட்டர்ல சினிமா பாத்துட்டு கடைசி பஸ்ல மாடத்தி வரும் போது, நல்ல கூட்டம். முண்டியடிச்சு டிரைவரு சீட்டுக்கிட்ட நின்னுகிட்டு, வீட்டுக்காரன் ஏறிட்டானான்னு பின்னால திரும்பி பார்த்தா. சேல கண்ணுல பட்டுட்டு. யாரோ நம்ம சேல மாதிரியே கெட்டிருக்காவோலன்னு நாலஞ்சு தடவை பார்த்தா. பெறவுதான் தெரிஞ்சுது அது பூழான்னும், கெட்டிருக்கது அவ சேலதான்னும்.

உச்சிக்கு ஏறிட்டு கோவம். பஸ்ல திட்டக்கூடாதுன்னு நெனச்சிட்டா. இருந்தாலும் மூசு மூசுன்னு மூக்கு விரியுது. இவ நிக்கதை பூழா பாக்கல. ஊரு வந்ததும் இறங்குன மாடத்தி, கார்சாண்டுக்கு தள்ளி, இருட்டுல நின்னுகிட்டா. பூழா, ஒண்ணும் நடக்காத மாதிரி இறங்கி பொட பொடன்னு நடந்ததுதான் தாமதம், மாடத்தி அவ கைய எட்டி புடிச்சுக்கிட்டு, மானங்கெட்ட கேள்வி கேட்டா. இவ போட்ட அவயத்துல கார்சாண்டு பக்கத்துல இருந்துலாம் ஆளுவோ வந்துட்டு.

வந்தவோளும் பூழாவைதான் ஏசுனாவோ. 'இனும இப்டி பண்ணுனன்னா ஊர்ல இருந்து ஒதுக்கி வச்சுருவோம்'னு மிரட்டலு. இனும இப்படி பண்ண மாட்டேன்னுட்டு மன்னிப்பு கேட்டா பூழா. ஆனா, அந்த சேலைய மாடத்தி திரும்ப வாங்கலை. 'நீ உடுத்துனதை நான் கெட்டனுமோட்டீ... படுக்காளி செரிக்கி. நீயே வச்சுத்தொலை"ன்னு போயிட்டா.

ஆனா, பூழாவும் ரோசக்காரி. அந்த சேலைய அவ மாத்துக்கு பயன்படுத்துக்கிட்டா. மாத்துன்னா என்னன்னு சொல்லுதேன்.

ஊர்ல யாராவது மண்டைய போட்டுட்டா, மகன்கள், பேரன்கள் சொக்காரங்கன்னு நீர்மாலைக்கு போவாங்க. வாய்க்கால்ல போயி குளிச்சுட்டு, கையில சொம்புல தண்ணி கொண்டு வந்து மண்டைய போட்டவரு கால்ல ஊத்தணும். இப்படி நீர்மாலைக்கு போய்ட்டு வாரவங்களை பந்தல் மாதிரி துணியை புடிச்சுக்கிட்டு அதுள்ளதான் வரணும். பூழா, மாடத்தி சேலையை இதுக்கு பயன்படுத்திக்கிட்டா.

இது முடிஞ்சதும் சொக்காரங்க ஒரு பொட்டியில அரிசி, நெல்லு கொண்டு வரணும். தலைய விரிச்சு போட்டு, பொம்பளைலுவோ எல்லாம் இப்படி வரும்போது, தரையில துணியை விரிச்சுக்கிடுவாவோ. த்லைக்கு மேலயும் பந்தல் மாதிரி புடிச்சுக்கிடுவாவோ. இதுக்கு பேரு மாத்து. இதுக்குலாம் வெள்ளை வேட்டிய பயன்படுத்திக்கிடுவா பூழா.

இது முடிஞ்சதும். மண்டைய போட்டவரை சுடுகாட்டு தூக்கிட்டு போவாவோ. கொள்ளி வைக்க போறவங்க, அவங்க அண்ணன், தம்பி யாராவது இருந்தா அவங்களும் இந்த மாதிரி துணி பந்தலுக்குள்ளதான் நடக்கணும். சுடுகாட்டு கிட்ட போனதும் இந்த துணியில பெரிய மனுசங்க உக்காந்துகிட்டு மொய் பிரிப்பாவோ. அந்த மொய் 2ரூவா, 5 ரூவான்னுதான் இருக்கும். இது எதுக்குன்னா, யாரு யாரு செத்ததுக்கு வந்திருக்காங்கன்னு அப்பதான தெரியும். அதுக்குதான். இப்படி பிரியுத துட்டை, பூழாவுக்கோ பூழா வீட்டுக்காரனுக்கோ கொடுத்துருவாவோ.

அது ரெண்டு மூணு நாளு செலவுக்கு ஆவும்.

அடுத்தாப்ல சொல்லுதேன்.

8 comments:

Anonymous said...

மாத்துன்னா இது தானா? நான் வேறென்னமோன்னு நெனச்சேன்.

துளசி கோபால் said...

மாத்துக்குக் கொடுப்பது:

கிராமப் பக்கங்களில் நான் கேள்விப்பட்டதும் பார்த்ததும் என்னன்னா.... ஊருலே யாராவது பொண்ணுங்க வயசுக்கு வந்துட்டா....பச்சோலைக் குடிசைகட்டி அதுக்குள்ளெ உக்காரவைப்பாங்க பாருங்க ஒரு வாரம், பத்துநாளுன்னு அப்ப அந்தப் பொண்ணுங்க கட்டிக்கிறதுக்கு சீலையை( எல்லாம் நல்ல நல்லதா இருக்கும்) இப்படி வண்ணார்கள்தான் கொண்டுவந்து கொடுப்பாங்க. யாருக்கும் தெரியாம அடுத்த ஊர் சீலையைத்தான் தருவாங்க இல்லே?

ஆடுமாடு said...

வணக்கம் வெயிலான்.

மாத்துன்னா இதுவும்தான். டிச்சர் பின்னூட்டத்துல சொல்லியிருக்கற மாதிரிதான்.

நன்றி.

ஆடுமாடு said...

துளசி டீச்சர், வணக்கம்.

நீங்க இன்னும் ஊரை மறக்கலைன்னு நினைக்கிறேன். நீங்க சொல்ற விஷயம் இப்பதான் எனக்கு ஞாபகத்துக்கு வருது. அதுக்கும் மாத்துன்னுதான் சொல்வாங்க.

நன்றி.

ஹேமா said...

"மாத்து"ன்னா துளசி கோபால் அவங்க சொன்ன விளக்கம்தான் எனக்கும் கொஞ்சம் தெரியும்.நீங்க சொன்ன விளக்கம் புதுமை அருமை.புது விசயம்.அடுத்து எனக்கு "நீர்மாலை"விளங்கலை ஆடுமாடு.

ஆடுமாடு said...

ஹேமா நன்றி.

எனக்கு துளசி டீச்சர் சொன்னது ஞாபகத்துக்கு வரலை. இதுக்கும் மாத்துன்னுதான் சொல்வாங்க.

//நீர்மாலை"விளங்கலை//

வீட்டுல யாராவது இறந்துட்டா, அவரோட சொந்தங்கள்(ஆண்கள்)வாய்க்காலுக்கோ, ஆற்றுக்கோ போய்,சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து இறந்தவர் மெல் ஊற்றுவார்கள். இதற்கு குருப்பா போயிட்டு குரூப்பா திரும்பி வருவாங்க. இதுக்கு பேரு நீர்மாலை.

ஒகேவா.

துளசி கோபால் said...

ஹேமா,

இன்னிக்கு நம்ம பதிவுலே ஒரு விளக்கம் இருக்கு பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_05.html

வல்லிசிம்ஹன் said...

ஒரே நீர்மாலைப் பதிவாப் படிச்சாச்சு.;)

துளசி ஆடுமாடு ரெண்டு பேருக்கும் நன்றி.

மாத்து வேற சமயத்திலயும் பயன்படும்.
எவ்வளவு செழுமையாத் தமிழ் வார்த்தைகள் பயன்பட்டு இருக்கு!!!!