Saturday, January 28, 2012

எழுத்து மணலில் முட்டையிடும் ஞாபக ஆமைகள்

எழுத்து மணலில் முட்டையிடும் ஞாபக ஆமைகள்: இந்திரன்


ஏக்நாத்தை எனக்குத் தெரியும் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். பேசும்போது ஏதோ வியப்பில் இருப்பது போல மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்து விரியும் அவரது கண்கள் நகரத்துத் தெருக்களில் பாதாளச் சாக்கடைகள் ஏதெனும் திறந்து கிடக்குமோ என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் அவரது கண்கள் அவர் பிறந்த கீழாம்பூர் கிராமத்தில் மிதிக்கிற தெருக்களில் நடக்கிற பாதையில் ஒரு போர்வீரனின், மன்னனின், சாமான்யனின்,அடிமையின் காலடித்தடம் கண்ட வியப்பில் விரிந்து கொண்டிருக்கின்றன என்று இப்போதுதான் தெரிய வருகிறது.

அவரது ‘கெடாத்தொங்கு (கவிதைகள்), ‘பூடம்', (சிறுகதைகள்), “குள்ராட்டி" (சிறுகதைகள்) காலத்திலிருந்தே அவரை கவனித்து வருகிறேன். ஞாபகங்களின் பனி மூட்டத்தில் சிக்கிக் கொண்டு தனது வழியை அடிக்கடி தொலைத்துவிடுகிற கோட்டிக்காரத் தனம் அவரிடம் ஒட்டிக் கொள்வதுண்டு. இந்த நூலில் உள்ள எழுத்துக்களை படிக்கிறபோதுதான் தெரிகிறது, ஞாபகங்களின் பனிமூட்டத்திலிருந்து நூல் நூற்பவர் என்று. கவிதையோ, கதையோ, கட்டுரையோ எல்லாமே நினைவுகளின் நூற்பாலையிலிருந்து பெற்ற நூலைக் கொண்டுதான் அவருக்கான எழுத்தின் நெசவு நடைபெறுகிறது என்று இப்போது புரிகிறது.

ஏக்நாத்துக்கு எழுத்து என்பது தவிப்பு. பிறந்து வளர்ந்து விழுந்து எழுந்து விளையாடிய கிராமத்தை ருசித்து விட்ட நாக்கின் தவிப்பு.

தூர்ந்து போன கிட்டி அய்யங்கிணறு, கோடையில் சுடு தண்ணீராய்ப் போய்க் கொண்டிருக்கும் எதுவும் பேசாத ஆறு, வயலுக்குள் நின்னாலே வாசனை தூக்கும் தாழம்பூப் புதர், தானாகப் பாதை விரிக்கும் காடு என்று அவர் அலைந்து திரிந்து, கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிந்த அவரின் கீழாம்பூர் கிராமம் அவரது எழுத்தின் மூலம் வாசகனின் மனதில் மழையாய்ப் பொழிந்து மண்வாசனையைக் கிளப்பி விடுகிறது.

ஏக்நாத்தை ஒரு ஓவியன் என்று நாம் கருதுவோமானால் அவர் கையிலிருக்கும் வண்ணங்கள்தான் ஞாபகங்கள்.
ஆனால் இந்த ஞாபகங்களை வண்ணங்களாகப் பயன்படுத்த வேண்டுமானால் அந்த எழுத்தாளன் உண்மை என்னும் தூரிகையைத் தனது கையில் ஏந்த வேண்டும். அப்போதுதான் வண்ணங்கள் பிசிரடிக்காமல் இருக்கும். வங்கிக் காசாளர்கள் ரூபாய் நோட்டை எண்ணுகிறபோது அவர்களின் விரல் தொடுதலில் காகிதத்தின் சொரசொரப்பிலேயே அது கள்ளநோட்டா நல்ல நோட்டா என்று கண்டு பிடித்து விடுவது போல, ஞாபகம் என்ற பெயரில் உருவாக்கப் படும் பொய்ச் சித்திரங்களை ஓரத்து வாசகன் எளிதில் கண்டுபிடித்து விடுவான். எனவே உண்மை எனும் தூரிகையின் தொடுதலில்தான் ஞாபகம் எனும் வண்ணங்கள் பிரகாசிக்கும். இக்கட்டுரைகளில் இதை அறிந்தவராகச் செயல்படுகிறார் ஏக்நாத்.

அடுத்ததாக இந்த எழுத்துக்களில் ஞாபகங்களை நேசித்துத் தள்ளுகிறார். ஞாபகங்களை நேசிப்பது என்பதின் முதல் நிபந்தனை என்ன தெரியுமா? ஞாபகங்களை நேசிக்கத் தொடங்குவதற்கு முன்னால் உன்னை நீயே நேசிக்கத் தொடங்க வேண்டும். உனது மார்பில் அணிந்த பதக்கங்களை நேசிக்கிறபோது அந்த பதக்கங்களை உனது சட்டையில் குத்துகிறபோது கை தவறி உனது மார்பிலும் கொஞ்சம் குத்தி கசிந்த ரத்தத்தையும் நேசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

உனது குற்றம் குறைகளோடு, உனது மாசு மறுக்களோடு, உனது தோல்விகளோடு,உனது ரணங்களோடு, உனது வெற்றிகளோடு, உனது பதக்கங்களோடு, உனது பரிவட்டங்களோடு எந்தவித நிபந்தனையுமற்று உன்னை நீயே நேசிக்கத் தொடங்க வேண்டும்.

இந்த நேசிப்பு வந்து விட்டால் எல்லாம் சாத்தியப்பட்டு விடும். காலையில் பார்த்தும்கூட மாலையில் மீண்டும் ஒரு முறை நலம் விசாரிக்கும் பாம்படப் பாட்டியின் பெயர் என்ன என்று ஏக்நாத்துக்கு மறந்து போயிருக்கிறது. லக்ஷ்மி பாட்டி என்றோ ராக்காயிப் பாட்டியென்றோ ஒரு பெயர் ஜோடிக்கத் தெரியாதா அவருக்கு? ஆனால் அப்படி ஒரு பொய் ஜோடனை செய்ய மறுக்கிறார் அவர். அதனால்தான் அவள் வெறுமனே ‘பாம்படப் பாட்டி' ஆகி விடுகிறாள்.

காது வளர்த்து அதில் கனமான பாம்படம் எனும் அணிகலனை அணிந்து, காதாட்டிப் பேசும் மூதாட்டியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்த அவரால் முடிகிறது . தகவல்கள் மறந்து போயிருக்கலாம். ஆனால் காலையில் விசாரித்தும் கூட மாலையிலும் ஒரு முறை விசாரிக்கும் பாட்டியின் அன்பு எனும் அனுபவம் அவள் பெயர் எனும் தகவலை விட முக்கியமானது என்பது அவருக்குத்த் தெரியும்.

அவரது எழுத்துச் சித்திரத்தில் வரும் பல கதாபாத்திரங்களின் பெயர்களை மறந்து போயிருக்கிறார் ஏக்நாத். கால வெள்ளம் எனும் காட்டாற்றில் எதிர் நீச்சல் போட்டுக் கரையேறுகிறபோது இப்படி இடுப்பு வேட்டிகளை இழந்து போக நேர்வது இயல்புதான். வாழ்க்கை என்பது சதுரங்க விளையாட்டு அல்ல. அது பில்லியர்ட்ஸ் விளையாட்டு. எந்த பந்தை அடித்தால் எந்த பந்து, பாக்கெட்டுக்கள் போய் விழும் என்று நமக்குத் தெரியாது. நாம் மறக்க வேண்டும் என்று நினைப்பவற்றை அக்கு வேறாக ஆணிவேறாகப் பிரித்து நினைவில் வைத்திருந்து மனதை ஆறாத ரணமாகி வைத்து விடும். நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவற்றை மறக்கடித்து அதை உருத்தெரியாமல் ஆக்கி அதை தொலைவில் கேட்கும் கீதமாக்கி விடும்.

பெயர்களை மறந்தால் என்ன குடி முழுகியா போய் விடும்? அதுதான் அந்த கதாபாத்திரங்களின் செல்லப் பெயர்கள், அவர்களின் மீதான அன்பின் வாசனை அல்லது பகைமையின் முடை நாற்றத்தொடு மனதில் தங்கி நிற்கிறதே .இது போதாதா? பட்டாணிக் குருவி, பாம்படப் பாட்டி, குடலு தாத்தா, மூக்காண்டி, சடையன் என்று செல்லப் பெயர்களோடு ஏக்நாத்தின் ஞாபகத் தெருக்களில் நடந்து செல்லும் அல்லது உருண்டு புரண்டு புழுதியோடு கிடக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் வாசகன் மனதில் ஒரு மூலையில் துண்டு விரித்து நிம்மதியான இடத்தைப் பிடித்து விடுகின்றனவே.

என் மனசில் அடிக்கடி இரண்டு கேள்விகள் எழுவதுண்டு: கடலை நேசித்து காலம் காலமாய் கடலில் வாழும் கடல் ஆமைகள் கடலுக்குள்ளேயே முட்டையிடாமல், கரையேறி வந்து மணலில் பள்ளம் தோண்டி முட்டைகளை இடுவது எதனால்? அடுத்த கேள்வி: மார்கழி மாசத்துப் பனி போல மனசுக்குள் புரளும் ஞாபக அலைகளை எழுத்தில் இறக்கி வைத்து வாசகனின் முகம் பார்த்து நிற்பது எதனால்? இது ஆமைகளுக்கும் ஏக்நாத்துக்கும்தான் வெளிச்சம்.

எனது 'ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம்' புத்தகத்துக்கு கலைவிமர்சகர் இந்திரனின் முன்னுரை.

3 comments:

கோவி said...

அருமை..

காமராஜ் said...

மிக அற்புதமான விமர்சனம்,ஞாபகங்கள் தொலைந்துபோவது மிகப்பெரும் கொடுமை.மிகப்பெரும் சிதைவு நோய். ஞாபகம் பூத்துக்குலுங்கும் மனிதன் அழகிய இலக்கியவாதி. ஏக்நாத் கிராமங்களில் பொதிந்துகிடக்கும் ஆதிப்பொதுவுடமையை மட்டும் எடுத்து உலகுக்குச்சொல்லும் உன்னத மனிதர்.

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.