Wednesday, July 10, 2013

மீன் வாசம் தேடும் பூனை

புழுதிமண் கிளம்பி எழும் பாதைகள், சிமெண்ட் சாலைகளுக்குள் அமுங்கிவிட்ட பிறகு ஊருக்குள் மிஞ்சியிருப்பது ஞாபகங்களும் அதற்கான அடையாளங்களும்தான். செடிகள் கிளை விரித்து இருக்கிற சிதைந்த கோயில் கோபுரம், எங்கோ சரிந்து கிடக்கிற கல்மண்டபங்கள், முட்கள் அடைந்து கிடைக்கிற தூர்ந்து போன பொதுக்கிணறுகள், மண்ணுக்குள் முகம் புதைந்திருக்கிற படித்துறைகள், கை, கால் உடைந்த கற்சிலைகள், செங்கற்களாகவும் கற்தூண்களாகவும் அனாதையாக நிற்கிற கட்டிடங்கள்... இன்னும் இன்னுமாய் நீங்கள் பார்க்கிற ஏதாவது ஒன்றில் சிதையாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது ஒரு வரலாறு. அது உங்களுக்கானதாகவோ நமக்கானதாகவோ இருந்திருக்கலாம். அப்படியான வரலாறுகளைக் கொண்டிருக்கிற கிராமங்களில் வாழ்ந்த/வாழும் எளிய மனிதர்கள் பற்றிய கதைகள் இவை. கதைகள் என்பதை விட அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாறாகவும் இதை கொள்ளலாம்.

ஊர் என்பது அங்குள்ள மக்களை குறிப்பது என்பதை போல இத்தொகுப்பை, ‘இது அவரைப் பற்றியது இவரைப் பற்றியது’ என்பதை விட ஒரு கிராமத்தின் கதையாகவே பார்ப்பது பொறுத்தமாக இருக்கும். இந்த கட்டுரைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிற மனிதர்கள், என் தலையில் செல்லமாகக் குட்டி ஓடி ஒளிந்துகொள்ளும் சிறுபிள்ளைகளாக, என் கண்களைக் கட்டிவிட்டு கைதட்டி மகிழ்பவர்களாக, என் முதுகில் உப்புமூட்டை ஏறிக்கொள்பவர்களாக, என் கண்ணீரை துடைப்பவர்களாக, என் சிரிப்பில் பங்கெடுப்பவர்களாக எப்போதும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். வாழ்க்கையின் உந்துதல்களில் சிறகுகள் இல்லாமல் வெவ்வேறு ஊர்களுக்குப் பறக்கக் கற்றுக்கொண்டாலும் என் கண்கள் எப்போதும் அடைகாத்து வைத்திருக்கிறது வாழ்ந்த ஊரையும் பழகிய மக்களையும். அவர்களின் காலடி தடங்களைத் தேடியே என் மனம் எப்போதும் அலைந்துகொண்டிருக்கிறது.

பிழைப்புக்காக இடம்பெயர்ந்து இருபதாண்டுகள் ஆனாலும் மீன்குழம்பு வாசம் கண்டு வீட்டையே சுற்றிச் சுற்றி வருகிற பூனையைப் போல எப்போதும் ஊரைச் சுற்றி வருகிறதென் மனது. இப்படியொரு அடிமை நிலையை ஊர் எப்படி எனக்குள் திணித்தது என்பது புதிராகவே இருக்கிறது. புதிது புதிதான மனிதர்கள், புதிது புதிதான வேலை, புதிது புதிதான வாழ்க்கை முறை என புதிது புதிதாக எதை சந்திக்க நேர்ந்தாலும் ஊரின் பழைய சோறும் காண துவையலும் உப்பு தூவிய மாங்காய் துண்டுகளுமே நாக்கில் ருசியாய் நிற்கிறது. ஓடி ஆடிய தெருவும் அத்தெருவின் புழுதியும் வாய்க்காலும் கிணறுகளும் வயக்காட்டுக் காவலும் ஆடுகளும் மாடுகளும் அடைகாக்கும் கோழிகளும் எப்போதும் என் நெஞ்சில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

வீட்டின் வாசலருகே விழுந்து கிடக்கும் வெண்ணிற முருங்கைப் பூக்களைப் பெருக்கிக் கொண்டே பெரியாச்சி சொன்ன கதைகளும் அவளில்லாத நாட்களில் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் பாட்டிகளும் தாத்தாக்களும் சொன்ன கதைகள்தான் என்னையும் கதை சொல்லியாக்கி இருக்கிறது.
தலையில் தலைப்பாகையோடும் கையில் சுருட்டோடும் அலைகிற தாத்தாக்களும் மாமாக்களும், சித்தப்பாக்களும் முந்தானையில் பொறி அரிசியையும் அவிச்ச பயித்தங்காயையும் வைத்துக்கொண்டு தின்ன கொடுக்கிற பாட்டிகளும் சித்திகளும் அத்தைகளும் அதிகாரம் கொண்ட எல்லா அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மேலாகவே எனக்குத் தெரிகிறார்கள். அவர்களின் வெற்றிலைப் பெட்டிக்குள்ளும் வேட்டி மடிப்புக்குள்ளும் கூட மனிதமும் மனிதாபிமானமும் பத்திரமாகப் பாதுக்காக்கப் பட்டிருக்கிறது. கூடவே வெடுக்கென பாய்கிற கோபமும்.

இந்த மனிதர்கள்தான் எனக்கு நித்தம் ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நடை, உடை, பாவனையில், சிரிப்பில், வெறுப்பில், அன்பில், கொண்டாட்டத்தில் இருந்து தினம் ஒரு சேதி கிடைக்கிறது. இவர்கள் எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் வாழ்வின் பெரும் தத்துவங்களை மறைமுகமாகச் சொல்லிப் போகிறார்கள். இவர்களின் வயல்களில் குழைந்திருக்கிற சகதிக்குள் முங்கி எழுவதையே எனக்கான சிறப்பாகக் கருதுகிறேன். அந்த சகதியில் இருந்துதான் எனக்கான வாழ்வை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த மனிதர்கள் முழுக்க முழுக்க கற்பனையானவர்கள் அல்ல. கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம். அவ்வளவுதான்.

-எனது 'ஆடு மாடு மற்றும் மனிதர்கள்' தொகுப்புக்கான  என்னுரை.

2 comments:

சேக்காளி said...

//உப்பு தூவிய மாங்காய் துண்டு//
வாசிக்கும் வாயில் எச்சில் ஊறவில்லையென்றால் அது நிச்சயமாய் அதன் ருசி அறியாத நாவாய் தான் இருக்கும்.

இராஜராஜேஸ்வரி said...

ஒரு கிராமத்தின் கதை ...!