Friday, October 5, 2007

ஆட்டுமந்தையிலிருந்து ஒரு காதல்...

தூங்க முடியாத இரவுகளில் நினைவுகளைச் சுமப்பது சுகங்களின் பாக்கியம். நீர்த்துப் போகிற பண்டங்களில் இருக்கிற நீரின் சதசதப்பை உணர்கின்ற தருணம் அது.

நீ உன் கணவனுடனும் நான் என் மனைவியுடனும் இரண்டற கலந்துபோன கால சூழ்நிலையிலும் காதலில் வலிகள் உக்கிரமாகவே இருக்கிறது. நடு நிசியில் எழுந்து அழும் என் குழந்தையை தோளோடு அணைத்துக்கொண்டு மொட்டை மாடியில் உலாத்துகிற நேரம் கூட, சமீபத்தில் சந்தித்த உன் நினைவுகள் என்னை உறிந்து எடுக்கின்றன.

அது கோயில் திருவிழா. நீ வருவாய் என்பதற்காகவே நான் வந்தேன். நான் வருவேன் என்பதற்காகவே நீயும் வந்திருந்தாய். சொந்தங்கள் முன்னிலையிலேயே நலம் விசாரித்தோம். நீ என் மகனையும் நான் உன் மகனையும் முத்தமிட்டோம். அதிகம் பேச முடியாத அந்த சாயங்காலத்தில் எல்லார் முன்பும் நீ கிசுகிசுத்தாய். இரண்டு பேருமே நம் குழந்தைகளாக இருந்திருக்க வேண்டும் என்று.

வார்த்தையால் கொன்றுவிட்டு கண்ணீர்விட்டாய். உன் கண்ணீரின் தகதகப்பிலேயே பிரிந்தோம்.

வானமாக நீளும் ஆசைகளில் ஒன்றிரண்டு நிறைவேறியிருந்தாலும் உன் செம்மறியும் என் வெள்ளாடும் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக ஆகியிருக்கும். அப்படி எந்த கொலைப்பழியும் வந்துவிடாமல் தெய்வங்கள் பார்த்துக்கொண்டது. சாமிகள் பாக்கியவான்கள்.

அப்போது எங்கள் வயலில் சிறுகிழங்கு முளைத்திருந்தது. உன் வயலில் கத்தரிக்காய். இரண்டு வயலுக்கும் பொதுவாக இருக்கும் வடக்குவா செல்வி அம்மன் கோயிலில், உன் ஆசைக்காக பூ போட்டுப் பார்த்தோம். நம் கல்யாணம் நடக்குமென்று அம்மன் சொன்னாள். அன்றிலிருந்து உன் முகம் சிரிப்பை மட்டுமே சுமந்தது. ஆனால், காலம் உன்னையும் என்னையும் பிரித்துவிட்டது. அதே அம்மன் கோயிலில் காதலர்கள் நம்மைப் போலவே இன்னும் பூப்போட்டு பார்க்கிறார்கள். நினைத்த பூ வந்துவிடுகிறது. அம்மன் வைக்கின்ற பூ பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை.

அடுத்த திருவிழா வரும் வரை நம் தவிப்புகள் நமக்குள்.

தொடர்வேன்.

4 comments:

துளசி கோபால் said...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

( கவிஞர் கண்ணதாசன்)

நொய்யனின் தொடர்ச்சி!!!

ஆடுமாடு said...

துளசிம்மா... ஸாரி...ஓவர் பீலிங்.

☼ வெயிலான் said...

இதென்ன, கவிதை நடையில் அடுத்த கதையா?

கதைகள் எல்லாவற்றுக்கும் காப்பிரைட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். திரைப்படங்களில் உபயோகித்து விடப்போகிறார்கள்.

-வெயிலான்.
http://veyilaan.wordpress.com

ஆடுமாடு said...

வணக்கம் வெயிலான் ஐயா. இப்பலாம் திரைப்படங்களில் கதை இருக்கா என்ன? நாலு சண்டை, ஐந்து பாட்டு, அதிகபட்சம் கவர்ச்சி...இதுதான் திரைப்படம். இந்தக் கதைகளை பயன்படுத்தினால் சந்தோஷப்படுவேன்.