Thursday, September 20, 2007

நொய்யன்... கேரக்டர் 1

சூரியன் வருதோ இல்லையோ, காலையில ஆறுமணினா டாம்னு சொல்லமாடன் கோயிலுக்கு வந்துருவான் நொய்யன். கன்னம் வரை கொடுவா இழுவி இருக்கும். தலை முடியெல்லாம் கன்னாபின்னான்னு சிதைஞ்சு போயி ஓ ன்னு நிக்கும். இடுப்பு சாரத்தை கரண்டை காலுக்கு மேல தூக்கி கட்டிக்கிட்டு வந்துருவான் கோயிலுக்கு. அதை சுத்தி மண்ணு சொவரு. கீழ படி மாதிரி பெரிய கருங்கல்லு. கல்லுக்கு கீழ பாம்பு, பல்லியோன்னு தூங்கிட்டு கெடக்கும். இவனுக்கு அதை பத்திலாம் கவலை இல்லை. மொத ஆளா போயி, கோயில் கல்லுல குத்த வச்சு உக்காந்துகிட்டு, ஆவ்வ்வ்...னு கொட்டாவி விடுவான்.

கொட்டாவி விடதுக்கா இந்த மூதி காலையிலேயே இங்க வாராம்?ன்னு கேக்காதியோ. ஒரு பீடிய எடுத்து பத்தவச்சுட்டு குப்பு குப்புனு பொகைய விடுவான்.

காலையிலேயே வயலுக்கு தண்ணிபாய்ச்ச, உழன்னு போறவோ போய்ட்டு இருப்பாவோ. யாராவது இவனை பாத்தாவோனா, 'ஏல என்னா.. கோயில்லயே தூங்கிட்டியால'ம்பாவோ. இவன் கல்லுளி மங்கம் மாதிரி, 'ம்ம்ம்...'னு ஒரு சத்தத்தை கொடுப்பாம்.

'என்ன... ம்ங்க...இங்ஙகன உக்காந்து பீடியை குடிக்கவால காலையிலயே வந்து தொலைக்கே' ம்பாவோ.

'ஆமா, தெனமும் கனவுல சொல்லமாடன் வந்து இங்க குத்த வச்சு பீடி குடிச்சா நல்லதுன்னு சொன்னாரு. அதான் உக்காந்திருக்கேன். போவியா...கேள்வி கேக்காம் பாரு'ம்பான்.

கேட்டவன், ஏ அர்தலிக்கு கோவத்தை பாரேன்"ன்னுட்டு போயிருவாவோ. செத்த நேரம் பீடியை சுண்ட இழுத்துட்டு இருக்கவன், கோயிலுக்கு கீழ்ப் பக்கம் இருக்கத வீட்டை பாப்பாம். அங்க தலை தெரியும்.
'யோய்"னு ஒரு சத்தம்.

'ஆங்... வாரேன் வாரேம்'பான் சூச்சமாடன்.

செத்த நேரத்துல வாயில வேப்பங்குச்சியை வச்சுக்கிட்டு வந்து சேருவான். ரெண்டு பேரும் ஒருத்தரு மொகத்தை ஒருத்தர் பாத்துட்டு அங்ஙனயே உக்காருவாவோ. சேக்காளியோ.

'ஏல இன்னைக்கு மாட்டுக்கு எங்க போவலாம்பாம்" சூச்சமாடன்.

'எங்க போவ சொல்லுத?'

'பாப்பாங்கொளத்து பாதையில மாட்டை பாத்திருவோமா?'

'அங்க ஒரு எழவும் இல்லய... வயல்ல உழுந்து போட்டுருக்கானுவோ. போய் வாயை வச்சுட்டுனா வம்பு"

'ஏன் ஆத்துக்குள்ள ஓரமா பத்திட்டு, மணல்ல உக்காந்துக்கிட வேண்டியதான்"

'ச்ச.. இந்த கப்பை கொம்பு எருமையையும், கொம்பு முறிஞ்சதையும் நம்ப முடியாது. செத்த கண்ணை மூடுனா கூட, எவன் வயல்லயாவது விழுந்து வம்பை இழுத்துட்டு வந்துருது. முந்தா நாளு வெவரம் தெரியும்லா'

'மாடுன்னா வயல்ல விழத்தாம்டே செய்யும். அதுக்கு வீட்லயா கெட்டிப் போட்டு வளர்க்க முடியும்?'

'பேசுததுக்கு நல்லாத்தாம்ல இருக்கு. நல்லகண்ணு வயல்ல லேசா வாயை வச்சுட்டு மாடு. மீசையை திருக்கிட்டு வந்துட்டாம். இனும வயல்ல மாடு விழுந்ததுன்னா வீட்டுல கெட்டிருவேன். வருத்தப்படாத'ன்னான். அவங்கிட்ட என்ன சொல்ல முடியுங்க'

'ஆமா, அது சொல்லத்தாம் செய்வாவோ. அதுலாம் பேச்சுக்குதாம்ல. அந்தானி கெட்டிப்போட்டுருவானோ வீட்ல. நாங்கலாம் உட்ருவமோல'.

'ஆங்...கிழிச்ச. ஆறுமாசத்துக்கு முன்னால நாத்துல வாயை வச்சுட்டுனு கன்னுகுட்டிய கெட்டிப்போட்டுட்டான் வயல்லயே. யாரு வந்தா? மயிரை பாரு சொக்கான்னு போயிட்டியோ. நாம்லா கால்ல கையில விழுந்து கொண்டாந்தேன்'

'ஏல அன்னைக்கு நெலமை வேற'

'என்ன வேற'

'அதை விடுல'

'இப்டியே சொல்லு'

சூரியன் கொஞ்சம் கொஞ்சமா மேல வருவான். ரெண்டு பேரும் அப்பத்தா டீக்கடைக்கு கெளம்புவாவோ.

கோயிலைத்தாண்டி, கருவமுள்ளுக்காடு. பக்கத்துல ஒத்தையடி பாதை. சடங்கான பிள்ளைலுவோ இடுப்புல கொடத்தை வச்சுக்கிட்டு பெரியவாய்க்காலுக்கு தண்ணி எடுக்கப் போவும். இதுல பிள்ளைவோலுக்கு இருக்குத போட்டி இருக்கே சொல்லி மாளாது. ஆமா, ரெட்டை கொடம் போட்டு, பத்து நடை தண்ணி எடுத்தாதான் அவ பெரியாளு. சில பிள்ளைலால அது முடியாது. பத்து நடை தண்ணி ஏம்னு கேளுங்க. எல்லாரு வீட்லயும் ஆடு மாடு இருக்கு. மாட்டுவோலுக்கு தண்ணி வைக்க பெரிய தொட்டி. அதை நிறைக்கணும். காலையில தொழுவம் கழுவ, எவ்வளவு தண்ணி எடுத்தாலும் காணாது.

ரெண்டு பேரும் பொம்பளை பிள்ளைலுவோ தண்ணி எடுத்துட்டு போறதையே பாத்துக்கிட்டு நடப்பானுவோ. பஜனை மடம் வரும். மடத்தை தாண்டுனதும் பொன்னன் நிப்பான். நிக்கலைன்னா, அங்ஙனதான் அவன் வீடு. சத்தம் கொடுப்பானுவோ.வருவாம். மாடுமேய்க்கத கூட்டாளிதான். சேந்து போவானுவோ. இவனுவ போய் சேர்ந்ததும், மேல தெருக்காரனுவோ வருவானுவோ. அவனுவளும் மேய்க்கிறவனுவதான்.

அப்பத்தா இவனுவ வந்ததை பாத்ததும் டீயை போட்டுட்டு, 'ஏல சூச்ச மாடா, அஞ்சு லிட்டரு பால் வாங்கியிருக்கேன் உன் வீட்ல. ஏம்ல இவ்ளவு தண்ணியா இருக்கு?'னு ஆரம்பிப்பாம்.

சும்மா எடக்குக்குத்தான். இவனுக்கு சுள்ளுனு கோவம் வரும்.
ஒண்ணும் பேசாம இருப்பாம். மேலத்தெருக்காரனுவோ இதை வச்சு அவங்கிட்ட கிண்டலை ஆரம்பிப்பானுவோ. அவனுக்கு வேசடையா இருக்கும். அவனுவ கூட நொய்யனும் சேந்துக்கிடுவான். போட்டு பாடா படுத்துவானுவோ. இருந்து இருந்து பாப்பான். முடியாது. அந்தானி, துண்டை எடுத்து தோள்ல போட்டுட்டு,'போங்கலை, நான் தெப்பக்குளத்துக்குப் போயிட்டு வீட்டுக்குப் போறம்'னு சொல்லிட்டு நடைய கட்டிருவான்.
அவன் போனதும் கிண்டலு நிக்காது.

மேய்க்க போவும்போது, அவன் பண்ணுன கூத்தெல்லாம் சொல்லி சிரிப்பானுவோ.

(நாளை முடிப்பேன்).

5 comments:

துளசி கோபால் said...

நல்ல நடை.

கூடவெ நாங்களும் டீக்கடையில்
உக்காந்துருக்கோம்:-)

ஆடுமாடு said...

வாங்கம்மா. உக்காந்திருங்க. வந்திடுறேன்.

ஆடுமாடு said...

வாங்கம்மா. உக்காந்திருங்க. வந்திடுறேன்.

☼ வெயிலான் said...

நானும் தெக்கத்திக்காரன்றதுனால ரொம்ப ரசிச்சு படிக்கமுடியுது.
http://veyilaan.wordpress.com

ஆடுமாடு said...

நன்றி வெயிலான் ஐயா.