Wednesday, November 16, 2011

மார்கழி மனிதர்

கை, கால்களை உறைய செய்கிற கடுங்குளிர் மார்கழி மாதம் மட்டுமே அவரை பார்க்க முடியும். இரண்டு தோள்களிலும் ஜோல்னா பைகளை மாட்டிக்கொண்டு காவி நிற வேட்டி, ஜிப்பாவில் அவர் வருவதைப் பார்க்க, நம்ம வீட்டு தாத்தா போலவே தோன்றும். முன்பக்கம் வழுக்கையை கொண்ட நரைகளடர்ந்த தலை, காதில் கடுக்கன், கழுத்தில் ருத்ராட்ச மாலைகள், நெற்றியை மறைத்திருக்கிற திருநீறு, இவற்றைத் தாண்டி அவரது வலது கையில் இருக்கிற சேண்டி மற்றும் அழகான வெண்நிற சங்கு.

சேண்டி என்கிற வட்ட வடிவ கனத்த இரும்புத் தட்டுக்கும் சங்குக்கும் சம்மந்தமில்லைதான். அதிக மூச்சு வாங்கும் சங்கை எப்போதும் ஊதிக்கொண்டே இருக்க முடியாது என்பதாலும் தன் வருகையை அறிவிக்க, அதற்கு பதிலாக இன்னொன்று தேவை என்பதாலும் சேண்டி அவருக்குப் பயன்பட்டது. வெண் சங்கு, அழகான வடிவமைப்புகளுடன், வாயால் ஊதும்பகுதி தங்கப் பூண் போட்டு அழகாக்கப்பட்டிருந்தது. இந்த தங்கத்தின் காரணமாக உள்ளூர்க்காரர்களின் மதிப்பை குலைக்கும் வகையில், எப்போதும் அதன் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருப்பார் திருச்சங்குக்காரர்.
குளிரில் நடுங்கும் அதிகாலையில், ஊர் தொடங்குவதாகக் கருதப்படும் பேரூந்து நிறுத்தம் அருகிலிருந்து ஆரம்பிப்பார் முதல் சங்கொலியை. ‘பம்பம்பம்... பம்...பம்...பம்...' என இழுக்கவும் அவரது கன்னங்கள் புடைத்து கும்மென்று நின்ற சில நிமிடங்களில் ‘பபம்பம்...' என்று ராகமாக முடிப்பார். இந்த ராகத்தின் ரசனையறியாமல் பஸ்&ஸ்டாண்டில் படுத்திருக்கிற நாய்கள் ‘லொள் லொள்' என கத்தியபடி சிதறி ஓடும். ஊர், பாதி விழித்துக்கொள்ளும். விழித்தால் அந்த குளிரில் இழுத்துமூடி தூங்கத்தோன்றுமே தவிர, எழுந்து நடமாடத் தோன்றாது. இருந்தாலும் கலைந்து எழும் தூக்கம்.

இந்த சங்கூதலுக்குப் பிறகு, முருகன் பாடலை பாடிக்கொண்டு, சேண்டியை அடித்துக்கொண்டே அவர் தெருத்தெருவாக வருவார். நான்கைந்து வீடுகளைத் தாண்டி நின்றுகொண்டு சேண்டியை பலமாக அடித்தபடி நின்றவாறே கிழக்கும் மேற்கும் பார்ப்பார். அந்தக் குளிரிலும் யாராவது குழந்தைகளிடம், ஒரு க்ளாஸில் அரிசியை கொடுத்துவிடுவார்கள். அதை, ‘சாமி இந்தாங்க...'என்று நீட்டுகிற குழந்தைகளிடம் வாங்கி வலதுபக்கம் தொங்கும் ஜோல்னா பைக்குள் போட்டுக்கொள்வார். பிறகு தொடரும் நடையும் சேண்டியும்.

ஒவ்வொரு தெருவின் குறிப்பிட்ட வீடுகளுக்கு முன் மட்டுமே இந்த நல்சங்கை ஊதுவதை வழக்கமாக வைத்திருந்தார் அவர். அதில் ஒன்று எனது வீடு.

தூக்கம் ஒரு பக்கம் கலைந்தாலும், ‘பம்பம்..' என்ற அந்த வெண்சங்கு ஊதலில் காதுகள் அவரைத் தேடி அழைக்கும். அம்மாவிடம், ‘ஏம்மா சாமி வந்திருக்கு, அரிசி கொடு' என்பேன். ‘ஊர்க்காரவோளுக்கு கொடுக்கணும்னா ரொம்ப ஆர்வம்தான்டே' என்று முணு முணுத்துக்கொண்டே அம்மா, குதிருக்குள் கை விட்டு க்ளாஸில் அள்ளுவாள் அரிசியை. அவளிடம் வாங்கிகொண்டு வாசலுக்கு ஓடினால், அவர் சங்கொலியை முடித்திருப்பார். கொடுத்த அரிசியை ஜோல்னாவுக்குள் போட்டுவிட்டு, என் நெற்றியில் திருநீறை பூசுவார். பிறகு சேண்டி அடித்துவிட்டு கிளம்ப போகும்போது சொல்வேன்.

‘‘தாத்தா இன்னொரு தடவை...''.

இலேசாக சிரித்துவிட்டு, குறைவாக ஊதுவார் அவர். இருந்தாலும் அது எனக்கான ஊதலென்பதால் பெரும் மகிழ்ச்சி. இப்படியான நேரத்தில் ஆச்சியும் கூட வந்தால், ‘அவனுக்கு கொஞ்சம் தண்ணியடிங்கய்யா... ராத்திரியானா ரொம்ப வாய் உளறுதான்... ஏதும் அண்டிருக்குமான்னு தெரியல' என்பாள். அதாவது எனக்கு பேய் பிடித்திருக்கிறது என்பதன் சுருக்கக் குறியீடுதான், ‘ஏதாவது அண்டியிருக்கும்' என்பது. அவள் அப்படிச்சொன்னால் அவர் வைத்திருக்கிற கூஜாவிலிருந்து தண்ணீர் எடுத்து, என் முகத்துக்கு நேரே சள் என ஒரு வீச்சு. நடுங்கும் குளிரில் இது வேறு இன்னும் குளிராட்ட, முகத்தை துடைத்தவாறு, ஆச்சியை திட்டிக்கொண்டே வீட்டுக்குள் ஓடுவேன்.

திருச்சங்குக்காரரின் வருகை, அம்மாவுக்கு பால் கறக்கும் நேரம். ஒரு வேளை அவர் வர நேரமாகிவிட்டால் கூட பசுமாடு சத்தம் போட்டே அம்மாவை உசுப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தது.

‘மார்கழி காலைல நல்ல ஒலியை ஊர் கேக்கணுண்டா... ஊர் நல்லாயிருக்கணுங்கதுக்காக, சாமி சொல்லி அவர் வாராரு' என்று ஆச்சி சொல்வது எனக்குப் புரியாது. சாமி சொல்லி இவர் ஏன் வரவேண்டும்? சாமியே வரவேண்டியதுதானே என்பதாக எனக்குள் கேள்வி.

திருச்சங்குக்காரரின் பெயர் இதுவென்று ஊரில் யாருக்கும் தெரியாது. அவர் பக்கத்தூர்க்காரர். அதுவும் பக்கத்து ஊர் என்றுதான் தெரியுமே தவிர, எந்த ஊர் என்பது சுத்தமாகத் தெரியாது. மார்கழி முடிந்ததும் இந்த ஊரில் பிரிகிற அரிசிகளை மொத்தமாகச் சேர்த்து திருச்செந்தூர் கோவிலில் சேர்த்துவிடுவார் என்றும் அதனால் அவர் கடவுளின் ஊழியர் என்றும் ஊரில் சொல்லப்பட்டது. கடவுளின் ஊழியருக்கு என்ன சம்பளம் என்பது யாருக்கும் தெரியாது. தானம் செய்யும் குணம் கொண்ட உள்ளூர் மக்களுக்கு அது பற்றிய எந்த கேள்வியும் எழவில்லை.

தினமும் ஊர் முழுவதும் சென்றுவிட்டு, அரிசி அல்லது காசு வாங்கும் திருச்சங்குகாரர், நன்றாக விடியுமுன்பே பஸ் &ஸ்டாண்ட் வந்துவிடுவார். ஆட்கள் அதிகம் இருக்காத அங்கு, கிடைத்தவற்றை ஒரு வேட்டியில் கொட்டிப் பிரிப்பார். வெவ்வேறு வகை அரிசிகள் கலந்து கிடைக்கும் அந்த வேட்டியில், நாலணா, எட்டணாக்களுக்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்தம் புதிய ஒரு ரூபாய் நோட்டுகளும் கிடக்கும். ரூபாய், சில்லறைகளை தனியாக எடுத்துவிட்டு மொத்தமாக அரிசியை கட்டுவார். ஜோல்னா பை இப்போது வெற்றிடமாக இருக்கும். அதில் ஒன்றில் வெண்சங்கை வைத்துக்கொள்வார். எட்டு மணி பஸ் வந்து நின்றதும் டிரைவர் இவரைத் தேடுவார். சிரித்துக்கொண்டே இவரும் ஏறுவார். பிறகு, மறுநாள் காலையோ, முந்தைய நாள் இரவே வந்து பஸ்&ஸ்டாண்டில் தங்கிவிடுவாரோ தெரியாது.

ஆனால், மார்கழி மாதத்தின் கடைசி நாள் அவர் பகல் பன்னிரெண்டு மணி வரை ஊரில் அரிசிப் பிரிப்பார். வழக்கமாக அதிகாலையில் அதிகம் கண்டுகொள்ளாத வீடுகள், கடைகள் ஆகியவற்றை இந்த கடைசி நாளில் பிடித்துக் கொள்வார். அதிகமாக பிரியும் என்பதால் உடன் மகனையும் அழைத்து வருவார். இவர் காவி வேட்டியில் இருந்தால் அவன் வெள்ளை வேட்டியில், ஜிம் பாடி வெற்றுடம்பில் துண்டுடன் வந்துகொண்டிருப்பான். நடக்கும் போது அவ்வப்போது நெஞ்சை நிமிர்த்து முன்பக்கம் புடைக்க நடப்பான்.
இருக்கிற எல்லா கடைகளிலும் டீ, வடை உள்ளிட்ட வகையறாக்கள் ஓசியில் கிடைக்கும். அதிகபட்சம் பகல் பன்னிரெண்டு மணிவரைதான் என்றாலும் பதினோரு மணிக்கே ரெடியாகிவிடுகிற அண்ணாமலை செட்டியார் கடையில் சாப்பாடு சாப்பிட்டுவிட்டுதான் எழுவார். இதில் யாராவது கடை திறக்கவில்லை என்றாலோ, அல்லது வேறு விஷயமாக வெளியூர் சென்றிருப்பது தெரிந்தாலோ, அவர்கள் வீடுகளுக்கே சென்றுவிடுவார் திருச்சங்குக்காரர். எதையாவது வாங்கிவிட்டுதான் நகர்தல் நடக்கும். இதையடுத்து ஒரு வருடத்துக்கு அவரைப் பார்க்க முடியாது.

ஒரு முறை இவர் பற்றி பேச்சு வரும்போது, ‘மனுஷன் வாழ்க்கையில மூணு சங்கு இருக்குடே. குழந்தை பிறந்ததும் சங்குலதான பால் ஊட்டுதோம், இது முதல் சங்கா... கல்யாணத்தன்னைக்கு ஊதுதாவோலா, அது ரெண்டாவது... மூணாவது சுடுகாடு போவும்போது... எல்லாத்துக்கும் ரெண்டு மூணு விஷயம் வச்சிருக்காம் பாத்துக்கோ அந்த காலத்துலயே...இந்த சங்கும் அதுமாதிரிதான்'' என்ற சுடலை தாத்தாவிடம் இன்னும் ஏராளக் கதைகள் இருக்கலாம்.
கதைகளைச் சொல்வதும் கதைகளைக் கேட்பதும் அவரவர் விதியைப் பொறுத்தது.

இப்படியான வருடங்களில் ஒரு மார்கழி மாத குளிரில் பார்த்தபோது, உடல் தளர்ந்திருந்தார் திருச்சங்குக்காரர். பாடினால் ராகம் சிதறி ஓடுகிறது. சங்கிலிருந்து வரும் ஒலியும் சிதைந்து சிதைந்து வெளியேறுகிறது. அதனாலோ என்னவோ, சேண்டி அடிக்க அவர் மகனை அழைத்து வந்திருந்தார். எல்லோரையும் போல நன்றாக தூங்கிக்கொண்டிருக்க வேண்டிய நேரத்தில், இப்படி அழைத்து வந்துவிட்டாரே என்கிற எரிச்சல் அவனது முகத்தில் இருக்கும். இருந்தாலும் மேலத்தெருவுக்குச் செல்லும்போது அதிகாலையில் குளித்து, கூந்தல்களில் துண்டு கட்டியிருக்கிற இளம்பெண்கள், வாசல் பெருக்கி கோலம் போடுவதைப் பார்க்கிற போது, இந்த மாதிரியான எரிச்சல்கள் தானாகவே கழன்றுகொள்ளும் அவனுக்கு.

பெரியவர் உடல் தளர்ந்துவிட்டதால் அடுத்தடுத்த வருடங்களில் அவர் மகன்தான் வருவான் என நினைத்தேன். மார்கழிக்கு முந்தைய நாளே, அதிகாலை எழுப்பப்போகும் நல் ஒலியை எதிர்பார்த்து படுத்துக் கிடந்தேன். பன்னிரெண்டு மணி வரை தூக்கம் வரவில்லை. புதிதாக வரக்கூடிய அவர் மகன் சரியாக அந்த சங்கை ஊதுவானா? இழுத்து முடிக்கும்போது வருகிற இனிமையான ‘பபம்பம்' இவனுக்கு கைகூடுமா? அப்படி வருபவன் தெருவில் நுழைந்து என் வீட்டு வாசல் நின்று ஊதுவானா? எனக்காகக் கேட்டால், சங்கை எடுப்பானா? என்பது உள்ளிட்டு ஏராள கேள்விகளுடன் சமாதானங்களையும் நானே சொல்லிவிட்டு தூங்கிப்போனேன், காலை எட்டுவரை.

சங்கொலிக்காரர் வந்தாரா தெரியவில்லை. வாசல் திண்ணையில் சேலை முந்தானையால் உடலை மூடி வெற்றிலைப் போடும் ஆச்சியிடம் கேட்டேன்:

‘யாச்சி, இன்னைக்கு யாரு வந்தா? அவரா, மவனா?'

‘ரெண்டுபேருமில்லைடா பேரா' என்றாள் ஆச்சி.

6 comments:

செ.சரவணக்குமார் said...

என்ன ஒரு எழுத்து. கிளாஸ்.. நான் விரும்பி வாசிக்கும் வலைத்தளங்களில் தங்களுடையதும் ஒன்று. அதிகமாக பின்னூட்டம் எழுதவில்லையெனினும் தவறாமல் வாசித்துவிடுவேன்.

அபாரமான எழுத்து நடை உங்களுடையது. வாழ்த்துகள் நண்பரே.

துபாய் ராஜா said...

நாமும் , நமது கிராமங்களும் தொலைத்து வரும் அடையாளங்கள் இது போன்று ஏராளம்.. ஏராளம்..
:((

சாந்தி மாரியப்பன் said...

அழகானதொரு நினைவுப் பகிர்வு..

ஆடுமாடு said...

//நான் விரும்பி வாசிக்கும் வலைத்தளங்களில் தங்களுடையதும் ஒன்று//

நன்றி செ.சரவணக்குமார்.

/பின்னூட்டம் எழுதவில்லையெனினும்...//

பின்னூட்டங்களுக்காக நானும் எழுதவில்லை நண்பரே.

என் எழுத்தில் நான் என்னைத் தேடுவதற்காகவே எழுதுகிறேன்.

மீண்டும் நன்றி.
.................

ராஜா அண்ணாச்சி நன்றி.
..............

அமைதிச்சாரல் மேடம் நன்றி.

அகல்விளக்கு said...

பல வருடங்களுக்குப் பின் கேட்டேன் சங்கொலியை...

உங்கள் எழுத்து வாயிலாக...

:-(

நினைவூட்டியமைக்கு நன்றி...

Rajagopal.S.M said...

முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

வாழ்க்கைக்கு மூன்று சங்குகள் என்கிறார் பட்டினத்தார்.

முதல் சங்கு பாலூட்டுகிறது, குழந்தையாக இருக்கும்போது.

இரண்டாவது சங்கு திருமணத்தின்போது ஊதப்படுகிறது.

மூன்றாவது சங்கு மரணத்திற்குப் பிறகு ஊதப்படுகிறது.

அதிலும் வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிறார் பட்டினத்தார்.

`சங்கம்’ என்ற வார்த்தை சங்கையும் குறிக்கும்; சங்கமம் ஆவதையும் குறிக்கும்.

`முதற்சங்கம் அமுதூட்டும்’ என்பது, சங்கு பால் கொடுப்பதைக் குறிக்கிறது.

`மொய்குழலார் ஆசை நடுச்சங்கம்’ என்பது, ஆண் பெண் உறவு நடுவிலே சங்கமமாவதைக் குறிக்கிறது.

`கடைச்சங்கம்’ என்பது கடைசியில் மரணத்தில் சங்கமமாவதைக் குறிக்கிறது.

“இவ்வளவுதான் நாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை” என்கிறார் பட்டினத்தார்.

(Copy Paste comment)