Monday, December 15, 2014

கொடை 11

முப்பிடாதியைப் பார்த்த சுக்கு, 'பிள்ளயாண்டன் சீக்கிரம் எந்திரிச்சுட்டானெ?' என்று வாயில் போட்ட வெற்றிலையை ஒதுக்கிக் கொண்டு கிண்டலுடன் சொன்னார். அப்படிச் சொல்லும்போது வெற்றிலைச்சாறு தெறித்து அவர் மீசையில் பனித்துளி போல ஒட்டிக் கொண்டிருந்தது. அதை அவர் கண்டு கொள்ளவில்லை.

முப்பிடாதி சிரித்துக்கொண்டே நின்றான். நேற்று இரவு நடந்த விஷயங் களைத்தான் இவர்கள் பேசியிருப்பார்கள் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது. இன்னும் சிறிது நேரத்தில் ராசு தலைமையில் கூட்டம் நடக்கும் என நினைத்தான். ஆனால், இன்னும் கொஞ்ச நேரத்தில் இல்லை, அது இரவில் நடக்க இருக்கிறது என்பதை சுக்கின் பேச்சு தெரிவித்தது.

ஆண்டாள், வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்தாள். நீத்தண்ணியை குடித்து விட்டு கணேசன் வைத்திருந்த போணியை எடுத்தவள், அவர்கள் அருகில் நின்றாள்.

'பெரிய மனுஷம்னு யாரும் போனா, கேட்குத பயலுவளா அவனுவோ? மரி யாத தெரிஞ்சவனுவன்னா நல்லது எது கெட்டது எதுன்னு தெரியும். எவன் குடியை கெடுக்கலாம்னு நெனக்குதவனுக்கு அத தவிர என்ன எழவ தெரி யும்?' என்று ஆண்டாள் ஆரம்பித்தாள்.

 முப்பிடாதி, 'ஏழா வாய பொத்து. சும்மா தொண தொணன்னுட்டு கெடப் பியோ, காலெலயே' என்று அவள் மீது எரிந்து விழுந்தான் முகத்தை சுருக்கிக் கொண்டு.

'ஏம்ல?'

'ஏம்னா, அதெல்லாம் பேசதுக்கு ஆளிருக்கு. ஒனக்கென்ன வந்தது? ரோட்டுல எவனாது கேட்டுட்டு போயி, அவனுவகிட்ட சொல்லிக்கொடுப்பானுவோ. பெறவு, அவனுவோ நீ போவும் போதும் வரும்போதும் ஜாட மாடயா ஏசுவா னுவோ. வேணுமா ஒனக்கு? போவியா, சும்மா தொண தொணன்னுட்டு. ஒன் வாயெ தய்ச்சாதான் சரிபட்டு வருவெ' என்றான் முப்பிடாதி.

'ஏம்ல என் வாயெ தய்க்கணும். நா என்ன ரோட்டுல நின்னா சலம்பிட்டு இருக்கென், பேசுதாம்?' என்ற ஆண்டாள்  தொழுவைப் பார்த்ததும், 'அட சனியம் புடிச்சது, இங்கெரு?' என்று சொல்லிவிட்டு ஓடினாள். எல்லாரும் உள்ளே பார்த்தார்கள். பின் பக்க முடுக்கு வழியாக வந்திருக்கும் கோயில்  காளை, புல்கட்டை இழுத்துத் தின்றுகொண்டிருந்தது.

அது பெருமாள் கோயில் மாடு. இதற்கு முன் இருந்த கருப்பும் காப்பி கலரும் கலந்த வண்ணத்தைக்கொண்ட கோயில் மாட்டை விட, இதற்கு முதுகில் திமில் திரண்டு இருந்தது. பொதுவாக கோயில் மாடுகளுக்கு மட்டுமே இந்த மாதிரி திமில்கள் இருக்கிறது. வீட்டு மாடுகளுக்கு இப்படி இல்லாதது ஏன் என்பது தெரியவில்லை. இந்த மாட்டைப் பார்த்தால் சிவசைலத்தில் இருக்கும் சைலப்பர் கோயிலில் சிலையாக வைக்கப்பட்டிருக்கும் நந்திதான்  ஞாபகத்துக்கு வரும். அதற்கு இதுபோல்தான் முதுகில் திமில் இருக்கும்.

ஆண்டாள், மாடு நிற்கும் இடத்துக்குக் கொஞ்சம் தூரம் நின்றுகொண்டு 'ஓடு ஓடு' என்று அதை சத்தத்தாலும் சைகையாலும் விரட்டினாள். அருகே செல்ல பயம். கொம்பைக் காட்டி மிரட்டும். துணிந்து சென்றால் விரட்டும். அதன் கோபத்துக்கு ஆளாக முடியாது. கோயில் காளை என்பதால் அதை அடிக்கக் கூடாது என்கிற நியதி. ஊர்க் கடைகளில் அதற்கு செல்லமும் அதிகம்.

லட்சுமண நம்பியார் கடையில், இந்த மாடு வந்தால் கொஞ்சம் அழுகிய நிலையில் இருக்கும் வாழைப் பழங்களை அதற்கு இனாமாகக் கொடுப் பார்கள். இது தினம் தோறும் நடக்கும் விஷயம்தான். ஆனால், ஒரு நாள், பழம் இல்லை என்றதற்காக கடையில் தொங்கிய வாழைத்தாரை மொத்தமாக இழுத்து பாதியை தின்றதில் இருந்து கடைபக்கம் விட மாட்டார் லட்சுமண நம்பியார். இந்த மாட்டிற்கென்றே கடையில் உள்ள ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து வைத்திருப்பார். வந்ததும் கடைக்கு வெளியே வந்து தண்ணீரை வீசினால், ஓடிவிடும் மாடு.

'கோயில் மாடுன்னு கொஞ்சம் பாவம் பாத்தா, என்னமா ஏறுது பாரென்' என்பார் நம்பியார்.

டிரைவர் வீட்டில் மாட்டுக்கு மரியாதை உண்டு. அது குடிப்பதற்காகத் தொட்டியில் இருந்து ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து வைத்திருப்பாள் டிரைவர் பொண்டாட்டி. அவளிடம் மட்டும் அந்த மாட்டுக்கு அப்படியொரு பாசம். தண்ணீரைக் குடித்துவிட்டு, அவள் வாசலில் உட்கார்ந்திருந்தால் அவள் முகத்துக்கு நேராக இது தன்  முகத்தை நீட்டும். அவள், 'தண்ணி குடிச்சுட்டேன் னா போயென். இங்க என்னத்த வச்சிருக்கென் ஒனக்கு' என்று முகத்தைத் தடவுவாள்.

பெரும்பாலும் இந்தக் காளை பிள்ளையார் கோயில் வாசல் முன் தான் படுத்துக் கிடக்கும். வாயை அசைத்துக்கொண்டே கிடக்கும் அந்த மாடுக்கு, பசு ஏதும் கண்ணில் பட்டால் விட்டுவிடாது. திடீரென்று கிளம்பி விரட்ட ஆரம்பிக்கும். தெருவிலோ, ரோட்டிலோ நடப்பவர்கள் அடித்துப்பிடித்து ஒளிந்துகொள்ள வேண்டும், இல்லையென்றால் கொம்பால் ஒரு சிலுப்பு சிலுப்பும். மூசு மூசு என்று மூக்கால் சத்தம் கொடுத்துக்கொண்டு அது பாய்ந்து வரும் வேகத்தில் யாரும் குறுக்கே சென்றுவிடமுடியாது. பசு, யார் வீட்டுத் தொழுவுக்காவது சென்று விட் டால் உள் நுழையும் காளை அந்தப் பகுதியை விட்டு வராது. விரட் டினாலும் போகாது. அப்படி விரட்டப்போய், கப்பக்காலன் இசக்கி கீழே விழுந்து இடுப்பை உடைத்ததுதான் மிச்சம். இதே போல இன்னும் சிலரும் இந்தக் காளையால் காயம்பட்டிருக்கிறார்கள்.

இங்கு அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என நினைத்தாள் ஆண்டாள். கையில் கம்பு ஒன்றை வைத்துக்கொண்டு அவள் விரட்ட விரட்ட அது அசைய கூட இல்லை.  கணேசன் வேகமாகப் போய், 'ஓடு பய மாடு எங்க வார?' என்று ஒரு கல்லை எடுத்து முதுகில் எறிந்ததும் துள்ளிக்கொண்டு ஓடியது. ஆண்டாளுக்கு ஒரு பிரச்னை முடிந்தது என்பதில் திருப்தி. முப்பிடாதி துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு கணேசனின் சைக்கிளை  எடுத்தான்.

'ஆத்துக்கு போயிட்டு வந்து கொண்டாரென் சைக்கிளெ' என்று சொல்லிவிட்டு ஏறினான். டீச்சர் வீட்டு பின்பக்கம் இருந்த ராஜா, 'நானும் வாரென்டெ' என்று வந்தான். இருவரும் சென்றார்கள்.

பேரூந்து நிறுத்தத்தின் கசமுத்து தேனீர் கடையில் சிலர் செய்தித்தாள் வாசித் துக் கொண்டிருந்தார்கள். அதன் பொருட்டு டேப் ரெக்கார்டரில் சத்தத்தை குறைத்து வைத்திருந்தான். பாடலின் ஒலி துல்லியமாகக் கேட்கும் பொருட்டு இரண்டு ஒலிபெருக்கியை கடையின் இட, வல பக்கங்களில் வைத்திருக் கிறான். அதன் வழி பாடலை மீறி ஜல் ஜல் ஒலிகள் மட்டும் தனியாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

மதார் பாண்டியனும் முத்துக்கண்ணு பண்டாரமும் செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றின் தொடர்ச்சியாக, தங்கள் கட்சி சார்ந்து சத்தமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பேச்சு பெரும் அவயமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. தச்சு வேலைக்குச் செல்வதற்காக சிவந்திபுரம் பஸ்ஸுக்கு காத்திருப்பவர்கள் கடைக்கு எதிரில் போடப்பட்டிருக்கிற கற்களில் உட்கார்ந் து கொண்டு அவர்கள் பேசுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
முத்துக்கண்ணு பண்டாரம் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிவிட்டு தேனீர் கடை கசமுத்துவிடம், 'என்னடெ சொல்லுத கசமுத்து?' என்று  கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவன் வருகிறவர்களுக்கு தேனிரைக் கொடுத்துவிட்டு இவர்களுக்குத் தலையையும் ஆட்டிக்கொண்டிருப்பான். மதார் பாண்டியன் ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னும் தனது மீசையை தடவுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இவர்களின் பேச்சு தினமும் நடக்கும் சங்கதி என்பதாலும் இன்னும் சிறிது நேரத்தில் இப்படிப் பேசிக் கொண்டே ஆற்றுக்கு குளிக்க வருகிறவர்கள் தான் என்பதாலும் முப்பிடாதி அதைக் கண்டுகொள்ளாமல் சைக்கிளை மிதித்தான்.
வாய்க்கால் பாலம் தாண்டியதும், அக்ரஹாரத்தின் வழியாக இந்த சாலையில் சேரும் வழியில் ஆற்றை நோக்கி அவள் நடந்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான் முப்பிடாதி. அவள் சுபலட்சுமிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். அவளுடன் தபால் ஆபிஸ்காரர் மனைவியும் மகள்களும் சென்றுக் கொண்டிருந்தார்கள். தபால் அலுவலகத்துக்கு கோவில்பட்டியில் இருந்து புதிதாக வந்திருக்கிறவர்கள் இவர்கள். முன்பகுதி தபால் ஆபீஸாக வும் பின்பகுதி வீடாகவும் இருக்கும் இந்த அக்ரஹார வீட்டிற்கு எதிரில்தான் சுபலட்சுமியின் வீடு.

தபால் ஆபீஸ்காரரின் மகள்களில் முத்தவள் ஶ்ரீதேவி என அழைக்கப்பட் டாள். சரியாகவே பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது மாதிரி அவள் ஶ்ரீதேவியின் சாயலை கொஞ்சம் கொண்டிருந்தாள். அது அவளின் அம்மாவின் சாயல். கெங்கமுத்து வாத்தியாரின் வார்த்தையில் அவளின்  அம்மா 'பெட்டர் தன் கிளி' என்று அழைக்கப்பட்டாள். உச்சபட்ச அழகி என்பதற்காக வாத்தியார் பயன்படுத்திய வார்த்தை அது. அதாவது ஒரு நாள் இரவு ரைஸ் மில்லில் அந்த வாத்தியாருடன் பொழுது கழிக்க வேண்டியதாகி விட்டது முப்பிடாதிக்கு. அப்போது தபால் ஆபிஸ்காரர் பற்றிய பேச்சு வந்தது.

'அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் ஆவல போலுக்கு. என் வீட்டுக் காரிட்ட அவன் பொண்டாட்டி சொல்லியிருக்கா. இதுக்கு பேருதான் நேரங் கது?' என்று சொல்லிவிட்டு முப்பிடாதியின் முகத்தைப் பார்த்தார்.

'இதுல என்ன நேரம் இருக்கு? சண்டதான் எல்லாரு வீட்டுலயும் நடக்கே சார்வாள்'

'என்னடெ இப்டி சொல்லிட்டெ?. அவென் பொண்டாட்டி மாரி எனக்கு இருந்தான்னா, தங்க தட்டுல வச்சு தாங்குவெனாங்கும் தங்கத் தட்டுலெ. ரம்பை, ஊர்வசி மாரிலாடா இருக்கா?  பெட்டர் தன் கிளிலா. இருந்தாலும் அவாட்ட அவனுக்கு பிரச்னை பாத்துக்கெ?' என்று ஆரம்பித்துக் கொண்டிரு ந்தார் கெங்கமுத்து வாத்தியார். பெட்டர் தன் கிளி என்கிற பதம் முப்பிடாதி க்குப் பிடித்திருந்தது.  அதற்கு காரணம் ஏதும் இல்லை. பிறகு முப்பிடாதி ஊரில் இருக்கும் அழகான பெண்களை எல்லாம் பெட்டர் தன் கிளி என்று சொல்லிப்பார்த்துக் கொண்டான். இது முப்பிடாதியின் மூலமாக அவன் நண்பர்களுக்கு சென்றதில் கெங்கமுத்து வாத்தியாருக்கு, பெட்டர் தன் கிளி என்ற பட்டப்பெயர் உண்டாயிற்று. ஆனால் அது அவருக்குத் தெரியாது.

அந்த ஶ்ரீதேவியை பாவூர்சத்திரம் பாலிடெக்னிக்கில் படிச்சும் சரவணன் ஒருதலையாகக் காதலித்து வந்ததாக நண்பர்கள் வட்டத்தில் பேசிக் கொண் டார்கள்.

சுபலட்சுமியின் அருகில் சைக்கிளை மெதுவாக ஓட்டிக்கொண்டோ அல்லது செயின் அறுந்ததாக மாட்டிக்கொண்டோ அவள் பின்னால் நடந்து போகலாம். ஆனால் ராஜா உடன் வந்து கெடுத்துத் தொலைத்துவிட்டான் என்று  நினைத்ததபடி, சைக்கிளை மிதித்தான். சுபலட்சுமியைத் தாண்டிப் போனதும் மனது கேட்காமல் அவளைத் திரும்பிப் பார்த்தான். அதை எதிர்பார்த்தவள் போல அவள் சிரித்தாள். முப்பிடாதி, தனது உடலுக்குள் ஏதோ ஒன்று புகுந்து கொண்டதாக உணர்ந்தான். அது நரம்புகளினூடாகப் பரவி புதுவிதமான மாயத்தைச் செய்துகொண்டிருந்தது.

எதிரில் நீளும் சாலை, பூக்களால் நிரப்பப்பட்ட பெருவனம் போலவும் அதில் அவளின் கையைப் பிடித்துக்கொண்டு மிதந்து செல்வதாகவும் நினைத்துக் கொண்டிருந்தான் முப்பிடாதி. அது காதல் வனம் என அறியப்பட்டது. அங்கு காதலர்கள் மட்டுமே மரங்களாக, செடிகளாக, மலைகளாக, அருவிகளாக, விலங்குகளாக எங்கெங்கும் அலைந்து கொண்டிருந்தனர். இப்படியொரு உலகைத் தேடி வந்தவனாக, அல்லது தேடித்தந்தவனாக முப்பிடாதி இருந்தான். சுபலட்சுமி வெட்கம் தொலைத்தவளாக, அந்த வன காதலர்கள் முன்பு முத்தம் கொடுப்பவளாகவும் கட்டியணைத்து அந்த காதல் வனத்து மொழியைப் பேசுபவளாகவும் இருந்தாள். இதற்காகத்தானே காத்திருந்தாய் என்பது போல அவனை இடுப்பில் தூங்கிக்கொண்டு சுபலட்சுமி விளையாட்டாக வனமெங்கும் பறந்து கொண்டிருந்தாள். அவளின் றெக்கை களை அவன் அதியமாகப் பார்த்துக் கொண்டே இருந்தான். அது காதல் றெக்கை. காதல் வனத்தில் காதலர்களுக்காகச் செய்துகொடுக்கப்படும் றெக்கை என புரிந்துகொண்டான் முப்பிடாதி.

சைக்கிளை மிதித்துக்கொண்டே இப்படியான காதல் கனவில் மிதந்துக் கொண்டிருப்பது பிடித்திருந்தது முப்பிடாதிக்கு. ஆற்றுக்கரையில் இருக்கிற தென்னந்தோப்பின் மணலில் மல்லாந்து படுத்துக்கொண்டு, விழுகிற நிழல்க ளின் வழி, வானம் நோக்கிப் பார்த்தபடி காதல் வனத்தில் சஞ்சரிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டான். ஆனால் ஆற்றின் சின்னப்பாலத்தைத் தாண்டி சைக்கிள் சென்றதை அறிந்து ராஜா, பின்னாலிருந்து முதுகைத்தட்ட காதலும் காதல் வனமும் மாயமாகி இருந்ததை உணர்ந்தான் முப்பிடாதி.

சைக்கிளை நிறுத்திவிட்டு ஆற்றுக்குள் இறங்கினான். சுபலட்சுமியும் அவளுடன் வருபவர்களும்  இங்கு குளிப்பார்களா அல்லது மேற்கே சென்று குளிப்பார்களா என்று யோசித்தான். அவர்களிடம் துவைப்பதற்கான துணி கொண்டு வரும் வாளி ஏதுமில்லை என்று நினைத்த முப்பிடாதி, அவர்கள் இங்குதான் குளிப்பார்கள் என்று முடிவு செய்துகொண்டான்.

ராஜா பல் துலக்க, கரையில் சட்டையை அவிழ்த்துவிட்டு அப்படியே ஈர மணலில் உட்கார்ந்தான் முப்பிடாதி. சுபலட்சுமி வரும்வரை இன்னும் கொஞ்ச நேரம் காதல் வனத்துக்குள் செல்ல முடிவெடுத்து தன்னை மறந்து கொண்டிருந்தான்.

(தொடரும்)

No comments: