Sunday, January 6, 2013

பரிசுகள் பொழியும் மரம்

மார்கழி மாத ஆரம்பத்திலேயே நிலைகொள்ளா மகிழ்ச்சி வந்துவிடும் கிட்டனுக்கு. புது தெம்போடு பாட்டும் விசிலுமாக அலையத் தொடங்கிவிடுவான். அந்த உற்சாகம் இதற்கு முன் அவனிடம் காண முடியாதது. இப்போது காண்பதற்கு பொங்கல் விழா, காரணமாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக இந்த விழாவில் நடக்கும் போட்டிகளில் கிட்டனுக்குத்தான் பேரும் புகழும். ஒவ்வொரு வருட வழுக்கு மரப் போட்டியிலும் சவால்விட்டே வெல்கிறான், அவன். கோவன்குளத்துக்கு அருகில் மாடுகளை மேயவிட்டுவிட்டு பொத்தையில் உட்கார்ந்திருக்கும் நண்பர்களிடம் ஆரம்பிக்கும் சவால். போனமுறை முயன்று தோற்றவர்கள், சவாலுக்கு ரெடியாவார்கள். எப்படி இவனை வெல்வது என்கிற யோசனை அப்போதே தொடங்கிவிடும்.

பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பரபரப்பாகும் தெருவில், அதுவரை குப்பைக் கிடங்காக இருக்கும் கீரைத்தோட்டம் விழாவையொட்டி பளபளப்பாக்கப்படும். போட்டிகள் பொங்கலுக்கு முதல்நாள் ஆரம்பமாகும் என்பதால் அதற்கு முந்தைய நாள், இலவசமாக இரண்டு மூன்று முறை ஆற்று மணல் அடித்துவிட்டுப் போவார், வண்டி கணேசன். வழக்கமான வேலைகளை விட்டுவிட்டு தெரு வேலைக்காக இளவட்டங்கள் வந்துவிடுவார்கள். ஆளுக்கொரு வேலை. குப்பைகள் அகற்றப்பட்டு, கருவை முட்கள் வெட்டப்பட்டு இடம் சுத்தமான பிறகு மணல் பரப்பப்படும். பிறகு சுண்ணாம்பு பொடி கொண்டு, கபடி மைதானம் தயாராகும். ஒவ்வொரு செட்டாக இறங்குவார்கள். மொத்தம் மூன்று செட் ஆட்கள். இதற்கே நள்ளிரவு ஆகிவிடும் என்பதால் மற்றப்போட்டிகள் மறுநாள்தான். அன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான போட்டிகள். மியூசிக்கல் சேர், சாக்குக்குள் காலைவிட்டு நடப்பது, கண்ணைக் கட்டி புதைத்திருக்கும் தேங்காயை எடுப்பது போன்றவை நடக்கும். இதற்கு மறுநாள்தான் வழுக்குமரம், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள்.

இவற்றை மேற்பார்வை செய்ய, ஒத்து நியமிக்கப்பட்டிருந்தான். கீரைத்தோட்டம் அவர்களுக்கானது என்பதால் இந்த நியமனம். தோட்டத்துக்கு எதிரிலேயே அவனது வீடு. அங்குதான் மைக்செட் வைக்கப்பட்டிருந்தது. ‘பிள்ளைலுவோ விளாடுதுலா' என்பதற்காக, மூர்த்தி மாமா இலவசமாக இந்த சேவையை செய்திருந்தார்.

இந்த விளையாட்டுகளால் தெருக்கார பொம்பளைகளுக்கு குதியாட்டம்தான். சாயந்தரமாகப் போட்டித் தொடங்குவதற்கு முன்பே முகத்தில் பவுடர்களை அப்பிவிட்டு, பெட்டியில் மடித்துவைத்திருக்கிற ‘தீவாளி' சேலைகளை உடுத்திக் கொண்டு வந்துவிடுவார்கள். மல்லிகைப்பூவோ, பிச்சிப்பூவோ அவர்கள் தலையில் இருந்து கும்மென்று வாசம் வீசிப்போகும். மேல மற்றும் கீழத் தெரு ஆட்களும் விளையாட்டை பார்ப்பதற்கு கூடுவார்கள் என்பதால் இந்த மேக்கப்போடு ‘மைதானத்தின்' ஓரமாக, ஸ்கூலில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிற பெஞ்சில் உட்கார்ந்திருப்பார்கள். பாவாடை, தாவணி பெண்கள் ஓவர் வெட்கத்தோடு முகத்தை வெளியில் காட்டலாமா வேண்டாமா என்கிற பாவனையில் நின்றுகொண்டிருப்பார்கள். கரும்பை கடிக்க முடியாமல் தின்றுகொண்டும் பனங்கிழங்கை துண்டு துண்டாக வெட்டி மடியில் வைத்துக்கொண்டும் தங்கள் வேலையில் கவனமாக இருப்பார்கள் பாட்டிகள்.

கபடி போட்டி, வயதுபடி பிரிக்கப்பட்டிருக்கும். முதலில் சிறுசுகள். அடுத்து வயசுப் பையன்கள். பிறகு நாற்பது வயதுக்கு மேலானவர்கள். மில்லு மணி மைக்கை கையில் எடுத்துக்கொண்டு மைதானத்தின் ஓரமாக உட்கார்ந்துகொள்வான். அவனருகில், நேர கணக்கைப் பார்த்துக் கொள்ளவும் பாயிண்ட் குறிக்கவும் நோட்டு புத்தகத்தோடு ஒத்துவும் அவனுக்கு உதவி செய்ய, கோஸும் இருப்பார்கள். சிறுசுகள் மற்றும் வயசுப் பையன்களின் ஆட்டம் பரபரப்பாக இருக்கும். இதில் கிட்டன், சிறந்த பிடிப்பாளனுக்கான பரிசை வாங்குவான். ஏதாவது ஒரு ஓரத்தில் நின்று, பாடி வருபவர்களின் கையையே பார்த்துக் கொண்டு காலை லாவகமாகப் பிடிக்கும் திறமையை கிட்டன் பெற்றிருந்தான். இந்தப் பிடித்தலில் அவனது தோள் பட்டைகளில் காயம் ஏற்பட்டு புண்கள் உருவாகி இருக்கும். ஆனாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை. இவன் பிடிப்பான் என்பதால் இவன் பக்கம் வருவதை எதிர்க்கோஷ்டிகள் தவிர்ப்பார்கள். ஒல்லிக்குச்சி தேகம் கொண்ட கிட்டன் உயரமாக வளர்ந்திருந்தாலும் அவன் பலமானவனாகவே இருக்கிறான். இந்தப் போட்டியை அடுத்து நடக்கும் நாற்பதை தாண்டியவர்களின் ஆட்டத்தில் கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும்.

‘புலி வருது பாரு, புலி. மச்சானை புடிங்கெ பாப்போம். முடியுமாவே?' என்று மைக்கில் மில்லு மணி சொன்னதும், பிடித்துவிடுவார்கள் எதிர்க்கோஷ்டிக்காரர்கள். ‘என்னய்யா புலி, இப்டி மாட்டிக்கிட்டு? மச்சானுக்கு மச்சமில்ல போலுக்கெ?' என்பான். ‘அடுத்தாப்ல தொப்பெ பாலுண்ணே வாரோவோ. முடிஞ்சா புடிங்கய்யா... புடிங்கய்யா, இது சிங்கெம்லா?' என்று வீராவேசம் நடக்கும். அதற்கு ஏற்றார்போல அவரும் முண்டுவார். ஆனால் பிடித்துவிடுவார்கள். ‘சிங்கத்தையே சாய்ச்சிட்டேளேப்பா' என்பான். போட்டியை பார்த்து அவன் பேசிக்கொண்டிருந்தாலும் மைதானத்தின் ஓரமாக நின்றிருக்கும் பெண்கள் மீதுதான் அவன் கண்கள், முழுமையாக நிரம்பியிருக்கும். இது அந்தப் பெண்களுக்கும் தெரிந்ததுதான்.

மூன்றாம் நாள் போட்டிக்காக வழுக்கு மரம் தயாராகும். சங்காபீஸில் வைக்கப்பட்டிருக்கும் இரும்பு குழாயை கொண்டு வந்து, ஒத்து வீட்டுக்கு அருகில் வைத்திருப்பார்கள். முருக மாமாவும் செல்லையா மாமாவும் அதில் விளக்கெண்ணையை தேய்ப்பார்கள். அரைத்து வைக்கப்பட்டிருக்கும் காத்தாழைச் சாறுகளையும் கொண்டு வந்து கம்பியில் தேய்ப்பார்கள். கூடவே கிரீஸும். பிறகு மைதானத்துக்கு நடுவே ஏற்கனவே தோண்டி இருக்கிற ஆழமானக் குழியில் நடுவார்கள். குழாயின் உச்சியில் புது வேட்டித் துண்டும் நூறு ரூபாயும் முடிந்து வைக்கப்பட்டிருக்கும்.

மொத்தம் ஏழு, எட்டு பேர், பெயர் கொடுத்திருப்பார்கள் ஏறுவதற்கு. ஒவ்வொருவராக ஏற வேண்டும். முதல், இரண்டு, மூன்று, நான்கு என்று ரவுண்ட் போகும். ஐந்தாவது ரவுண்டில் கம்பியில் இருக்கும் வழுக்கும் விஷயங்கள், கொஞ்சம் வழுக்கி இருக்கும். இன்னும் இரண்டு மூன்று ரவுண்ட்களில் முயன்றால் ஏறிவிடலாம். இந்த நேரத்தில், ‘இன்னா, ஒண்ணுக்கு போயிட்டு வாரென்' என்று சொல்லிவிட்டு, கருவை மூடுக்கு அருகே போய்விட்டு வருவான் கிட்டன். பிறகு மெது மெதுவாக கம்பியை பிடிப்பான். ஆரம்பத்தை விட இப்போது கொஞ்சம்தான் வழுக்கும். இருந்தாலும் உடலோடு கம்பியில் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு மேலேறுவான். கொஞ்ச நேரத்தில் அவன் உச்சிக்கு செல்ல, கீழிருந்து கைதட்டலும் விசிலும் பறக்கும். அந்த சத்தத்தைக் கேட்டுக்கொண்டே எடுப்பான் புது வேட்டித் துண்டையும் நூறு ரூபாயையும். வேட்டித்துண்டும் ரூபாயும் பெரிதில்லை என்றாலும் அந்த இடத்தில் கிடைக்கும் கொண்டாட்ட மதிப்பு அவனுக்கு பெரிதாக இருந்தது.

‘எப்டிலெ எடுத்தாம்?' என்று எல்லோருக்கும் ஆச்சரியம். இதை முடித்த கையோடு பானை உடைப்பு போட்டி நடக்கும். இதற்கு கண்களை கட்டிவிடும் நல்லகண்ணுவிடம், ‘என்ன மாமா இறுக்கி கெட்டி வச்சுட்டேரு. வலிக்குவே?' என்று பொய்யாக அரட்டுவான். இதனால் கட்டை கொஞ்சம் லூசாக்கி விடுவார். இது வசதியாகிவிடும் கிட்டனுக்கு. கண்ணை மேலும் கீழும் ஆட்டி பார்த்தால் எதிரில் நடப்பது லேசாகத் தெரியும். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு கண்ணை கட்டி, கீழ்ப்பக்கம் பானை இருக்கிறதென்றால் மேற்கு பக்கமாகப் போய் சுற்றிவிட்டுவிட்டு வருவார்கள். கிட்டனை அப்படிச் சுற்றிவிட்டதும் நிஜமாகவே கண்ணு தெரியாதது போல நடிப்பான். கூட்டத்தில் இருப்பவர்களும் ஏதாவது சொல்லி திசைமாற்றி விடுவார்கள். பிறகு அங்கும் இங்கும் அலைவது போல அலைந்து சரியாகப் பானையை உடைத்ததும் சுற்றி நிற்கும் பொம்பளைகள், ‘கிட்டெனுக்கு யோகத்தெ பாரு' என்பார்கள். அவனுக்கு பெருமையாக இருக்கும். தொடரும் இந்த பெருமையிலேயே அடுத்த பொங்கல் வரை ஓட்டிவிடுவான் கிட்டன்.

ஒரு நாள், வழக்கமாக மாடு மேய்க்கச் செல்லும் இடத்துக்கு செல்லாமல் மேலபத்துக்கு போயிருந்தபோது, அவனோடு வந்த பொந்தனிடம் ஒரு ரகசியத்தைச் சொன்னான் கிட்டன். வழுக்கு மர ரகசியம். ‘யார்ட்டயும் சொல்லிராதெல கேட்டியா?' என்று கேட்டுவிட்டு சொன்னான்.

‘‘ஒண்ணுமில்லல. ஒண்ணுக்குப் போறெம்னு சொல்லிட்டு போறம்லா. அங்கெ கருவை மூட்டுல சாயந்தரமே செரட்டையில ஆலம்பாலை எடுத்து வச்சிட்டு வந்துருவென். இப்பம் அதை கால்லயும் கையிலயும் தேய்ச்சுக்கிடுவென். நெஞ்சுலயும் வயித்துலயும் கூட தேய்ப்பென். ஆலம்பாலு வெள்ளையா இருந்தாலும் ஏற்கனவே ஏறி ஏறி நெஞ்சுலாம் அழுக்கா இருக்கும்லா, அதனால தெரியாது. அந்தானிக்கு போய் ஏறுனம்னு வையி. கொஞ்சமா பிடி கெடைக்கும். இன்னும் கொஞ்சம் முக்கி மொணங்கி சமாளிச்சா ஏறிரலாம். இதாம்லெ வெஷயம்''.

கிட்டனுக்கு உறவினனான பொந்தன், இதை யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் அடுத்த முறை வழுக்குமர போட்டியில் ஆலம்பாலைத் தடவிக்கொண்டு அவனும் முயன்று பார்த்தான். முடியவில்லை. வழுக்கியது. ஆனால் கிட்டன் மட்டும் அதை இன்னும் சில வருடங்களுக்குத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

இதற்கிடையில், ‘வழுக்கு மரம் நன்னா ஏர்றயாமெ. எங்காத்து பாத்திரத்தை கொரங்கு தூங்கி, மரத்துல வச்சுண்டு ஆடறது. கொஞ்சம் எடுத்து கொடென்' & ஐயமார் தெரு லட்சுமியாச்சி இப்படிச் சொன்னதும் குளிர்ச்சியாக இருக்கும் அவனுக்கு. லட்சுமியாச்சி வீட்டில் மட்டும்தான் குரங்குகளும் பாத்திரங்களை அடிக்கடித் தூக்கி வைத்துக்கொள்கிறது. அதை எடுத்துக்கொடுக்கும் பொறுப்பை சிரமேற்கொண்டு செய்து வருபவனாக இருந்தான் கிட்டன். பிறகு அக்ரஹாரத்தில் யார் வீட்டில் குரங்கு பிரச்னை என்றாலும் அதை விரட்ட அல்லது பொருட்களை எடுத்துவரும் பொறுப்பு இவனுக்கு விடப்பட்டிருந்தது. இதற்கு கைமாறாக அவனுக்கு பில்டர் காபியோ, நெய் முறுக்கோ கிடைக்கும்.

‘அவ்வோ வீட்டு காபி மட்டும் எப்டிலெ டேஸ்டா இருக்கு? நம்ம பலாசாம் போடுதெ காப்பியெ பாரு, தண்ணில சீனியை கலக்குத மாரிதாம் இருக்கு' என்பான் வெறுப்பாக.

இது ஒருக்கம் இருந்தாலும் உயரமான மரங்களில் ஏறி கிளிபிடிப்பதையும் கிட்டன் வழக்கமாக வைத்திருந்தான். மிருதுவான மேனியை கொண்ட பச்சை வண்ணக் கிளிக்குஞ்சுகளை, மரத்தின் பொந்துகளில் கையை விட்டு எடுப்பான். வெறுங்கையில் எடுத்தால் ஈரமாக இருக்கும் என்பதால் துண்டால் எடுப்பான். வெளியே வந்ததும், கீ கீ என்று கழுத்தை சாய்த்து மெதுவாகக் குரல் கொடுக்கிற கிளியின் அழகு பற்றியெல்லாம் கிட்டனுக்குத் தெரியாது. ஆனால், கிளி வளர்க்க ஆசைப்படும் ராஜி மற்றும் மீனா அக்காவுக்காக இதை செய்து வந்தான்.

வயதாகிவிட்டது கிட்டனுக்கு. ஆடு மாடுகள் நிறைந்த அவர் வீடும் தொழுவமும் காம்பவுண்ட் சுவருக்குள் சிக்கியிருக்கிறது. மைதானமாக இருந்த கீரைத்தோட்டத்தில் முளைத்திருக்கிறது வாஸ்த்து பெயின்ட் அடிக்கப்பட்ட பிரமாண்ட வீடு. பானை உடைத்தல் போட்டி நடக்கும் செம்மண் தெரு சிமென்ட் சாலையாகி இருக்கிறது. கருவை முட்களும் கறிவேப்பிலை மரங்களும் இருந்த இடங்களில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டிருக்கிறது. குழி விழுந்த கண்களோடும் நரம்புகள் தெரியும் கைகளோடும் மாட்டு வண்டியில் தலை சாய்த்து படுத்திருக்கும் கிட்டன், ‘ஒரு காலத்துல, இங்கெல்லாம் பொங்கல் போட்டி நடத்துவோம் பாரு' என்று ஆர்வமாகக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். காதுகளை திறந்துவிட்டு அமைதியாகிவிடுகிறேன் நான்.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

கிராமத்து திருவிழாக்காட்சிகளை பொழிந்து மனதுக்கு உற்சாகம் தந்தது
"பரிசுகள் பொழியும் மரம்" -- பாராட்டுக்கள்..

P.PAUL VANNAN said...

well done brother ,nice .... really nice.

congrats ...

p.paul vannan