Saturday, December 22, 2007

சடச்சான்

கடனாநதி ஆற்றின், நீள அகலத்தை அளப்பது மாதிரி இந்தக்கரைக்கும் அந்தக்கரைக்கும் நடந்து கொண்டிருக்கும் சடச்சான், இன்று விடிவதற்கு முன்பே வாய்க்கால் கரையில் நின்றான்.

பெரும்பாலும் அவன் இங்கு வருவதில்லை. இந்த வாய்க்காலைத்தாண்டிதான் தினமும் ஆற்றுக்குச் செல்வான். ஆற்றைப் போல வாய்க்கால்கள், அவனுக்கு கவர்ச்சியைக் கொடுக்கவில்லையோ என்னவோ ?

ஆற்றில் ஆழம் அதிகமிருக்காது. முழங்கால் அளவுதான். முகம் பார்க்குமளவுக்கான பளிங்குத் தண்ணீரில் நடப்பது சடச்சானுக்கு ஆனந்த விஷயம். இடது கை ஆட்காட்டி விரலையும் சுண்டுவிரலையும் நீட்டிக்கொண்டும் வலது காலை இழுத்துக்கொண்டும் அவன் நடப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அவிழ்ந்த சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டாவது அவன் நடக்கலாம். மயிர்களடர்ந்த கருந்தேகத்தைக் காண்பித்துக்கொண்டு நடந்துக்கொண்டிருப்பான். முகம் தண்ணீருக்குள் எதையோ தேடும். இப்படி நடந்து கொண்டே, ஆற்றுக்குள் முளைத்திருக்கும் பாறைகளில் துணி துவைக்கும் அக்காள்கள், அத்தைகளிடம் அவன் ஏதாவது பேசுவான்.

'ஏக்கா எப்பம் கல்யாணம் பண்ணப்போற ? '

'நீ எப்பம் தண்ணிக்குள்ள நடக்கத நிப்பாட்ட போறியோ அப்பதாம் '

'அப்பம் உனக்கு கல்யாணமே நடக்காது. '

'ஏ வெறுவா கெட்டவனே '

'போக்கா ' என்பான்.

பிறகு அத்தைகள்.

'மருமவன...எம்மவ..சின்னவளை உனக்குதாம்யா கட்டிதரப் போறேன் '

வெட்கம் வந்துவிடும் அவனுக்கு.

'போங்கத்த... நீங்க சொல்லிட்டுதான் இருக்கியோ, ஆனா கெட்டிதான் தரமாட்டேங்கியோ 'என்பான்.

அத்தைகளும் அத்தை சார்ந்தவர்களும் சிரிப்பார்கள்.

'சின்னப்பயல்கள் வந்தால் இவனோடு மல்லுக்கட்டுவதே பொழுது போக்கு '
'ஏ சடச்சான் முதுவுல வங்கு.

சட்டுனு வந்து நொங்கு '

என்று கோரஸாகச் சொல்ல, கோபம் அவரும் அவனுக்கு.

'எம்முதுவுலயால நொங்கப் போறியோ,முதுவு தொலிய உறிச்சுருவேன் 'என்பான்.

'சரிடே.. ஆனா, உனக்குச் சாவு தண்ணிக்குள்ளதான் '

அவர்கள் இப்படிச் சொல்வதில் காரணமிருக்கிறது.

அது அறுவடை காலம்.மேல பத்துவயலில் அறுப்பு நடந்துகொண்டிருந்தது. சடச்சான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். வயலில் ஒழுங்காக அறுக்கிறார்களா என்பதை அம்மாவும் அப்பாவும் மேற்பார்வை செய்ய, துணைக்கு வந்தான் சடச்சான்.

அறுப்புக்களம் அம்மன் கோயிலின் பின்புறம் இருந்த்து. வயலுக்கும் அம்மன் கோயிலுக்கும் ஒரு கீ,மி தூரம்.

கதிர் கட்டைத்தூக்கிக்கொண்டு களத்துக்குச் சுமக்க பிராணன் போய்விடும் அறுப்பாள்களுக்கு.

முக்குறுணி விதைப்பாடுதான் என்பதால் இரண்டு மணி நேரத்தில் அறுத்துவிட்டார்கள். கதிர்கட்டை சுமந்து செல்பவனின் முன் சடச்சான் சென்றான்.இவன் முன்னால் சென்றால் நெல் அதிகம் வரும் என்பது அம்மா அப்பாவின் நம்பிக்கை.

களத்துக்கு அருகில் செல்லும் போது மழை கொட்டியது. கதிரடிக்க, பிணையல் மாடுகளோடு வந்தவர்கள் எல்லாரும் கோவிலில் வந்து நின்று விட்டனர். சடச்சான் இவர்களோடு நின்றிருக்கலாம். மழையில் நனைகிறேன் பேர்வழி என்று குதித்துக் கொண்டிருந்தான்.

'ஏய் தடுமம் புடிச்சுரும்டா நனையாத ' என்று சொன்னவர்களின் பேச்சை அவன் கேட்பதாகயில்லை.. அப்பாவும் அம்மாவும் பக்கத்தில் இல்லாததால் ஆனந்தம்.

பெரிதாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழை திடாரென்று நின்றது.
கதிர்கட்டுகள் போடப்பட்டிருந்த இடத்துக்கருகில் நின்ற விளக்கு கம்பத்தின் அருகில் தண்ணீர் தேங்கி நின்றன. அதன் ஒர் ஓரத்தில் அழகான கோலிக்காய் ஒன்று கிடந்தது. ஓடிப்போய் எடுக்க போனான்.

கோலிக்காயில் கை வைத்ததும் டப் பென்று ஒரு சத்தம். பத்தடி தள்ளி சுய நினைவின்றி கிடந்தான் சடச்சான்.கரண்ட் அடித்துவிட்டது.
குய்யோ முறயோ என்று அம்பாசமுத்திரம் ஆஸ்பத்திரிக்குத் தூக்கி கொண்டு போனார்கள். பேச்சு மூச்சு வந்தது. வலது கால் இழுத்துக்கொண்டது.இடது கை ஆட்காட்டி விரலும் சுண்டு விரலும் நீட்டிக்கொண்டே நின்றன. இனி மூளை வளராதாம். வலிப்பு நோய் வேறு ஒட்டிக்கொண்டது. நிறைய வைத்தியம் பார்த்தாகிவிட்டது.குணமாகவில்லை.இருபத்தைந்து வயதாகியும் இன்னும் குழந்தைத்தனமும் விளையாட்டும்தான்.

வலிப்பு நோய்க்கும் தண்ணீருக்கும் ஆகவே ஆகாது என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் சடச்சான் விஷயத்தில் வேறு மாதிரி இருந்தது.
அதிகாலையில் எழுந்து ஆற்றுக்கு நடந்து வருவது. குளிர்ந்த தண்ணீரில் இறங்கி இந்தக் கரைக்கும் அந்தக்கரைக்குமாக நடப்பது என்று பொழுது கழித்தான்.இது பதினோரு மணிவரைதான்.

அதற்கு மேல் மாடு மேய்க்க வருபவர்கள் மாடுகளை ஆற்றுக்குள் இறக்கி விடுவார்கள். மாடுகளுக்கும் அவனுக்கும் ஆகாது என்பதால் அவன் கரையேறிவிடுவான். அந்த நேரத்தில் ஊர்க்காரர்கள் யாராவது சைக்கிளில் குளிக்க வந்திருந்தால் அவர்களோடு வீட்டுக்குத் திரும்புவான்.
வீட்டில் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். கட்டிப்போட்டுப்பார்த்தர்கள். அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

'வலிப்பு வந்து தண்ணிக்குள் விழுந்து செத்துப் போய் விடக்கூடாதே என்று கூடப் பயந்தார்கள். பிறகு விட்டுவிட்டார்கள். சொல்லமாடன் புண்ணியத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஒரே மகன் இப்படியானதில் மனதொடிந்துவிட்டார் அப்பா. அம்மாவுந்தான். அம்மாவின் தங்கைக்கு நான்கு மகள்கள். அதில் இரண்டு மகள்களை - கடைக்குட்டியையும் அவளுக்கு மூத்தவளையும் இவர்கள் வளர்த்தார்கள்.
சடச்சான் வீட்டிலிருந்தால் சின்னவள் ஓடி ஒளிந்துகொள்வாள்.பயம். ஏதாவது கேள்வி கேட்டு அவள் சொல்லவில்லையென்றால், 'நீயெல்லாம் ஏம் பள்ளிக்கூடம் போற ? 'என்று கேட்டுவிட்டு மண்டையில் நறுக்கென்று கொட்டுவான். இந்தக் குட்டலைச் சின்னவளால் தாங்கமுடியாது.பெரியவளுக்கு அவன் மீது வேறொரு அலர்ஜி.
அவள் தும்மல் போட்டுவிட்டால் போதும். கையை அவள் மூக்குக்கு நேராக கொண்டு போய் மூக்கு சிந்திவிடும் கெட்ட பழக்கம் அவனுக்கு.அவளுக்கு எரிச்சலாக வரும். இந்த அவஸ்தையைப் போக்க அவள் அவன் பக்கமே வருவதில்லை.

சாயங்காலங்கள் அவனுக்குச் சுகமானவை.தெப்பக்குள திண்டில் உட்கார்ந்து கொண்டு அங்கு போகிற வருகிறவர்களை உறவு சொல்லி அழைத்து, 'கண்ணாமூச்சி விளையாடுமா ' ',செல்லாங்குச்சி விளையாடுமா ' என்று கேட்டுக்கொண்டே இருப்பான்.

புல்லறுத்துவிட்டுப் போகும் பாட்டிகள், 'எங்கூட அப்பா அம்மா விளையாட்டு விளையாட வாரியா ? 'என்று சிரித்துக்கொண்டே இடக்கு பண்ணுவார்கள்.
'ஏக் கெழவி ஒன் வயசென்ன, என் வயசென்ன,எங்கிட்ட போயி இப்படி பேசுத ? 'என்று ரோஷம் காட்டுவான்.

சொந்தக்காரர்கள் என்று வீட்டுக்கு யார் வந்தாலும் விடுவதில்லை சடச்சான். 'நானும் ஊருக்கு வாரன், என்னையும் கூட்டிட்டுப் போங்க ' என்று அரற்றிவிடுவான்.அவன் மீது பரிதாபபடுவார்களே தவிர யாரும் கூட்டிக்கொண்டு செல்லாமாட்டார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. ஒரு முறை மெட்ராஸ் அத்தை அவனைச் சிகிச்சைக்காக அங்கு அழைத்துச்சென்றிருந்தாள். கிண்டி அருகே உள்ளே ஒரு மருத்துவமனைக்குப் போகும்போது ,விமானம் ஒன்று தாழ்வாக பறக்க அதையே பார்த்துக்கொண்டு 'ஐ ப்ளேனு ' என்று போய்விட்டான்.

அத்தைக்கும் மாமாவுக்கும் உயிர் போய்விட்டது. ஊரில் என்ன பதில் சொல்லுவது ? அங்கே இங்கே என்று தேடி அலைந்ததில் ஏதோ ஒரு ஜவுளிக்கடை முன்பு பொம்மைகளை அதிசயத்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது பிடித்துவந்தார்களாம்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சடச்சானை எங்கும் அனுப்புவதில்லை. பக்கத்திலிருக்கிற ஆழ்வார்க்குறிச்சி,கடையத்துக்குக்கூட அவனைக் கூட்டிக்கொண்டுப் போவதில்லை.

வெய்க்காலிப்பட்டி சித்தப்பா வந்திருந்தார் நேற்று.

'ஒருவாரம் அங்க வந்து இருக்கட்டும்.எத்தனை நாளைக்குதான் இங்கனயே சுத்திட்டு இருப்பான். கூட்டிட்டுப் போறேன் ' என்றார் அப்பாவிடம்.
'வேண்டாம் வீணா தொல்லை ' என்று தடுத்துப் பார்த்தாள் அம்மா. வழக்கத்துக்கு மாறாக சடச்சானும் சத்தமாகக் கத்தி அழுது அடம் பிடிக்க, 'போய்த் தொலை ' என்று அனுமதியளித்தாள் அம்மா.

சந்தோஷம் தாங்கவில்லை அவனுக்கு. உற்சாகத்தில் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான். தூக்கக் கலக்கம் தீரும் முன்பே வாய்க்கால் கரைக்கு வந்தான்.

வாயில் கொடுவாய் நீட்டமாக இருந்தது. அடிக்கடி கொட்டாவி வேறு. கரை நிரம்பி தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. செத்த நேரம் நின்று கொண்டிருந்தவன் கரையில் அப்படியே உட்கார்ந்தான்.இலேசான குளிர். தண்ணீரிலிருந்து மீன்கள் மேலே துள்ளி,மீண்டும் தண்ணிக்குள் விழுந்தன. துணி துவைக்க போடப்பட்டிருந்த கருங்கல்லின் அடியில் தண்ணீர் பாம்பொன்று தலையை நீட்டிக்கொண்டிருந்தது.

சடச்சான் அதைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அதன் தலையைப் பிடித்து இழுத்து இரண்டு சுற்று சுற்றி பளீரென்று தரையில் அடித்திருப்பான். பாம்புக்கு ஆயுசு கெட்டி.

சிவசைலத்திலிருந்து பெருமாள் கோயிலுக்குப் பால் கொண்டு வரும் கோபாலன் இவனைப் பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி, 'என்ன சடச்சான் விடியதுக்குள்ள இங்க வந்துட்ட ' என்று கேட்டான்.

'ஒண்ணுமில்ல மாமா, சித்தப்பா ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிச்சு. அதான் பல் தேய்ச்சிட்டுப் போலாம்னு வந்தேன் ' என்றான்.
'அப்டியா பாத்து இருந்துக்கோல, 'என்று சொல்லிவிட்டுப் போனான்.

இடுப்புப்பகுதியில் சாரத்துக்குள் சொருகி வைத்திருந்த வேப்பங்குச்சியை எடுத்து தூக்கக் கலக்கத்துடனேயே பல் தேய்த்தான். கரையில் இருந்து கொண்டு எச்சிலைப் புளிச்சென்று தண்ணிக்குள் துப்பினான். துப்பப்பட்ட இடத்தில் மீன்கள் துள்ளி விழுந்தன. அவனுக்கு அதைப் பார்க்க ஆர்வமாக இருந்தது. தண்ணீரின் அருகில் சென்றான். கால் நனையாமல், காற்றடித்து தண்ணீரடினால் நனைந்துவிடுமளவுக்கான தூரத்தில் குத்த வைத்துக்கொண்டு துப்பிக்கொண்டிருந்தான்.

எதிரில் வயலுக்குப் போகும் இடும்பனிடம், ' 'ஏய் இடும்பா நான் ஊருக்குப் போறேன் 'என்றான்.

'உன்னைய யாருல கூட்டிட்டுப்போறா '

'சித்தப்பா '

'அங்க போய் ஒழுங்கா இரி, ஆத்துக்கு போறேன்,வாய்க்கலுக்குப் போறேன்னு அவருக்கு இழுத்து வச்சிராத '

'அது எனக்கு தெரியும் உஞ்சோலிய பாத்துட்டுப் போ '

' சும்மா போறவன கூப்புட்டு சோலியப் பாத்துட்டுப் போங்க. உனக்கு கொஞ்சமாவா கொழுப்பு இருக்கு ? '

திட்டிக்கொண்டே சென்றான்.

துப்புவதையும் மீன்கள் துள்ளுவதையும் அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருந்தான். பிறகு ஒரு கையால் தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவினான். தண்ணீர் குளிர்ந்திருந்தது.இன்னொரு முறை தண்ணீரை அள்ள முயன்ற போது வலது கால் இலேசாக வழுக்க, முஞ்சிக்குப்புற விழுந்தான் சடச்சான். முகம் மட்டும் தண்ணிக்குள் கிடக்க உடல் முழுவதும் கரையில் கிடந்தது. ஒரு முறை கையை ஊன்றி முகத்தை மேலே தூக்கியவன் பொத்தென்று தண்ணீருக்குள்ளேயே விழுந்தான்.
வலிப்பு வந்தது அவனுக்கு.

----
திண்ணையில் வெளியான என் கதை

18 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரொம்ப நல்லா இருக்கு.. கதைக்களமும்.. ஊரின் பெயர்களும் என்னை மிகவும் அருகாமையில் கூட்டிச்செல்கிறது. நேர்த்தியான பாத்திரப்படைப்பு.. வாழ்த்துக்கள்

ஆடுமாடு said...

கிருத்திகா வருகைக்கு நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு ஆடுமாடு...

ஆடுமாடு said...

நன்றி சுந்தர் சார்.

குசும்பன் said...

மிக அருமையான கிராமத்து நினைவு அறுவடை, புல் அறுக்குக்கும் பெண்கள், துணி துவைக்கும் பெண்கள் கேலி பேச்சு என்று மிக இயல்பாக இருக்கிறது. அருமை!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நிஜமாவே கிராமத்துக்கு போன மாதிரி உணர்வு.நல்லா சரளமா எழுதறீங்க.வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

குசும்பன வருகைக்கு நன்றி.
'மிருகம்' விமர்சனத்துல உங்களுக்கு பிரக்கெட் போட்டிருந்தேனே கவனிக்கலையா?

//மிக அருமையான கிராமத்து நினைவு//

எனக்கு ஊர் ஞாபகம் மறந்துடக்கூடாதுன்னு எழுதறேன் பாஸு.

ஆடுமாடு said...

//நிஜமாவே கிராமத்துக்கு போன மாதிரி உணர்வு//

நன்றி சாமானியன்.

ரூபஸ் said...

கதைக்களத்தை கண்முன் நிறுத்துகின்றன உங்கள் எழுத்துக்கள்..

நல்லாயிருக்கு

நானானி said...

மனதைப் பிசைகிறது சடச்சானின் முடிவு.
கூடவே கடனா நதி, ஆழ்வார்குறிச்சி (அம்மா ஊர்),நெல்லைத்தமிழ்-உம்-மூஞ்சிகுப்புர...எல்லாம் மண்வாசனையை கிளறிவிட்டது.
வல்லி,துள்சி பதிவுகளில் எல்லாம் 'ஆடுமாடு' என்று பின்னோட்டங்களில் மேய்ந்து கொண்டிருப்பது யார் என்று பார்க்கவந்தேன்.நல்லாருக்கு.

ஆடுமாடு said...

//நல்லாயிருக்கு//

நன்றி ரூப்ஸ்.

ஆடுமாடு said...

நானானி வருகைக்கு நன்றி.

//கடனா நதி, ஆழ்வார்குறிச்சி (அம்மா ஊர்),நெல்லைத்தமிழ்-உம்-மூஞ்சிகுப்புர...எல்லாம் மண்வாசனையை கிளறிவிட்டது.

ஆழ்வார்க்குறிச்சி அம்மா ஊர். உங்களுக்கு?

தங்ஸ் said...

முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும், மண்வாசனை சூப்பர்..(Belated)பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி!

ஆடுமாடு said...

நன்றி தங்ஸ்.

\பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி!/
வாழ்த்துக்கு நன்றி. கார்க்கியிடம் சொல்லுவிடுகிறேன்.

கானகம் said...

நல்ல கதைக்களனும் கதையை நேர்த்தியாய் கட்டிய விதமும் மண்வாசனையூடான உரையாடல்களும் முடிவுதெரிந்த கதையைப் படித்தாலும் "சடச்சான்" மனதில் நிற்கிறான்.

வாழ்த்துக்கள் நன்பரே..

துளசி கோபால் said...

என்னய்யா...இப்படி சோகமா முடிச்சுட்டீர்?

ஹூம்.....

ஆடுமாடு said...

//என்னய்யா...இப்படி சோகமா முடிச்சுட்டீர்?//

டீச்சர், நானும் ஒண்ணும் முடிக்கலை. அது நிஜமா நடந்த கதை. அவன் செத்துப்போனதுக்குப் பிறகு ழுதுன கதை.

நானானி said...

எனக்கு திருநெல்வேலி..ஆடுமாடு!