பிசாசுகளின் நாக்கில் அகப்பட்டுக்கொண்ட குரல்வளையை போல தினமும் அலறுகிறது என் இரவு. நான் நானாக இருப்பதென்ற இயல்பை, ஒவ்வொரு நிமிடமும் இழந்துகொண்டிருக்கிறேன். ஒருங்கிணையாத மனது, கோட்டிக் காரனை போல குதித்துக்கொண்டிருக்கிறது அடிக்கடி. ஒவ்வொரு குதிப்பிலும் ரத்தங்கள் கசிகின்றன.
கடந்த முறை வந்த புத்தாண்டு இன்னும் அதிகப்படியான மதுபுட்டிகளையும் சிகரெட் பாக்கெட்டுகளையும் தந்திருக்கிறது. ஒவ்வொரு முறை புகைக்கும்/ குடிக்கும்போது இன்றே கடைசி என்கிற எச்சரிக்கை மனசு, வருடம்தோறும் தொடர்கிறது.
இயல்பை தொலைத்த மொழி, 'ஏலே' என்கிற வார்த்தையை 'ஹாய்' என்று மாற்றி போட்டிருக்கிறது. வயக்காடுகளில் கழனி மிதித்த கால்கள் ஹவாய் சப்பல்களின் சுகத்தில் சென்னை சாலைகளை அளந்துகொண்டிருக்கின்றன. கிராமம் பற்றி எழுத வேண்டும் என்கிற ஆசை, கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போயிருக்கிறது.
எதிர்படுபவனை கேலிக்குள்ளாக்கும் என் வட்டார வழக்கு என்னிடம் இப்போது இல்லை. 'மம்மி' என்றழைக்கிற மகனை அன்போடு கொஞ்சும் மனைவியிடம், தூக்கணாங்குருவி கூட்டை, இவனிடம் எப்படி காண்பிப்பேன் என்கிறேன் ஒவ்வொரு இரவும்.
பனைமரமேறி கிணற்றில் குதிப்பதும், கன்னி வைத்து தெண்டல்களை பிடிப்பதும், கட்டெறும்புகள் மொய்க்கும் சப்பை மூக்கு மா மரங்களில் ஏறி திருடி தின்கிற வாய்ப்புகள் மகனுக்கு கிடைக்காமல் செய்த குற்றம் சமீபகாலங்களில் அதிகரித்திருக்கிறது.
நெரிசல் மிகுந்த சென்னையில் கோழி கூடு அளவுக்காவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற இல்லத்தாளின் ஆசை, மெகா சீரியலாக தொடர்கிறது இன்னும்.
ஒரு கனவுக்காரனை போல அலைகிற நானும் வலைபதிவை தொடங்கி, அடிமையாகியிருக்கிறேன். முகம்தெரியாத நண்பர்கள்/தோழிகளின் நட்பில் நித்தம் ஒரு பூ மென்மையாகப் பூக்கிறது.
ஆடுமாடுகளை பற்றிதான் எழுதவேண்டும் என்கிற என் நிபந்தனை என்னை ஏமாற்றியிருக்கிறது.
எழுத்துகளின் சலனத்தில் வழுக்கி விழுந்திருக்கிறேன்.
தவம் கிடந்த முதல் விமானப் பயணம் இந்த வருடம் வாய்த்திருக்கிறது. ஆகாயம் வழி ஆனந்தபட்ட அப்பாவியின் வியப்பு, சிலருக்கு சிரிப்பை தரும் என்பதால் அதுபற்றி விரிவாக வேண்டாம்.
சுழலும் சூழ்நிலைகள் அதிகமாகப் பொய் பேச வைத்திருக்கிறது. அரிச்சந்திரனை அனாவசியமாக அழைத்து இருட்டறையில் பூட்ட சொன்னது மனது. ஒவ்வொரு பொய்யிலும் சில நண்பர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் வீழ்ந்திருக்கிறார்கள்.
எங்கோ இருக்கின்ற காதலியின் முகத்தை திருவிழாவிலாவது பார்க்க துடித்திருக்கிறேன். போன வருடம் போலவே வரவில்லை. அடுத்த வருடம் காத்திருக்கிறது.
எழுத முடியாத கவிதையும் கதையும் இன்னும் உள்ளுக்குள்ளேயே இருக்கின்றன.
இதை தவிர்த்து இந்த வருடத்தில்...
கவிஞர்கள் இன்னும் அதிகமாகவே கலைஞரை புகழ்ந்திருக்கிறார்கள். புகழுரையில் நா. முத்துக்குமார் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்.
புழ்ந்துகொண்டிருந்த பா.விஜய் ஹீரோவாகியிருக்கிறார். தமிழ் சினிமா கார்ப்பரேட் கைகளுக்குள் புகுந்திருக்கிறது.
தலைகணத்தோடே இருக்கிறார் தங்கர். குஷ்புவுக்கு ஒரு சர்ச்சை முளைத்திருக்கிறது.
ஸ்டாலின் தனது பலத்தை திருநெல்வேலியில் காட்டியிருக்கிறார்.
'டாஸ்மாக்' சரக்கு விலை அதிகரித்திருக்கிறது. ஜெயமோகன் மீண்டும் ஒரு நாவலை இறக்கியிருக்கிறார்.
குஜராத்தில் மோடி, மஸ்தான் ஆகியிருக்கிறார். பெனாசிரை கொன்றிருக்கிறார்கள். காம்ரேட்களின் கடுகடுப்பில் இன்னும் விழாமல் இருக்கிறது மன்மோகன் அரசு. பெங்களூருவில் மூடிய கோணிக்குள் அப்படியே இருக்கிறார் வள்ளுவர்.
அதிக பதிவு எழுதுகிறார் அய்யனார். அடிக்கடி காணாமல் போகிறார் காயத்ரி. ஜ்யோவ்ராம் சுந்தர் புதுவகைகளை அறிமுகப்படுத்துகிறார்.
டுபுக்குவின் சிரிப்புக்குள் அதிகமானோர் விழுந்து கிடக்கிறாகள்.
வரும் புத்தாண்டில் ஒரு வயது ஏறப்போகிறது....
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
42 comments:
நல்ல விதமான புத்தாண்டு வாழ்த்து.. நாட்டு நடப்பை அப்படியே தொட்டுச்சென்று இருக்கிறீர்கள்.
உங்களுக்கும் வலைப்பதிவர்கள் அனைவருக்குமான புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
கானகம் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
// தவம் கிடந்த முதல் விமானப் பயணம் இந்த வருடம் வாய்த்திருக்கிறது. //
அனுபவத்தை எழுதுங்கள். இன்னும் தவமிருக்கிற என்னைப் போல நிறைய இருக்கிறார்கள் ஏக்நாத் அண்ணாச்சி!!!
அனைத்து வலைப்பதிவர்களுக்கும் என்னுடைய மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!
ஜெயமோகன் மீண்டும் ஒரு நாவலை இறக்கியிருக்கிறார்.
//
எந்த நாவல்?
காலம் மாறிக்கிட்டே இருக்குங்க ஆடுமாடு. நம்ம தாத்தா பாட்டி வளர்ந்தவிதத்திலா நாம் வளர்ந்தோம்?
தூக்கணாங்குருவிக்கூடும், நேரங்காலம் தெரியாம ஆத்துலே கொட்டமடிச்சதும் நம்ம பிள்ளைகளுக்குக் 'கதை'யாச் சொல்லலாம். ஆனா அதுகளுக்கு 'இப்ப' இதைக் கேக்க நேரமில்லை.
அதுக்குத்தான் ப்ளொக் வச்சுருக்கோமே....அதுலேயே போற போக்குலே சொல்லிட்டுப் போகணும்:-))))))
உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய 'ஆங்கிலப் புத்தாண்டு' வாழ்த்து(க்)கள்.
போனவருட வரவு என்ன?
இன்னும் கொஞ்சம் முகமறியா நண்பர்களைச் சேர்த்துக்கிட்டதுதான்:-))))
நல்லா இருங்க.
வெயிலான் ஐயா, நன்றி.
//இன்னும் தவமிருக்கிற என்னைப் போல நிறைய இருக்கிறார்கள்//
எழுதிட்டா போச்சு. சீக்கிரமே எழுதிடறேன்.
//என்னுடைய மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!//
நன்றி ஐயா
கேக்க மறந்துட்டேன்.....
முதல் விமானப்பயணம், எதுவரை வந்து போனீங்க?
//முதல் விமானப்பயணம், எதுவரை வந்து போனீங்க?//
டீச்சர், ஒரு ஒ.சி. டிக்கெட்ல சென்னை டூ மும்பை. 1.45 மணி நேரம்.
கொஞ்சம் திக். கொஞ்சம் குபுக். கொஞ்சம் தெனாவட்டு. தெனாவட்டு ஏம்னா நானும் பறந்துட்டேன்ல அதுக்கு. நன்றி டீச்சர்.
ஹரன் பிரசன்னா
//எந்த நாவல்?//
அசோகவனம். தமிழினி வெளியிடு. ஜெயமோகன் முடித்துவிட்டார். இந்த புத்தகக் கண்காட்சிக்கு வருகிறது.
//தூக்கணாங்குருவிக்கூடும், நேரங்காலம் தெரியாம ஆத்துலே கொட்டமடிச்சதும் நம்ம பிள்ளைகளுக்குக் 'கதை'யாச் சொல்லலாம். ஆனா அதுகளுக்கு 'இப்ப' இதைக் கேக்க நேரமில்லை. //
நிஜம்தான் டீச்சர். அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துவதாக நினைக்கிறேன்.
இம்மாதிரியான அனுபவங்கள், கிடைக்காமல் இருப்பதை பெரிய இழப்பாகவே நினைக்கிறேன்.
நன்றி டீச்சர்.
ayya Aadu maadu,
nalla soneenga ayya. Ippadithanyaa ovvoru varusamum veena povudu. ennaya paana solreenga. intha varasamaachum nalla vidiyattum.
//intha varasamaachum nalla vidiyattum.//
நம்புவோம் ரவிஜி. நம்பிக்கைதானே வாழ்க்கை.
கொஞ்சம் கூட நல்லா இல்ல... முதல் விமான பயணம் பற்றி முழுசா விவரிக்கலாமே...
ஏலேய்...நல்லாவே இல்லடே... ஏரோப்பிளேன்னுல போனதப்பத்தி ஏன்டே எழுதல...
ஏலேய்... பழச எல்லாம் ஏம்ல கிண்டுற... ஒக்காளி உன்னால ஊர் ஞாபகம் வந்து தொலையுதுல...
//கொஞ்சம் கூட நல்லா இல்ல..//
நன்றி அனானி.
//பழச எல்லாம் ஏம்ல கிண்டுற... ஒக்காளி உன்னால ஊர் ஞாபகம் வந்து தொலையுதுல...//
கோசல்ஜி நெசமா?
நிஜத்தில் இந்த ஆட்டுடன் அதிக நெருக்கம் இருப்பதாலா என்னவோ, எழுத்து மிகவும் லயிக்க வைக்கிறதுடோய்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பெங்களுரில்ல மூடப்பட்ட திருவள்ளுவரின் சிலை
http://www.wikimapia.org/#lat=12.981041&lon=77.615688&z=18&l=0&m=a&v=2
சாதாரணமாக நீங்கள் எழுதுவதிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது இந்த மொழி நடை. நல்லா வந்திருக்கு ஆடுமாடு.
/ஒவ்வொரு முறை புகைக்கும்/ குடிக்கும்போது இன்றே கடைசி என்கிற எச்சரிக்கை மனசு, வருடம்தோறும் தொடர்கிறது/
இது தான் பிடிக்கலை.-))
சி.மணி கவிதையொன்றின் சில வரிகள் நினைவுக்கு வருகிறது :
புடி புடி புடி புட்டியென்று கொண்டாடுவோம்
குடி குடி குடி குட்டியென்று கொண்டாடுவோம்
//நிஜத்தில் இந்த ஆட்டுடன் அதிக நெருக்கம் இருப்பதாலா என்னவோ, எழுத்து மிகவும் லயிக்க வைக்கிறதுடோய்!//
தேங்க்ஸ் அனானி.
//ஒவ்வொரு முறை புகைக்கும்/ குடிக்கும்போது இன்றே கடைசி என்கிற எச்சரிக்கை மனசு, வருடம்தோறும் தொடர்கிறது/
இது தான் பிடிக்கலை.-))//
சுந்தர்ஜி, கொண்டாடுவதை கொண்டாடலாம். குடிப்பதையும் கொண்டாடலாம். கொண்டாடுவதற்கு காரணம் எதுவும் தேவையில்லை.
இருந்தாலும் நண்பனொருவன் தொண்டை கேன்சரில் இறந்ததில் இருந்து இந்த எச்சரிக்கை அதிகரிக்கிறது.
சி.மணியின் அந்தக் கவிதையை படித்திருக்கிறேன்.
நன்றி சார்.
வித்தியாசமான சிந்தனையுடன் தனித்துவமாக தெரிகிறீர்கள்.வாழ்த்துக்கள்.
எருமை மாடு
நன்றி. வாழ்த்துகள்.
நட்டு
வருகைக்கு நன்றி.
உங்க முதுகுல ஓங்கி ஒரு அடி விடணும்போல இருக்கு. எப்ப மாட்டுவீங்க??
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
MANADHAI NERUDUM KADANDHA KALA UNMAIGALAI THUPPA MUDIYADHA YEKKAM THERIGIRADHU.... MAATRA MUDIYADHA VALIGALAI SUMANDHU PIRAKUM PUDHU VARUDAM.... NAGARA MANDHARGALIN NYAYAMANA VALIGALIN PRADHIBALIPU ....
RENUKA RAYAN
//எப்ப மாட்டுவீங்க??//
தங்ஸ் ஏன்?
ரேணுகா நன்றி
ஆடுமாடு!
நல்ல சிந்தனை நல்ல நடை. வட்டார நடை உள்ளே ஊறியிருந்தால் மாறாதே.
வாயைத்திறந்தால் வட்டார நடை வந்து விழணும்...அட! உங்களுக்கு.....ஊரா?என்று கேட்கணும்.சென்ற வருட சேர்மானங்களும் இழப்புகளும் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.
ஒன்றரை மணிநேரப் பயணமென்றாலும் அதை சுவையாக சொல்லலாமே?
புது வருட வாழ்த்துக்கள்!
//ஒன்றரை மணிநேரப் பயணமென்றாலும் அதை சுவையாக சொல்லலாமே?//
நானானி கண்டிப்பாக எழுதுகிறேன். வருகைக்கு நன்றி.
//எப்ப மாட்டுவீங்க??//
////தங்ஸ் ஏன்?////
ரொம்ப சந்தோஷத்தால வந்த பாசம்:-))). உங்க ஒவ்வொரு பதிவையும் படிக்கும்போது..
//ரொம்ப சந்தோஷத்தால வந்த பாசம்:-))).//
கொல வெறி?
விமானப் பயணத்தின் அனுபவத்தை
கரிசல்காட்டு நடையில் படிக்கவும்
சுகமா இருக்கும்லெ
//கரிசல்காட்டு நடையில் படிக்கவும்
சுகமா இருக்கும்லெ//
இந்தா எழுதிக்கிட்டே இருக்கம்லா
நல்ல தொடர்ச்சியா எழுதறீங்க.நடை நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.
<==
ஆகாயம் வழி ஆனந்தபட்ட அப்பாவியின் வியப்பு, சிலருக்கு சிரிப்பை தரும் என்பதால் அதுபற்றி விரிவாக வேண்டாம். ==>
அப்படியெல்லாம் இல்லீங்க.எழுதுங்க.
பாருங்க கிட்டத்தட்ட எல்லாரும் அதையே கேக்கிறாங்க.
நன்றி சாமன்யன்
இத்தனை நாள் உங்கள் பதிவை பார்க்காமல் போயிருக்கிறேன். எழத்து அருமையாக வசப்படகிறது உங்களுக்கு. எல்லாவற்றையும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. படித்தவிட்டு வருகிறேன்.
//எங்கோ இருக்கின்ற காதலியின் முகத்தை திருவிழாவிலாவது பார்க்க துடித்திருக்கிறேன். போன வருடம் போலவே வரவில்லை. அடுத்த வருடம் காத்திருக்கிறது.//
உங்களுக்குமா? இது எல்லோருக்கும் பொதுவான குணாம்சமா?
வருட கணக்கெடுப்பும் அருமை.
//வரும் புத்தாண்டில் ஒரு வயது ஏறப்போகிறது....//
இதுதான் உண்மை.
சுவாசிக்கிறென் என்பதைத்தவிர சொல்வதற்கு ஒன்றமில்லை.
எங்கோ படித்த கவிதை வரிகள்.
//ஜெயமோகன் மீண்டும் ஒரு நாவலை இறக்கியிருக்கிறார்.//
தொழிற்கூடம் போன்று இறக்கிக் கொண்டே இருப்பார். இருந்தாலும் 'இறக்கி' கொஞ்சம் அதிகம்தான்.
//இருந்தாலும் 'இறக்கி' கொஞ்சம் அதிகம்தான்//
நெசமா?
//அசோகவனம். தமிழினி வெளியிடு. ஜெயமோகன் முடித்துவிட்டார். இந்த புத்தகக் கண்காட்சிக்கு வருகிறது.
//
ஆமா, புத்தகக் கண்காட்சிக்கு இந்த நாவலும் வரவில்லை, வருவதாகச் சொன்ன நபரும் வரவில்லை! அசோகவனம் 2400 பக்கம் என்கிறார்கள். தமிழுலகம் தாங்குமா?
என்ன பண்ண ஹரன், நம்ம ஒண்ணு நினைச்சா வேற ஒண்ணும் நடக்குது. ஒ.கே. பிப்ரவரி என்றிருக்கிறார்கள். பார்ப்போம்.
நன்றி ஹரன்
//அசோகவனம் 2400 பக்கம் என்கிறார்கள்//
இல்லை ஹரன் பிரசன்னா, 3000 பக்கம் என்பது லேட்டஸ்ட் தகவல்.
/3000 பக்கம் என்பது லேட்டஸ்ட் தகவல்./
இதுக்கே அசந்துட்டா எப்படி. அடுத்ததா ரெண்டு 7000 பக்க நாவலும் ஒரு 14,500 பக்க நாவலும் எழுதப் போகிறாராம். பாருங்க 'மன எழுச்சி' முதல்லயே பக்கங்களைத் தீர்மானித்து கொண்டு விடுகிறது, என்ன செய்ய.
அசந்தா எழுதறது நம்ம பாலிசி, அசராம எழுதறது ஜெமோ பாலிசி.
Post a Comment