Sunday, December 16, 2007

சாமி சண்ட

வாய்க்காலுக்கு வந்த புனமாலைக்கு தீப்பெட்டியில் குச்சிகள் இல்லாதது இப்போதுதான் தெரிந்தது. பீடியை வைத்துக் கொண்டு சிறிது நேரம் பாலத்தில் உட்கார்ந்திருந்தான் யாராவது கொண்டுவருவார்கள் என்று.

’பீடி குடிக்கலைன்னா உக்காரவே முடியாது. அப்பலயே பாத்து தொலைச்சிருக்கணும்’ பொசமுட்டிக்கொண்டு வந்தது. நமநமத்தது வாய். உதடும் வாயும் உள்ளே இறங்கும் புகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தன.

அஹ்ரகாரத்திலிருந்து வாய்க்காலுக்கு வரும் முடுக்கில், கொய்யா மரத்தின் பின்னால் யாரோ வருவது போலிருந்தது. இன்னும் சொளேரென விடியாததால் கூர்ந்து பார்க்க வேண்டியிருந்தது. பார்த்தான். பிடிபடவில்லை. வருபவருக்குப் பின்னால் தலப்பா கட்டிக்கொண்டு வருபவர் பீடி பற்றவைத்திருப்பது தெரிந்தது. ஆள் அடையாளம் தெரியாவிட்டாலும் புகை வருவது தெரிந்தது. தீ கிடைக்க போகும் ஆவலில் இருந்தான். நெருங்கி வர வர, முதலில் வருவது கொண்டை ஐயரென்றும், பின்னால் வருவது கொம்பன் என்பதும் தெரிந்தது.

ஐயர் பிள்ளையார் கோயிலுக்கு செல்கிறார். அவரிடம் தீப்பெட்டி இருக்காது. கொம்பனிடம் நேற்று முன் தினம் வரை உறவு இருந்தது. சொந்தக்காரப் பயதான். நேற்றிலிருந்து நிலைமை வேறு. பகையாளியாகிப்போனான். அவன் மட்டுமல்ல. அவன் குடும்பமும். அவனிடம் தீப்பெட்டி கேட்க முடியாது. முடியாது என்பதல்ல; கூடாது.

கொண்டை ஐயர் அருகில் வந்தார். அவருக்கு கண்கள் தெளிவாகத் தெரியாது. காதும் சரியாக கேட்காது. கையை வலது கண்ணருகில் வைத்து உற்றுப் பார்த்தார்.

‘‘பொனமாலையாடா?’’
‘‘ஆமா...சாமி"என்று அவன் சொன்னதும் நின்று விட்டார். தோளில் கிடந்த துண்டை எடுத்து அவன் கையில் வைத்துக் கொண்டான். ஐயர், பின்னால் வரும் கொம்பனைக் கவனிக்காமல். '‘ஏண்டா நேத்து வரை தாயும் புள்ளயுமா பழகிட்டு, இப்படி திடீர்னு அடிதடியில இறங்கிட்டேளே... உங்களுக்குள்ளயே அடிச்சுக்கிறது நல்லாவாடா இருக்கு?’’என்றார்.

புனமாலைக்குத் தர்மசங்கடமாகியது. இப்போது ஏதாவது சொல்ல, பதிலுக்கு பொந்தனும் சொன்னானென்றால் விவகாரம் சிக்கலாகிவிடும் என்பதால்,
''அதெல்லாம் பொறவு பேசுவோம் சாமி. எங்க போறியோ?’’ என்று பேச்சை மாற்றினான்.

பின்னால் வந்த கொம்பனும், நான் வரும்போது ஏதும் பேச வேண்டாம் என்பது போல சத்தமாக இருமினான். திரும்பிப்பார்த்த ஐயர், அவன் சொன்னது சரிதான் என்று கணைத்துகொண்டு, ‘‘வர்றேண்டா, போய் மாலை கட்டணும். வேலை இருக்கு’’ என்று கிளம்பப் போனார்.

புனமாலைக்கு இருப்புக்கொள்ளவில்லை. இதுக்கு மேலும் தீபெட்டிக்காக இங்கே இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. நாப்பதடி நடந்தால் பிள்ளையார் கோயில். பேசாமல் ஐயருடன் கோயிலுக்கு சென்று தீப்பெட்டி வாங்கலாமென்று நினைத்தான்.

‘‘ஏஞ்சாமி...கோயில்ல தீப்பெட்டி இருக்குமா?’’
‘‘ஏண்டா?‘’

‘‘பீடி பத்த வைக்கணும்...’’

‘‘இதுக்கு கோயிலுக்கு எதுக்கு? இந்தா மடியிலேயே வச்சிருக்கேன்’’ என்று கொடுத்தார்.

‘‘இடுப்புல தீப்பெட்டிய வச்சுட்டு அலையிதியோ... ஆரம்பிச்சிட்டேளா?’’

‘‘என்னையும் உன்ன போல ஆக்க பாக்கியா? கோயிலுக்குள்ள வெளிச்சம் இருக்காது. உள்ள தீப்பெட்டிய வச்சா தேட முடியாது. அதான் இடுப்புலயே வச்சுக்கிறது’ என்று விளக்கம் தந்தார்.
இவரது விளக்கத்தை ஏதோ கேட்டுவிட்டு கருவ மூட்டுக்குள் போனான்.

வாய்க்காலில் கால் கழுவிவிட்டு அவன் வந்தபோது எதிரிலிருந்த தெப்பக்குள திண்டில் வன்னிய நம்பியும் கேசரி பயலும் உட்கார்ந்து இவ் விவகாரம் தொடர்பாக நீட்டி முழங்கிக்கொண்டிருந்தனர். அருகில் மேல பட்றையை சேர்ந்த பொன்னன் மகன் சோம்பல் முறித்துகொண்டு நின்றிருந்தான்.மாடு மேய்க்க வரும் சேக்காளி.

‘‘ஏல என்ன இங்ஙன உக்காந்துட்டியோ?"

‘‘வேற போக்கெடம் எங்க இருக்கு?’’

‘‘சர்தான், தீப்பெட்டி இல்லைன்னு வாய்க்கா பாலத்துல உக்காந்திருந்தேன். கொண்ட ஐயரு வந்தாரு பாத்துக்கோ. போனவரு சும்மா போவாண்டமா? ஏன்டா இப்டி அடிச்சுக்கிடுதியோன்னாரு. பின்னாலயே கொம்பன் வாராம்...’’

‘‘வந்தான்ன?’’

‘‘எதுக்கு போட்டு சனியன வெலகொடுத்து வாங்கணும்?’’

‘‘இது என்னமோ சொன்னாப்ல இருக்கே’’

‘‘அதில்லலா.. நாம ஒண்ணு சொல்ல, அவன் ஒண்னு சொல்ல...எதுக்குனுதான்’’என்றான்.

பொன்னன் மகன், புனமாலை பக்கம் திரும்பி, ‘ஏண்ணே நீதான் ஊனி கம்ப தூக்கிகிட்டு நாராயாண கோனை அடிக்க போனியாம்’ என்று கேட்டான்.

‘‘ஆமா.. கழுதய விடு"

‘‘என்ன விடுங்க... வெவாரம் என்னனு சொல்லு"

‘‘உனக்கு ஒண்ணுமே தெரியாதோல..."

‘‘தெரிஞ்சா ஏன் அர்தலி ஒங்கிட்ட தொங்குதேன். தோப்பு வெவாரமா?"

‘‘மண்ணாங்கட்டி’’

‘‘பெறவு’’

‘‘கோயில் வெவாரம்ல’’

‘‘கருசாமி கோயில்லயா?’’

‘‘புள்ள பூச்சி மாதிரி கொடஞ்சிட்டே இருல’’

‘‘என்னன்னுதான் சொல்லித் தொலைங்களேன்’’

‘‘மந்திரமூர்த்தி கோயிலு எடப் பிரச்னை’’

ஊர் மத்தியில் இருக்கும் குறுகலான சந்தின் இடப் பக்கத்தில் இருக்கிறது மந்திரமூர்த்தி கோயில். நான்கு தலைமுறைக்கு முன்பு வரை, இது பிரம்மராட்சதை கோயிலாக இருந்தது. பிரம்மராட்சதை மந்திரமூர்த்தி கோயிலானதற்கு பெரும் கதை இருக்கிறது. பல கதைகளை ஊறப் போட்டிருக்கும் மண், இதுக்கொரு கதை வைத்திருப்பதில் வியப்பேதும் இல்லை. சாமிகளுக்கும் கோயில்களுக்கும் வரலாறு இருப்பது மாதிரி இதுக்கும் வரலாறு இருக்கிறது.

ஊரில் பெரும்வசதி படைத்த சொள்ளமுத்து குடும்பத்துக்கும், கருப்பு சுப்பையா குடும்பத்துக்குமான ஆளுமை போட்டி, முறுக்கிவிடப்பட்ட மீசையில் தெரிந்துகொண்டிருந்தது. இருவரும் ஒரே கொடியில் பிரிந்த கிளைகள் என்பதாகக் கொள்க.

சொ.மு. குடும்பத்தினருடையது பிரம்மராட்சதை. சொ.மு. அம்மாவுக்கு முதன்முதலில் அம்மன் இறங்கி சாமியாட ஆரம்பித்து பல வருடங்களுக்குப் பிறகு கோயில்கட்ட உத்தரவிட்டது.

சாமிகளின் உத்தரவு சக்திவாய்ந்ததென்பதால் சொ.மு. குடும்ப சொத்திற்குட்பட்ட ஏழு சென்ட் இடம் கோயிலுக்கென ஒதுக்கப்பட்டு பிம்மராட்சதைப் பூடமானாள். வெறும் பிரம்மராட்சதையை மட்டும் பூடமாக்கக்கூடாது என்பதால், அவளுக்குத் துணை சாமியாக தபசுநாதர், நாராயணன், பட்றயன் இன்னும் சில சாமிகளும் பூடமாயினர். குடும்பத்தில், ஆளுக்கு ஒருவர் பூடங்களுக்கு சாமியாடி வந்தனர்.

ஓவ்வொரு ஆடி மாதத்தின் மூன்றாம் செவ்வாய் புனித கிழமையாக கருதப்பட்டு அன்று கொடை கொடுக்கப்பட்டு வந்தது. கொடை கொடுப்பது வசதி வாய்ப்புகளின் வெளிப்பாடாக ஆகிப்போனதால் சொ.மு குடும்பம், அவரது பொண்ணு கொடுத்த, எடுத்த மற்றும் வெளியூர் உறவுகளின் படோபடத்தைக் காட்டும் விதமாக நடந்தப்பட்டு வந்தது கொடை.
இப்படியான நாளில்தான் க.சு.வின் கனவில் மந்திரமூர்த்தி உதயமானார். அவர் எந்த ஒளிவட்டத்துடன் வந்தாரென்பதையோ, கையில் எந்த ஆயுதத்தை வைத்தாரென்பதையோ அவர் சொல்லவில்லை.

‘‘ஊரெல்லாம் போயி சாமி கும்புடுத... எனக்கொரு பூடம் கொடுத்து கும்புட்டான்ன?’’என்பது மந்திர மூர்த்தியின் கேள்வியாக இருந்தது.
மந்திரமூர்த்திக்கு இப்படியரு ஆசை இருந்ததையும், அதைக் கனவில் தோன்றி சொன்னதையும் க.சு.வால் தாங்கி கொள்ள முடியவில்லை. சாமி வந்து கேட்கும் வரைக்கும் பூடம் கொடுக்காமல் இருந்தது எப்படி என்ற ஆழ் உணர்வு கேள்விக்குள் செல்லாமல், திட்டம் நிறைவேற்ற தயாரானார்.

பூடத்தை எங்கே கொடுப்பது என்று குழம்பம் முதலில் வந்தது.
இதற்காக பார்க்கப்பட்ட அவரது தோட்டம் குடும்பத்தாரால் நிராகரிக்கப்பட்டது. ஏனென்றால் அங்கு க.சு.வின் தாத்தா சமாதியாகி நடுகல்லாக நின்றார். ஒருவரை புதைத்த இடத்தில் மக்களை காக்கும் தெய்வத்துக்குப் பூடம் கொடுப்பது சாத்தியப்படாது.

பிறகு வைக்கோல் படப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த புளியமர பொட்டலில் இடம் பார்க்கப்பட்டு, அதுவும் நிராகரிக்கப் பட்டது. காரணம் மூன்று வருடங்களுக்கு முன் வயல் அறுவடை நாள் ஒன்றில் மூக்கன் மகன் நொடிஞ்சான் வலிப்பு வந்து இங்குதான் மண்டையை போட்டான்.
மாட்டு தொழுவின் ஓரத்தில் வில் வண்டி நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கருகில் பூடம் கொடுக்கலாமென்று பக்கத்துவீட்டு பச்சை கொடுத்த ஆலோசனையும் நிராகரிக்கப்பட்டது.

‘‘மாட்டுத்தொழுவத்துல போயி, பூடம் கொடுப்பாவுளா?’’
இறுதியாக ஊரில் ஒண்ணுவிட்ட சொந்தங்களுக்குள் நடந்த கல்யாணமொன்றில் சொ.மு. காதுக்கு இவ்விஷயம் காற்று வாக்கில் விழுந்தது. ஏழு வெற்றிலையை சுண்ணாம்பு சேர்த்து ஒரே வாயில் அமுக்கி கொண்டு கொழ கொழவென்று சொன்னார்.

‘‘இந்தப் பய எங்கிட்ட ஒரு வார்த்த கேட்டானா? என்னடா பெரிய எடம்? எங்கோயிலுக்குள்ளயே பூடத்தை வச்சுட்டு போவ வேண்டியதான?’’ என்று உணர்ச்சி வெளிபாட்டில் சொல்லிவிட்டார். இப்படியரு விஷயம் இருப்பதையும் இப்போதுதான் க.சு. உணர்ந்தார். மீசையில் இருந்த கவுரவத்தை ஓரத்தில் வைத்துவிட்டு, சொ.மு.முன் நின்றார் க.சு..

உறவுகள் கைகோர்த்தன.

இந்த தாரள மனதுக்குப் பின், பிரம்மராட்சதை கோயிலில் சில விதிகளின் படி மந்திரமூர்த்தி பூடமானார். மற்ற பூடங்களை விட மிகமிக உயரமான அளவில் மந்திரமூர்த்தி பூடம் இருக்கவேண்டும் என்பது விதி. அதன்படி, ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமை பூடம் நிறுவப்பட்டது. நாளாக ஆக மந்திரமூர்த்தியின் சக்தியறிந்து ஊர்க்காரர்கள் தந்த மரியாதையையடுத்து, பிரம்மராட்சதை கோயில் மந்திரமூர்த்தி கோயிலானது. மந்திரமூர்த்திக்கு கொடை கொடுக்கும் அதே நாளில் பிரம்மராட்சதைக்கும் கொடை.
போனவாரம் கொடை. சாமக் கொடையின் போது மேளக்காரர்கள் கொட்டடித்துக் கொண்டிருந்தனர். மேளச்சத்தம் கேட்க கேட்க சாமி
யாடிகள் ஆக்ரோஷமாகி கொண்டிருந்தனர்.

பிரம்மராட்சதைக்கும் அந்த சாமியின் வகையறா பூடங்களுக்கும் ஆடிக்கொண்டிருந்த சாமிகள் ஆங்காரம் அதிகமாகி, ‘அம்மனுக்கு அடிப்பா... மேளத்தை, அம்மனுக்கு அடிப்பா’ என்று கத்த தொடங்கினர். அதே நேரத்தில் பட்றயனுக்கு ஆடுபவர், ‘எனக்கு அடிப்பா’என்று ஆங்காரத்துடன் கத்த, மேளம் அடிப்பவர்களின் மேளம் தடுமாறிகொண்டிருந்தது.

இந்த சாமி, அந்த சாமி என்று மாறி மாறி தங்கள் சாமியின் தாளத்தை அடிக்க சொல்ல, பிரம்மராட்சதையைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் மேளக்காரர்கள். பிரச்னை இங்குதான் ஆரம்பித்தது.

ஒரு மாதிரியாக சாமக்கொடை முடிந்த நேரத்தில் பிரம்மராட்சதைக் குடும்பத்தினர் ரகசிய கூட்டம் நடத்தினர்.

‘‘கோயிலு நம்மகோயிலு. இவனுவோ சொல்லுததான் எல்லாரும் கேக்கானுவோ. இதுக்கு எதுக்கு நம்ம ஆடணும்? இதை இப்படியே விட்டா சரியாயிருக்காது. கொடை முடிஞ்சதும் வெவாரத்தை வைக்கணும்’’என்பது ரகசிய கூட்ட தீர்மானம்.

இந்த தீர்மானம் க.சு. வகையறாவான நட்டன் காதில் விழுந்து தொலைத்தது. அடுத்தடுத்த நிமிடங்களில் ஆளாளுக்கு கர் புர்ரென நிற்க, கோயில் கொடை முடிந்த மறுநிமிடமே அடிதடி ஆரம்பித்தது.

சொ.கோ குடும்பத்தினர் ஒரு பக்கமும், க.சு வகையறாக்கள் ஒரு புறமும் நின்று கொண்டு, ‘‘நீ இங்க வால, நீங்க இங்க வாங்கல’’என்று சவால் விட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பிரம்மராட்சதைக்கு ஆடும் நாராயணன் மண்டையில் நச்சென்று விழுந்தது ஒரு செங்கல். அடுத்தடுத்த நிமிடங்கள் போர் காட்சிகளாயின. கவிஞர் ஜெயங்கொண்டார் இருந்திருந்தால், இந்தப் பரணியை என்னவென்று பாடியிருப்பாரோ?

பஞ்சாயத்து தலைவர் தலைமையில் வேறு பட்றை ஆட்கள் வந்து சண்டையை விலக்க, நான்கு பேர் மண்டை உடைந்திருந்தது. ஏழு பேருக்கு கன்னம் கை, கால், இடுப்பு உள்ளிட்ட உடலின் சில பாகங்கள் வீங்கியிருந்தன.
இன்று பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் விவகாரம் வந்தது. கோயிலுக்குப் பின் பக்கம் இருக்கும் வாதமடக்கி மரத்தின் கீழ், பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன.

இந்த திடீர் பஞ்சாயத்தை ஒட்டி பாதிக்கப்பட்ட மற்றும் கலவரத்தில் கலந்து கொண்ட உறவுக்காரர்கள் வேறு, வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தனர். இம்மாதிரி பஞ்சாயத்துகளுக்குள் பெண்களுக்கு அனுமதியில்லாத்ததால், பஞ்சாயத்து தெளிவாக தெரியும் முத்தையா வீட்டு வாசலில் கூடியிருந்தனர். மடியில் வறுத்த அரிசி, தண்ணியில் ஊற போட்ட அரிசி, பொறிகடலை உள்ளிட்ட கொறித்தல் வகையறாக்களை வைத்திருந்தனர்.

நான்கைந்து பேராக பஞ்சாயத்துக்கு வந்தவண்ணமிருந்தனர். வந்தவர்கள் பிரித்துவிடப்பட்ட மாதிரி எதிரெதிர் பக்கங்களில் அமர்ந்தனர். ‘‘நீங்களா பேசி ஏதாவது முடிவெடுங்கப்பா’’என்கிற மாதிரி ஓரத்தில் துண்டை விரித்து தூங்கினர் நான்கைந்து பேர்.

தலைவர் வந்தார். பெஞ்சில் உட்கார்ந்தார். க.சு குடும்பத்தில் மூத்தவரான வண்டி மந்திரமும் சு.கோ குடும்பத்தில் மூத்தவரான பலவேசமும் இட, வல புறங்களில் அமர்ந்திருந்தனர்.

‘‘நமக்குள்ளேயே அடிச்சிருக்கிடுதது நல்லாவாயா இருக்கு. கொடை கொடுத்தியோ சரி... அதுக்குள்ள ஒங்களுக்கு என்ன வந்தது? எவன் எப்படி போவான்னு ஊர்ல பாதி பேர் பாத்துகிட்டே இருக்காம். அவனுவோ சிரிக்க மாதிரியா இருப்பியோ...’’ தலைவர்தான் ஆரம்பித்தார்.

‘‘இல்ல... இந்த ஆக்கங்கெட்ட பயலுவோ...’’

‘‘யாரை ஆக்கங்கெட்டவங்க... ஏல எந்திரிங்கல...’’ படாரென்று பத்து பேர் எழுந்து முன்பக்கம் பாய, அவர்கள் மேல் நான்கைந்து பேர் ணங்கென்று போட, கொடைக்கு போடப்பட்டிருந்த பந்தக்கால்கள் உருவபட்டு ஆரம்பமானது அடி தடி.

மந்திரமூர்த்தியும், பிரம்மராட்சதையும் அமைதியாகவே இருந்தனர் களேபரத்தின் நடுவே.

18 comments:

ஆடுமாடு said...

சும்மா...டெஸ்ட்.

கதிர் said...

மண்மணமா இருக்கு கதை. ஆனா கடைசி ரெண்டு பத்தி படிக்கும்போது சிரிப்பு வந்துடுச்சி.

நல்லாருக்கு கதை.

கதிர் said...

சண்டை போடறது என்னமோ மனுசனுங்க ஆனா வெளில சொல்றது சாமிசண்டன்னு. :)

ஆடுமாடு said...

நன்றி தம்பி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மெலிதான நகைச்சுவை இழையோட, நன்றாக இருந்தது சிறுகதை.

துளசி கோபால் said...

//மந்திரமூர்த்தியும், பிரம்மராட்சதையும் அமைதியாகவே இருந்தனர் களேபரத்தின் நடுவே.//

இ(த்)து........

சாமிங்க சமாதானமாத்தான் கிடக்கு. 'ஆ' சாமிங்க போடற சண்டை சொல்லி மாளலை.

சாமியை வச்சு அடிக்கும் கூத்து எப்போ முடியுமோ?

அருமையா இருக்கு ஆடுமாடு.

ஆடுமாடு said...

ஜ்யோவ்ராம் சுந்தர் நன்றி.

ஆடுமாடு said...

//சாமிங்க சமாதானமாத்தான் கிடக்கு. 'ஆ' சாமிங்க போடற சண்டை சொல்லி மாளலை//

துளசி டீச்சர். இது எங்க ஊர்ல நடந்த நிஜ சண்டை. கொஞ்சம் கண்ணு காது வச்சு எழுதியிருக்கேன். ஊர்க்காரன் எவனாவது படிச்சான்னா என்னை உண்டு இல்லைன்னு பண்ணிருவானுவோ.
நன்றி டீச்சர்.

ESMN said...
This comment has been removed by a blog administrator.
ஆடுமாடு said...
This comment has been removed by the author.
தங்ஸ் said...

கலக்கல் அண்ணாச்சி.. ஆனா, நகைச்சுவைய கடைசில மட்டும் தூவியிருக்கீங்க..

ஆடுமாடு said...

தங்ஸ், தேங்க்ஸ்.

Anonymous said...

ஒரு பஞ்சாயத்து குத்து மதிப்பா எவ்வளவு நேரம் நடக்கும்?

மடியில் வறுத்த அரிசி, தண்ணியில் ஊற போட்ட அரிசி, பொறிகடலை உள்ளிட்ட கொறித்தல் வகையறாக்கள் காலியாகிற வரைக்கும் நடக்குமா என்ன?

ஆடுமாடு said...

//ஒரு பஞ்சாயத்து குத்து மதிப்பா எவ்வளவு நேரம் நடக்கும்?//

ரமேஷு, இதெல்லாம் கொறிக்கறதுக்குத்தான். பஞ்சயாத்து பிரச்னையின் தீவிரத்தை பொறுத்து விடிய விடிய...நள்ளிரவு வரை இப்படி...

//மடியில் வறுத்த அரிசி, தண்ணியில் ஊற போட்ட அரிசி, பொறிகடலை உள்ளிட்ட கொறித்தல் வகையறாக்கள் காலியாகிற வரைக்கும் நடக்குமா என்ன?//

பஞ்சயாத்துக்கு சம்மந்தமில்லாதவர்கள்,இப்படி கொறித்துக்கொண்டு காலியானதும் தூக்கத்துக்கு போய் விடுவார்களாக்கும்.

Dubukku said...

நகைச்சுவை இழையோட அருமையாக எழிதியிருக்கிறீர்கள். நல்லா வந்திருக்கு

ஆடுமாடு said...

//நகைச்சுவை இழையோட அருமையாக எழிதியிருக்கிறீர்கள். நல்லா வந்திருக்கு//

நன்றி சார்.

கானகம் said...

நல்லா இருக்கு சார்.. ஆடுமாடுன்னு கூப்புட கஷ்டமா இருக்கு.

நல்லாவே மண்மனத்தோட எழுதி இருக்கீங்க.

நெஜ பஞ்சாயத்து ஒரு முறையாவது பாத்துரனும்னு இருக்கேன். முடிய மாட்டேங்குது..

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
அப்புறம் டிபன் கொடுத்தார்கள். இதையும் இவர் நோ சொல்லிவிடுவாரோ என்று பயந்தோம். நல்லவேளை சொல்லவில்லை ==>
==)))
பிரமாதம்.ரொம்ப நல்லா எழுதிரீங்க.