இவ்வளவு வேலை இருக்கா. இதுக்கு பெறவு கருக்கல்ல ஒரு சட்டிய தூக்கிட்டு, யாரு வீட்டுக்குலாம் துணி வெளுக்காவலோ அவங்க வீட்டுக்குலாம் சோறு வாங்க போணும்.
வீட்டு வாசல்ல நின்னுகிட்டு, 'எம்மோ..பூழா வந்திருக்கேன்'னு சத்தம் கொடுக்கணும். சில பொம்பளைலுவோலுக்கு எரிச்சல் வரும். வந்துட்டாளா? இதுக்கு மட்டும் கரீட்டா வந்துருவான்னு முணங்கிட்டு பழைய சோத்தை வந்து போடுவாவோ. கொழம்புலாம் எப்பவாவதுதான். சில வீட்டுல இட்லி தோசை போடுவாவோ. அதுக்குன்னு தனி பாத்திரம் வச்சிக்கிடுவா புழா.
நாலாவதா வெறவு கடைக்காரன் வீடு இருக்கு. அவன் பொண்டாட்டி, இவ எப்ப போனாலும் எரிச்சலாதான் பேசுவா.
'கொஞ்சம் முன்னால வரவேண்டியதானே. இப்பதான் அவ்வோ(வீட்டுக்காரன்) சாப்ட உக்காந்திருக்காவோ. இப்பம் போயி வந்திருக்கியே"ம்பா. செத்த நேரம் அவ்வோ வீட்டு கோழி கூட்டு மேல உக்காந்திருக்கணும். அவரு சாப்ட பெறவு கொஞ்சம் சோறை கொண்டாந்து போடுவா. இதை விட கொடுமை ஒண்ணு இருக்கு.
'பூழா... முந்தா நாளு வச்ச கொழம்பு இருக்கு. லேசா ஊசிபோச்சு. சுட வச்சு தின்னுக்கிடுதியா"ம்பா. வேண்டாம்னு சொல்லக்கூடாது. என் வீட்டு சோறு கொழம்பை வேண்டாங்கியான்னு ஏசிப்போடுவா. அதனால தனியா அதை வாங்கிகிடுவா. சில பொம்பளைலுவோ நக்கலு புடிச்சவளுவோ.
'நம்ம என்னட்டி பூழா மாதிரியா... பல வீட்டு சோறு. வெதவெதமா கொழம்பு, கறின்னு திங்கதுக்கு. அதான் அவா குண்டா இருக்கா"ம்பாளுவோ.
வெளுக்கப்போட்ட வேட்டி/சட்டையில ஏதாவது கறை இருந்துட்டா, சாப்பாடு வாங்குத நேரத்துல தாழிச்சுடுவாவோ. பால்காரன் பொண்டாட்டி ஒரு நா சேலையில சின்னதா கிழிசல் விழுந்துட்டுன்னு பூழா செவுட்டுல அறைஞ்சிட்டா. பூழாவுக்கு என்ன செய்யன்னே தெரியல. கண்ணீரு முட்டிக்கிட்டு வந்துது. பக்கத்து வீட்டுக்காரி வந்து விலக்கி விட்டா.
'உங்க காலுக்குள்ளேயே கெடக்குதோம். இப்படி அடிக்கேளம்மா"ன்னு பூழா சொன்னா. 'அதுக்கு இப்படியாட்டி கிழிச்சு கொண்டு வருவே, எச்சிக்கலை நாயி. சோத்துக்கு மட்டும் வந்துருதே'ன்னு அவ பெறவும் அடிக்க போனா.
இப்பலாம் பூழாவுக்கு இது பழகிபோச்சு. யாரு என்ன சொன்னாலும் மூஞ்சை தொங்க போட்டுட்டு சரிம்மான்னு வந்துருவா.
வீட்டுல கல்யாணம்/ கோயில் கொடைன்னா புழாவுக்கும் அவா வீட்டுக்காரனுக்கும் வேட்டி/சேலை சட்டை எடுத்துக்கொடுக்கணும். சிலருமட்டுதான் அதை செய்வாவோ.
'ஒனக்குதான் ஒவ்வொரு அறுப்புக்கும் நெல் தாரோம். தெனமும் சோறு தாரோம். இதுக்கு பெறவு என்ன வேட்டி சேல கேக்க"ம்பாவோ. அதனால யாருகிட்டயும் போயி இவளா கேக்க மாட்டா. குடுத்தா வாங்கிக்கிடுவா.
நாளைக்கு சொல்லுதேன்.
7 comments:
பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்னுங்க
இப்போ எங்க ஊர்ல யாரும் பூழாத்தியா இல்லன்னு நான் பெருமையா சொல்லிக்குவேன்.
உங்க வட்டார வழக்கு எளிமையாவும் சந்தோசமாவும் இருக்குங்க
கதை சொல்லும் விதம் இயல்பாய் இருக்கு.
கொஞ்சம் நேரம் ஒதுக்கி என் பதிவுக்கு வந்து பாருங்களேன், உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.
கென், ஹேமா நன்றி.
கடையம் ஆனந்த் பார்த்துட்டேன். பரிசுக்கு நன்றி.
நாங்க வளர்ந்த காலம் இதைத்தாண்டி வந்திடுச்சு ஆனாலும் படிக்க கஷ்டமா இருக்கு.. மனிசப்பயலுவ படைப்புலதேன் எம்புட்டு விசனம்.. ஒன்னும் சொல்லிக்கிடுதாப்பல இல்லப்பூ. இம்பூட்டு சோறும் இத்தினி வெஞ்சனமும் வாங்க எம்புட்டுதேன் பாடு....ம்
//நாங்க வளர்ந்த காலம் இதைத்தாண்டி வந்திடுச்சு//
கிருத்திகா, இப்ப இப்படிலாம் இல்லை. காலம் ரொம்ப மாறிப்போச்சுலா.
நன்றி.
ரொம்ப வருத்தமாப்போச்சும்மா.
இந்தப் பாவத்துக்கெல்லாம் யார் பதில் சொல்றது.
Post a Comment