'நீயெல்லாம் மாடுமேய்க்கத்தான் லாயக்கு' என்கிற இந்த வார்த்தை எல்லோருக்கும் சுலபமாக வந்துவிடுகிறது. ஒரு சின்ன ஆரஞ்சுமிட்டாய் மேட்டருக்கு கூட இதை சொல்வது வாடிக்கையாகி விட்டது. நான் 5 ம் வகுப்பு படிக்கும்போது, வகுப்பை கட் அடித்துவிட்டு கிணற்றில் குளித்ததற்காக, வகுப்பாசிரியர் கொடுத்த சாபம். 'நீயெல்லாம் மாடு மேய்க்கத்தாம்ல போற'. அவர் வாக்கு மெய்யானதில் கொஞ்சம் சந்தோஷம். கொஞ்சம் வருத்தம். மாடுமேய்த்துக்கொண்டே ஏழாம் வகுப்பு படித்த போது, 'நீ சயின்ஸ்ல பெரிய ஆளா வருவேடா' என்றார் அதே வாத்தியார். அறிவியலுக்கும் என் அறிவுக்கும் வந்த கத்திக்குத்தில் இந்த வாக்குப் பொய்த்துப் போனது. ஒரே வாய். ஒன்று நிஜமாகிறது. மற்றொன்று பொய்யாகிறது.
இந்த மேட்டர் அதை பற்றியல்ல. மாடு மேய்ப்பது அவ்வளவு ஈசியா என்பதை பற்றியது.
ஒரு மாட்டுக்கும் உங்களுக்குமான உறவு மேம்பட குறைந்தது மூன்று மாதம் தேவை. கம்ப்யூட்டர் பற்றி பெரிய அறிவில்லாத என்னை போன்றவர்களை அதுபற்றிய வேலையில் விடுவது போலத்தான் இதுவும். எந்த ஒரு வேலைக்கும் குறைந்த பட்சம் அதுபற்றிய அறிவு கட்டாயம் தேவை. மாடு மேய்ப்பதற்கு இது அதிகம் தேவை என்பதுதான் என் கருத்து. ஒரு மாடு உங்களோடு பழகினால்தான் அதை உங்கள் சொல்படி ஆட்டுவிக்க முடியும். கையில்தான் கம்பு இருக்கிறேதே என நீங்கள் வீராப்பாக விளாசினால் அந்த நிமிடம் மட்டுமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அடுத்தடுத்து நடக்கும் மாடுகளின் விஷப் பரீட்சைகளில் நொந்து நூடுல்ஸாகிவிடுவீர்கள்.
நான்கைந்து மாடுகளை மேய்க்கும் போது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு இழுக்கும். இதில் ஒரு மாட்டுக்கு குஷி வந்து துள்ளாட்டம் போட ஆரம்பித்தால் அதனதன் போக்கில் எல்லாமே குஷியாகி ஆளுக்கு ஒரு இடமாக பிய்க்கும். உங்கள் கையில் கம்பு இருந்தும் கூட அதை விரட்டுவதற்குள் உடல் எடை ஐந்து கிலோ குறைந்துவிடும். பிறகு எப்படி மாடு மேய்ப்பது. அதற்கும் பக்குவம் இருக்கிறது. முதல்முறையாக மாடுமேய்க்க போகிறவர்கள் குறைந்தபட்சம் இரண்டு மாதமாவது மாடு மேய்ப்பவர்களுடன் செல்ல வேண்டும். அவர்களோடு பழகி, மாடுகளோடு பழகி அதுவொரு பிராசஸ். இப்படி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, மேய்ப்பர்கள் இருக்கும்போதே அவர்களை ரெஸ்ட் எடுக்க வைத்துவிட்டு, புதிதாக மேய்க்க வந்தவர்கள் அவற்றைப் பத்த வேண்டும். மேய்க்க விடவேண்டும்.
இதன் தொடர்ச்சியாக மாடுகளை எந்தப் பக்கம் அடிக்க வேண்டும். வாலை எப்படி திருக்க வேண்டும் என்கிற டெக்னிக்கான விஷயங்களும் இருக்கிறது. இதை தெரிந்துகொள்ள வேண்டும். மாடுகளுக்கு சுகம் கொடுக்கும் இந்த முறைகளைத் தெரிந்துகொண்டால்தான் ஒழுங்காக மாடுமேய்க்க முடியும். ஆதலால்...இனி யாராவது உங்களை, 'மாடு மேய்க்கத்தான் லாயக்கு' என்று திட்டினால், அது சாதாரண வேலையல்ல என்பதை திருப்பிச் சொல்லுங்கள்.
8 comments:
ஒருவழியாப் பட்டை போட்டுடுங்க .
தமிழ்மணம் பட்டையைச் சொன்னேன்.
அப்பத்தான் எங்களுக்கும் ஓட்டுப்போட நல்லா இருக்கும்:-)
நான் பூனை மேய்க்கத்தான் லாயக்குன்னு வீட்டுலெ சொல்றாங்க:-)
வாங்க துளசிம்மா. பூனையையெல்லாம் யாரும் மேய்க்க வேண்டாம். அதாவே மேயும். அதனாலதான் சொல்றாங்களோ என்னவோ.
வாலை எப்படி திருக்கனும் என்கிற டெக்னிக்கை சொன்னா, மாடு மேய்க்க வசதியா இருக்குமே... சொல்லாம விட்டுடீங்களே...
எனவே தவறி கூட "ஆடு மாடு மேய்"ன்னு சொல்லிறக் கூடாது :-))
நல்லாருந்துச்சு...
வீராதி வீரன் அய்யா, தெக்கிட்டான் அய்யா உங்கள் வரவுக்கு நன்றி.
நாங்களும் ஊருபக்கம் மாடு மேய்ச்சுட்டு சென்னைல தான்பொழச்சு கெடக்குறோம் maadumeippavan.blogspot.com
நாங்களும் ஊருபக்கம் மாடு மேய்ச்சுட்டு சென்னைல தான்பொழச்சு கெடக்குறோம்
Post a Comment