Friday, April 20, 2012

பூகம்ப பூமியில் மூன்று நாள் - 4

வெளியில் இருந்த குளிருக்கு எதிர்மாறாக இருந்தது கடையின் வானிலை. சுதிர் பதக் வரவேற்று உட்காரச் சொன்னார். கடையில் வேலைப் பார்க்கும் இன்னும் இரண்டு இந்தியர்களையும அவர் அறிமுகம் செய்தார். பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரே கடையில் வேலை பார்ப்பதாகச் சொன்னார்கள். இந்திய பஞ்சாபி தாபாவை ஞாபகப்படுத்தும் விதமாக கடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பணம் வசூலிக்கும் இடத்துக்கருகே வரையபட்டிருக்கிற வட இந்திய மனிதர்களின் சித்திரங்களும் அந்த வண்ணங்களும் அருமையாக இருந்தன. கடை சாத்தும் நேரம் என்பதால் அங்கு வேறு யாரும் இல்லை. உடன் வந்திருந்த அதுலும் அஜய்யும் ஆலு பரோட்டா ஆர்டர் செய்தார்கள். எனக்கு பிடிககாது என்றாலும் அவர்களுக்காக ஓ.கே.சொன்னேன்.


ஆன்லைன் மூலம் என்.டி.டி.வி சேனலை ஆன் செய்தார் பதக். வேண்டாம் என்று கோரஸாக சொன்னோம். ஊரை மறந்திருக்கிற நிமிடங்களில் அந்த செய்தி சேனல் அலுவலக கலவரத்தை நினைவுபடுத்தலாம் என்பதால் அப்படியொரு வெறுப்பு. 'இங்கு karaoke இருக்கிறது. 'யாராவது பாடுகிறீர்களா?' என்றார் பதக். தமிழ் பாடலுக்கு வாய்ப்பில்லை என்பதால் அமைதியாக இருந்தேன். குடும்பத்துடன் சாப்பிட வரும் இந்தியர்கள், இங்கு இந்தி பாடல் பாடலாம். ஆடலாம். சிலர் ஓல்டு சோகப்பாடல்களைப் பாடி, தனது ஊரை, காதலை, சொந்தங்களை நினைத்து அழுதுவிட்டு எக்ஸ்டராவாக நான்கைந்து பெக் போட்டுவிட்டு செல்வார்கள் என்பது பதக் சொன்ன தகவல்.

ஊர் நினைவு, உயிரை விட மேலானது. ஓடிய தெருவும் உருண்ட புழுதியும் உடலுக்குள் கலந்த உன்னத உணர்வு அது. பொருளீட்டும் பொருட்டு கண்டம் தாண்டி வந்தாலும் கண்ணுக்குள் எப்போதும் காத்துக்கொண்டே இருக்கிறது ஊர் நினைவுகள். அது ஒரு சொட்டு கண்ணீரில் ஒரு கடலை அடக்கி வைத்திருப்பது அனுபவப்பட்டவனுக்கே தெரியும்.


அஜய், அதுல், சஞ்சய் பாண்டே, சுதிர் பதக்குடன் நான்...
டிரிங்க்ஸ் பரிமாறப்பட்டது. பதக் ஒவ்வொருவரிடமும் தேவையான சரக்குகளை கேட்டுக்கொண்டிருந்தார். சஞ்சய் பாண்டேவின் நண்பர்கள் என்பதாலும் இந்தியர்கள் என்பதாலும் பெக் கணக்கில் கொஞ்சம் கன்ஷசன் உண்டாம். டிரிங்ஸ் ஏரியாவைப் பார்த்துவிட்டு, ஆச்சர்யமாக கேட்டேன். 'சார், கிங்பிஷர் பீர் எப்படி?' என்றேன். 'கேட்கிறாங்களே? நம்ம ஆட்கள் சில விஷயத்துக்கு அடிமையாயிட்டாங்கன்னா, அதுல இருந்து மீள்றது கஷ்டம். ஒரு பெங்களூர் பார்ட்டி இதுதான் வேணும்னு அடம் பிடிப்பார். காசு பற்றி கவலையில்லை" என்றார். சரிதான் என நினைத்துக்கொண்டேன்.

கடையில் இந்தி பட போஸ்டர்கள் பிரேமுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. நிஜத்தில் முட்டிக்கொண்டாலும் சல்மான்கானும் ஷாரூக்கானும் அருகருகே சிரித்துக்கொண்டிருந்தார்கள். எதிரில் ஒவ்வொரு இந்திய பிரபலங்களுடனும் பதக் புன்னகைக்கும் புகைப்படங்கள். அதில் ஒருவர் சேகர் கபூர்.

இந்திய படங்களை என் நண்பர்கள் இங்கு வெளியிடுகிறார்கள். நான் விநியோகம் செய்யவில்லை. எவ்வளவுதான் இந்தியாவில் பேசினாலும், நம் படங்களை ஜப்பானியர்கள் பார்ப்பது ரொம்ப குறைவு. ரஜினிகாந்தின் 'முத்து' படம் ஜப்பானில் சூப்பர் ஹிட் என்று வந்த தகவலையும் ஜப்பானியர்கள் ரஜினியை கொண்டாடுகிறார்களாமே என்ற செய்தியையும் கேட்டால் பதக்கிடம் இருந்து சிரிப்பு மட்டுமே வந்தது.

'ஜப்பானியர்கள் சென்டிமென்டுக்கு அடிமை. ஜப்பானிய ராஜா ராணி கதையு்டன் 'முத்து' படத்தை ஒப்பிட்டு விளம்பரம் செய்யப்பட்டது. அதனால் முதல் இரண்டு நாட்கள் அதிசயமாக படம் பார்க்க வந்தார்கள் எனபது உண்மை. ஆனால், அதற்கடுத்த நாட்களில் ஒன்றுமே இல்லை. ஜப்பானில் ரஜினிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதிலும் உண்மையில்லை. பதக் சொல்லிக்கொண்டே போக, வியப்பாக இருந்தது. 'முத்து' பற்றி தமிழகத்தில் வந்த செய்திகள் எவ்வளவு பில்டப்பை ஏற்படுத்தியிருந்தன?

போதை கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தாலும் இந்தக் குளிருக்கு அது போதையாக தெரியவில்லை. பதக் தான் ஜப்பான் வந்த கதையை சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டிருந்தாள். அவரைப் பற்றி இந்திய நாளிதழ்களில் வார இதழ்களில் வந்த செய்திகளை காண்பித்துக்கொண்டிருந்தார். இந்தியில் இருந்த அந்த கட்டுரைகளில், 'ஜப்பானில் பதக்' என்பது மாதிரியான தலைப்பு இருந்திருக்கலாம்.

பேசிக்கொண்டிருக்கும்போதே, சஞ்சய் குறைந்த போதையில் பதக்கை செல்லமாகத் திட்டினார். 'ரொட்டி சாப்பிடலாம்னு பல மைல் தாண்டி இங்க வர்றோம். ஆனா, இந்த பதக் அநியாயத்துக்கு ரேட் சொல்றான்' என்று ஆரம்பித்தார் சஞ்சய். 'நான் என்ன பண்றது. எல்லாத்தையும் இந்தியாவுல இருந்துதான் இறக்குமதி பண்ண வேண்டியிருக்கு. ஒவ்வொரு பொருளுக்கும் இருநூறு பர்சென்ட் வரி?' என்பது பதக்கின் வாதம். வாதங்களும் பிரதி வாதங்களும் இல்லையென்றால் வழக்குகள் மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவாரஸ்யமற்றதாகிவிடும்.

பத்து பதினோரு மணி வாக்கில் அங்கிருந்து கிளம்பினோம். பதக் சிறிது தூரம் எங்களுடன் வந்துவிட்டு வேறு பாதையில் சென்றார். சஞ்சய் இடம் சொல்லிவிட்டு நகர, நாங்கள் கொஞ்சம் தள்ளாடியும் தள்ளாடாமலும் ஜப்பானிய சாலையில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தோம். ஆட்கள் குறைவாக இருக்கிற பெருமளவு வாகனங்கள் இல்லாத சாலையில் ஒவ்வொரு ஏரியாவாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டே வந்தார்கள் இருவரும். நான் டயர்டாகிவிட்டேன். தூக்கம் கண்ணை இறுக்கியது. ஓட்டலுக்கு வந்து லிப்டில் 45 வது மாடியை அழுத்தினார். எண்ணி மிகச்சரியான மூன்று நிமிடத்தில் 45 வது மாடிக்கு வந்து நின்றது லிப்ட். எனக்கு ஆச்சரியம். ஏற்கனவே பல முறை இதே லிப்டில் வந்திறங்கியிருந்தாலும் இப்போதுதான் அது தோன்றியது. அதெப்படி இவ்வளவு சீக்கிரமா லிப்ட் வர முடியும்?


காலையில் 5 மணிக்கு, வேக் அப் கால் கொடுக்க ரிஷப்சனில் சொல்லிவிட்டு எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் விடாமல் அழைத்த போன் ரிங்கில் எழுந்திருந்தேன். என்னையறியாமலேயே ஏர்போர்ட் போவதற்கான பஸ்ஸுக்கு முன்தினம் இரவு புக் செய்திருந்தேன். இது தெரியாமல் பஸ் எப்போ என்று கேட்க, 'அதான் நேற்று நைட்டே புக் பண்ணிட்டீங்களே... ஏழு மணிக்கு வாசலுக்குப் போயிடுங்க" என்றாள் ரிஷப்சன் பெண். அவசரம் அவசரமாக குளித்துவிட்டு கீழே ஓடோடி வந்தால், ஆஸ்திரேலிய லிஸாவும் பஸ்ஸுக்கு காத்திருந்தாள். ஒரு 'ஹாயை' போட்டுவிட்டு பெரிதாக கொட்டாவி விட்டேன். 'தூக்கம் கலையலையா?' என்றாள். நேற்றைய சுற்றலை சொல்லிவிட்டு இன்னொரு முறை கொட்டாவி விடும்போது பஸ் வந்தது. நாங்களும் இன்னுமொரு வயதானப் பெண் மணியும் ஏறினோன். புக் பண்ணியிருந்த டிக்கெட்டை ஓட்டல்காரர்களே பஸ் டிரைவரிடம் கொடுத்தார்கள். கிளம்பிய பஸ், அடுத்த ஸ்டார் ஓட்டல் வாசலில் நின்றது. பிறகு ஒவ்வொரு ஸ்டார் ஓட்டலாக நின்று ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு மணிநேரத்தில் ஏர்போர்ட் சென்றது. பக்கத்திலிருந்த லிஸாவிடம் கேட்டேன். 'ஓட்டல் ஓட்டலாக இந்த பஸ் நிற்கிறதே?' என்று. 'இது அப்படித்தான். ஸ்டார் ஓட்டல் டூ ஏர்போர்ட் பஸ் என்றாள்.

விமானநிலையத்தில் இறங்கி, போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு சென்றால், செக்கப் கெடுபிடி என்று ஏதுமில்லை. விஸ்தாரமாக விரிந்து கிடைக்கிற விமானநிலையத்தில் இறங்கும் ஏறும் விமானங்களை செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தேன். அடுத்த முறை ஜப்பான் வரும் வாய்ப்பிருந்தால் அதிக பணத்துடன் (கடன் வாங்கியாவது) குறைந்தது ஒருவாரமாவது வந்து தங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்காகக் காத்திருந்தேன்.

போதும்.

3 comments:

Cable சங்கர் said...

ரஜினி பற்றி இங்கே வரும் செய்திகள் எல்லாமே பி.ஆர்.ஓக்களுக்கு காசு கொடுத்து எழுதபப்டுவது என்று உங்களுக்கு தெரியாதா தலைவரே..

ஆடுமாடு said...

சங்கர்ஜி, ரஜினி விஷயத்தில் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது டிஸ்ட்ரிபியூட்டர்கள் கிளப்பிய விஷயமாக இருக்கலாம்.

இராஜராஜேஸ்வரி said...

ஊர் நினைவு, உயிரை விட மேலானது. ஓடிய தெருவும் உருண்ட புழுதியும் உடலுக்குள் கலந்த உன்னத உணர்வு அது. பொருளீட்டும் பொருட்டு கண்டம் தாண்டி வந்தாலும் கண்ணுக்குள் எப்போதும் காத்துக்கொண்டே இருக்கிறது ஊர் நினைவுகள். அது ஒரு சொட்டு கண்ணீரில் ஒரு கடலை அடக்கி வைத்திருப்பது அனுபவப்பட்டவனுக்கே தெரியும்.