Friday, October 24, 2014

கொடை


வானம் கூராந்திருந்தது. சுள்ளென்று அடித்துப் படர்ந்த வெயிலை கொண்ட வானம், ஒரே நொடிக்குள் இப்படி கருநிறத்துக்கு மாறியிருந் தது அதிசயம்தான். அனல் கக்கிய காற்று திடீரென குளிர்ந்து, சூழலை மாற்றியது. எங்கிருந்தோ பலத்த சத்தத்துடன் வேகமாகக் வீசத் தொட ங்கிய காற்று, மரங்களை அசைத்துவிட்டுச் சென்றது. கிழக்கே, மழை பெய்யத் தொடங்கி இருக்கும். அனேகமாகப் பாப்பாங்குளம், சலுப்ப க்குடி, மஞ்சப்புளிச்சேரிகளில் மழை கொட்டிக் கொண்டிருக்கலாம். லேசாகக் குளிரத் தொடங்கியது. இன்னும் சிறிது நேரத்தில் இங்கும் விளாச இருக்கிறது பெரும் மழை.
வடக்குவா செல்வி அம்மன் கோயில் வாசலில் நிற்கும் ஆலமரத்தின அடியில் நின்றுகொண்டு மேய்ந்துகொண்டிருந்த வெள்ளாடுகளைப் பார்த்தான் முப்பிடாதி. கருப்பசாமி தோப்புக்குள்ளிருந்து வாய்களை அசைத்தபடியே வரப்பில் தாண்டி குதித்து அம்மன் கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தன. இரண்டு மூன்று மழைத் துளிகள் உடலில் விழுந்து, ஈரம் தந்தது. தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அதைத் துடைத்து விட்டு, எதிர்திசையில் பார்த்தான். வயல்வெளி களைத்தாண்டி இருக்கிற ஆற்றின் கரையோர மரங்கள், வேகமாக ஆடத் தொடங்கி விட்டன. பேய் பிடித்தப் பெண்கள் தலைவிரித்தாடு வது போல, தென்னை மரங்கள் அங்கும் இங்குமாக சத்தத்துடன் அலைந்து கொண்டிருந்தன. அந்தச் சத்தம் திடீரென அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தது.

 சத்தம் கொடுத்துக்கொண்டே கிழக்கில் இருந்து மழை விரட்டிக் கொண்டு வந்தது. இடுப்புச் சாரத்தை மடித்துக் கட்டியபடி கிழக்கே தெப்பக்குளத்தைப் பார்த்தான் முப்பிடாதி. எதுவும் தெரியவில்லை. குளத்தின் அருகில் இருக்கிற புளியமரங்கள் கூட தெரியவில்லை. மழை அந்தப் பகுதியை கருங்சுவர்போல் மறைத்து, வேகமாக வந்து கொண்டிருந்தது. இன்னும் சில நொடிகளில் நனைந்து விடுவோம் என்று நினைத்த முப்பிடாதி, அம்மனுக்கான சப்பரம் வைக்கப்பட்டிரு க்கும் அறையின் முன்பகுதியில் போய் நின்றான். துண்டை மேலோடு போர்த்திக் கொண்டான். அது முழுவதுமாக மூடிவிடவில்லை. குளிர் கொஞ்சம் அதிகமாக இருந்தது. எதிர்வயல்வரப்பில், புல்லறுத்து சுமந்து கொண்டு வரும் மேலத்தெரு செல்லம்மா மைனி ஓட்டமாக வந்து கொண்டிருந்தாள். மழையில் முழுவதுமாக நனைந்திருந்தாள் அவள்.
மேற்கில் இருந்தும் சிலர் கோயிலைத் தேடி வருவதைப் பார்க்க முடிந்தது. வெள்ளாடுகள் தலையை ஆட்டிக்கொண்டே வேகமாக வந்து ஆலமரத்தின் முன் நின்றன. வெள்ளையில் கரும்புள்ளி போட்ட இரண்டு திருக்கு வெள்ளாடு மட்டும் இவனை நோக்கி வநது வயிறை அவன் காலில் தேய்த்தது. கோயிலுக்கு நேர்ந்து விட்டிருக் கிற கிடா.

'இந்தப் பக்கமா வந்து நில்லு' என்று அதனிடம் சொன்னான் முப்பிடா தி. அது அதைக் கேளாமல் அவன் காலில் வயிறை உரசுவதிலேயே குறியாக இருந்தது. 'என்னமும் கடிக்காடா' என்று அதன் வயிற்றைத் தடவினான். சுகம் கண்ட கிடா, முகத்தைத் திருப்பி அவனைப் பார்த்தது. பிறகு 'இந்தப் பக்கம் வந்து நில்லு. நனைஞ்சிர போற' என்று அதன் கொம்பை இழுத் தான். அவனின் அக்கறையை கேட்டுக்கொண்ட கிடா, மறுபக்கம் வந்து நின்று தரையில் புற்களை வேண்டா வெறுப்பாகக் கடித்துக் கொண் டிருந்தது.

மழை சோவென கொட்டத் தொடங்கிவிட்டது. சிறு புள்ளியாக மண் ணில் விழுகிற மழைநீர், காய்ந்த தரையை வேகமாக ஈரமாக்குவதைப் பார்த்தான் முப்பிடாதி. டொப் டொப்பென்று விழுகிற மழைத்துளி கண் ணிமைக்கும் நேரத்தில் ஈரமாக்கியது தரையை. முப்பிடாதி எதிரில் பார்த்தான். வாய்க்காலில் தண்ணீர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஏற்கனவே துணி துவைத்துக் கொண்டிருந்த மரகதப்பாட்டி, எழுந்து ஆலமரத்தின் அருகில் வந்து நின்று கொண்டாள்.

மழை பெய்துகொண்டிருக்கும்போது ஆற்றில் குளிப்பது இனிமையா னது. முப்பிடாதி அதுபோல பல முறை குளித்திருக்கிறான். ஒரு கோடையில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும்போது ஆளரவமற்ற ஆற்று மண்டபத்துக்குள் இருந்தான் முப்பிடாதி. வெண்ணிற மணல்களால் நிரம்பியிருந்த ஆற்று மண்டபத்துக்குச் சோம்பேறி மடம் என்றும் பெயர். இங்கு வந்து படுத்தால் நம்மை அறியாமலேயே வரும் தூக்கம். அப்படியொரு நாள் ஆற்றுக்குள் இறங்கியபோது, திடீரெனக் கொட்டியது மழை. இதை அவன் எதிர்பார்க்கவில்லை. சாரத்தை அவிழ்த்து மண்டபத்துக்குள் வீசிவிட்டு அம்மணமாக ஆற்று தண்ணீருக்குள் உட்கார்ந்து கொண்டான். இடுப்பளவு ஆழம்தான் அதில். வென்னீர் மாதிரி கொதித்து வந்து கொண்டிருந்த தண்ணீர், இடுப்புக்குக் கிழே சூடாக இருக்க, மேலே விழுகின்ற மழைத்துளி குளிரைத் தர, குளிரையும் சூட்டையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் இன்பத்தை அடைந்தான். அரை மணி நேரம் அடித்து ஓய்ந்த மழையில் பிறகு சூடு மறைந்து குளிர்ந்து வந்தது தண்ணீர். அப்படியொரு அனுபவம் அலாதியானது.

 மழையின் சத்தம் இனிமையாக இருக்கிறது. அது சோவென பெய்யவில்லை. வேறு ஓர் இனிமையான சத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மணி நேரம் இந்த மழை நின்று பெய்யும் என நினைத்துக்கொண்டான் முப்பிடாதி. இப்போது தேவையான மழை இது. இடது பக்கம் ஆற்றுப் பாலத்தில் செல்லும் நான்கு மணி கொல்லம் ரயிலின் தட தட ஓசையை கேட்டுத் திரும்பினான். நனைந்தபடி கத்திக் கொண்டிருந்தது அது.

இன்றைக்கு ரயில் பாலத்துக்கு பக்கத்தில்தான் ஆடுகளை மேய்க்கத் திட்டமிட்டிருந்தான். சென்றிருந்தால் நனைந்திருப்பான். மேல நாராயணசாமி கோயில் சாமியாரின் பேத்திக்கு இன்று சடங்கு. அம்மாவுக்கு உடல் நலமில்லாததால் இவன் போய், மொய் செய்துவிட்டு சாப்பிட்டு வர வேண்டியதாகிவிட்டது. அதனால் பக்கத்திலேயே அம்மன் கோயில் எதிரிலேயே மேய விட்டிருந்தான்.

முழுவதுமாக நனைந்து வந்த செல்லம்மா மைனி, இவனைப் பார்த்து,  'யாரு கொழுந்தம்லா நிய்க்காப்ல இருக்கு. கொஞ்சம் நவுரும்யா' என்று சொல்லிவிட்டு புற்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியைக் கீழே வைத்தாள். பிறகு சும்மாடாக வைக்கப்பட்டிருந்த துண்டைப் பிரித்து முகத்தையும் கை, கால்களையும் துடைத்தாள். கருத்தவள் என்றாலும் திடமான உடற்கட்டைக் கொண்டவள் மைனி. அவள் தெரு பயல்கள், 'கட்ட முண்டு' என்று பட்டப் பெயர் வைத்திருக்கிறார்கள். வாட்ட சாட்டமாக இருக்கிற மைனியை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் அவள் வீட்டுக்கு வெளியே அலைவதுண்டு.
நனைந்த மேல் சட்டை உடலோடு அப்பி, அவளது வல பக்க நெஞ்சு ஒரு ஒரமாகத் தெரிந்து கொண்டிருந்தது. நனைந்த முந்தானையை அவள் இழுத்து விட்டுக் கொண்டாலும் அந்த இடம் முந்தானைக்குள் அடங்கவில்லை. முப்பிடாதி வானத்தைப் பார்ப்பது மாதிரி முகத்தை மேல்நோக்கி வைத்தபடி, கண்களை கீழிறக்கி அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று நல்ல பிள்ளையாகி, 'ச்சே கோயிலு பக்கத்துல வச்சு இதென்ன எண்ணம்?' என்று தனக்குள் நினைத்துக் கொண்டு பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

மழை ஒரே சீராகப் பெய்துகொண்டிருந்தது. இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் கோயிலில் பூஜை பண்ணும் நாராயண கம்பர், ஒரு கையில் சைக்கிள் ஹேன்டில்பரையும் மறுகையில் குடையையும் பிடித்துக் கொண்டு மெதுவாக ஓட்டி வந்தார். சைக்கிளின் முன் பகுதியில் பூக்கூடைத் தொங்கிக் கொண்டிருந்தது. போகும்போது இருவரையும் பார்த்துக்கொண்டு போனார் கம்பர். மழைவிட்டால் அக்ரஹாரத்தில் இருந்தும் மேலத் தெருவில் இருந்தும் பெண்கள் சாமி கும்பிட வருவார்கள்.

தலையையும் கை, கால்களையும் துடைத்து முடித்துவிட்டு, 'என்ன கொழுந்தப்பிள்ள, ஆளையே பாக்க முடியலயே. ஆழ்வாரிச்சுல படிக் கியோன்னாவோ. நாலஞ்சு நாளா ஆட்டை மேய்ச்சிட்டிருக்கியோ?'  என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் அந்த மைனி.

'இப்பம் லீவுலா. அதான்'

'செரி, என்ன படிக்கேரு?'

'பன்னென்டாப்பு முடிச்சாச்சு. காலேஜு போணும்'

'இனுமதான் காலேஜுக்கு போறேரா? நான் என்னமோ நிறைய படிச்சு முடிச்சுட்டேரு. நாளைக்கே பொண்ணு பாக்கணும்னுலா நினைச்சிட்டி ருக்கேன்' என்றாள் சிரித்துக்கொண்டே.

 'மொசப்புடிக்க நாய மூஞ்ச பாத்தா தெரியாதா?' என்பது மாதிரி பெண்களுக்கு எல்லாம் புரிந்து விடுகிறது. ஒரு பார்வையிலேயே எல்லாவற்றையும் கணித்து விடுகி றவளாக இருக்கிற மைனியைப் பார்த்தான் அவன். சிரித்தான். ஊரே விரட்டி விரட்டிப் பார்க்கிற பெண்ணாக, இளசுகளின் ஏக்கமாக இருக்கிற மைனி, இதே போல எத்தனைப் பார்வைகளை எதிர் கொண்டிருப்பாள். இன்று நேற்றல்ல, பெரிய மனுஷியாக ஆனதில் இருந்து அவளை மோதி, குத்திச் சென்றிருக்கிற பார்வைகள் அவளுக்கு அனைத்தையும் சொல்லி போயிருக்கும். அதிலிருக்கிற பாசத்தை, ஏக்கத்தை, காமத்தை, காதலை எல்லாவற்றையும் முட்டி மோதி வந்தவளாகத்தான் எல்லா பெண்களுமே இருப்பார்கள் என்று நினைத்த நொடியில், கோயிலுக்குள் மணி சத்தம் கேட்டது.

இன்னும் ஆள் யாருமே வராதக் கோயிலுக்குள் கம்பர் ஏன் மணி அடிக்க வேண்டும் என்று நினைத்தான் முப்பிடாதி. நடக்கும்போது அவரது உடல் அதன்மீது பட்டிருக்கலாம் என நினைத்துக் கொண் டான்.
மழை இப்போது லேசாகியது. பெருமழை மறைந்து சிறு தூரலாக மாறி யிருந்தது.

'யப்பா விட்டுச்சே' என்ற மைனி, 'கொழுந்தபிள்ள, தூக்கி விடும்யா' என்றாள். முப்பிடாதி புல்கட்டு இருக்கும் பெட்டியைத் தூக்கினான். அப்போது அவள் கைகள், அவன் கைகளை அழுந்தப் பிடித்தன. நரம்புக்குள் மின்னல் ஊடுருவி, நடுக்கத்தை அவனுக்குக் கொடுத்த அடுத்த நொடி, அவள் முகத்தைப் பார்த்தான். ஒன்றுமே தெரியாதது மாதிரி கமுக்கமாகச் சிரித்துக்கொண்டு நடந்தாள் அவள்.

மண் சாலை முழுவதுமாக மழைத்தண்ணீர் ஓடி வந்துகொண்டிருந்தது. அப்படியே வாய்க்காலில் போய் விழுவதற்கு ஓடிச்செல்லும் தண்ணீர். கலங்கலாக வருகிற அந்தத் தண்ணீரில் கால்வைத்து இறங்கினான் முப்பிடாதி. நனைந்த மண்ணின் வாசனை எழுந்து வீசிக்கொண்டிருந்தது. அந்த வாசனையை ரசித்தவனாக நடந்தான். ஆடுகள் உடலை ஆட்டிக் கொண்டு ஆலமரத்தின் கீழே நின்றன. கிளைகளும் இலைகளும் அடர்ந்த அம்மரத்தின் கீழ், மழை பெய்யாததால் வட்ட வடிவில் காய்ந்த தரை இருந்தது. அதில் வயலுக்குச் சென்று வந்திருந்த சுப்பையாவும் கருப்பனும் ஒதுங்கியிருந்தனர். முப்பிடாதியைப் பார்த்த ஆடு கள், ம்மே என்று சத்தம் கொடுத்தன.
'வாங்க போவும்' என்றான் ஆடுகளை. அவன் பின்னே அவை நடக்கத் தொடங்கின. செம்மண் தரை சகதியாகக் காலில் அப்பியது. கண்டு கொள்ளாமல் நடந்துகொண்டிருந்தான்.

எதிரில் கிராமத்துப் (அக்ரஹாரத்து) பிள்ளைகள் நான்கைந்து பேர் கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கொலுசு சத்தம் காற்றைக் கிழித்து சுகமான ஒலியை தந்துக்கொண்டிருந்தது. இரண்டு கால்களின் கொலுசு சத்தம் இனிமையானது.  ஒரு வித மயக்கம் தரக் கூடியது. மனதின் இருளை நீக்க வல்லது. அல்லது தூங்கும் நெஞ் சைத்தட்டி எழுப்பக்கூடியது. நான்கு பெண்களின் அதாவது எட்டுக் கால்களின் கொலுசு சத்தம் அதிக மயக்கத்தை அவனுக்குக் கொடுத்தது. சாரத்தை இடுப்பில் இருந்து இறக்கிவிட்டு அந்தப் பெண்களைப் பார்த்தான். அவனுடன் படித்த சுபலட்சுமியும் பூர்ணாவும் கையில் பூக் கூடையுடன் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களருகில் கொண்டை ஐயர் மகளும் ராஜம் டீச்சர் மகளும் பட்டுப்பாவாடையில் வந்தார்கள்.

சுபலட்சுமியை அவன் பார்த்ததும் சட்டையில்லாத மேனியைத் துண்டால் மூட முயற்சித்தான். அச்சிறு துண்டு மேனியை மூட, போதுமானதாக இல்லை. பிறகு அப்படியே தொங்கவிட்டவாறு லேசான வெட்கத்துடன் அவர்களைப் பார்த்தான். மற்றவர்கள் பார்த்து விடாதவாறு சுபலட்சுமி அவனைப்பார்த்து புன்னகைத்தாள். இவனுக்குள் உடல் ஏனோ ஆடியது. சின்ன பதட்டம் மேனியெங்கும் திடீரென பரவி கிளர்ந்தது. கண்களைக் கீழிறக்கி தரை பார்த்தான். பின்னால் வந்த ஆடுகளில் சில அவனை முந்திச் சென்றன. இவனைக் கடந்து சென்ற அவர்கள் சில அடிகள் தாண்டியதும் தங்களுக்குள் முணு முணுத்தபடி க்ளுக்கென சிரித்துக் கொண்டார்கள். முப்பிடாதி, தனது பட்டப்பெயரான வக்கெட்டை என்பதைச் சொல்லிதான் சிரிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

வக்கெட்டை என்பதற்கு நோஞ்சான் என்றும் பொருள். கை, கால்களில் வங்கு படர்ந்து இருப்பதும் எலும்பும் தோலுமாக காய்ந்த தென்னமட்டை போல உடல் இருப்பதும் எண்ணெய் தேய்க்காத செம்பட்டை முடியும் அவர்கள் வக்கெட்டை என்று சொல்வதற்கு வாய்ப்பாக இருந்தன. முதலில் தெருக்காரர்கள் சொல்லும்போது கோபமாக வந்தது. பிறகு பழகிவிட்டது. இருந்தாலும் பெண்கள் அதுவும் உடன் படிக்கும் பெண்கள் அப்படிச் சொல்லிச் சிரிப்பதை மனம் ஏற்க மறுக்கிறது.

அவன் யோசனையை கலைத்தவாறு இன்னும் சில பெண்கள் கையில் குடைகளுடன் கோயிலுக்கு வந்துகொண்டிருந்தனர். அவர்கள் தலையில் இருந்த பூவாசம் மூக்கைத் தாக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆண்களின் ஆசையோடு விளையாடும் ஒன்றாகி இருக்கிற பூ. பெண் பூ. கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பூவாடையின் ஊடுருவலுக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டான். கண்களை மூடி அந்த வாடையை ரசித்தான். அந்த வாடை, இன்னும் தேவையாக இருந்தது. நாமும் கோயிலுக்குப் போகலாமா என்று நினைத்தான். ஆடுகளை வீட்டில் விட்டு விட்டு வரலாம் என்று சொல்லியது மனம். வந்தால் சுபலட்சுமி இருப்பாளா தெரியது. அவள் இப்படித்தான். வருவாள் என்று தேடிப் போனால் வர மாட்டாள். எந்த ஆயத்தமும் ஆடை அலங்காரமும் இல்லாமல் எங்காவது சென்றால் கண்முன் வந்து நின்று புன்னகைப்பாள். சாகசக்காரியாக இருக்கிறாள்.
இப்படியே விட்டால் கூட ஆடுகள் வீட்டுக்குப் போய்விடும். அதற்கு பழக்கமான தெருதான்.

ஆடுகள், ரைஸ்மில் தாண்டியதும் இடதுபக்கம் வளர்ந்து நிற்கிற கருவை மரங்களில் அதன் காய்களைக் கடித்து அரைத்துக் கொண்டிருந்தன. இந்த ஆடுகளுக்கெனவே வளர்ந்து வளைந்து தரை நோக்கித் தொங்கியிருந்தன காய்கள். சிறிது நேரம் அதை வேடிக்கைப் பார்த்தபடியே நின்றான் முப்பிடாதி. அம்மன் கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அதற்கு மேல் அவனுக்கு அங்கு நிற்க முடியவில்லை.

கோயில் நோக்கி நடந்தான். சட்டையற்ற மேனி கொஞ்சம் உறுத்தியது. அவள் மட்டும் தனியாக வந்தால் பரவாயில்லை. நான்கைந்து பெண்களின் பார்வைகளை, சட்டையில்லாமல் காண சங்கடமாக இருந்தது அவனுக்கு. கோயிலைத் தூரத்தில் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்.
எதிரில் சைக்கிளில் வேகமாக வந்துகொண்டிருந்த பக்கத்து வீட்டு முத்துசாமி, 'ஏல, சீக்கிரம் வா. உங்கம்மாவ டாக்டரு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காவோ' என்றான்.

முப்பிடாதிக்கு அதிச்சியாக இருந்தது.

'எதுக்குல?'

'தெரில. எங்கம்மாதான் சொல்லிட்டு கூட்டியாரச் சொன்னா' என்றான் முத்து.
ஆடுகளை அப்படியே விட்டுவிட்டு அவன் சைக்கிளின் பின்னால் உட் கார்ந்துகொண்டான். 'அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிரக்கூடாது தாயே' என்று வடக்குவா செல்வி அம்மனை, கண்கள் மூடி வேண்டிக்கொண்டான்.

(தொடரும்)

No comments: