சைக்கிள புடிச்சா... ஒரே அழுத்து. எறக்கம். மிதிக்கவே வேண்டாம். சள்ளுனு வந்துரும். கீழ, ஆத்துகிட்ட வந்து நிறுத்திட்டு நெனச்சா குளிப்பாவோ. இல்லனா கொண்டு வந்துருக்க கஞ்சிய தின்னுட்டு பீடிய பத்த வப்பாவோ. கொஞ்ச நேரம் எந்த பொம்பளைலுவோ பத்தியாவது கதையா நடக்கும். இல்லாததும் பொல்லாததுமா பேசிட்டு, சைக்கிளை அழுத்துவானுவோ. கல்யாணிபுரம் வந்ததும், கருப்ப நம்பி வட பக்கம் திரும்பிருவாம். திரும்பிட்டு, சிவசைலம், கருத்தபுள்ளையூர், குடியிருப்பு, பூவங்குறிச்சி, கோவங்குளம்னு ஊருக்கு வந்துருவான்.
அவன் ரூட்டு வேற. இங்கயெல்லாம் ஓவ்வொரு கடையிலயும் எலய போட்டு, நேத்தைய பாக்கிய வாங்கிட்டு வருவாம்.
ஊருக்கு வந்ததும் செட்டியாரு கட, செம்பட்டயாம் கட, செல்லப்பா கட, அப்பதத்தா கட, மேட்டுத்தெரு முழிச்சான் கடன்னு எலய பிரிச்சு போட்டுட்டு வருவாம். வரதுக்கு எப்படியும் மூணு, நாலு மணி ஆயிரும். வெயில்ல சைக்கிளு மிதிச்சதால உடலு பூரா நச நசன்னு இருக்கும். மூக்கன் கடக்கு வந்ததும் சைக்கிளை ஸ்டாண்டு போட்டுட்டு எறங்குவாம். அவன் கடயில புதுசா ஃபேன் வாங்கியிருந்தாம். சாப்புட யாரு வந்தாலும் அதை போட மாட்டாம். எவ்வளவு வெயிலுனாலும் அப்டித்தாம். ஏம்னா கரண்டு பில்லு நெறய ஆயிருமாம்.
இவன் வந்ததும் ஓரமா இருக்குத ஃபேனை தூக்கிட்டு வந்து கல்லாபெட்டிக்கு மேப்பக்கம் வச்சுக்கிட்டு சட்டைய அவுப்பாம். அந்தானி, காத்து சிலு சிலுன்னு வரும் பாருங்கோ, லேசாகண்ணை அசத்தும். ‘ஏல சீக்கிரம் டீய போடு'ம்பாம். காலயில போட்ட வடை காஞ்சுப்போயி கெடக்கும். அதுல ரெண்ட வாயில பிச்சு போட்டுட்டு சொவத்துல சாய்வாம்.
மூக்கன், ‘இந்த சைக்கிளு மிதிக்கே இப்டி சொரணவுதியல'ன்னு சொல்லிட்டு டீயை போட்டுக்கொடுப்பாம். ‘ஒனக்கென்னல உக்காந்துட்டு இருக்க; நான் அலையுத மாதிரி சைக்கிளை மிதிச்சிப்பாரு தெரியும்...'ம்பாம் கருப்ப நம்பி. டீயை குடிச்சுட்டு மிச்சம் மிண்டாடி எலல கொஞ்சத்தை எடுத்து அவங்கிட்ட கொடுப்பாம்.
‘பெறவு வாரம்ல'ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போவாம்.
வந்ததும் பிள்ளைலுவோ, ‘அப்பா வந்துட்டு; அப்பா வந்துட்டு'ன்னு கத்தும். சின்னது வந்து அவன் காலை புடிச்சுக்கிட்டு சிரிக்கும். எல்லாத்துக்கும் ஆளுக்கொரு கொய்யா பழத்த கொடுப்பான். கொடுத்த அடுத்த நிமிஷமே இன்னொன்னு கைய ஏந்தும் பச்சபிள்ளைலுவோ. இருக்கத காலி பண்ணிட்டு வேற இருக்கான்னு அவன் கொண்டுவந்த பைய நோண்டும். அவன் அந்தாப்ல படுத்தா போதும்னு துண்ட விரிச்சு, பொட்டனத்தை எடுத்து தலைல போட்டுட்டு, வாசலுக்கு நேரா கால நீட்டிக்கிட்டு கட்டய சாத்துவான்.
அந்தானி, லேசா கண்ணயரும் போது, பிள்ளைலுவோக்குள்ள சண்ட வரும். எதாவது ஒண்ணு வீலுன்னு தொண்டய போடும். தூங்க முடியுமா? தூக்கம் போச்சு. பொசமுட்டிக்கிட்டு வரும். பொறுத்து பொறுத்து பாப்பாம். முடியாது. அவன் வீட்டுக்கார மவராசி, எனக்கென்ன வந்ததுன்னு அடுக்களயிலயே எதாவது பண்ணிட்டு உக்காந்துருவா.
‘‘ஏட்டி, இதுவோல என்னன்னு கேளேன்''ம்பான்.
‘‘என்னத்த கேக்க, அதுவும் உங்கள மாதிரி வந்துருக்குவோ''ம்பா அவா.
சுள்ளுனு கோவம் வரும்.
‘‘அந்தானி பொடதில போட்டம்னா அந்துரும். முட்டா செரிக்கி''
‘‘நானா செரிக்கி, உங்க தங்கச்சி செரிக்கி, அக்கா செரிக்கி, நா வந்து இங்க மாட்டுனதுக்கு வேற எந்த எடுபட்ட செரிக்கியாவது வந்து வாச்சிருக்கணும்...''
‘‘இப்ப என்னா கஞ்சிக்கு பிச்சயா எடுத்துட்டு இருக்கட்டி?''
‘‘அது மட்டுந்தா பாக்கி''
‘‘ஏம்...போயம்ட்டி சட்டிய தூக்கிட்டு...வெதம் வெதமா சோறு கெடக்கும்''
‘‘உங்க அக்கா தங்கச்சியள போவ சொல்லும். எங்கப்பன் ஒண்ணும் சும்மா அனுப்பல''
‘‘இந்த வாயி மட்டும் இல்லனா...ஒரு நாய் மதிக்காது''
‘‘உங்க அக்கா தங்கச்சிமாருவளுக்கு வாய் ரொம்ப கொறச்ச...''
அவ்வளவுதான். அங்க எங்க படுக்க?
‘உம் மூஞ்சுல முழிச்சாலும் குடிக்க தண்ணி கெடைக்காதுட்டி'ன்னு வெளில போவான்.
அவ பேச்ச வுடமாட்டா. வீட்டு வாசலுக்கு வந்து ஒப்பாரிய ஆரம்பிப்பா.
பக்கத்து வீட்டுக்கார மரியம்மா புள்ளக்கு ஒரு வெஷயம் மட்டும் புரியல. பகல்ல இப்டி கெடந்து அக்கப்போரு பண்ணுதாவோ. ராத்திரில மட்டும் அணக்கமே இருக்க மாட்டேங்குதன்னு. தெனம் இந்த கூத்துதான். அந்தானி, சந்தையா மடத்துக்கு போவான். வயசாலியெல்லாம் அங்ஙன கொட்டாவி விட்டு தூங்கிட்டு இருப்பாவோ. இவனும் அவங்க கூட கட்டய போடுவான். அதுக்குள்ள தூக்கம் வராம பொரண்டு வார வயசாலியோ யாராவது, ‘ஏம்ல வீட்டுல சண்டயால'ன்னு ஆரம்பிக்கும்.
‘யோவ் பொத்திக்கிட்டு படும்யா...ரொம்ப முக்கியம்'ம்பாம்.
அவரும் விட மாட்டாரு.
‘பின்ன எதுக்குல இங்க வந்து படுக்க...அங்ஙனயே படுத்துக்கிட வேண்டியதான...'
‘ஆமா... இவருட்ட எல்லாத்தையும் எழுதணும்...'ம்னுட்டு தூங்குவாம்.
முழிச்சாம்னா கருக்கலாயிருக்கும்.
எந்திரிச்சு அம்மன் கோயிலு வாய்க்கால்ல குளிப்பான். வீட்டுல வந்து சாரத்தை மாத்திட்டு நிக்கதுக்குள்ள பிள்ளைலுவோலாம் அப்பான்னு வந்து நிக்கும்.
‘கண்ணாடிக்காரிட்ட சேல வாங்கணும், துட்டு கேளுட்டி'ன்னு வீட்டுக்காரி அடுக்களயிலயிருந்து மவள ஏவுவா. காது கேக்காத மாதிரி நிப்பான்.
‘எனக்கும் பாவாட, சட்டை'ன்னு ஆரம்பிக்கும் பிள்ளைலுவோ. பொசமுட்டிட்டு வரும் கருப்ப நம்பிக்கு. செத்த நேரம் பதிலு பேசாம நிப்பாம். இருக்க முடியாது.
அடுத்த வாரம் சேலய எடுத்துக்கோன்னு ஆரம்பிப்பான். அந்தானி, சண்டைதான். வெறுத்து போயி அண்ட்ராயருல இருக்கத எடுத்து கொடுத்துட்டு, கருவேலபறைக்குப் போவான். மாடு மேச்சுட்டு வார பயலுவோலாம் அங்ஙன உக்காந்திருப்பானுவோ. வம்பளப்பு நடக்கும். கண்டத பேசிட்டு வீட்டுக்கு வருவாம். ஒரு நா விட்டு ஒரு நா தான் கூவெலக்கு போவ முடியும். நாளைக்கு ஒரு நா எப்டி கழிய போவுதோன்னு கவலையாயிருக்கும் பயலுக்கு.
மூக்கன் கடக்கு வருவாம். ஊருக்கதைய பேசுவானுவோ. ராத்திரி வாக்குல கௌம்புவாம். பொண்டாட்டி புள்ளைலு தொல்ல தாங்காம படுப்பான். விடியுத வரை ஒரு மண்ணும் தெரியாது.
அவ்வளவுதான்.
4 comments:
அட அதுக்குள்ள கூவெலக்காரன் திரும்ப வந்துட்டானா?
ஆமா அது என்ன //பொசமுட்டிக்கிட்டு வரும்// - என்னனு வெளங்கலையே?
//கால நீட்டிக்கிட்டு கட்டய சாத்துவான்// இந்த வார்த்தய கேட்டு எம்புட்டு நாளாச்சு?
வெயிலான் ஐயா. யாவரம் டல்லு. இதையாவது எழுதிட்டு இருக்கலாமேன்னுதான். அப்புறம் 'பொசமுட்டி'க்கிட்டுன்னா, எரிச்சல்னு சொல்லுதோம்லா, அதை எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தாம் சொல்லுவாவோ.
ஹை! இந்த வாரம் தான் துளசி டீச்சருக்கு முன்னாடி என் பின்னூட்டம் வந்திருக்குது.
யாவாரம் கம்மியா? அதான் ரொம்ப நேரம் வலைத்தளத்துலேயே நோண்டிக்கிட்டு இருக்கீங்களா?
மேய்ச்சல் காட்ட (Template) வேற மாத்தீட்டீங்க போல?
வெயிலான் ஐயா...ஆமா, ஆமா
Post a Comment