Tuesday, May 18, 2010

புளியம் பிஞ்சு காதல்

இன்றைய நிலவரப்படி முத்துசாமி திருப்பூரில் இருப்பதாக தகவல். நேற்றைய தகவல்கள் அவன், புனலூரில் அலைந்து கொண்டிருப்பதாக வந்தது. இம்மாதிரியான தகவல்களின் உண்மையை, நீங்களோ நானோ கணிக்க முடியாதது. மேற்சொன்ன தகவல்கள் செல்லிடப் பேசிகள் செவிக்குள் வராத காலகட்டம்.

முத்துசாமி, மாடுகளில் இருபத்தி ஏழையும், பன்னிரெண்டு செம்மறிகளையும் மேய்ப்பதை தொழிலாகக் கொண்டவன். மாட்டின் பற்கள், கொம்புகள், பால்சுரக்கும் மடுக்கள், அவை நடக்கும், அசையும் முறைகள், இன்ன பிற விவரங்களை நாக்கு நுனியில் வைத்திருப்பவன். உதாரணத்துக்கு ஒரு பதமாக, ‘கப்பை கொம்பு மாடுகள் ஈனும் குட்டிகள், கிடாரியாகத்தான் இருக்கும்' என்பதைக் கொள்ளலாம்.

இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ மாட்டின் பிரசவங்களை பார்வையாலேயே அறிந்துவிடும் நோக்கன் அவன்.

மாடுகளைப் பற்றி இப்படியான உலகறிவை பெற்றிருந்த அவன், போன திங்கட்கிழமை அவற்றைத் தவிக்க விட்டுவிட்டு, பஜனை மடத் தெரு பொன்னம்மாளோடு ஓடிவிட்டான். ஓடி விட்டான் என்பது நிஜமே. நடு ஜாமமோ, அதிகாலையிலோ பயணிகளை அடைக்கும் பஸ் வசதி ஊரில் கிடையாது. அவர்களின் பேச்சுப்படி, நள்ளிரவு தொழுவத்தின் பின்பக்கமாக (அது கருவை முட்கள் வளர்ந்து காடாகி இருக்கும் இடம்) வந்துவிடுவது, கையை பிடித்துக்கொண்டு இருவரும் ரயிலடிக்கு ஓடி செல்வது, அங்கிருந்து அம்பாசமுத்திரம். பிறகு திருச்செந்தூர். (இத்தகவல்கள் நேற்றுமுன்தினம் கதைக்கப்பட்டவை)

முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில், வள்ளி, தெய்வானை சமேதரான திருச்செந்தூர் முருகன் ஆசிர்வாதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ‘காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்' என்று யார் வாழ்த்தினார்களோ?

‘‘அம்பாசமுத்ரம் கார்சான்டுல பாத்தம்ல. அந்தப் புள்ள தலையில முக்காடை போட்டுட்டு நின்னுட்டிருந்து. இந்தப் பய, கையில ஒரு பைய வச்சுகிட்டு பஸ்ல ஏறுனாம்.'

இது முதல் நாள் தகவல்.

அடுத்த தகவல், ‘‘இந்தப் பயல மாதிரியே இருக்கேன்னு அப்பவே நெனச்சேன். இவன் ஏன் இங்க வரப்போறான்; வேற யாராவது இருப்பாவோன்னுட்டு வந்துட்டேன். இங்க வந்தப் பெறவுலா தெரியுது''என்பதாக இருந்தது. இத்தகவலைச் சொன்னவர் முருகனுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு வந்தவர்.

இந்த தகவல்களினூடாக முத்துசாமி, பொன்னம்மா காதல் மலர்ந்த கதையைக் கேட்டாக வேண்டும்.

மாடுண்டு தானுண்டு என்றிருந்த முத்துசாமி, அன்று உச்சி வெயில் பேய்கள் உலவும், சுப்பையா தோப்புக்கருகில் மாடுகளை மேய விட்டிருந்தான். அருகில் குளம். மாடுகள், எல்லை தாண்டி எங்கும் போகாது என்ற தைரியத்தில் அரசமரத்தினடியில் பூடமாக வீற்றிருந்த பச்சத்தி மாடனுக்கருகில் துண்டை விரித்து, நித்திரையில் ஆழ்ந்தான். கொளுத்தும் வெயிலில் இப்படியானதொரு குளு குளு இடம் தூங்குவதற்கு கிடைப்பது ஊருக்குள் அரிது.

வேலை வெட்டி இல்லாத வம்பளந்தான்கள் தூங்குவதற்காக, கட்டு பீடிகள் சகிதமாக இங்கு வருவதை வழக்கமாக்கி வைத்திருந்தனர். அவர்களின் தூக்கத்தை ஆசிர்வதிப்பவராக, பச்சத்திமாடன் அருள்பாளித்துக் கொண்டிருந்தார்.

அன்று மஞ்சப்புளிச்சேரியில் சிறுகிழங்கு எடுக்கப்போன மேலத் தெரு பொம்பளைப் பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். தலையில் கிழங்கு எடுத்ததற்கான கூலியை தென்னம்பொட்டியில் வைத்துகொண்டு வந்தவர்களுக்குப் புளியங்காய் ஆசை. காரணம் சுப்பையா தோப்பிலுள்ள புளியங்காய்கள் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையை இயற்கையாகப் பெற்றிருந்தது.

பேய்கள் உலவும் இடம் என்று ஊர்க்காரர்களால் வர்ணிக்கப்பட்டிருப்பதால் தனியாகச் செல்ல அவர்கள் பயம் கொண்டனர். இதன் காரணமாகத் தூங்கிகொண்டிருந்த முத்துசாமி எழுப்பப்பட்டான். இளம் பெண்களின் ஆசையை பூர்த்தி செய்யாமல் இருக்க, அவனால் முடியவில்லை. காரணம் அதுமட்டுமல்ல. அவனுக்குள் சின்னதாக கிறக்கத்தை ஏற்படுத்தும் பொன்னம்மாள் சகதி அப்பிய தாவணியோடு, தரையில் கோடு கிழித்துக்கொண்டிருந்தாள்.

கோடுகள், சிற்றின்ப மூளையின் நரம்புகளை உசுப்பேற்றியதன் விளைவாக, வேலி தாண்ட துணிந்தான். வேலி என்பது பெயருக்குத்தான். பலமுறை பலர் அந்த வழியை பயன்படுத்தி சென்று அது பாதையாகவே மாறியிருந்தது.

சுப்பையா தோப்பு பசுஞ்சோலைகளாலானது என்று நினைத்திருந்தால் எண்ணத்தை மாற்றிக்கொள்ளலாம். இந்த தோப்பு பொத்தைக்காட்டுக்குள் புழுதிகளால் சூழ்ந்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்னை, புளிய, மா மரங்கள். பம்பு செட் தண்ணீர் தொட்டி இருப்பதற்கு அருகில் நெல் விளையும் வயல்களும், உள்ளி, மிளகாய் உள்ளிட்டவை விளையும் வயல்களும் இருந்தன.

முத்துசாமிக்கு புளியங்காய்கள் பறிப்பது கை வந்த கலை. இடுப்பு சாரத்தை தூக்கி கட்டிக்கொண்டு மரத்தில் ஏறி உலுப்பினான். இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பது மாதிரி கொத்துக்கொத்தாக விழுந்தன. பக்கத்து புளிய மரத்திலிருந்து ஒரக்காய்கள் தானாக விழுந்து கிடந்தன. (ஒரக்காய்கள் என்பது பாதி புளி ஆகியும் பாதி ஆகாமலும் இருக்கின்ற ரெண்டுங்கெட்டான் பருவம்). பாதி பச்சை, பாதி காப்பிக் கலரினாலான அதன் சுவை வித்தியாசமானது. புளியம் பிஞ்சுகள், மற்றும் ஒரக்காய்களை சாரத்துக்குள் போட்டுக்கொண்டு வந்தான். பச்சத்தி மாடன் சந்நிதியில் ஆளாளுக்குப் பிரித்துக்கொடுத்தான்.

பொன்னம்மாள் தாவணியின் ஓரத்தில் புளியம் பிஞ்சுகளைக் கொட்டி, அதை முடிய போனாள். அப்போதுதான் கண்ணில் பட்டது. வளைந்து நெளிந்து கிடக்கும் புளியம்பிஞ்சுகளில் ஒன்று இதய வடிவத்தில் வளைந்திருந்தது. அதை கையில் எடுத்துவிட்டு அவனைப் பார்த்தாள். அவன் வழக்கமான பல்லிளிப்பை உதிர்த்து, அவளது மேனி அளந்தான். எல்லோருக்கும் கொடுத்த அவன், நமக்கு மட்டும் இருதய வடிவிலான புளியம் பிஞ்சை கொடுத்திருப்பது அவனது உளக்கிடக்கையை வெளிப்படுத்தத்தான் என்பதாக அவளுக்குப் பட்டது. அடுத்த வினாடியிலிருந்து காதல் பிரவாகமெடுத்து ஓடத் தொடங்கியது. புன்னகைத்தாள். மனசுக்குப் பிடித்தவளின் இம்மாதிரியான புன்னகைகள் கிடைப்பது அரிதென்பதால் கனவுலகில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான் முத்துசாமி. அந்த சைக்கிளின் கேரியரில் பொன்னம்மாள் வெட்கப்பட்டுக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் போன மாதம்தான் புதிதாக டூரிங் தியேட்டர் வந்திருந்தது. அது தொடங்கி, திரையிடப்பட்ட ஏழெட்டு காதல் படங்களைப் பார்த்ததன் விளைவாக இதய வடிவம் என்பது காதலின் அடையாளம் என்பதை அவள் அறிந்திருந்தாள். இப்படி தொடங்கிய அவர்கள் காதல், டூரிங் டாக்கிஸ், சின்ன வாய்க்கால், மாத்ராங்குளத்துப் பொத்தை, கடனாநதி ஆறு, சாணம் சுமந்து போகும் எருக்கெடங்குகள் என்று சந்தித்ததின் விளைவாக அதிகரித்தது. இந்தச் சந்திப்புகளுக்காக அவன் சில நாட்கள் மாடுமேய்க்க கட் அடித்திருந்தான். அந்த நாட்களில் மாடுகளை யார் மேய்த்திருப்பார் என்ற அதீத ஆவல் உங்களுக்குத் தேவையில்லாதது.

காதல் கண் மண் தெரியாமல் வளர்ந்த நேரத்தில்தான், செம்மறியான் மகள் பார்வதி, கப்பைக்காலன் மகன் கணேசனுடன் ஓடிப்போனாள். இந்த காதல் பற்றியும், இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஓடிப்போய் (இதுவும் திருச்செந்தூர்) திருமணம் செய்துகொண்டது பற்றியும் ஊரில் முக்குக்கு முக்கு உட்கார்ந்து பரபரப்பாக்கிக் கொண்டிருந்தனர். முத்தையா டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில், மேல கோயில் பூசாரி ஒரு விஷயத்தைச் சொன்னார்.

‘‘காலம் கலிகாலாம்னு சும்மாவாயா சொன்னான். பார்வதி யாரு? கணேசன் யாரு? பெத்தவளும் மகனும். இப்படி நடக்கலாமா?''

அவர் இப்படிச் சொன்னதும், பத்தாம் கிளாஸ் வரை படித்திருந்த முத்துப்பாண்டி, ‘‘அதுக்கும் இதுக்கும் ஏம்யா முடிச்சு போடுதீரு... ஒம்ம பொண்டாட்டி பேரு மீனாட்சி, உம்ம பேரு பாலசுப்ரமணியன். ரெண்டும் சரியான்னு நீரு பாத்திராவே''என்றான்.

சம்மந்தமில்லாமல் ஒரு உறவு குழப்பத்தை ஏற்படுத்தி மாட்டிக்கொண்டோமோ என்று நினைத்தாரோ என்னமோ, ‘என்னமோ போங்க' என்று சொல்லிவிட்டுக் கழன்றார்.

சரியாக நான்கு நாட்கள் கழித்து, திருக்குறுங்குடியில் கணேசனின் மாமா வீட்டில் தங்கியிருந்த புதுமண ஜோடி, உள்ளூர் சொந்தங்கள் முன்னிலையில் அழைத்து வரப்பட்டனர். பிறகு நெருங்கியவர்களை மட்டும் அழைத்து, திருமண வரவேற்பு நடந்தது. முட்டிக்கொண்டவர்கள் உறவுக்காரர்களானார்கள்.

இந்த பரபரப்பில்தான் முத்துசாமி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டான். முதலில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பெற்றோர்கள், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டால் ஏற்றுக்கொள்வார்கள் என்ற உண்மை அது.

இந்த தைரியத்தில் இருக்கும்போதுதான், இவர்கள் காதல் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்க்காரர்களுக்கு அவல் ஆனது. இந்த அவலின் உச்ச பட்சமாக வடக்குவா செல்வி அம்மன் கோயிலுக்கு கொடை கொடுப்பது பற்றி சங்கத்தில் நடந்த நள்ளிரவுக் கூட்டத்தின் போது நடந்தது அந்த சம்பவம்.

இரண்டு பாட்டில் பட்டை சாராயத்தை அவனின் சேக்காளி, பக்கத்து ஊரில் இருந்து வாங்கி வந்திருந்தான். இதை இவனுடன் மாடு மேய்க்கும் சேக்காளிகள் குடிப்பதற்கு தயாராக இருந்தனர். குடிப்பதற்கான சிறந்த இடத்தை தேர்வு செய்யும் பொறுப்பு முத்துசாமிக்கு விடப்பட்டிருந்தது. தெப்பக்குள திண்டு, பஞ்சாயத்து அலுவலகத்தின் பின்பக்கம், வடக்குத் தெரு புளிய மரம் என்பது உள்ளிட்ட இடங்கள் அலசப்பட்ட பின், சின்ன வாய்க்கால் ஓடும் சந்திரமய்யர் வீட்டின் பின்பக்க இடம் ஒரு மனதாக முடிவாகியது. அந்த இடம், வீட்டின் சுவரோடு சேர்ந்த வாய்க்கால் படித்துறை. பெண்கள் மட்டுமே குளிக்கும், துணி துவைக்கும் இடம்.

நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு நண்பர்கள் குலாம் சம்பந்தப் பட்ட இடத்துக்குச் சென்றது. கொஞ்சம் கொஞ்சமாகப் போதை தலைக்கேற, முத்துசாமி காதல் வலியில் விழுந்தான். மற்றவர்களும் போதை தள்ளாட்டத்தில் இருந்த நேரம், அந்த சுவற்றைப் பார்த்தான். சிலரது பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அனைத்தும் தனித் தனிப் பெயர்கள். முத்துசாமியின் மூளை உடனே வேலை செய்தது. பக்கத்தில் இருந்த எருக்குழிக்குப் போய், அடுப்புக்கரித் துண்டை எடுத்து வந்து, எழுத ஆரம்பித்தான். தனது அறிவுக்கு எட்டிய வரையில் பொன்னம்மாளை ‘பென்னம்மள்' என்றும் அவனை சரியாகவும் எழுதி, அதற்கு கீழே ‘கதலி' என்று எழுதிவிட்டு, சுற்றி ‘ஆட்டின்' வடிவத்தை வரைந்தான்.

முழு திருப்தியில் படித்துறையிலேயே நண்பர்களுடன் தூங்கி, அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டான். பதினோரு மணி வாக்கில் மாடுகளை தெப்பக்குளத்தில் இறக்கிக்கொண்டிருக்கும் போது, மேலத்தெரு சங்கன் விஷயத்தைச் சொன்னான்.

‘‘ஏல, சந்திரமய்யர் வீட்டு சுவர்ல யாருல அப்படி எழுதுனா?''

‘‘என்ன எழுதியிருக்கு'' என்ற முத்துசாமிக்கு உணர்வு வந்து, அதை தான் எழுதவில்லை என்று எரியும் சூடத்தில் சத்தியம் செய்தும் வேறு யாரோ எழுதியிருப்பார்களென்றும் சொன்னான்.

அதற்குள் ஊருக்குள் பரவி, பேசத் தொடங்கியிருந்தனர். அப்பாவின் திட்டுக்கும், அம்மாவின் அடிக்கும் உட்பட்டிருந்தாள் பொன்னம்மாள்.

ஒரு பகல் முழுவதும் பொறுத்திருந்துவிட்டு, ஆட்கள் நடமாட்டமில்லாத நள்ளிரவில் வாய்க்காலுக்குப் போனான். தென்னங் கூந்தலில் தண்ணீர் மொண்டு, மனதால் அழிக்க முடியாததை சுவற்றில் ஊற்றி அழித்தான்.

விஷயம் அதற்கு பிறகுதான் வெவகாரமானது. பொன்னம்மாளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்கும் ஏற்பாடுகள் நடந்தன. வழக்கமான எதிர்ப்பாக அவள் அதை எதிர்த்தாள்.

‘எந்தப் பயலாவது பொண்ணு கேட்டு வரட்டும்; வெளக்கு மாத்தால சாத்துதேன்' என்று அவளும், ‘பொட்ட செரிக்கி இப்டியாட்டி பேசுவே' என்று அவள் அம்மாவும் சுகமான சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவன் வீட்டில் வேறு விதமான பிரச்னை. ‘‘ஒனக்கு என்னல தெரியும். கருத்த பிள்ளையூர்ல கெடை போட்டிருக்கும்போது, ரெண்டு ஆட்டை களவாண்டுட்டு போன பயதான் அவன். அந்த வீட்டு கேணச்சிய கல்யாணம் முடிக்கணுங்கியாக்கும். எனக்குலா கேவலமா இருக்கு'' என்றார் அப்பா.

இம்மாதிரியான பெற்றோர்களின் கவுரவ குறைச்சல்களை ஒரேடியாக கொன்று விடுவது என்ற முடிவுடன், இருவரும் நள்ளிரவில் முடிவெடுத்தனர் ஊரை விட்டு ஓடிவிடுவது என்று.

அதற்கு பிறகு நீங்கள் படித்ததுதான் இந்தக் கதையின் தொடக்கம். இன்றைய இரவு முடிந்ததும் நாளை மேலும் ஒரு தகவல் வரும். அவன் உங்கள் ஊரில் இருக்கலாம் என்று. தகவல்கள் காதலை விடவும் வலிமையானவை.

-குங்குமம் வார இதழில் வெளியான என் சிறுகதை.

கொஞ்சம் பிசி. அதனால பழைய பதிவு.

17 comments:

Raju said...

படிச்ச மாதிரியே இருக்கேன்னு கீழ வந்தா அதேதான்!!

மறுமுறையும் நன்றே.

Chitra said...

கதை நல்லா இருக்குங்க. பாராட்டுக்கள்!
பத்திரிகையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!

ஹேமா said...

ஒரு கிராமத்துக் காதலை அப்படியே கண்முன் நிறுத்திவிட்டீர்கள்."இதய வடிவில் ஒரு புளியம்பழம்."

க.பாலாசி said...

கதை நல்லாருக்குங்க...

அந்த புளியம்பழத்தப்பத்தி படிக்கும்போது நாக்குல எச்சில் ஊறியது... அதுவும் ரெண்டும்கெட்டான் நிலையில்.....

Balakumar Vijayaraman said...

நல்லா இருக்கு.

ஆடுமாடு said...

//படிச்ச மாதிரியே இருக்கேன்னு கீழ வந்தா அதேதான்!!
மறுமுறையும் நன்றே//

நன்றி ராஜு

ஆடுமாடு said...

//கதை நல்லா இருக்குங்க. பாராட்டுக்கள்!//


நன்றி சித்ராக்கா

ஆடுமாடு said...

ஹேமா, பாலாசி, பாலகுமார் வருகைக்கு நன்றி.

saba said...

அந்த "இதய வடிவ புளியம்பழம்" எங்கங்க இருக்கு.


கதை நல்லா இருக்குங்க. பாராட்டுக்கள்,

saba said...

எங்கங்க அந்த "இதய வடிவில் புளியம்பழம்."

கதை நல்லாருக்குங்க...

கிருஷ்ணா said...

கதை நல்லாருக்கு.
Excellent.

கிருஷ்ணா said...

கதை நல்லாருக்கு.
Excellent.

Ahamed irshad said...

Nice Story.. Clean Write-up..

பத்மா said...

‘காலம் கலிகாலாம்னு சும்மாவாயா சொன்னான். பார்வதி யாரு? கணேசன் யாரு? பெத்தவளும் மகனும். இப்படி நடக்கலாமா?''

அடக்கடவுளே ஒரு நிமிஷம் நானும் தெகச்சு போயிட்டேன் ஹஹஅஹா

அவனுக்குள் சின்னதாக கிறக்கத்தை ஏற்படுத்தும் பொன்னம்மாள் சகதி அப்பிய தாவணியோடு, தரையில் கோடு கிழித்துக்கொண்டிருந்தாள்.

ஆஹா என்ன ஒரு costume

‘காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்'

நெஜம்மா இது புரில .ஒன்னும் விவகாரம் இல்லல்ல ? முதல் முறை படிக்கிறேன்

அருமை ஆடு மாடு சார் .இங்க எங்க ஊர்ல இந்தோனேசியா புளின்னு ஒண்ணு விக்கறான் செம இனிப்பும் புளிப்புமாய் இருக்கு .அதுல செடி வளருமான்னு கூட பாத்தேன் வளரல .எங்க தோட்டத்தில புளியமரம் இருக்கறதால புளியின் எல்லா பருவத்தையும் சாப்பிட்டு இருக்கேன் .பூ, கொழுந்து, பிஞ்சு, செங்காய், பழம் ..அதன் ருசியே ருசி

ஆடுமாடு said...

சபா, கிருஷ்ணா, அஹமது நன்றி,.
................

பத்மா மேடம்

//‘காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்'

நெஜம்மா இது புரில .ஒன்னும் விவகாரம் இல்லல்ல ? முதல் முறை படிக்கிறேன் //

மேடம், இது சிலப்பதிகாரத்துல, கோவலன், கண்ணகி திருமணத்தின்போது தேவர்கள் வாழ்த்திய வார்த்தை. சிலம்பு வார்த்தை.

Unknown said...

very nice one.....i am not able to write in tamil...sorry for that....

You have quoted about my native..i am from karuthpillaiyur....I felt about my village ...

Michael-Dubai

ஆடுமாடு said...

Nice to see here Michel. Thanks.
Can i get ur mail id?