Wednesday, January 9, 2008

ஆகாயத்தில் சு.மு

ஆச்சர்யமாகத்தான் இருந்தது நண்பன் சுடலைமுத்து சொல்லும்போது. வட இந்திய சேனல் ஒன்று வைத்த போட்டியில் சு.முத்து வெற்றிபெற்றதால் மும்பை செல்லும் வாய்ப்பு. அங்கு இந்திநடிகர் ஆமிர்கானுடன் விருந்துக்கு ஏற்பாடு. அவனோடு ஒருவரை அழைத்துவர அனுமதி. அவன் சென்னையில், அறையில் இருக்கிறான். குடும்பம் ஊரில் இருப்பதால் என்னை அழைத்துப்போவதாகச் சொன்னான். கேட்டதும் குபுக்கென்று வியர்வை. காரணம், அவனிடம் அடிக்கடி புலம்பியிருக்கிறேன் எனது பயங்காட்டும் கனவு பற்றி.

இரவில், வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு மகன்களுக்கு விமானத்தை காட்டி, 'அதுல மாமா போறார்டா; இதுல ஆச்சி போறாடா' என்று ஏகத்துக்கும் வகுப்பெடுத்த இரவுகளில், நடுவானில் நான் பயணம் செய்யும் விமானம் இரண்டாக பிளந்து, எல்லோரும் கீழ விழுவது போலவும், ஏழெட்டு பாராஷூட்களும் ஸ்பைடர் மேன் மாதிரி பறந்து எல்லோரையும் காப்பாற்றுவது போலவுமான கனவு தினமும் வரத் தொடங்கி விட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை.

இந்தக் கனவு கூத்தை நண்பன் சு.முத்துவிடம் சொல்லித் தொலைத்ததிலிருந்து அவனுக்கும் விமான பயணம் பற்றிய பயம் அதிகரித்திருந்தது. இப்படியான பயந்தாங்கொள்ளிகளுக்குத்தான் இப்படியொரு வாய்ப்பு.

என்ன செய்யலாம் என்று சு.மு. கேட்டபோது, 'போகலாம்' என்றேன். 'கற்றது தமிழ்' ஆனந்தி மாதிரி, 'நெசமாத்தான் சொல்றியா?' என்றான். 'ஏலேய் இதை விட்டா, எந்த ஜென்மத்துக்கும் ப்ளைட்ல போக முடியாதுல' என்று ஒரு பாட்டில் பீரைக்குடித்துக்கொண்டு சொன்னதும், ஒ.கே என்றான்.

நாளை காலை 9 மணிக்கு ப்ளைட். ஏற்கனவே விமான பயணம் செய்த புண்ணியவான்கள், ' காலையில 7.30க்கு ஏர்போர்ட் போயிருடே. நிறைய செக்கிங் இருக்கும். தீப்பெட்டி கொண்டு போவாத; சிகரெட் பாக்கெட்டை கண்ணுல காட்டாதே...' என்று எக்கச்சக்கமாகக் கிளப்பிவிட்டதால் பாதி புளி நள்ளிரவிலேயே கரைய ஆரம்பித்துவிட்டது.

இதற்குள் நெட்டில் மேய்ந்து விமான சீட்கள், அங்குள்ள நடைமுறைகள் போன்றவற்றைத் தெரிந்துகொண்டோம்.

நண்பர்கள் சொன்னது போல, 7 மணிக்கே ஏர்போர்ட்டில் ஆஜர். போனதும்தான் டொமஸ்டிக், இண்டர்நேஷனல் என இரண்டு பகுதிகள் இருப்பது தெரிந்தது.
சர்புர்ரென போகும் அழகழகான கார்கள் எங்களுக்குள் ஏகப்பட்ட தாழ்வுணர்ச்சியை தந்திருந்தன. யாரிடம் போய் கேட்க என்பதில் தடுமாறி, இறுமிக்கொண்டே போன வயதான ஒருவரிடம் பேசினேன்.

'இந்தியாக்குள்ள போறதுக்கெல்லாம் டொமஸ்டிக்குனு சொல்வாங்க. வெளிநாடு போனா இண்டர்நேஷல் ஏர்போர்ட் போகணும். நீங்க கீழ்பக்கமா இருக்கிற வழியா போங்க' .

ஆளுக்கு ஒரு ஹேண்ட் பேக். தோளில் போட்டுக்கொண்டு நடந்தபோது, வாசலில் இருந்த போலீஸ் எங்கள் இருவரையும் உற்று உற்று பார்த்தார். டிக்கெட்டை காட்டினோம். உள்ளே போகச் சொன்னார்.

ஜெட் ஏர்வேஸ் போர்ட் இருந்த இடத்தில், ஊதா நிற ஆடையிலிருந்த பெண்ணிடம், ஈ டிக்கெட்டை கொடுத்ததும், 'ஜன்னல் சீட் வேணுமா?' என்றார். (புதுசா வர்றோம்னு இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?) இரண்டு பேருமே ஒரே ராகத்தில் தலையாட்ட, 'ஒரு சீட்தான்' என்று செல்லமாகச் சொல்லிவிட்டு தந்தார். போனசாக ஜில் சிரிப்பு.

ஹேண்ட் பேக்குக்கு ஒரு டேக். அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய என்று தெரியாமல் முழித்தோம். எனக்கு முன்னால் டிக்கெட் வாங்கியவர்கள் செக்கிங்குக்குள் சென்று கொண்டிருந்தனர். அங்கிருந்த போலீசை கண்டதும் கைகள் ஆட ஆரம்பித்தது. நான்கு நாட்களுக்கு முன் ஷூவுக்குள் போதை பொருள் வைத்திருந்ததாக இரண்டு பேரை அமுக்கியிருந்தனர்.

அப்படி ஏதும் இல்லையென்றாலும், 'ஏன் சாக்ஸ் போடலை, ஷாக்ஸ் ஏன் இவ்வளவு ஸ்மெல் அடிக்கு... என்பதுபோன்ற கேள்விகளை கேட்டால்...?
பேக்கை ஸ்கேன் பண்ண வைத்துவிட்டு, எதிரில் சின்ன மேடை மாதிரி இருந்த இடத்தில் 'என்னைய சுட்டுராதீங்கப்பா' என வில்லன்கள் நிற்பதுபோல கையை விரித்துக்கொண்டு நின்றேன். மேலிருந்து கீழேவரை ஒரு தடவு. இறங்கிவந்துவிட்டேன்.

சு.முத்துவை பார்த்தால்...திக்கென்றது. அவனை தனியாக உக்கார வைத்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். கையில் ஒரு பொட்டலம்.
என்ன ஏதென்று பதட்டத்தோடு போனேன்.

'ஹெராயினா?'என்றார் ஒரு போலீஸ். 'இல்லை சார் பாண்ட்ஸ் பவுடர்தான்' என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தான் சு.மு.

அப்புறம் அதை முகர்ந்து பார்த்து இன்னும் நாலு போலீஸ் வந்து, 'ஆமா இது முகப்பவுடர்தான்' என்பதை உறுதி செய்தபின் விட்டார்கள் அவனை.
உள்ளே போனதும் பாத்ரூம் அருகில் கூட்டிப்போய், பொடரியில் போட்டேன்.

'எதுக்கு இந்தப் பவுடரை கொண்டு வந்தே'

'பின்ன ஆமீர்கானை பார்க்க போறோம். போற இடத்துல இதை எங்க போய் வாங்கறது? அதான்...'

நான் பரவாயில்லை என்று தோன்றியது. அப்புறம் 9 மணி பிளைட் 9.30க்கு என்று ஒரு அறிவிப்பு. இதற்குள் கிங்பிஷர், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமானங்களுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அழகழகான பஸ்கள், பயணிகளை விமானம் நிற்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தன.

எங்களுக்கு நேரம் இருக்கிறது என்பதால், கண்ணாடி கதவு வழியே விமானங்கள் ஓடுபாதையில் செல்லுவதையும், மேலே டேக்ஆப் ஆவதையும் ஆ வென்று பாத்துக்கொண்டிருந்தேன்.

சு.மு என் கனவை கலைத்து, 'ஏலே... அங்க பாரு சினேகா' என்றான். குப்பென்று திரும்பி எங்கே எங்கே என்று தேடினேன். தாய்க்குலத்துடன் சினேகா. சு.மு.வுக்கு வாயெல்லாம் பல்.

'ஏலே பேசுவோமா?'

'ச்சீ...இது என்ன மாதிரியான இடம்...இங்கெல்லாம் டீசெண்ட் பார்ட்டிங்க இருக்காங்க. அவங்ககிட்ட போய் வழிஞ்சுக்கிட்டு நின்னா நல்லா இருக்காது.பாத்துட்டு கண்டுக்காம நிக்கணும்' என்று சொல்லிவிட்டு எனக்குள் இருந்த ஆசையையும் கொன்றுவிட்டு திரும்பிக்கொண்டேன்.

நினைத்த மாதிரியே அவரை அங்கு யாரும் சீண்ட வில்லை. சிறிது நேரத்தில் சு.மு திரும்பி, 'ஏலே சித்ரா' என்றான்.

'எந்த தெரு சித்ரா' என்று பார்த்தால் பாடகி சித்ரா. ஐதராபாத்துக்கு போகிறார்கள் என்பது தெரிந்தது. அந்த பிளைட் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் வாயில் வழியாக உள்ளே நுழைந்து... ம்ஹூம்.

அப்புறம் ஜெட் ...மும்பை என்று அரைகுறையாக காதில் விழுந்ததை வைத்து நான்காம் நம்பர் கேட்டுக்கு வரிசையில் நின்றோம். அங்கு ஒரு செக்கப். பின் உள்ளே அழைத்துச் சென்றார்கள். அழகழகான பஸ்கள். உட்கார நான்கு சீட்தான். எல்லாரும் நின்று கொண்டு. இதற்குள் ஒருவர், 'எக்ஸ்க்யூஸ்மி, ஐ மிஸ்டு மை கேஸ் பேக். உங்க பேக் கூட வந்திருக்கா பாருங்களேன்' என்றார்.

எல்லோரும், 'இதுவா பாருங்க, அதுவா பாருங்க' என்று கேட்டுவிட்டு, 'நீங்க எங்க போட்டீங்க, எங்க உக்காந்திருந்தீங்க, எப்படி உக்கார்ந்திருந்தீங்க... என்று ஏகப்பட்ட கேள்விகளைப் போட்டு வாங்கியதில் அவருக்கு கேஸ் பேக் மறந்தே போயிருக்கும். பிறகு எப்படியோ கிடைத்தது என்பது மும்பை போய் இறங்கிய பிறகுதான் தெரிந்தது.

இலேசாக மழை ஆரம்பித்துவிட்டது.

பஸ்சில் இருந்து ஒவ்வொருவராக இறங்கி, அங்கே டிக்கெட்டை காட்டி விமானத்துக்குள் ஏறினார்கள். வாசலில் ஓவராக மேக்கப் போட்டிருந்த விமான பணிப்பெண், 'குட்மார்னிங் சார்' என்றார்.

தலையை ஆட்டிக்கொண்டே உள்ளே இருந்த பணிப்பெண்ணிடம், 'இந்த சீட்...'
அவர் வாங்கி பார்த்துவிட்டு இடம் காண்பித்தார். சு.மு. ஓடிப்போய் ஜன்னல் இருக்கையை பிடுங்கி கொண்டான். சண்டை போட்டு அதில் உக்கார ஆசைதான். டீசென்ஸி மெயிண்டென் பண்ண வேண்டாமா?

சீ்ட் என்னமோ... நெட்டில் பார்த்ததெல்லாம் இல்லை. அதெல்லாம் பிசினஸ் கிளாசாம். நம்மூர் டவுண்பஸ் சீட் மாதிரி இந்த பக்கம் மூன்று. அந்தப் பக்கம் மூன்று சீட். காலை கொஞ்சம் நீட்டலாம் என்றால் எதிர் சீட்டில் முட்டி தட்டும். விமான ஜன்னல் கூட என் வீட்டு ஜன்னல் மாதிரி விசாலமாக இருக்கும் என்று பார்த்தால்... தம்மாத்துண்டு. ஒரு சாண் அளவுதான்.
'எல்லாரும் பெல்ட் போட்டுக்குங்கப்பா' என்று அறிவிப்பு. அதை எப்படி போட வேண்டும் என்று தெரியவில்லை. மூன்றாவதாக இருந்தவர் என்ன செய்கிறாரோ அதையே பின்பற்றினோம்.

ஓடு பாதையில் லேசாக விமானம் ஓடியதும் மனதுக்குள் பட்டாம்பூச்சி. பிறகு விர்ர்ரென்று வேகமாகி...ஜிவ்வ்வ்... மேலே மேலே...

வயிறு குமட்டும், தலைகீழ தொங்குவோம் என்று பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. பறந்தோம். சு.மு. என்னைப் பார்த்து நமட்டு சிரிப்பு.

'நல்லாத்தாம்ல இருக்கு'.

மேலே போகப் போக ஜன்னலில் எட்டிப்பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நிலம் கீழே போய்க்கொண்டிருந்தது. பிறகு மேகத்துக்குள் நுழைந்து, அதுக்கும் மேல போக, மேகம் மட்டும்தான் தெரிந்தது. எங்காவது வெட்டையாக மேகத்தின் வழியாக சின்ன சின்னதாக லேண்ட்ஸ்கேப் மட்டும் தெரிந்தது.
பக்கத்தில் இருந்த மூன்றாவது பார்ட்டி உம்மென்றிருந்தார். பணிப்பெண்கள் ஏதாவது கொண்டு வந்து நீட்டினால், 'நோ' என்றார்.

அவர் சொல்லிவிட்டாரே என்று நாங்களும் 'நோ' சொன்னோம். அப்புறம் டிபன் கொடுத்தார்கள். இதையும் இவர் நோ சொல்லிவிடுவாரோ என்று பயந்தோம். நல்லவேளை சொல்லவில்லை. எதிரிலிருந்து சீட்டின் பின்பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு டிரேயை, எதையோ திருகி இழுத்தார். அது டேபிள் மாதிரி ஆனது. நாங்களும்.

'வெஜ் ஆர் நான்வெஜ்'

சு.மு.க்கு 'நான் வெஜ்'. எனக்கு வெஜ்.

சாப்பிட்டுக்கொண்டே கேட்டான் சு.மு.

'ஏலே ஏர்ஹோஸ்டஸ்னா நான் என்னமோ நெனச்சேன். இங்க என்னடான்னா ஹோட்டல் சர்வர் வேலைதான் போலுக்கு'

இவன் சொன்னதும் மூன்றாவது சீட் பார்ட்டி எங்களைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

சாப்பிட்டு முடித்ததும் உச்சியில் பறந்த விமானம் தடக் தடக்... அண்ணாசாலை ஆட்டோ பயணம் மாதிரி லேசான குலுங்கல். உடனே ஏதோ அறிவிப்பு. புரியவில்லை. சு.மு. கலவரமாகி, 'ஒண்ணுமில்லைல, விழுந்தா நம்ம கூட இவ்ளோ பேரு இருக்காங்க'. என்றான்.

'மவனே...இப்பலாம் அதை மறந்து உக்காந்திருக்கேன்... மூஞ்சியிலேயே குத்துனம்னா...'

எதிரில் சீட்டின் பின்பக்கமிருந்த மினி மானிடரில் மியூசிக். விமானம் செல்லும் பாதை போன்றவற்றை தொடு திரையில் பார்க்கலாம். மூன்றாவது சீட் பார்ட்டி, அங்கிருந்த ஹெட்போனை சீட்டிலிருந்த கைப்பிடி பின்னில் இணைத்து, காதில் மாட்டிக்கொண்டார். நாங்களும் அப்படியே.

பறத்தல் சுகமாகத்தான் இருந்தது. 1.30 மணி நேரம் ஆன பிறகு, வி்மானம் மும்பை அருகே வந்துவிட்டிருந்தது. இன்ஜினை விமானி அணைத்துவிட்டாரோ என்னவோ ஒரு சத்தமுமில்லை.

திரும்பவும், 'சீட் பெட்டை போடுங்கப்பா' அறிவிப்பு.

கொஞ்சம் அந்த பக்கம் இந்த பக்கம் சாய்ந்தது. தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறும்போது காத்தடித்தால் ஆடும் மரம்போல இருந்தது.
விமானப் பணிப்பெண், சாக்லெட் பாக்ஸை திறந்து ஒவ்வொருவரிடமாக நீட்டிக்கொண்டிருந்தார். வழக்கம்போல மூன்றாவது சீட் பார்ட்டி 'நோ'. சு.மு. அவரை முறைத்துக்கொண்டே, பக்கென்று பாக்ஸுக்குள் கைவிட்டு ஒரு குத்தை அள்ள, அவன் கையிலேயே போட்டு, ஒண்ணே ஒண்ணை எடுத்தேன்.
'ப்ளைட்ல சரக்கு தருவாங்கன்னு பிச்சமுத்து சொன்னாம்லா' என்றான் சு.மு.

'ஆமா'

'தரலையே'

'அது வெளிநாடு போனாத்தானாம்'.

திடீரென்று விமானம் கீழே கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியதை உணரமுடிந்தது. சு.மு.வைத் தள்ளிக்கொண்டு ஜன்னலை எட்டிப்பார்த்தேன். முதலில் கடல். மேலிருந்து பார்க்க எல்லாமே அழகாகத்தான் இருக்கிறது. நெருக்கடியான கட்டிடங்கள். இறங்கி இறங்கி... மும்பை சத்ரபதி விமான நிலையம்.

த்ரில்லிங்காக இருந்தது. சீட்டை விட்டு இறங்கும் போது காது ஜவ்வு கிழிந்துவிடுவது மாதிரி வலி.

'போனதுமே பஞ்சு வாங்கி காதுல வச்சுக்கோ' வை மறந்து போனேன். கையை விட்டு குடைந்துகொண்டே இறங்கும் போது, மூன்றாவது சீட் பார்ட்டியை பார்த்து ஒருவர், 'ஹலோ சார், எப்படியிருக்கீங்க. அடுத்தப் படம் போய்க்கிட்டிருக்கா' என்றார்.

இயக்குனர் சிம்புதேவனாம்.

சொல்லவே இல்லை.

18 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருந்துச்சுங்க உங்க முதல் விமானப் பயண அனுபவம். மெலிதாகச் சிரித்துக் கொண்டே படித்தேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

அந்த மூணாவது பார்ட்டி யாரும்வே?
சினிமா சான்ஸ மிஸ் பண்ணிட்டியளே

ESMN said...

அண்ணாச்சி,
நல்லா எழுதிருக்கீங்க....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பொங்கல் ஊருலய இல்லை சென்னையிலய......

ஸ்ரீ said...

Cow சார் நல்லா இருந்தது உங்கள் எழுத்து நடை அதுக்கப்புறம் என்ன ஆச்சி நைனா சொல்லவே இல்லை. சுவாரசியமாக அழகாக இருக்கின்றது :) வாழ்த்துக்கள்.

Anonymous said...

// பின்ன ஆமீர்கானை பார்க்க போறோம். போற இடத்துல இதை எங்க போய் வாங்கறது? அதான்... //

சு.மு.அண்ணாச்சி பாவம்! ரொம்ப வெள்ளந்தியா, வெவரம் தெரியாம இருக்கார். அதுக்குத் தான் உங்கள துணைக்கு கூட்டிப் போயிருக்கார்.

அமீர்கானப் பார்த்தத எப்ப எழுதப் போறீங்க?

கானகம் said...

அன்பு நன்பரே..

நானும் விமானத்துல போய்கிட்டுதான் இருக்கேன். நானும் ப்ளாக் வச்சிருக்கேன். உங்களுக்கு ஆனது மாதிரி எனக்கும் ஆயிருக்கு. ஆனா நீங்க மட்டும் எப்படி அய்யா இந்த கலக்கு கலக்குறீங்க??

நல்ல நகைச்சுவை உனர்வு உங்களுக்கு.

நான் வெளிநாடு போன கதைய எழுதுனா ஒரு புத்தகமே போடலாம்.

" ஏண்டா வெளிநாடு போறியே.. தெரிஞ்சவைங்க யாருமே இல்லையே எப்படிரா சமாளிப்ப ன்னு கேட்டு கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் பியூசாக்கி..

ஒருவேள நீ போன கம்பெனிக்கு வேலை இல்லாம போயிருசுன்னா எப்படிரா திரும்பி வருவ அப்படின்னு கேட்டு இதுதான் நமக்கு கடைசி பயனமோ அப்படின்னு நெனைக்க வச்ச நன்பர்களும்

நல்லவேள எனக்கு வேலை கிடைச்சிச்சி நமக்கெல்லாம் ஊரைத்தாண்டி போக முடியாதுப்பா என பெருமை பேசிய மக்களும் அங்கிருக்க என் பொழுது ஓடுகிறது இங்கு..

வாழ்த்துக்கள் நன்பரே..

ஜெயக்குமார்

துளசி கோபால் said...

அட! அட்டகாசமாப் பறந்துருக்கீங்க!!!!

ஆமா.... இம்சைக்கு சிரிக்கத்தெரியாதா? :-))))

ஆமீரைப் பார்த்ததையும், மறுபடி ஃப்ளைட்டுலே வரும்போது நடந்ததையும் எழுதுங்க. அப்பத்தான் முழுமை வரும்:-)

தங்ஸ் said...

பறக்கும்போது பாத்ரூம் மொத தடவ யூஸ் பண்ணீங்களா?அதுவே ஒரு திகிலா இருக்கும்..

கேரக்டர் கதை எப்போ அண்ணாச்சி?

ஆடுமாடு said...

சுந்தர்ஜி நன்றி.

ஆடுமாடு said...

//சினிமா சான்ஸ மிஸ் பண்ணிட்டியளே//

நமக்கென்னவே தெரியும். இறங்குன பெறவுலா தெரியுது.

ஆடுமாடு said...

எருமை மாடு அண்ணாச்சி

//பொங்கல் ஊருலய இல்லை சென்னையிலய.....//

ஸ்கூல் லீவு டயத்துலதான் ஊருக்கு.

இனிய பொங்கல் வாழ்த்துகள்ஜி.

ஆடுமாடு said...

ஸ்ரீ சார் வருகைக்கு நன்றி

ஆடுமாடு said...

வெயிலான் ஐ வணக்கம்.

//அமீர்கானப் பார்த்தத எப்ப எழுதப் போறீங்க?//

சீக்கிரமே எழுதிருவோம்

ஆடுமாடு said...

துளசி டீச்சர்.

சரி.

ஆடுமாடு said...

//நான் வெளிநாடு போன கதைய எழுதுனா ஒரு புத்தகமே போடலாம்//

எழுதுங்கஜி.

ச. கோசல்ராம் said...

சும்மா சொல்லக் கூட்டது, அசத்திப்புட்டீங்க... சுந்தர் சொன்னது போல நானும் சிரித்துக் கொண்டே படித்தேன். நல்ல நடை... சிறப்பான எழுத்து... தொடருங்கள் உங்கள் பயணத்தை. இந்த 2008ம் ஆண்டு உங்களுடையதாக இருக்கட்டும்.

ஆடுமாடு said...

கோசல்ஜி,

//நானும் சிரித்துக் கொண்டே படித்தேன்//

நெசமாவா?

பிரகாஷ் said...

உங்கள் விமான பயண அனுபவம் நன்று.
ஏறக்குறைய இதே போன்று எனக்கும் நேர்ந்திருக்கிறது.
அருமையான நகைச்சுவை நடை.
தொடர்ந்து நிறைய எழுதவும்