சீரியல்களுக்கு வசனம் மட்டுமே எழுதி கொண்டிருந்த நண்பர் பைத்தியகாரன் (நம்ம பைத்தியகாரன்தான்), இப்போது கதை, திரைக்கதை, வசன பார்ட்டியாக புரமோஷன் பெற்றிருக்கிறார். மூன்று வாரத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட அந்த சீரியல் நாகவல்லி.
சிறு வயதில் மந்திர, தந்திர, மாயாஜால கதைகளின் அடிமை நான். தாத்தா சொல்லும் கதைகளில் அவ்வப்போது பயம் வந்தாலும் அதை ரசிப்பவனாகவே இருந்திருக்கிறேன். திடீரென்று பூமிக்குள் இருந்து நிலவு உதிர்த்து வருவது, ஒரு லட்சம் பாம்புகள் ஊர்ந்து, எதிரில் படமெடுத்து நிற்பது போன்ற கற்பனைகள் மாயாஜால கதைகளில் அதிகம். நாகவல்லியும் அப்படியொரு கதைதான். இதன் பிரச்னை வேறுமாதிரியானது.
நான்காவது வாரமும் வரப்போகிறது. இன்னும் பார்க்கவில்லை.
'பார்த்தேன் பைத்தியம்,. பிரம்மாதம், எப்படிய்யா இப்படி... அந்த டயலாக் இருக்கே அது போதும்யா உன் திறமைக்கு?' என்று ஏகத்துக்கும் அவரிடம் விட்ட கதைகள், பொய்யென்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
................................
பொதுவாக சீரியல்கள் பெண்களின் ஏரியா என்றே நினைத்திருந்தேன். சில சீரியல்களில் பணியாற்றும் நண்பர்களை சந்தித்த பின், அது ஆண்களின் ஏரியா என்பதை புரிந்து கொண்டேன். ஒரு மெகாவுக்கு வசனம் எழுதும் நண்பர் சொன்னார்.
'என்ன பண்ண? டி.ஆர்.பி.யில நல்லா போகுதுன்னு தயாரிப்பு இன்னும் இழுக்க சொல்லுதாரு'.
மாமியாரை எப்படியெல்லாம் இன்னும் கொடுமைகாரியாக காட்டலாம், இன்னும் என்னென்ன பிரச்னைகளை குடும்பத்துக்குள் கொண்டு வரலாம் என்பதையெல்லாம் யோசிக்கும் திரைக்கதை, வசனகர்த்தாக்கள்தான் இதன் உயிர். இதனால் இது ஆண்களின் ஏரியா.
'கோலங்களி'ல், இப்போ பிரச்னை முடிஞ்சுடும், நாளைக்கு முடிஞ்சுரும் என்று பார்த்தால், பிரச்னை மேல் பிரச்னை என்று இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். (தங்கமணி தினமும் இதன் கதையை சொல்லி என் கண்ணீரை வேறு வரவழைத்துவிடுகிறார்).
'நாலு வருஷத்துக்கு முன்னால திருவண்ணாமலை பக்கத்துல ஒரு சம்பவம் நடந்ததே. பேப்பர்ல பெரிசா போட்டிருந்தானே ஞாபகமிருக்கா'.
'எது சார்... மாமியாரும் மருமகளும் சேர்ந்து புருஷனை கொன்னாங்களே அந்த நியூசா"
'கரெக்ட். அதை எப்படி, நம்ம கதைக்குள்ள கொண்டுவரலாம்னு யோசி'
ஒரு சீரியல் இயக்குனர் அசிஸ்டென்டிடம் இப்படி சொன்னதை கேள்விபட்டேன். அடப்பாவிகளா எங்கயோ ஒரு விஷயம் நடந்தா அதையெல்லாமா சீரியல்ல கொண்டு வருவீங்க. என்ன கொடுமைடா ராசா.
.....................................
புதிதாக படம் இயக்க போகும் நண்பன், கதை விவாதத்திற்கு அழைத்தான் (சும்மா துணைக்குதான்). டிராகன் சிக்கன் மற்றும் பெக்கார்டி உண்டு என்று சொன்னதையடுத்து என் பயணம் உறுதிபடுத்தப்பட்டது.
பாண்டிச்சேரி அருகே வழுதாவூர் சாலையில் வயக்காட்டுக்குள் இருக்கிறது அந்த கெஸ்ட் ஹவுஸ். இசை அமைப்பாளர் ஒருவருக்கு தெரிந்தவர்தான் இதன் உரிமையாளராம். அவர் ரெகமண்டேசனில் குறைந்த வாடகைக்கு அறை கிடைத்தது. வாயில் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தால் எல்லாம் பெரிது பெரிதான கூழாங்கற்கள். நடக்கவே சுகமாக இருந்தது.
டிஸ்கஷனுக்காக உட்கார்ந்தவர்களிடம், 'வந்த வேலையை பார்க்க போகிறேன்' என்று சொல்லிவிட்டு, பக்கத்து அறையில் அமர்ந்து ஆரம்பித்தேன். இப்படியானதொரு இடங்களில் தண்ணி அடிப்பது சுகமானது.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு கொஞ்சம் போதையுடன், விவாத கூட்டத்தில் உக்கார்ந்தேன்.
'இல்ல... இந்த இடத்துல ஏதாவது ஒரு புது பிரச்னையை வைக்கணும். வழக்கமானதா இருக்க கூடாது'
'நான் சொன்னது கூட புதுசுதான் சார்'
'இல்லை, அது அவ்வளவு அட்ராக்டா இல்ல'
பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. இரவு எட்டு மணியளவில் எழுந்து, எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு காரை சென்னைக்குத் திருப்பினேன்.
மண்டை 'என்ன பிரச்னைய வைக்கலாம்... இந்த பிரச்னை எப்படியிருக்கும்... நாளைக்கு அவங்கிட்ட இதை சொல்லலாம்" என்று யோசித்துக்கொண்டே வந்தது, மாயாஜால் அருகே பைக்காரன் மீது உரசும் வரை!