Tuesday, March 10, 2015

எஸ்.ராவின் சஞ்சாரம்: கலையில் சுழலும் வாழ்க்கை


வாழ்க்கை மட்டுமே எல்லாமுமானதாக இருக்கிறது. திசைகளாகவும் காற் றாகவும் மரமாகவும் செடியாகவும் அது மட்டுமே எங்கெங்கும் நிலை கொண் டிருக்கிறது. விரிகிற சிறகுகளை அசைக்கிற பறவையின் ஆனந்தத்தையும் ஒடிந்த சிறகோடு உயிருக்குப் போராடும் அவஸ்தையையும் வாழ்க்கை தந்து கொண்டே இருக்கிறது. அது தரும் மகிழ்ச்சியில் அல்லது அதிர்ச்சியில் நாம் இழுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் பாய்ச்சலில் நீந்தி ஆக வேண்டிய கட் டாயம் நீச்சல் தெரியாதவனுக்கும் இருப்பது துரதிர்ஷ்டம்தான். அந்த துரதிர் ஷ்டம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை அள்ளித் தெளித்துப்போகிறது. அந்த அனுபவம் மகிழ்ச்சியாகவோ நெகிழ்ச்சியாகவோ கண்ணீராகவோ இருக்கிறது. அப்படியொரு மகிழ்ச்சியை, நெகிழ்ச்சியை, கண் ணீரை அதே உணர்ச்சியோடு நமக்குள் கடத்திப் போகிறது எஸ்.ராமகிருஷ்ண னின் 'சஞ்சாரம்'.


கோயில் கொடைகளில் ஆட்டக்காரிகளுடன் போட்டிப்போட்டு வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வரக்காரர்களை பீப்பிக்காரர்கள் என்றே அழைப்போம். அவர்கள் ஊதும் குழல்களில் இருந்து எப்போ தாவது வடியும் எச்சில்களை கிண்டலடித்துப் பேசியிருப்பதும் நாதஸ் வரத்தில் தொங்கும் சிறுவாளியை வெடுக்கென இழுத்துவிட்டு ஓடிய அனுபவமும் சிறுவயது அறியாமை. அதைத்தாண்டி நாதஸ்வரக் கலை பற்றியோ கலைஞர்கள் பற்றியோ ஏதும் அறிந்ததில்லை. அவர்களது பிரச்னை பற்றியும் சமூகத்தில் அவர்கள் நடத் தப்படும் விதம் பற்றியும் சஞ்சாரத்தில் எஸ்.ரா, விவரிக்க விவரிக்கப் பெரும் சோகம் அள்ளிக் கொள்கிறது நெஞ்சை.

ஊரில் அம்மன் கோயிலுக்குப் பூசை பண்ணும் தாத்தாவின் மகன் களில் ஒரு வர், ஏழெட்டு வருடம் எங்கோ ஓர் ஊரில் போய் நாதஸ் வரம் கற்று வந்தார். அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு எப்போதாவது அவர் வாசிப்பதை மாடு பத்திக் கொண்டு போகும்போது கேட்பதுண்டு. அப்போது அது பெரும் ரசனையை தந்ததில்லை. ஆனால் ஒரு பெருங்கூட்டம் அவர் முன் அமர்ந்து அந்த இசையைக் கேட்டு தலையாட்டுகையில் ஏதோ அதில் இருப் பதாக நினைத்துக்கொள்வேன். அந்த ஞானம் எனக்கில்லை என்றாலும் அந்தப் பெருங்கூட்டம் சொல்லும் வார்த்தைகளை அந்த நாதஸ்வரக் கலைஞர் கால் தொட்டு கேட்கும்போது எனக்கு அதன் மீது மரி யாதை வந்தது. இந்த நாவலில் வரும் பக்கிரியாக அந்த தாத்தாவின் மகனை  நினைத்துக் கொண்டேன்.


 கம்பீரமாக, திமிராக, இறுமாப்பாக, ஆளுமையாக இருந்த நாதஸ் வரக் கலை ஞர்களின் காலம் போய்விட்டது. நகை நட்டுகளுடனான அவர்களின் தோற் றம் தரும் ராஜகளையை கோயில் கொடைகளில் வாசிக்கும் கலைஞர்களிடம் இன்றும் பார்க்க முடிகிறது. ஆனால், சஞ்சாரம் வாசித்த பின், அவர்களின் வாழ் வில் காய்த்துத் தொங்கும் கவலைகளையும் பிரச்னைகளையும் அவமானங் களையும் அந்தக் கலைஞர்கள், நாதஸ்வரத்தின் வழி மறக்க முற்படுவதாக நினைத்துக் கொள்வேன் என நினைக்கிறேன்.

பக்கிரியும் ரத்னமும் கோயிலுக்கு வாசிக்கப் போன இடத்தில் வந்து விடுகிற அடிதடி, ஜாதிப்பிரச்னை காரணமாகிவிட அடுத்தடுத்து நடக்கும் பயணங்களி ல் விரிகிறது கிளைக்கதைகள். ஒவ்வொரு கதைக்குள்ளும் பெருமைமிகு நாதஸ்வரக்காரர்கள் பற்றி, அதைக் கற்றுக் கொண்டது பற்றி, வட நாட்டுக்குச் சென்ற நாதஸ்வரக் கலைஞர்கள் பற்றி அங்கு அந்தக் கலைச் செத்துப்போன து பற்றி ஏராளமானத் தகவல்களைச் சொல்கிறது சஞ்சாரம்.

படையெடுத்து வந்த மாலிக் காபூர் பற்றியும் அவனின் கலை ஆர்வம் பற்றியும் வருகின்ற சிறு பகுதி சிறப்பு. நாதஸ்வரம் கற்க லண்டனில் இருந்து வருகிற அந்த வெள்ளைக்கார ஹாக்கின்ஸ், இங்குள்ள பெண்ணின் காதலை கற்றுக் கொண்டு கேஷுவலாக தாலிக்கட்டிக் கொண்டு போகும் எபிசோட், காட்டுத் தேவதை கடம்பியின் காதலுக்குள் விழுந்து மாயும் ஜமீன் என நாவலுக்குள் விரவிக்கிடக்கும் சிறு சிறு கதைகள் பெரும் ரசனையை தருகிறது. 

காதல் பற்றி எழுதும் போதோ அல்லது மனதுக்குப் பிடித்த ஏதோ ஒன்றை எழு தும்போதோ எழுத்து தன்னையே எழுதிக் கொள்கிறது என்கிற ஆச்சரியத் தை ஆச்சரியமின்றி தந்து போகிறது ஜமீன்-கடம்பி காதல் பகுதி. 

நாதஸ்வரம் லேசுபட்ட கலையல்ல. எந்தக் கலையுமே சாதாரண மானதல்ல. அதை  தவம் மாதிரி படிக்கும் அந்த கலைக்காரர்களும்  அவர்கள் மீதான மரியா தையும் கால மாற்றத்தில் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்துகொண்டிருப்பது வேதனைதான். சஞ்சாரம் அதைச் சரியாகவே படம் பிடித்திருக்கிறது.

2 comments:

துபாய் ராஜா said...

தங்கள் அனுபவத்தையும் கலந்த விமர்சனம் நாவல் படிக்கத் தூண்டுகிறது.விரைவில் வாசிப்போம்.

Unknown said...

இன்றைய கால கட்டத்தில் நாட்டுபுற கலைகள் அனைத்தும் அழிந்து விடும் சூழ்நிலை வந்து விட்டே இருக்கிறது..

மலர்