Sunday, February 24, 2013

மனதின் விளையாட்டு

மனம் ஒரு பெருங்கடலை, புயலை, அன்பை, ரணத்தை, வன்மத்தை, காதலை தனக்குள் பதுக்கி வைத்திருக்கும் ஆழ்கருவி. அந்த கருவி, கனவை நனவாக்கும் நனவை கனவாக்கும். நல்லவன் & கெட்டவன் என்கிற எதிர்ப்பதங்களை உருவாக்கும். எல்லோருக்குள்ளும் இருக்கும் சிறு நோயை பெரு நோயாக்குவதும் அதுதான். அப்படிப்பட்ட நோயை தாங்கியவனாகத்தான் நாராயணன் என்கிற நாரா இருந்தான். அவனை மனநோயாளி என்று சொல்லிவிடமுடியாது. சொல்லாமலும் இருக்க முடியாது. அவன் தோற்றமும் நடை, உடை பாவனைகளும் அதிகம் படித்தவனைப் போல் தெரிந்தாலும் அவன் அப்படியில்லை. உள்ளூரில் எட்டாம் வகுப்பை முடித்துவிட்டு படிப்புக்கு டாடா காட்டியவன். அவன் முகத்தில் தெரியும் கம்பீர களையும் அணியும் உடைகளும் பணக்கார வீட்டுப் பிள்ளையாகத் தோன்றும்.

‘‘ஏலெ நாரை, ஒன்ன மட்டும் பாரதிராசா பாத்தார்ன்னா, நடிக்க கூட்டிட்டுப் போயிருவார்ல’’ என்று வீட்டு வாசலில் நெல்லை காயப்போட்டுக் கொண்டே மூக்கம்மா சித்தி சொல்வாள். அவளுடன் சேர்ந்துகொண்டு, ‘‘பெறவு நாரைக்கு பொண்ணுகொடுக்க ஊரெல்லாம் போட்டிதான், போ’’ என்பாள் பிரேமா அத்தை.

‘‘நாரை நாரைன்னு கூப்புடாதியோ’’ என்று வெறுப்பை காட்டிவிட்டு, ‘‘புது நெல்லு புது நாத்து, சூட்டிங்கு நம்ம கொளத்து கரையிலதான நடந்தது. அப்பம் பாரதிராசாவ பாத்தேன். எங்க நடிக்க கூப்டுருவாரோன்னு நா தான் அவருகிட்ட போவல’’ என்பான் நாரா.

‘‘அப்டியா?’’ என்றவாறு பேச்சு நடக்கும். எடக்கும் பேச்சுமாக எப்போதும் அலையும் அவனை ஊரில் எல்லோருக்கும் பிடிக்கும். போகிற வருகிறவர்கள் எவராக இருந்தாலும் அழைத்து பேசிவிட்டு செல்கிற பாசக்காரன். பெண்கள் என்றால் ஒவ்வொருவருவருக்கும் ஒரு உறவு முறை வைத்துவிடுவான்.

‘‘ஏ மல்லிகாத்த. வயலுக்கா போறியோ. களையெடுக்கணும்னு மாமா நேத்து சொன்னாவோள?’’ என்று ஆரம்பிப்பான். பிறகு, எதிர்படுகிற ஆட்கள். இரண்டு மூன்று சுமைகளை யாராவது தூக்கிச் சென்றால் ஓடி போய், ‘‘இப்டியா மூசு மூசுன்னு தூக்கிட்டுப் போவாவோ? கழுத்து கிழுத்து புடிச்சுக்கிட்டுன்னா என்ன பண்ணுவ? கொண்டா, ஒன்னை. நா தூக்கிட்டு வாரென்’’ என்று உரிமையோடு வாங்கிக் கொள்வான்.

கேரள மாநிலம் புனலூரில் அணை கட்டுவதற்காக ஊரில் இருந்து பெருங்கூட்டம் ஒன்று அங்கு புறப்பட்டது. விளையாட்டு, வேடிக்கை என்றிருந்த நாராவும் முதன் முதலாக வேலைக்கென புறப்பட்டான். வேலை என்பதை விட்டுவிட்டு அவனது நோக்கம் ஊர் சுற்றிப் பார்ப்பதில் இருந்தது. வெளியூருக்கு அவனை அனுப்புவதில் வீட்டில் உடன்பாடில்லை. அவனது அம்மா புண்ணியத்தாயி, எவ்வளோ சொல்லியும் போயே தீருவது என்றான். அப்பாக்காரர் கண்டுகொள்ளவில்லை. ‘‘வெளிய போய்ட்டு வந்தாதான் நாலு வெவரம் தெரியும்’’ என்று மனைவிக்கு அறிவுரைச் சொல்லிக் கொண்டிருந்தார். ‘‘கூட நாங்கதானெ போறோம். வேற ஆளுவோ கூடயா ஓம் மவன அனுப்புதெ?’’ என்று பக்கத்து வீட்டு செல்லையா, சொன்னதை அடுத்து புண்ணியத்தாயி சம்மதித்தாள்.

இதையடுத்து சனிக்கிழமை இரவு ஊரில் இருந்து கிளம்பிய லாரியின் மீதமர்ந்து ஊர்காரர்களோடு பயணப்பட்டான் நாரா. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை லீவு. ஊர் சுற்றிப்பார்க்கச் சென்றுவிட்டு திங்கள் கிழமையில் இருந்து வேலை தொடங்கியது. அங்கேயே தங்குவதற்கு வீடு கொடுக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இங்குள்ள கிராமத்தை குட்டியாக அங்கே உருவாக்கி இருந்தார்கள்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒரு முறை கேரளாவில் இருந்து யாராவது ஊருக்கு வந்து, போய் கொண்டிருந்தனர். அவர்கள் வழி மற்றவர்கள் பற்றிய செய்திகள் வரும். நாராவும் அவ்வப்போது வந்து கேரளாவின் அதிசயங்களை, ஆச்சர்யங்களை ஊரில் பரப்பிக்கொண்டிருந்தான். இதுமட்டுமல்லாமல், அங்கிருந்து வரும் சிலருடன் மலையாளத்தில் பேசி மற்றவர்களை வெறுப்பேற்றிக் கொண்டும் அலைந்தான்.

அவ்வப்போது கேரளாவில் இருந்து வந்த தகவல்கள் ஊரில் ஆச்சரியத்தை கிளப்பும். வேலைக்குப் போன நடராசன் அங்கேயே ஒருத்தியை திருமணம் செய்துகொண்டதாக முதல் தகவல் வந்தது. இத்தகவலை அடுத்து புண்ணியத்தாயிக்கு பயம். தனது அண்ணன் மகளை நாராவுக்கு கட்டிக்கொடுக்கலாம் என்று எடுத்திருக்கும் முடிவில் அவன் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவானோ என நினைத்தாள். அவள் நினைத்ததே நடந்தது. 

பலசரக்கடை வைத்திருக்கும் ஒருவரின் மகளை, நாரா காதலித்து திருமணம் செய்துகொண்டான் என்ற செய்தி கேட்டு துடித்துப் போனாள் புண்ணியத்தாயி. பிறகு மனைவியுடன் வந்து அம்மா, அப்பாவிடம் ஆசி வாங்கினான். மாமனாரின் கடையில் வேலை பார்த்து வந்த நாராவை, சில வருடங்களில் திடீரென ஊருக்கு வந்து கொண்டு சேர்த்தார் மாமனார். அங்கு ஏதோ பிரச்னை என்றார்கள். பிறகுதான் ஊரே அவனை ஆச்சரியமாகப் பார்க்கத் தொடங்கியது.

அதாவது தினமும் காலையில் ஒன்பது மணிக்கு அம்மன் கோவில் வாய்க்காலுக்கு வந்துவிடுவான். குளித்து முடித்து கோயிலில் திருநீறு பூசிவிட்டு ஆலமரத்திண்டில் அமர்வான். பிறகு அவன் முகம் கோணலாக மாறும். கண்களை மூடிக்கொள்வான். மலையாளத்திலும் தமிழிலும் ஏதோ உளறுவான். சில ஆங்கில வார்த்தைகளும் வந்து விழும். கைகளை ஆட்டியபடி அவன் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அந்த வார்த்தைகளின் உளறல் ஒன்றும் புரியாது.

அவன் முன்னால் யாரும் நின்று உலுக்கினாலும் கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டே இருப்பான். சரியாக அரை மணி நேரம்தான். அதற்கு மேல் எதுவும் நடக்காத மாதிரி சகஜமாகி விடுவான். அந்த உளறல் சத்தம் வாய்க்கால் கரை, அதைத்தாண்டிய ரைஸ் மில், பெருமாள் கோயில் தெரு, நாராயண சாமி கோயில் தெரு என எங்கும் பறந்துகொண்டிருக்கும். முதல் இரண்டு மூன்று நாட்கள் இந்த சத்தம் கேட்டு பயந்தவர்கள், மேல கோயில் அருகில் வசிக்கும் சரஸ்வதியும் பகவதியும். வயலுக்கு களை எடுக்கப்போனவர்கள் அப்படியே பயந்து நின்றுவிட்டார்கள். இப்போது கேட்டாலும் அந்த பயத்தை திகிலாக விவரிப்பார்கள் இருவரும்.

என்ன மழை, பனி அடித்தாலும் காலையில் சரியாக ஒன்பது மணிக்கு இங்கு வருவதும் அரைமணி நேரம் உளறுவதும் நாராவின் வேலையாக இருந்தது. ஸ்கூலுக்குப் போகும் பயல்கள், ‘‘இங்கரு, நாரா இப்பதாம்ல கோயில் திண்டுக்குப் போறாம். இன்னும் ஒம்பது மணி ஆவல’’ என்று சொல்லிவிட்டு மெதுவாக நடப்பார்கள்.

ஒரு நாள் உளறல் முடிந்து தெளிந்த நாரா, எதிரில் ஆட்கள் நின்று பார்ப்பதைக் கண்டு கேட்டான். ‘‘ஏம் எல்லாரும் என்னயவே பாத்துட்டிருக்கியோ’’ என்று. அப்போதுதான் அவனுக்கே தெரியாமல் அது நடக்கிறது என்று புரிந்தது. ஆனால் மற்ற நேரங்களில் பழைய நாராவாகவே பழகி வந்தான். சித்தி, அத்தை, மைனி, மாமா என அதே உறவு முறை அழைப்பு. வீட்டில் மாட்டை குளிப்பாட்டுவது, வண்டி அடிப்பது, வயல்களுக்குப் போய்வருவது உள்ளிட்ட வேலைகளை சரியாகவே செய்து வந்தான்.

 ‘‘ச்சே. இந்த பயலுக்கு போய், இப்டி வந்திருக்கெ?’’ என்று ஊரில் பரிதாபப்பட்டார்கள். நாராவின் இந்த பிரச்னை பற்றி அவனது மாமனார், தெரிந்த மருத்துவரிடம் சொல்லி, தெரியாமல் அவனுக்கு மருந்து கொடுத்துப் பார்த்தார். கேட்கவில்லை. அந்த அரை மணி நேர வியாதியை எப்படி எடுத்துக்கொள்ள என்று தெரியாமல்தான் ஊரில் கொண்டு வந்து விட்டார். நாராவை குணபடுத்த அவனது அம்மாவும் அப்பாவும் அக்கம் பக்க ஊர்களுக்கு சென்று குறி கேட்டு வந்தனர். தாயத்துகளும் கறுப்பு கயிறுகளும் அவனது உடலில் கணக்கில்லாமல் ஏறியிருந்தன. ஆனால் ஒன்பது மணி பேச்சு மட்டும் நிற்கவே இல்லை. பிறகு அவனை விட்டுவிட்டனர். எவ்வளவுதான் பார்க்க?

தெருக்காரர்கள், ‘‘மலையாள மாந்தீரிகன வச்சு எவனோ இப்டி பண்ணிட்டானுவோ. அவன் பொண்டாட்டிக்காரிக்கு சொந்தக்காரனுவ கூட பண்ணியிருக்கலாம். யாரு கண்டா?’’ என்று பேசிக்கொண்டார்கள். ‘‘மாந்தீரிகம் பண்ணி அவன இப்டியாக்க என்ன காரணமாக இருக்கும்?’’ என்றும் கேள்வி வந்தது. ‘‘பொண்ணு பிரச்னையில ஆயிரம் நடக்கும்டெ’’ என்று ஆணித்தரமாகச் சொல்லி விஷயத்தை ஊதினாள் பெரியாச்சி. ஆச்சிகள் விவரமானவர்கள். இல்லாத கதையை கூட இருப்பதாகச் சொல்பவர்கள்.

இதையடுத்து, ஊரில் அவனுக்கு ‘ஒன்பது மணி கோட்டி’ என்ற புது பெயர் உருவாகி இருந்தது. இந்த உளறல் காரணமாக அவனை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றால் இரவுக்குள் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்கள். தென்காசியில் ஒரு துஷ்டிக்கு சென்ற போது கூட, அதிகாலையில் முதல் பஸ் பிடித்து ஊருக்கு கூட்டி வந்துவிட்டார்கள் அவனை. வெளியூரில் உளறி அங்கு ஏதும் பிரச்னை என்றால் எப்படி தாங்க?

ஊரை விட்டு வேறொரு இடத்தில் இருந்தால் இந்தப் பிரச்னை வருகிறதா என்பதை டெஸ்ட் பண்ணியே பார்த்தார்கள். அவனது மாமா செல்லையாவும் சித்தப்பா கந்தையாவும் எட்டு எட்டரை மணிக்கு பஞ்சாயத்து போர்டு திண்டுக்கு பேசிக்கொண்டே அழைத்துப் போனார்கள். முந்தாநாள் பார்த்த படம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். வழக்கத்துக்கு மாறாகச் சிரித்துக் கொண்டிருந்தான் நாரா. கொஞ்சம் கொஞ்சமாக நேரம் போய்கொண்டிருக்க, அவனால் அங்கு நிற்க முடியவில்லை. அவர்களிடம் எதுவும் சொல்லாமல் விறுவிறு என்று அம்மன் கோவில் வாய்க்காலைப் பார்த்து திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டான். வேக வேகமான நடை. அந்த நடையில் இருந்த ஆக்ரோஷத்தில் அவனது மாமாவும் சித்தப்பாவும் வாயடைத்து விட்டார்கள். பிறகு குளித்து முடித்துவிட்டு அதே உளறல்.

அவன் வந்தால் இளம்பெண்கள் ஓடிப் போய் ஒளிந்துகொள்வார்கள். இல்லையெனில் தூரமாக நின்றுகொள்வார்கள். ஆரம்பத்தில் இப்படி இருந்தவர்கள், பிறகு அன்றாட நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என அவனது அரை மணி நேர உளறலை கண்டுகொள்ளாமல் போய்வந்தார்கள். அவன் மனைவி, கேரளாவில் இருந்து அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போனாள். மகன் அங்கு படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

இப்போது அப்படியில்லை நாரா. எதுவும் நடக்காத மாதிரி, காலை ஒன்பது மணிக்கு ரைஸ்மில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் நண்பர்களுடன். கல்லூரி படிக்கும் மகன் பைக்கில் அவரை கொண்டு போய் விட்டு வருகிறான். மலையாளம் கலந்த தமிழில் தெருக்காரிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறாள் அவன் மனைவி. ‘‘அந்த கோட்டிக்கார பேச்சு எப்டி நின்னுச்சுன்னே தெரில. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால திடீர்னு அதுவா நின்னுட்டு பாத்துக்க. ஒன்பது மணிக்கு வாய்க்காலுக்கு ஓடுதவன் ஒரு நாலு நாளா வீட்டுலயே இருந்தான். பெறவுதான் அவ்வோ ஆத்தாளுக்கு ஒணரு வந்து, ஒடம்பு சரியா போச்சுன்னு தெரிஞ்சுதாம்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் பலசரக் கடை மணி. எனக்கு மீண்டும் முதல் வரிதான் ஞாபகத்துக்கு வந்தது.

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

மனம் ஒரு பெருங்கடலை, புயலை, அன்பை, ரணத்தை, வன்மத்தை, காதலை தனக்குள் பதுக்கி வைத்திருக்கும் ஆழ்கருவி. அந்த கருவி, கனவை நனவாக்கும் நனவை கனவாக்கும். நல்லவன் & கெட்டவன் என்கிற எதிர்ப்பதங்களை உருவாக்கும். எல்லோருக்குள்ளும் இருக்கும் சிறு நோயை பெரு நோயாக்குவதும் அதுதான்.


"மனதின் விளையாட்டு" ரசிக்கவைத்தது ...

P.PAUL VANNAN said...

தனது அண்ணன் மகளை நாராவுக்கு கட்டிக்கொடுக்கலாம் என்று எடுத்திருக்கும் முடிவில் அவன் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவானோ என நினைத்தாள். அவள் நினைத்ததே நடந்தது.
YOUR THOUGHTS ALWAYS ROAMS AROUND KADAYAM AND SURROUNDINGS THOUGH YOU PUT UP IN CHENNAI. NICE NARRATION .VAZHAKA VALAMUDAN.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கதை! இயல்பான நடையில் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்! நன்றி