ஊர்லயிருந்து வடக்க ரெண்டாத்து முக்கு இருக்கு. கடனா நதி ஆத்தோட கடையத்துல இருந்து வார கரண்டையாறு (ராமநதி) சேருததால இதுக்கு ரெண்டாத்து முக்கும்பாவோ. கரைக்கு ரெண்டு பக்கமும் தோப்புவோ. ஆள் நடமாட்டமில்லாம் கொறச்சல்தான். எப்ப போனாலும் இருட்டி இருக்குத மாதிரிதான் இருக்கும் இந்த எடம்.
இந்த கரையுல காளியம்மன் கோயிலு. அந்த கரையில சொடலை கோயிலு. கோயிலுன்னா பெரிய கட்டடம் இருக்கும்னு நெனச்சிடாதீயோ. இது சும்மா ரெண்டு கருங்கல் செல. கொடை கொடுக்க அன்னைக்கு மட்டும் பந்தலு போட்டுக்கிடுவாவோ.
இந்த இடத்துலதான் உவரு மண்ணு கெடைக்கும். பூழா ஒரு பனைவோலை பொட்டி கொண்டு வந்துருவா. தொணைக்கு வாரவோளும் பொட்டி வச்சிருப்பா. கரை ஓரமா மண்ணை அள்ளி சுமக்க முடியுத அளவு பொட்டியில போட்டுட்டு வருவாவோ. இந்தப் பக்கத்துல வயலுக்கு வந்த சின்னச்சியை யாரோ ஒரு பய கெடுத்துட்டாம் மூணு தலைமுறைக்கு முன்னால. அவளுக்கும் இங்க சின்னதா பூடம் இருக்கு. துடியா இருப்பாளாம். ஒத்த செத்தயில போனா புடிச்சிக்கிடுவாளாம். அதனாலதான் யாரும் தனியா வரமாட்டாவோ.
இந்த உவரு மண்ணு எதுக்குனா, துணி வெளுக்க போடுதாவோலா. அவ்வளவு துணிக்கும் சோப்பு போட்டு முடியுமா? கட்டுப்படியாவாது. அதனால ஒரு பெரிய அடுப்பு மேல வெள்ளாவி பானையை வச்சு அதுல தண்ணிய ஊத்துவாவோ. மேல ஒரு துணியை வச்சு பானை வாயை கட்டுவாவோ. கீழ அடுப்பை மூட்டிருவாவோ.
இந்த உவரு மண்ணை போட்ட சருவசட்டி தண்ணி பக்கத்துல இருக்கும். அழுக்கான துணியை எடுத்து இதுல ஒரு முக்கு. அந்தானி, அதை எடுத்து வெள்ளாவி பானை மேல வச்சிருவாவோ. இப்படி பத்து இருவது துணியை வச்சு இதையெல்லாம் சேர்த்து ஒரு போர்வையை வச்சு ஒரு கெட்டு. பானையில் இருக்குத தண்ணி ஆவியாகி, மேல வரும். துணியெல்லாம் அந்த ஆவியில நனையும். உவரு மண்ணும் அதும் சேந்து அழுககை எடுத்துரும்.
எடுத்துரும்னா துணியில கொஞ்சம் ஈரமா நசநசன்னு இருக்கும். அதை ஆத்துக்கு கொண்டு போயி தொவைப்பாவோ. அழுக்கு சுத்தமா போயிரும். (சர்ஃப் எக்ஸல்லாம் வேண்டாம்).
இதுக்கு பெறவும் பூழாவுக்கு வேலை இருக்கு. துணியையெல்லாம் ஆத்துலயே காய போட்டிருவாவோ. எது எது யாரு வீட்டு துணுங்கதுக்கு அடையாளம் போடுவாவோலா, அந்த காயிக்கு பேரு தேங்கொட்டை. மலையிலதான் இருக்கு இந்த மரம்.
ஒரு நாளு இதுக்குன்னு இங்கயிருந்து நாலு கி.மீட்டர் தூரத்துல இருக்குத கருத்தபிள்ளையூரு தாண்டி, மேற்கு தொடர்ச்சி மலை மேல ஏறி போயி, இந்த மரத்தை தேடி, காயை பறிக்கணும். இல்லைனா, கீழ கெடக்குத காயை எடுத்துட்டு வரணும். இந்த வேலையும் பூழாவுக்குதான். இதை பறிச்சுட்டு வாரதுக்கு ஒரு நாளு பூரா ஆயிரும்.
அந்தானி, காயை எடுத்து கோணி ஊசியை வச்சு ஒரு குத்து. ஊசியிலயே கருப்பும் செவப்புமான கலர்ல பால் வரும். அதை அப்படியே வேட்டி சட்டையில அடையாளத்துக்கு வைப்பாவோ. ஒவ்வொரு சாதிக்காரவோளுக்கும் ஒவ்வொரு அடையாளம். இப்ப தேவமாரு சாதின்னா ஒரு பெரிய கோடு. பக்கத்துல சின்ன புள்ளி. கோனாக்கமாருவோன்னா, ரெண்டு கோடு, பெரிய புள்ளி. பிள்ளைமாருவோன்னா, புள்ளிமட்டும். இப்படி நெறைய இருக்கு.
எல்லா வேட்டியும் வெள்ளையாத்தான் இருக்கு. இதுஇது இன்னாரு வீட்டு வேட்டின்னு எப்படி கண்டுபிடிக்க? அதுக்கும் குறியீடு இருக்கு.
நாளைக்கு சொல்லுதேன்.
15 comments:
நன்றி ஆடுமாடு. இத்தனை கதை சலவையில் இருக்கிறதா.
பூழாத்தி புராணம் நல்லா இருக்கு.
ரொம்ப நாளா வெள்ளாவி எப்படி வைப்பார்கள் என்று யோசிப்பேன். எங்க சின்னசாமியும் அதெல்லாம் உனக்கெதுக்கு பாப்பா என்று போய்விடுவார். மீண்டும் படித்துத் தெரிந்து கொள்கிறேன்.
ஒலர் மண்ணுல வெள்ளாவி வெச்ச துணில ஒரு மாதிரி வாசனை வரும். வாசம் பிடிச்சிருக்கிங்களா...
என்னோட சின்ன வயசுல லீவுக்கு பாட்டி வீட்டுக்கு போகும்போதெல்லாம் வீட்டுக்குபின்னாடி வாய்க்கா ஓரத்துல இருக்க வீட்டுக்குபோவேன். இங்க பூழாத்தி மாதிரி அங்க பஞ்சவர்ணம். அங்க மூணு அடில ஒருத்தர் இஸ்திரி போட்டுட்டு இருப்பார். அபூர்வசகோதரர்கள்ல வருவாங்கல்ல குள்ளமா சிலபேர் அதுமாதிரியே. பஞ்சவர்ணம் வெள்ளாவி வைக்கறது எல்லாம் இவர் இஸ்திரி போடுவார். இவர் உயரத்த பத்தி பேசினா செம கோவம் வரும். அவ்வளவு ஏன் அவர ஆச்சரியமா பாத்தாவே அவ்ளோதான் எரிஞ்சு விழுவார். அவர்கிட்ட பேசணும்னு ஆர்வத்தோட நான் போவேன். அவர் என்கிட்ட பேசவே மாட்டார். பல ஞாபகங்கள தூண்டி விட்டிங்க.
வல்லிம்மா வணக்கம்.
வெள்ளாவியில நிறைய விஷயம் இருக்கு. இப்பலாம் யாரு வெள்ளாவி வைக்கிறா. எல்லாம் சோப்புக்குள்ள போயாச்சு.
நன்றி
//ஒலர் மண்ணுல வெள்ளாவி வெச்ச துணில ஒரு மாதிரி வாசனை வரும். வாசம் பிடிச்சிருக்கிங்களா...//
ஆமாங்க. இதுக்காகவே சலவைக்கு துணி போடறது உண்டு.
நன்றி தம்பி.
அண்ணே...நெசமாவே இந்த சம்பவத்தை நானும் கேள்வி பட்டு இருக்கேன், எதுக்கும் அந்த இடத்திலே பார்த்து போங்க.
சின்னப்புள்ளையாருக்கும் போது, சட்டைப் பைக்கட்லேயும், கழுத்துப் பட்டை இடுக்குலேயும் மண் தூளாத் தட்டுப்படும்.
ஓகோ! இதானா விசயம்!
அடுத்தது வேட்டிக்குறி பத்தியா? தொழில் ரகசியத்த சொல்லி பூழாத்தி பொழப்புல மண்ணப் போட்றாதீக அண்ணாச்சி!
ஓ அப்படியா சேதி, அப்ப அந்த துணில இருக்கற குறில்லாம் வண்டி மை இல்லயா...
நன்றி ஆடுமாடு.அருமையான பதிவு.உவர் மண்ணில் துணிகள் துவைப்பது என்பது எனக்கு புதுமையான செய்தி.இப்போதும் இப்படித்தான் தோய்க்கிறார்களா?இல்லை என்றே நினைக்கிறேன்.
அந்தக் காலத்து மக்கள் இயற்கையோடு ஒன்றி எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.
திரும்பவும் அப்படி ஒரு காலம் கிடைக்காதா என்றிருக்கு.இன்னும் தொடருங்கள்.
அட! அந்த வண்ணான்குறி எப்படிப்போடறாங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சது.
உங்க கதை படிச்சதும் நான் வாங்குன உதை நினைவுக்கு வருது:-))))
தம்பி, கடையம் ஆனந்த் வருகைக்கு நன்றி.
//தொழில் ரகசியத்த சொல்லி பூழாத்தி பொழப்புல மண்ணப் போட்றாதீக அண்ணாச்சி!//
வெயிலான் இப்பலாம் இந்த முறை கிடையாது. முன்னேறிட்டோம்ல.
//அப்ப அந்த துணில இருக்கற குறில்லாம் வண்டி மை இல்லயா...//
கிருத்திகா, வண்டி மையெல்லாம் மூணு துவைச்சா போயிரும்.
//இப்போதும் இப்படித்தான் தோய்க்கிறார்களா?இல்லை என்றே நினைக்கிறேன்//
இப்ப இப்படி இல்லைதாங்க.
நன்றி ஹேமா.
//உங்க கதை படிச்சதும் நான் வாங்குன உதை நினைவுக்கு வருது:-))))//
ஆஹா, துளசி டீச்சர் சொல்லுங்களேன். கதை கேட்போம்.
எனக்கும் இந்த வாசனை மிகவும் பிடிக்கும். அப்படியே புதுசா போட்டுக்கிட்ட உணர்வு கிடைக்கு. நன்றி ஆடுமாடு .
Post a Comment