Tuesday, September 15, 2009

காடு-1

உச்சி மகாளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதில் சில சுவாரஸ்யங்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ரசனையை பொறுத்தது அது. மாடுகள் மேய்ப்பதில் கெட்டிக்காரனான உ.மகாளிக்கு வயது இருபது. வயது முக்கியமில்லையென்றாலும் இந்த பருவத்துக்கான சேட்டைகளை, நீங்கள் அறிய உதவலாம். பீடி குடிப்பது, தண்ணியடிப்பது போன்ற எந்த நல்ல பழக்கங்களையும் அவன் கொண்டிருக்கவில்லை. அதை கொண்டிருப்பதற்கு, பணம் ஒரு விஷயம் என்பதை தவிர, பிற காரண காரியங்களை தேட வேண்டியதில்லை. உ.மகாளியின் தந்தை எனப்படுவர் ஊரில் கஞ்சன் என பெயரெடுத்தவர். அவருக்கு தெரியாமல் மாடக்குழியில் இருந்து அஞ்சோ பத்தோ எப்போதாவது திருடும் பழக்கம் இருந்தாலும் அதை எப்போதும் செய்வதில்லை உ.மகாளி. இப்படியான இன்ட்ரோ உ.மகாளிக்கு போதுமென்பதால் கதைக்குள் செல்லலாம்.

தன்னைப்பற்றிய இப்படியொரு விஷயம், தனக்கு தெரியாமல், சேக்காளிகளுக்குத் தெரிந்திருக்கிறதே என்பதில் அவனுக்கு கொஞ்சம் வெசனைதான். தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து தலையில் கட்டினான். அவன் மேல் சட்டை அணிவதில்லை என்பதால் தோளில் இருக்கின்ற பெரிய மச்சம் பளிச்சென தெரிந்தது.

மேல பத்தில் மாடு மேய்த்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது, கோட்டிமணிதான் இதை சொன்னான். கொஞ்சம் புளங்காகிதமும், புல்லரிப்பும் இருந்தாலும் கூட, தனக்கு ஏன் இது தோணவில்லை என்பதில் குழப்பமடைந்தான். மறுநாள் கிட்டி ஐயர் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது பொன்னையாவும் இதை சொல்ல, மகிழ்ச்சியடைந்தான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது.

முத்தையா பிள்ளை வீட்டுக்கு, காலையில் பால் கறக்க போனபோதுதான் லட்சுமியை அவன் சந்தித்தான். அதற்கு முன் பலமுறை சந்தித்திருந்தாலும் அன்று அவனுக்கு ஏதோவாகி இருந்தது. இந்த ஏதோவாகியை, காதலென்றும் கொள்ளலாம். தினமும் வெறும் பல்லிளிப்பும், பாட்டு பாடுவதுமாக அவனது காதல் ஒரு கட்டுக்குள் இருந்தது. விஷயத்தை, உடன் மாடுமேய்க்கும் அய்யா சாமியிடன் சொன்ன போது, ‘சும்மா சிரிச்சிட்டு இருந்தா என்னல அர்த்தம். ஐ லவ் யூன்னு சொல்லித் தொலைல’ என்றான். பக்கத்தூர் டூரிங் தியேட்டருக்கு, அப்போதுதான் அதிகமாக காதல் படங்கள் வரத்தொடங்கி, ஊருக்கு காதல் வார்த்தைகளை சொல்லிக்கொடுத்ததன் விளைவாக, ஐலவ்யூ வை அறிந்திருந்தான் அவன். அறிதலும் அறியப்படுதலும் அவரவர் விதிப்படி.

இப்படி இவன் சொன்ன ஐடியாபடி, அந்த வார்த்தையை சொல்லி விடுவதென்று முடிவெடுத்த காலையில், பால் கறக்கும்போது, லட்சுமியின் அம்மா பத்தமடையாள் வந்தாள். அவளுக்கு உடல் நலமில்லையாம். உடல் நலம் சரியில்லை என்பதற்கு, ஊரில் அந்த மூன்று நாள் என்றும் பொருள். நான்கைந்து நாள் கழித்து, சொல்லிவிடுவது என்று நினைத்த போது, அவளது அம்மாவானவள், ‘எய்யா விஷயம் தெரியுமா? நம்ம புள்ளைக்கு ஆழ்வார்க்குறிச்சியில மாப்பிள்ளை பாத்தாச்சு’’ என்றாள். குபுக்கென்று வியர்த்தது அவனுக்கு. ஒரு காதல், முளையிலேயே கிள்ளி எரியப்பட்டதற்காக, அவன் இரண்டு நாட்கள் மட்டுமே வருத்தப்பட்டான்.

இப்படியான, சின்ன காதல் சோகத்தில் அவன் சஞ்சரித்துக்கொண்டிருந்த போது, ஸ்ரீனிவாச அய்யங்கார்வாள் பசுமாடு வாங்கியிருந்தார். காலையில் 5 லிட்டரும் மாலையில் 5 லிட்டரும் கறக்கும் மாடு. கறப்பதற்கு தந்தைவழி பணிக்கப்பட்டிருந்தான் உ.மகாளி. இதன் பொருட்டு அக்ரகாரம் போகும் வழியில், கொஞ்சம் சுற்றி வளைத்து, அத்தை உறவான மாரியம்மாளின் வீட்டில் அவளது மகள் சுருட்டையை அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தான். அவளும் அதிகாலை, இவன் வரும் வேளையில் அக்ரகாரத்துக்கு பின்பக்கம் இருக்கிற வாய்க்காலில் தண்ணீர் எடுக்க செல்வதை வழக்கமாகியிருந்தாள். வெறும் சந்திப்பு, புன்னகை என்றிருந்த வேளையில், அய்யாசாமியின் அறிவுரைப்படி கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வழக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவள் நடிகை ராதாவின் சாயலை ஒத்திருப்பதாக நினைத்துக்கொண்டான்.

சுருட்டையும் சுமாராக இப்போது இவன் வசம் ஆகியிருந்தாள். மந்திர மூர்த்தி கோயில் கொடையை முன்னிட்டு, புது துணி அணியும் பழக்கம் இருந்ததால், உ.மாகாளி, அவளுக்காக சைக்கிளில் அம்பாசமுத்திரம் சென்று, மஞ்சள்பாவாடை, பச்சைக்கலர் தாவணி வாங்கி வந்தான். எறும்பு ஓடினாலே பொசுக்கென்று தெரியும் குச்சு, வீட்டில் இதை அவள் எங்கு போய் ஒளித்து வைக்க முடியும். கொடையை முன்னிட்டு அவள், தண்ணிக்கு போவதை மாலையில் வைத்துக்கொண்டாள். இரண்டு நாட்கள் அதை கையில் வைத்துக்கொண்டு காதலியிடம் கொடுக்க பெரும் சிரமப்பட்டான்.

கொடைக்காக வெளியூரிலிருந்தும் உறவினர்கள் வந்திருந்தனர். உந்த உறவினர்கள், சாமி வேட்டைக்கும் செல்லும் முன், மச்சினன்களுக்கு வேட்டி, சட்டை கட்ட வேண்டும் என்பது வழக்கம். அப்போது, பாப்பாக்குடியில் இருந்து பேண்ட், சட்டை போட்டு வந்திருந்த, மீசை சுப்பையா உறவினரான சிவப்பு ராசு, சுருட்டையின் மீது காதல் கொண்டான். மும்பை தாராவி பகுதியில் அவன் வேலைப்பார்ப்பதாகப் பேசிக்கொண்டார்கள். சுருட்டை சம்மதிக்க, கொடை முடிந்த நாள் நிச்சயதார்த்தத்தை நடத்திவிட்டார்கள். விஷயம் தெரியாத உ.மகாளி, தினமும் அவள் வீட்டை உற்றுப் பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தான். அதிகமாக பொசமுட்டி, அந்த பாவாடை தாவணியை, அநியாயத்துக்கு பொய் சொல்லி தனது சித்தி மகளுக்கு கொடுத்தான்.

சுருட்டையின் அம்மாவின் அப்பாவும் பத்திரிகை வைக்க, வீட்டுக்கு வந்தபோதுதான் உ.மகாளி விஷயம் தெரிந்துகொண்டான். தனது இரண்டாவது காதலும் இப்படியானதில் உடைந்துபோனான் உ.ம.

தொடரும்.

4 comments:

துபாய் ராஜா said...

தனது (காதல்)முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாத்தித்தனா இருக்கானே நம்ம ஊர்க்காரப்பய உச்சிமாளி....

ஏதும் வேதாளம் சிக்குச்சா.. ??!! :))

அறிய ஆவலாக இருக்கிறோம்.

துபாய் ராஜா said...

உங்க அழகான எழுத்துநடையில் டவுசர் போட்டுக்கொண்டு ஒளிந்து ஒளிந்து காதல் செய்த
'எங்க ஊரு பாட்டுக்காரன்' ராமராஜனும், நிஷாந்தியும் நினைவில் வந்து சென்றார்கள்.

தொடருங்கள்.தொடர்கிறோம்.

மாதவராஜ் said...

உச்சி மாகாளி என்ற இந்த பெயரே பெருங்கதை ஒன்றை சொல்லிக்கொண்டு முன்வந்து நிற்கிறது. ஊர்மண்னை பிடுங்கி அதில் ஒட்டியிருக்கும் வேர்களையெல்லாம் காட்டுகிறது.

அருமையான நடை. தொடருங்கள். காத்திருக்கிறேன்.

சித்திரவீதிக்காரன் said...

மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது’’ அற்புதமான வரிகள்.
உச்சிமாகாளி எனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். எனக்கும் புகை,மதுப்பழக்கம் எதுவுங்கெடையாது. மேலும், பார்க்கும் பெண்களெல்லாம் திரைப்பட கதாநாயகியின் சாயலில் எனக்கும் உச்சிமாகாளி போல் தோன்றுவதுண்டு. என்ன வாசிப்பை காதலிப்பதால் நமக்கு காதல் தோல்வியெல்லாம் இல்லை. காட்டுக்குள் நானும் தொடர்ந்து வருகிறேன். நல்ல பகிர்வு. நன்றி.