Thursday, October 11, 2007

தவிப்புகள்

தவித்துப்போதலென்பது தன்னிலை விளக்கம். தவித்தும் தவிக்காமலும் இருக்கக் கூடிய பாக்கியம் காதலுக்கு மட்டுமே உண்டு. வேப்ப மரமொன்றின் அடியில் வேணற்கால வெயிலில் படுத்திருக்கிறது என் உடல். நினைவுகளைச் சுமக்கும் மனது உன்னையும் உன் சார்ந்தோரையும் சுற்றிக்கொண்டிருந்தது. விழுந்து கிடக்கும் வேப்பங்காய்களின் மணத்தில் என் சாரத்தையும் தாண்டி சுற்றுகிறது கடிக்காத கட்டெறும்புகள்.

மரம்தாண்டி செல்லும் அக்காள்கள் இடக்காகக் கேட்கிறார்கள்.
' என்ன சீதை சித்தி மவன் இங்ஙன படுத்துக்கிடக்கான்' என்று.
கேட்காத செவிக்குள் எதை சொன்னாலென்ன என்பதாக கிடக்கிறதென் உடல். அவர்களின் பேச்சினூடாக வருகிறது என்னை உசுப்பிவிடும் வார்த்தை.

'இந்தப் பயதான் அந்த பிள்ள பின்னால சுத்துதானாம்'

உன்னை பற்றியும் நம்மை பற்றியும் வரும் வார்த்தைகள் திட்டுதலாக இருந்தாலும் சுகமாகவே இருக்கிறது. தூக்கம் கலைந்து எழுகிறேன். புல்கட்டை தலையில் வைத்து செல்லும் அக்காள்கள் தூரமாகப் போய் விட்டார்கள். இருந்தாலும் கேட்டே விட்டேன். அவர்கள் காதுகளுக்குத்தான் செல்லவில்லை என் வார்த்தை.

'எக்கோ... நான் சுத்தலை; நாங்க சுத்துதோம்'.

அன்று தேரோட்டம். வருடந்தோறும் நிலையில் நிற்கிற தேருக்கு அன்று மட்டும் அப்படியொரு பவுசு. ஆழ்வார்க்குறிச்சி சாலையில் கூட்டமாக நடக்கிறார்கள் நம்மூர் மக்கள். தென்னை மரங்களின் ஊடே பல்வேறு கலர்களில் செல்லும் தாவணி, சேலைகளைக்கு மத்தியில் நீ மட்டும் சிகப்பு தாவணி. முதல் பார்வையிலேயே நீயென கணித்து விடுகிறதென் மனது. அந்த இளங்காலை வெயிலில் செருப்பில்லாத காலுடன் வேகமாக நடக்கிறேன்.
உனக்கும் எனக்குமான பத்தடி தூரத்துக்கு முன்னே என் கால்கள் நகர மறுக்கிறது.

அங்கும் இங்கும் ஆடி அசையும் இரட்டை ஜடைகளை ரசிக்கிறேன். ஒரு ஜடை நீயென்றும் மற்றொன்று நானென்றும் சொல்கிறது மனசு.
ஆனால் இரண்டையும் ரிப்பன் கொண்டு கட்டியிருக்கிறாய். மனதுகள் கட்டப்படுகிறது. கட்டப்படாத நினைவுகளும் அங்கேயே கட்டப்பட்டு விடுகின்றன. அதையும் தாண்டி ஒரு ஜடை கேட்கிறது 'முன்னே வாயேன்'. மற்றொன்று 'வராதே' என்கிறது.

வரவா வேண்டாமா என்கிற குழப்பத்தில் என்னை காணவில்லை. தேடி தேடிப் பார்க்கிறேன். காணாமல் போன என்னை, உன் கையில் இருக்கும் பிளாஸ்டில் கூடையில் அடைத்திருக்கிறாய். எம்பி எம்பி பார்க்கிறேன். உன் கண்களுக்கு நான் தெரியவேஇல்லை. உன்னுடனே வரும் தோழி, ஆச்சர்யத்துடன் உன்னிடம் ஜாடை பேசுகிறாள். உனக்கு புரியவில்லை.

கூடையில் இருக்கும் தேங்காய், பழங்களூடாக என்னையும் இருத்தி வைத்திருக்கிறாய் நீ. நான்காவது வீதியில் வருகிறது தேர். முன்னதை ஆண்கள் இழுக்கிறார்கள். பின்னால் ஒன்று வருகிறது. அதைப்பெண்கள் இழுக்க வேண்டும். நீ தேர் இழுக்கவா வேண்டாமா என்கிற யோசனையில் இருக்கிறாய். என்னை எப்போதோ இழந்துவிட்டதால் நான் என்ன நினைக்கிறேன் என்றே தெரியவில்லை. அதற்குள் உன் தோழி, பிளாஸ்டிக் கூடையை தேரிலிருக்கும் பூசாரியிடம் கொடுக்கிறாய்.

கண்களை மூடி வேண்டுகிறாய். சிறிது நேரத்தில் பூசாரி திருப்பிக் கொடுக்கும் கூடையில் தேங்காய், பழம், திருநீறு, குங்குமம் இவை எதுவும் இல்லை. நான் மட்டும் இருக்கிறேன்.

இப்போது உன் கண்களுக்கு நான் தெரிகிறேன். என்னை எடுத்து செல்வதா வேண்டாமா என்கிற படபடப்பு உன் கண்களில். அல்லது, 'நீ எப்படி இங்க' என்பதாக இருக்கலாம். தோழியை பார்க்கிறாய். தோழி உன்னைப் பார்க்கிறாள். உங்கள் பார்வையில் நான் வாய்ப்பேச முடியாதவனாகிறேன்.
தேர் செல்ல தொடங்குகிறது. பக்தர்கள் கோஷமிடுகிறார்கள்.
கூடையிலிருந்து நானும்.

உனக்கு மட்டும் எதுவும் கேட்கவில்லை.

இன்னும் தொடர்வேன்.

4 comments:

துளசி கோபால் said...

ஹை......... சூப்பரா இருக்கு.

சடைகள் பேசுவது நம்ம பாரதியின் வசனக் கவிதை கந்தன் வள்ளியை நினைவுபடுத்துச்சு.

அதான் அந்த சணல் கயிறுகள்.

ஆடுமாடு said...

வணக்கம் வாங்க...வாங்க... டீச்சர். இன்னும் உங்க ஏரியாவுக்கு வரலை. இன்னிக்கு வந்துடுறேன்.

Ayyanar Viswanath said...

டீச்சர் சொன்னதுபோல நானும் சணல தான் நினைச்சுகிட்டேன் :)

ஆடுமாடு said...

அய்யனார், வருகைக்கு நன்றி. பரவாயில்லை பாரதியை ஞாபகப்படுத்தியிருக்கிறேன்.