Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, February 26, 2013

கனவுகள் புதையாத வனம்

எனது பட்டப்பெயர் சொல்லி அவள் இப்படி அழைப்பாள் என்று நினைக்கவில்லை. அந்த வார்த்தையை கேட்டதும் சிறுவயது நினைவுக்குள் சென்று திரும்பியிருந்தேன். நினைவின் அடுக்குகளுக்குள் நொடியில் சென்று வந்ததில் அவளது அந்த இளம் வயது முகம் கண்முன் வந்து நின்று சிரித்தது. வலப்பக்க ஒற்றைக்கல் மூக்குத்திதான் அவளது ஞாபகமாக எப்போதும் எனக்குள் இருக்கும் ஒன்று.

அம்மன் கோவில் வாய்க்காலில் இருந்து ஆற்றுக்குச் செல்லும் பாதையாக இருக்கிற வரப்பில் நின்று, திரும்பி பார்க்கிறேன். என் பின்னால் யாருமில்லை. எதிரில் சீதா லட்சுமி நின்றிருந்தாள். நான் ஒதுங்கி அவளுக்கு வழி விட்டால் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு வரப்பை சுரண்டியிருந்தார்கள். மாட்டு வண்டி சென்ற வரப்பு இன்று, நண்டு போகும் பாதையாக மாறியிருக்கிறது. சுரண்டல் என்பது எல்லா பக்கமும்தான். அவள் ஆற்றோரத்தில் இருக்கிற தோப்புக்குச் சென்று வருகிறாள். வலது கையில், முடிச்சுப்போடப்பட்ட இரண்டு இளநீர்களை வைத்திருக்கிறாள். பின்னால் அத்தோப்பில் வேலைபார்க்கிறவர் வரலாம். மேல் உதட்டில் அழகு தந்துகொண்டிருக்கிற அதே மச்சம் இப்போது இன்னும் பளிச்சென்று இருக்கிறது.  கண்ணாடியின் பவர் அதிகமாகி இருக்கலாம். மற்றபடி அதே, கொஞ்சம் இளமை சிதைந்திருக்கிற சீதா லட்சுமி. என்னை அப்படியே பார்க்கிறாள் புன்னகை மாறாமல்.

''தெண்டலுன்னு சொன்னதுல கோவமா?' என்று கேட்டுவிட்டு என் கண்களைப் பார்க்கிறாள். நரைத்த மீசையை தடவி விட்டபடி இல்லை என தலையாட்டுகிறேன். நரை மறைந்து இளமை வந்து ஒட்டிக்கொள்கிறது. பவர்கிளாஸுக்கு பதிலாக கூலிங் கிளாஸ். பாதையாக இருக்கிற வரப்பை சுற்றிப் பயிர்கள் வளர்ந்து நிற்கின்றன. இளையராஜாவின் பின்னணி இசையோடு ஏதோ ஒரு ராகத்தில் அழைக்கிற குயிலின் குரல் தேடி ஓடுகிறேன். சேலை முந்தானை காற்றில் பறந்தபடி எதிரில் வந்து நிற்கிறாள் அவள். மூச்சிரைத்தபடி நின்றுகொண்டு அவள் கண்களைப் பார்க்கிறேன். தரை நோக்குகிறாள் அவள். காதல் சிதறி வயல்வெளி எங்கும் ஓடுகிறது. அதை அள்ளுவதற்காக மீண்டும் தொடர்கிறது என் ஓட்டம்.

'இன்னும் அப்படியே தான் இருக்கீங்க?' குரல் கேட்டு கலைகிறது நினைவு. 'நீங்களும் அப்படியேதான் இருக்கீங்க' என்ற வார்த்தையை என்னிடமிருந்து எதிர்பார்ப்பதை போல, இதை அவள் சொல்லியிருக்கலாம். இல்லையென்றால் எதையாவது பேச வேண்டுமே என்பதற்காக இருக்கலாம்.

-தெண்டல் (ஓணான்) என்பது எனது பட்டப்பெயர். பள்ளியில், வகுப்புத் தோழர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த பெயரை அவள் இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறாள் என்பது ஆச்சரியம்தான். வகுப்புகளை புறக்கணித்து விட்டு, ராமருக்கு சிறுநீர் கொடுத்த தெண்டலை சுருக்கு கம்பி போட்டு இழுத்து கொல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அதை கடவுளுக்கு செய்கிற கடமை என்று அப்போதைய சேக்காளிகள் சொன்னதையடுத்து அதை கொலைவெறியோடு கொன்றுக்கொண்டிருந்தேன். அறியா வயதின் அறியாமை அது. எப்போதும் தெண்டல் பற்றிய பேச்சு சிந்தனையில் இருந்ததால் நண்பர்கள் அதை பட்டப்பெயர் ஆக்கிவிட்டார்கள். பள்ளிக்கூடத்திலும் அப்படியே கூப்பிடலானார்கள். கணக்கு எடுக்கும் காசி சார்வாள், காதை திருகி மண்டையில் கொட்டி, 'தெண்டலை கொல்வியா? கொல்வியா?' என்று கண்ணீர் வர அடித்ததில் இருந்து, தெண்டலை மறந்துவிட்டேன் என்றாலும் பட்டப் பெயர் ஒட்டிக்கொண்டது.

அம்மன் கோவில் வாசலுக்கு வலப்பக்கம் இருக்கிற ஆல மரம், பெரிதாக வளர்ந்திருக்கிறது. சுற்றிலும் கட்டப்பட்டிருக்கிற சிமெண்ட் சுவர்களை பெயர்த்து தள்ளிக்கொண்டு வேர்களும் கிளைகளும் திமிறிக்கொண்டு நிற்கின்றன. சமதளமாக இருந்த ஒரு கல்லில் உட்கார்ந்துகொண்டாள் சீதா லட்சுமி. நான் அவளுக்கு எதிரில் உட்கார்ந்தேன்.

 ''என்னயெ இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களெ?' என்றதும் மீண்டும் சிரிக்கிறாள்.  'அவ்வளவு சீக்கிரம் மறந்துடுத மாதிரியா பண்ணியிருக்கீங்கெ?' என்று சொல்லிவிட்டு புன்னகைத்தாள். அவளிடம் அதிகம் பிடித்தது இந்த சிரிப்புதான்.

'ஒங்க வீட்டுக்கார என்ன பண்றார்? எத்தனை குழந்தைகள், பிள்ளைகள்லாம் என்ன பண்றாங்க?' என்பது உட்பட சம்பிரதாய விசாரிப்புகள் தொடர்ந்துகொண்டிருந்தாலும் உள்ளுக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பது அவளுக்கும் எனக்கும் தெரியும். முகம் நேரே பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் எங்கெங்கோ அலைந்துகொண்டிருக்கும் அதிசய வித்தை சுகமானதுதான்.

காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. கோயிலில் அம்மனுக்கு பூஜை பண்ணும் நாராயண கம்பர், உற்றுப் பார்த்துவிட்டு 'எப்ப வந்த சொடலை' என்றவாறே அருகில் வந்தார்.

 'ரிட்டையரு ஆயிட்டியாமே. இப்பவாவது ஊர் யாவம் வந்துச்செ. பிள்ளைலுவோலுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி கொடுத்துட்டன்னு சொன்னாவோ. ஆயிரம் இருந்தாலும் நம்மூர் ஆத்துல குளிச்ச மாதிரியும் இந்த அம்மன் கோயில்ல உக்காந்து காத்து வாங்குன மாதிரியும் வேறெங்கயாவது இருக்குமா சொல்லு. இன்னைக்கும் ஐயமாருவோ தெருவுல, வெளியூர்ல போய் வேலை பாத்தாலும் வருஷா வருஷம் லீவுக்கு வந்துருதாவோல்லா' -பேசிக்கொண்டே இருந்தார் கம்பர்.  பிறகு பூஜைக்காக யாரோ சில பெண்கள் வநததும், 'பேசிட்டிருங்கோ, வாரேன்' என்று கோயிலுக்குள் போனார்.

'ஊருக்கு வந்தா அதிக நாள் இருக்கிறதில்லை. மேக்சிமம் ரெண்டு நாள்தான். ஒரு முறை நீ வந்திருக்கிறதா கேள்விபட்டு எப்படியாவது பார்க்கலாம்னு நினைச்சேன். நீ என்ன நினைப்பியோன்னு நானே வேண்டாம்னு விட்டுட்டேன்' என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன்.

'நான் என்ன நினைக்கப் போறேன். அப்போ உன் மேல கோபம் இருந்தது, உண்மைதான். பிறகு எல்லாத்துக்கும் நடக்கிறதுதானேன்னு கோபத்தை விட்டுட்டேன்'

சீதா லட்சுமி இப்படி சொல்லிவிட்டாலும் அது நினைத்து ரசிக்கிற விஷயமாகவே இருக்கிறது. ப்ளஸ் ஒன் ஆண்டு இறுதி தேர்வு நடந்துகொண்டிருந்தது.  வெயில் கொளுத்திக்கொண்டிருந்த ஒரு மதியத்தில் யாருமற்ற தெருவில் எனக்கு முன் அவள் சென்றுகொண்டிருந்தாள். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அவளிடம் பேசிவிடுவது என்று முடிவு செய்தேன். பேசிவிடுவது என்பது காதலை சொல்லிவிடுவது என்பது. அவள் என்னை கவனிக்கவில்லை. நடையை வேகவேகமாகப் போட்டேன். சரியாக அவள் அருகில் சென்றதும் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. உடலில் பதட்டம். என்ன பேச என்றும் தெரியவில்லை. ஒத்திகை பார்த்த விஷயங்கள் உதட்டுக்குள்ளேயே அமுங்கி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்.

'எப்படியிருக்கெ?'

எல்லா காதலர்களுக்குமான பயம் கலந்த முதல் வசனம் விசாரிப்பாகத்தான் இருந்திருக்கும் என் நினைக்கிறேன். இப்படியொரு கேள்வியை அவள் எப்படி எடுத்துக்கொண்டாளோ தெரியவில்லை. தலையை குனிந்துகொண்டு சிரித்தாள். எனக்கு அது போதுமானதாக இருந்தது. ஆனால் அவள், 'ஒடம்பு சரியில்லெ. என்ன பண்ணலாம்னு இருக்கெ?' என்று கேட்டதும்தான் நிலைகுலைந்து போனேன். நான் பேசியதை அவள் விரும்பவில்லை என்று புரிந்துகொண்டேன். இதை ஆசிரியர்களிடம் அவள் சொல்லிவிட்டால்,  அம்மா, அப்பாவை வரவழைக்கச் சொல்வார்கள். அடுத்து டிசியை கொடுத்துவிடுவார்கள். அவள் உறவினரிடம் சொன்னால், திட்டலாம் என மனம் கோணலாகச் சிந்தித்துக்கொண்டிருந்தது.

அதற்குள் எனக்குப் பின்னால் இருந்து சீதா லட்சுமியின் தோழி சுபா வந்திருந்தாள்.  'என்னடி, என்ன சொன்னான்?' என்று சிரிப்பு சத்தத்துக்கு இடையே சுபா அவளிடம் கேட்பது எனக்கு கேட்டது. பிறகு என்ன பேசிக்கொண்டார்களோ தெரியாது. நான் ஒரு மாதம் வரை அவள் முகத்தை பார்ப்பதையும் அவள் கண்ணில்படுவதையும் தவிர்த்துவந்தேன். இருந்தாலும் இதை தொடர முடியவில்லை. மனதுக்குள் அடிக்கடி வந்து இம்சை செய்துகொண்டிருந்தாள். பிறகு அவள் போகும் பஸ்சில் செல்வது, அவள் ஆற்றுக்கு வரும் வரை காத்திருப்பது, வந்துவிட்டால் அவள் குளித்து முடித்து கிளம்பும்வரை நானும் குளிப்பது உள்ளிட்ட விஷயங்களை, அதாவது அவள் பின் அலையோ அலையென முன்பை விட அதிகமாக அலையத் தொடங்கி இருந்தேன்.

ஒரு தலையாக அவளைக் காதலிக்கத் தொடங்கினேன். இது அவளுக்குத் தெரியுமா, தெரியாதா என்ற சந்தேகம் எனக்குள் வலுத்துக்கொண்டே சென்றது. எனது வீட்டுக்கு அருகே இருக்கிற அவளது தோழி, டீச்சர் மகள் பூர்ணாவிடம், ''சீதா லட்சுமி ஏன் கொஞ்ச நாளா டல்லா வாரா?" என்று கேட்டுத் தொலைக்க, அவள் போய் என்ன சொன்னாளோ தெரியாது, என்னை எரித்துவிடுவது போல பார்க்கத் தொடங்கி இருந்தாள் சீ.லட்சுமி.

இப்படியாகத் தொடர்ந்த என் காதல் பள்ளி முடிந்து கல்லூரிக்கு சென்ற பின்னும் தொடர்ந்தது. அவள் குற்றாலத்திலும் நான் பாபநாசத்திலும் படிக்க நேர்ந்த பிறகு அலைவதற்கு பொருளாதார பிரச்னை நெருக்கடி கொடுக்க, மனதை கல்லாக்கிக் கொண்டு காதலை நடுரோட்டில் விட்டுவிட்டு வந்தேன்.

பிறகு காலம் சிதைத்து சின்னாபின்னமாக்கி திருமணம், குழந்தை, குட்டி என்றான பிறகு எப்பொழுதாவது ரோட்டில் அழகானப் பெண்கள் தென்படும்போதோ, பீச்சில் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு யாருடனோ ஒருத்தி பேசிக்கொண்டிருக்கும்போதோ, நெஞ்சை உருக்கும் பாடல் காட்சிகளில் ஹீரோவின் நெஞ்சில் ஹீரோயின் சாய்ந்துகொண்டிருக்கும்போதோ கண்ணுக்குள் கை காட்டி நிற்பாள் சீதா லட்சுமி. மற்றபடி ஒரு தலைக்காதல் ஒரு ஓரமாக மனதுள் மங்கிப்போய் கிடந்திருந்தது. இதோ முப்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு என் பழைய காதலியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். என் காதலை, நான் அவள் பின்னால் அலைந்த விஷயம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அவள் தெரிந்து வைத்திருக்கிறாள்.

 'படிக்கும்போது இப்படி உட்காரவோ, பேசவோ ஒரு நாள் கூட சந்தர்ப்பம் கொடுக்கலை. இப்ப நிறைய பேசணும்போல இருக்கு' என்றேன், அவள் கண்களை பார்த்தபடி.

'அப்ப பேசினேன்னு தெரிஞ்சிருந்தா, எங்கப்பா படிப்பை நிறுத்தியிருப்பாரு'.

'அந்தளவுக்கு என்ன பண்ணினேன்?'

'நீ பாட்டுக்கு ஊர் பூரா, உன்னை நான் காதலிக்கிறதா வதந்தி பரப்பியிருந்தே...'

'...'

' உங்கிட்ட மட்டும்தான் நான் பேசுவேனாம். உன் மேல பைத்தியமா அலைஞ்சுட்டு இருந்தேனாம். இப்படி நீ கண்ட கண்ட இடத்துல கதைவிட்டிருக்கே. சுபா ஒரு நாள், 'உன் லவ்வர் போறான்'னு உன்னை காண்பிச்சா.  என்னடி உளர்றன்னு திட்டினேன். அப்புறம்தான் விஷயத்தை சொன்னா. அவளோட தண்டோராவுல வேற, என் பெயர் டேமேஜ் ஆனதுதான் மிச்சம்'

'இது எல்லாமே உனக்கு தெரிஞ்சிருக்கே?'

'தெரியும்'

'நிஜமாவே என்னை நீ லவ் பண்ணலையா?'

'உன்னை முதன்முதலா பார்த்தப்ப என்னமோ மாதிரி இருந்தது. அன்னைக்கு பூரா உன்னை பத்தியே சுத்திட்டிருந்தது மனசு. அதற்கடுத்த நாட்கள்ல, 'இது சரிபட்டு வராது'ன்னு மாத்திட்டேன்'

'அதெப்படி, உங்களால மட்டும் இது முடியுது?'

'எது?'

'ஈசியா எல்லாத்தையும் மாத்திக்கிறது?'

'நீ மாத்திக்கலையா?'

'என் நிலைமை வேற?'

'அதுதான் எனக்கும்'

இவ்வளவு வருஷத்துக்குப் பிறகு இந்த விஷயங்கள் தேவையா? என்று மனதுள் கேட்டுக்கொண்டேன். இதற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இது காதல் தொடர்பானது. வயதை கடந்தது. அதுமட்டுமின்றி மனதுக்குப் பிடித்த ஒருத்தியுடன் இவ்வளவு வருடங்களுக்கு பிறகு பேச வாய்ப்பு கிடைத்ததே சுவாரஸ்யம்தான் என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன். இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு பேச, வேற விஷயங்களே கிடைக்கவில்லையா? என்று மனைவி கேட்பது போல் இருந்தது. மனைவியிடம் இந்த விஷயத்தை சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வாள். 'ஒங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கார்' என்று அவள் சம்பிரதாயமாகச் சொல்லலாம். 'அப்படி என்ன சொன்னார்' என்று சீதாலட்சுமி கேட்டால் என்ன பதில் சொல்வாள் என்று மனதுக்குள் ஒரு விவாதம் நடந்துகொண்டிருந்தது.

கோயிலை இரண்டு மூன்று முறை யாரோ சுற்றிக்கொண்டிருந்தது தெரிந்தது. மூக்குக் கண்ணாடியை சரி செய்துவிட்டு பார்க்கிறேன். வாய்க்காலில் சில பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  என மனதுக்குள் பூ பூத்தது. ஈரக்காற்றின் மீதேறி மெதுவாகப் பறக்கிறது நினைவுகள். சீதா லட்சுமி கண்களை தரையில் அலையவிட்டபடி சின்னதாகப் புன்னகைக்கிறாள். அந்த புன்னகையில் உயிர் அசைந்து எழுகிறது. இதே புன்னகையைத் தேடித் தேடி எத்தனை முறை சிதைந்திருக்கிறேன்.

'இவ்வளவு வருஷத்துக்குப் பிறகு நாம சந்திப்போம்னு நினைச்சியா?'

'நீ?'

'நினைச்சேன். இப்படி சந்திப்பேன்னு நினைக்கலை' என்று சொன்னதும் சிரித்தாள். நானும் சிரித்தேன். எங்கள் சிரிப்பை கேட்டுவிட்டு தாவணி அணிந்த பெண் ஒருத்தி அதிசயமாகப் பார்த்துப்போனாள். ஒரே இடத்தில் இருந்திருந்ததால் கால் பிடித்துக்கொண்டது. எழுந்து நின்று கைகளை விரித்தேன். காற்று உடலுக்குள் சென்று தழுவிவிட்டுப் போனது. அவளும் எழுந்து வேறு கல்லில் உட்கார்ந்துகொண்டாள். தூரத்தில் யாரோ காளை மாடுகளை குளிப்பாட்ட வருவது தெரிகிறது. மனதில் ஓரத்தில் இருந்து அவளிடம் சொல்ல, பேச ஒவ்வொரு விஷயமாக வெளிவந்துகொண்டே இருந்தது. ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பேசி தீர்த்துவிட முடியவில்லை.பேசினாலும் தீர்ந்துவிடக்கூடிய விஷயமும் இல்லை.

'சாயங்காலமா நாலு மணிக்கு வீட்டுக்கு வாயேன். பேரக்குழந்தைகளோட வீட்டுக்காரரும் வந்திருப்பார். இன்னும் பேசலாம்' என்றபடியே எழுகிறாள். சரி என்று சொல்லிவிட்டு அவள் பின் தொடர்கிறேன். இருவரும் பெருமாள் கோவில் அருகில் பிரிகிறோம். புன்னகைத்தபடியே சொல்கிறாள். அவளை பிரிய முடியாமல் காதல் மனம் நடக்கிறது. மனதுக்குள்ளிருந்து உற்சாகக் குரல் ஒன்று கேட்டுக்கொண்டிருந்தது. வீட்டுக்கு நடக்கும்போது நினைத்தேன், முதலில் தலைக்கும் மீசைக்கும் டை அடிக்க வேண்டும் என்று.

Monday, October 31, 2011

காதலுக்கு கண் இருந்தது

காதல் பற்றி எழுதும்போது, எழுத்து தானாகவே தன்னை விரித்துக்கொள்கிறது. நித்தமும் ஏராளமான காதல் கவிதைகள் எங்காவது பிறந்து எங்காவது வாழ்ந்துகொண்டே இருக்கிறது, காதலர்களைப் போல. ஏழை, பணக்கார காதல், மாறுபட்ட ஜாதி/மதத்துக்கிடையேயான காதல், கிராமத்து/நகரத்து காதல், ஹீரோயிச காதல், கண்டதும் காதல், முன் ஜென்மக் காதல் உட்பட பல்வேறு வகைகளை கிழித்து தொங்கவிட்டிருக்கிறது சினிமா காதல்.


கீழே விழுந்துவிடுகிற பேனாவை எடுத்துக் கொடுத்ததற்காகவெல்லாம் காதல் வந்து விடுகிற இன்றைய சூழலில், நாற்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில், காதல் எப்படி நடந்திருக்கும் என நினைப்பதே அலாதியானது. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை கொண்ட கிராமம் அப்படி சீக்கிரமாக காதலையும் காதலர்களையும் விட்டுவிடுமா என்ன? இப்படியான யோசனையின் போதுதான் நண்பன் சேவியர் சொன்னான். 'எங்கப்பா அந்த காலத்துலயே லவ் மேரேஜ் பண்ணவர்லா' என்று. நண்பன் சொன்ன அந்த காலம் அறுபதுகளின் ஆரம்பம்.

எல்லாவற்றையும் தவறாகவே பார்ப்பதும் பொறாமையாக கொள்வதுமான ஆட்கள் எங்கும் எப்போதும் உண்டு. தன்னால் முடியாத அல்லது தனக்கு நடக்காத ஒரு விஷயம் மற்றொருவரின் பால் நடந்து அதுபற்றி தெரியவருகிற போது தாங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. இந்த 'தாங்கிக்கொள்ள' முடியாததுதான் 'ஊர்க்கட்டுப்பாடு' என்ற பெயரில் கடுமையை உத்தரவாகிவிடுகிறது. ஊர்களின் உத்தரவுகள் சாமிகளின் நேரடி வார்த்தைகளாக வந்து விழுவதாக கருதப்பட்ட காலத்தில், நண்பனின் அப்பா ஹீரோவாக காணப்பட்டார். பெண்ணின் மனதில் இடம்பிடித்ததை தவிர வேறெந்த போராட்டத்தையும் அவனது தந்தை நடத்தியதில்லை. ஆனால் காதல் நடந்தது. தூர தூர ஊர்களில் இருந்துகொண்டு தெரியாமல் வந்துவிழுகிற கடிதங்களின் வழி நடந்த காதல் திருமணத்தில் முடிந்திருக்கிறது.

எனக்கு சொல்லப்பட்ட அல்லது நான் கேள்விபட்ட, கிராமத்து காதல்கள் எல்லாம் கொடுமையானதாகவே இருந்தன. இப்போது நினைத்தாலும் அந்த வன்முறைக்கு அவர்களது வம்சத்தில் யாரையாவது சிறையிலடைக்கச் சொல்லலாம் எனத் தோன்றும். விஷயம் இதுதான்: தெரு முனை பிள்ளையார் கோயிலில் கரகாட்டம். பகலில் வெளியில் முகம் காட்டாத தாவணிப் பெண்களுக்கு கருக்கலும் இரவும்தான் சுகங்களின் காற்றடிக்கும் பொழுது. மூன்றாவது வீட்டு பையனுக்கும் இவளுக்கும் காதல் என்று அறியப்படாத ஏதோ ஒன்று உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. இது அரசல் புரசலாக அங்கங்கே பரவ, பகலில் காட்டுக்கு வேலைக்குப் போய்விட்டு மாலையில் வருகிற உழைப்பாளிகளுக்கு இது கவுரவப் பிரச்னை. அண்ணன்காரனும் தம்பிகாரனும் திட்டம் போட்டுவிட்டார்கள்.

கரகாட்டம் நடக்கும் கோயில் வாசலுக்கு அவளும் வந்திருந்தாள். அவளது கண்கள் வழக்கம் போலவே அவனைத் தேடிக்கொண்டிருந்தன. இதுபற்றிய பேச்சு, கரகாட்டத்தின் போது இளக்காரமாக அண்ணன்- தம்பி காதுக்குப் போனது. வீட்டுக்குப் போனார்கள் அண்ணனும் தம்பியும். அடுக்களைக்குப் பின்பக்கம் குழி தோண்டினார்கள். ஆட்டம் முடிந்து வந்த தங்கையை, 'வாம்மா வந்து இறங்கு'என்றார்கள். ஏன் எதற்கு என்ற அவளின் கேள்வியை புறந்தள்ளிவிட்டு அவளை அப்படியே உள்ளே தள்ளி, குழியை மூடிவிட்டார்கள் உயிரோடு!

இப்படியொரு கதையை கேட்டபிறகு அந்த பெண்ணின் கதறல் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தன. அவள் செய்த பாவம் என்ன? அவளுக்கு தண்டனை என்றால் இவர்களுக்கு? அதற்கு வேறொரு கதை சொன்னார்கள். அவர்கள் சொன்ன காதல் கதைகளில் எல்லாம் தாங்க முடியாத வன்முறை. இப்படியாக கேள்விபட்ட காலங்களில் நண்பனின் தந்தை காதலில் ஜெயித்தாரென்றால் அது பெரிய விஷயம்தானே. இதிலிருந்து இரண்டு விஷயங்கள் எனக்குப் புலப்பட்டன. காதலர்களை சேர்த்து வைப்பதும், சேர்த்தே புதைத்திருப்பதும் அந்த காலத்தில் நடந்திருக்கிறது. இதையடுத்த காலகட்டங்களில் ஊரில், காதலின் வளர்ச்சி கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் தைரியம் என்றளவிலேயே இருந்ததாகச் சொல்வார் மூர்த்தி அத்தான்.

''ஏலே... நாங்கலாம் வேலை பாத்தாதான் சோறு. என்னதான் பேண்ட், சட்டையை போட்டுட்டு போனாலும் வேலையை தாண்டி வேற சிந்தனை வராதுலா. அப்படியும் கொஞ்சம் கொஞ்சம் வரும் பாத்துக்கோ... நம்ம கெடக்குத கெடப்புக்கு இது தேவையான்னு இருந்துக்கிட வேண்டியதான்" -அத்தான்களின் காதல்கள் எழுந்து அடங்கியதை போல எல்லாருக்கும் இருந்திருக்குமா என்ன?

சித்தப்பாவின் காதல் பற்றி கேள்விபட்ட போது, சொந்தங்களுக்குள் நடக்கும் காதல் அதிகம் வென்றிருப்பதாக உணர முடிந்தது. பெருங்கூட்டம் கொண்ட குடும்பங்களில் நடக்கும் காதலில் ஈகோவே பிரதானமாக இருந்திருக்கிறது. சித்தப்பா பியூசி முடித்த கம்யூனிஸ்ட் பேச்சாளர். அவரது பேச்சுக்காகவே கிருஷ்ணம்மா சித்தி காதலில் விழுந்தாள் என்று சொல்வது அதிகப்படியானதல்ல. இதை அவளே சொன்னாள் என்று தெருக்காரிகள் சொல்லியிருக்கிறார்கள். அவர் மேடையில் பேசுகிறார் என்றால், சித்தியின் வீடிருக்கும் தெருவுக்கு குழாயை திருப்ப சொல்லுவாராம் சித்தப்பா. குழாய்களின் வழி வந்த குரலில் காதல் வளர்த்திருக்கிறார்கள். சித்தப்பாவின் வறுமையை அதிகம் செழிப்பாக்கியது சித்தியின் சிரிப்பாக மட்டும்தான் இருந்திருக்கும். சித்தியின் வயதை கொண்ட அவளது தோழியிடம், எப்போதோ ஒரு தருணத்தில், காதல் பற்றி கேட்டபோது சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. 'எனக்கு அப்படிலாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸும் இல்லடே... நான்லாம் சங்க இலக்கியத்துல வர்றாளா தோழி... அவளை மாதிரின்னு வச்சுக்கோயேன்' என்றதும், அவள் இதை சொல்லாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

இப்படியான காலகட்டத்தில்தான் அக்ரஹாரத்து தேவியக்காள், அம்பாசமுத்திரம் வாலிபனோடு ஓடிவிட்டாள் என்ற செய்தி ஊருக்குள் பரவி, முக்குக்கு முக்கு பேசும் பொருளாகியிருந்தது. அந்த தேவி, அம்பை கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். பெரும் வசதிகொண்ட, ஏகப்பட்ட சொந்தங்களை கொண்டிருந்த தேவிக்கு அதைத்தாண்டி அந்த வாலிபனிடம் என்ன கவர்ந்திருக்கும்? ஏதோ ஒன்று. அந்த ஏதோ ஒன்றை காதல் என்றும் கொள்ளலாம். அப்போது தண்ணீர் பிடிக்கும் பைப்படியில் குடங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண்களிடம், 'பொட்ட புள்ளைல படிக்க வைக்கணுமா? அதும் அம்பாசமுத்ரத்துல போயி... இப்படித்தான் ஆவும்' என்ற பேச்சுகளை அதிகம் கேட்க முடிந்தது. சில பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் ஜோடியாக பஸ்-ஸ்டாண்ட்டில் வந்திறங்கியபோது எல்லோர் கண்ணும் அவர்கள் மேல் இருந்தன. முதல் குழந்தைக்குப் பிறகு அக்ரஹாரம் தேவியக்காவை ஏற்றுக்கொண்டது.

ட்யூஷன் சொல்லிக்கொடுத்த அக்காள்களின் காதல் கதைகள் எந்தவித திருப்பங்களும் இன்றி நேரிடையாக கல்யாணத்தில் முடிந்ததற்கு ஒரே ஜாதி என்பது பிரதானமாக இருந்தது. கல்லூரியில் படித்த அக்காள்கள் ஜாதி பார்த்து காதலித்திருப்பார்களோ என்னவோ? வெவ்வேறு ஊர்களில் நடந்த இவர்களின் காதலுக்கு ஊரில் எந்த சாட்சியும் இல்லாதது ஆச்சரியம்தான். எப்போதும் திண்ணையில் அமர்ந்துகொண்டு பொரணி பேசுபவர்களுக்கு இவர்களது திருமணத்துக்குப் பிறகுதான் காதலித்த கதை தெரிந்து, அதிர்ந்தார்கள். 'இவ்வளவு கமுக்கமாவா பண்ணியிருக்காவோ' என்பதாக இருந்தது பொரணி பேச்சு. இம்மாதிரியான எந்த சம்பவங்களும் இல்லையென்றால் பொரணி பேசுபவர்களின் பாடுகளும் திண்டாட்டம்தான்.

வெவ்வேறு ஜாதியினருக்கான காதல்கள் பெரும்பாலும் ஊரில் நொடிந்து சின்னா பின்னமானதை பார்த்திருக்கிறேன். இப்படியான விஷயங்களும் வெற்றிகரமாக ஓடிய சினிமாக்களும் காதல் அறிவை தந்துபோனதிலிருந்து ஊரில் பலரும் காதலிப்பதை கடமையாக கொண்டிருந்தனர். இதற்காகவே வந்துவிடுகிற திருவிழாக்களும் கொடைகளும் காதலை ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தது/ கொண்டிருக்கி றது.

படித்து முடித்துவிட்டு டெல்லிக்கு வேலைக்குப் போன கருப்பசாமி அண்ணனி்ன் காதல் பற்றி, மேலத்தெரு முழுவதும் போஸ்டர் ஒட்டாத குறையாக இருந்தது.

'இனும எங்கடா அவன் ஊருக்கு வரப்போறான்? அத்தை மவ, மாவன் மவளை அவன் எப்படி கெட்டுவான்? இவளுவோ என்னத்தை படிச்சிருக்காவோ?' என்கிற பேச்சுகள் ஒவ்வொரு வாசல் படியிலும் நடந்துகொண்டிருந்தன. டெல்லியில் இருந்து வருகிற அண்ணனின் கடிதங்களில் காதல் பற்றியோ, கல்யாணம் பற்றியோ எதுவும் இருக்காது. ஆனால், அவனுடன் வேலைக்கு சென்றுவிட்டு பாதியில் ஊரைத்தேடி வந்துவிட்ட நல்லமுத்து சொன்ன பிறகுதான் விஷயம் தெரிந்தது.

'அது என்னமோ சேட்டு புள்ளைன்னு சொல்லுதாவோ?' என்று நல்லமுத்து சொன்னான்.

'அது என்னல ஜாதி? நம்மள விட கொறச்சலா கூடுதலா?' என்ற பெரிசுகளிடம், 'ச்சீ... அவளுவோ என்ன கலரா இருக்காவோ... கண்டிப்பா நம்மள விட ஒசத்தியாதான் இருக்கும்' என்றான்.

'அவன் படிச்ச பய.. அவனுக்கு தெரியாத வெவரமாடா?' என்று பேச்சு தொடர்ந்துகொண்டிருந்தது. யாரோ, எங்கோ யாரையோ காதலித்துக்கொண்டிருக்க, இவர்கள் ஒரு கதையை இங்கு உருவாக்கியிருந்தார்கள். முதல் குழந்தை பிறந்த மூன்று வருடத்துக்கு பிறகு குலதெய்வ கோயிலில் மொட்டை அடிக்க, குடும்பத்தை கூட்டி வந்திருந்தான் கருப்பசாமி அண்ணன்.

அவனது அம்மா, 'ஏட்டி ஆச்சிய பாரு' என்று பெண்குழந்தையை தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். குழந்தை புதிய முகத்தைப் பார்த்து மிரண்டு கொண்டிருந்தது. கருப்பசாமி அண்ணனின் மனைவியானவளுக்கு மொழி பிரச்னை. மருமகளும் மாமியாரும் செய்கையால் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு கருப்பசாமியோடு ஊரே சிரித்துக்கொண்டிருந்தது.

'ஒம் மருமவ என்ன சொல்லுதா?'

'ஆங்... என்னமோ கியா கியாங்கா... மாட்டை பத்துத மாதிரி' என்றாள் அவனது அம்மா.

ராணுவ வேலைக்குப் போன செவனு, நாசிக்கிலிருந்து ஒரு பெண்ணை காதலித்து அங்கேயே திருமணம் முடித்துக்கொண்டு வந்திருந்தார். அந்த காதல் ஆச்சரியமாக இருந்தது. அவளுடன் நான்கு வயது மகனும் வந்திருந்தான். 'காதலிச்ச பிறகுதான் அவ வீட்டுக்காரன் செத்துபோயிட்டான்னு தெரிஞ்சது... ஒத்த புள்ளைய வச்சுகிட்டு என்ன செய்வா? அதான் தாலி கட்டி கூட்டியாந்துட்டேன்..." என்றார் செவனு.

இவளுக்கும் மொழி பிரச்னை. இந்தப் பிரச்னையிலும் கூட மாமியாருக்கும் மருமகளுக்குமான சண்டை தொடர்ந்ததுதான் ஆச்சரியம்.

'எழவெடுத்தவா... என்னைக்குன்னு வந்தாளோ... அன்னைலயிருந்து போச்சு, நிம்மதி'

'பாகல் ஹோகயி கியா... ஹைசா மத் பாத் கர்னா... ஆப் கி பேட்டாஸே பாத் கரோ... முஜே நஹி '

இப்படியான காதல்களின் வழி எனக்கும் வந்து தொலைத்தது ஒரு தலையான காதல். முதல் மூன்று நாட்கள் நெஞ்சுக்குள் கிளர்ந்த அந்த காதலை விட்டுவிட்டு, வெறொருத்தியுடன் இணைத்து பேசப்பட்டதிலிருந்து நொறுங்கி போனேன் நான். முளைக்கும் முன்பே கருகிவிட்ட அந்த காதலுக்கு கண்டிப்பாக 'கண்' இருந்திருக்க வேண்டும்.

Saturday, May 29, 2010

நிலவு உடையும் காலம்

நம் பெயர் தாங்கிய கள்ளிச்செடியை கைகளாக்கிக் கொண்ட பிறகு, இனிமையாகவே இருக்கிறது ரணத்தின் ரசனை. துள்ளியோடும் உன் வலது கண், நேராக வந்து ஒட்டிக்கொள்கிறது என் நெஞ்சில் மூன்றாம் கண்ணாக! கண்கள், காதலின் வாசல்கள். பூட்டப்படாத வாசல்கள் பூச்சொரியும் சொர்க்கங்கள். தூரமாகவே நிற்கும் உன் இடது கண், எப்போதும் எதிரில் நின்று என்னைப் பார்ப்பதாய் உன்னைக்காட்டுகிறது. உன்னைக்காட்டுவதும் என்னைப் பார்ப்பதுமான சித்து விளையாட்டில், பிறப்பும் இறப்பும் சேர்ந்தே நடக்கிறது. வரவா வேண்டாமா என்கிற குழப்பத்தில் ஆடும் உன் தாவணி, என் உயிரை கட்டி முடிந்து வைத்திருக்கிறது.

திடீரென ஞாபகம் வந்தவளாய், பாவாடையில் உயிரை பொதிந்து, குபுக்கென விழுங்கி கொள்கிறாய். துடிக்கும் உன் இதயத்துக்கருகில் என்னுயிர் பம்மிக்கொள்கிறது. ஜென்மங்கள் கடந்த வாழ்வு, உன்னிதயத்தில் திரைப்படமாகிறது.

ஒரு காலத்தில் சிப்பாயாக இருந்திருக்கிறேன். குதிரையில் ஏறுவதும் வேறுநாட்டு வீரர்களை களத்தில் வெல்வதுமான் வீர வாழ்வு. கூடவே உன்னைப்பற்றியும் காட்டுகிறது படம். நீ ஏதோ ஒரு நாட்டில் மோர் விற்கும் பெண். கிருஷ்ணன் வந்தானா என்று கேட்டுக்கொண்டே, உடைந்த வெண்ணை பானையை பார்க்கிறாய். 'ஏய் கள்வா' என்கிற போது, கண்ணன் கதவின் பின்பக்கம் ஒளிந்திருப்பது தெரிகிறது. அப்போதும் கண்ணன், குழந்தையாகவே இருப்பது எனக்கு ஆச்சர்யம்.

இப்போது அடுத்த ஜென்மம். என்னால் நம்பவே முடியவில்லை. நான்தான் கபிலர் என்றால் எப்படி நம்புவது? கோழி இறகை காதில் வைத்துக் குடைந்துகொண்டே, பாடல் இயற்றுகிறேன். அசிஸ்டெண்ட்டுகள் யாரும் இல்லாததால் நானே பனையோலையில் எழுதுகோலால் அழுத்தி அழுத்தி எழுதி சிரித்துக்கொள்கிறேன்.

நீயும் வருகிறாய். உன் பெயர் காக்கை பாடினியாரோ அல்லது அவ்வையாராகவோ இருக்கலாம். நீ பேசும் பஞ்ச் டயலாக்கில், டக்கென்று திரையில் தீப்பிடிக்கிறது. இதயம் உம்மென்று, பம்மியிருக்கும் என்னை ஆக்ரோஷமாக பார்க்கிறது.

ஒவ்வொரு ஜென்மத்திலும் நாமிருவரும் யார் யாராகவோ இருந்திருக்கிறோம். இப்போதுவரை, ஒரு காலத்திலும் கணவன் மனைவியாக இல்லவே இல்லை.

Tuesday, May 18, 2010

புளியம் பிஞ்சு காதல்

இன்றைய நிலவரப்படி முத்துசாமி திருப்பூரில் இருப்பதாக தகவல். நேற்றைய தகவல்கள் அவன், புனலூரில் அலைந்து கொண்டிருப்பதாக வந்தது. இம்மாதிரியான தகவல்களின் உண்மையை, நீங்களோ நானோ கணிக்க முடியாதது. மேற்சொன்ன தகவல்கள் செல்லிடப் பேசிகள் செவிக்குள் வராத காலகட்டம்.

முத்துசாமி, மாடுகளில் இருபத்தி ஏழையும், பன்னிரெண்டு செம்மறிகளையும் மேய்ப்பதை தொழிலாகக் கொண்டவன். மாட்டின் பற்கள், கொம்புகள், பால்சுரக்கும் மடுக்கள், அவை நடக்கும், அசையும் முறைகள், இன்ன பிற விவரங்களை நாக்கு நுனியில் வைத்திருப்பவன். உதாரணத்துக்கு ஒரு பதமாக, ‘கப்பை கொம்பு மாடுகள் ஈனும் குட்டிகள், கிடாரியாகத்தான் இருக்கும்' என்பதைக் கொள்ளலாம்.

இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ மாட்டின் பிரசவங்களை பார்வையாலேயே அறிந்துவிடும் நோக்கன் அவன்.

மாடுகளைப் பற்றி இப்படியான உலகறிவை பெற்றிருந்த அவன், போன திங்கட்கிழமை அவற்றைத் தவிக்க விட்டுவிட்டு, பஜனை மடத் தெரு பொன்னம்மாளோடு ஓடிவிட்டான். ஓடி விட்டான் என்பது நிஜமே. நடு ஜாமமோ, அதிகாலையிலோ பயணிகளை அடைக்கும் பஸ் வசதி ஊரில் கிடையாது. அவர்களின் பேச்சுப்படி, நள்ளிரவு தொழுவத்தின் பின்பக்கமாக (அது கருவை முட்கள் வளர்ந்து காடாகி இருக்கும் இடம்) வந்துவிடுவது, கையை பிடித்துக்கொண்டு இருவரும் ரயிலடிக்கு ஓடி செல்வது, அங்கிருந்து அம்பாசமுத்திரம். பிறகு திருச்செந்தூர். (இத்தகவல்கள் நேற்றுமுன்தினம் கதைக்கப்பட்டவை)

முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில், வள்ளி, தெய்வானை சமேதரான திருச்செந்தூர் முருகன் ஆசிர்வாதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ‘காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்' என்று யார் வாழ்த்தினார்களோ?

‘‘அம்பாசமுத்ரம் கார்சான்டுல பாத்தம்ல. அந்தப் புள்ள தலையில முக்காடை போட்டுட்டு நின்னுட்டிருந்து. இந்தப் பய, கையில ஒரு பைய வச்சுகிட்டு பஸ்ல ஏறுனாம்.'

இது முதல் நாள் தகவல்.

அடுத்த தகவல், ‘‘இந்தப் பயல மாதிரியே இருக்கேன்னு அப்பவே நெனச்சேன். இவன் ஏன் இங்க வரப்போறான்; வேற யாராவது இருப்பாவோன்னுட்டு வந்துட்டேன். இங்க வந்தப் பெறவுலா தெரியுது''என்பதாக இருந்தது. இத்தகவலைச் சொன்னவர் முருகனுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு வந்தவர்.

இந்த தகவல்களினூடாக முத்துசாமி, பொன்னம்மா காதல் மலர்ந்த கதையைக் கேட்டாக வேண்டும்.

மாடுண்டு தானுண்டு என்றிருந்த முத்துசாமி, அன்று உச்சி வெயில் பேய்கள் உலவும், சுப்பையா தோப்புக்கருகில் மாடுகளை மேய விட்டிருந்தான். அருகில் குளம். மாடுகள், எல்லை தாண்டி எங்கும் போகாது என்ற தைரியத்தில் அரசமரத்தினடியில் பூடமாக வீற்றிருந்த பச்சத்தி மாடனுக்கருகில் துண்டை விரித்து, நித்திரையில் ஆழ்ந்தான். கொளுத்தும் வெயிலில் இப்படியானதொரு குளு குளு இடம் தூங்குவதற்கு கிடைப்பது ஊருக்குள் அரிது.

வேலை வெட்டி இல்லாத வம்பளந்தான்கள் தூங்குவதற்காக, கட்டு பீடிகள் சகிதமாக இங்கு வருவதை வழக்கமாக்கி வைத்திருந்தனர். அவர்களின் தூக்கத்தை ஆசிர்வதிப்பவராக, பச்சத்திமாடன் அருள்பாளித்துக் கொண்டிருந்தார்.

அன்று மஞ்சப்புளிச்சேரியில் சிறுகிழங்கு எடுக்கப்போன மேலத் தெரு பொம்பளைப் பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். தலையில் கிழங்கு எடுத்ததற்கான கூலியை தென்னம்பொட்டியில் வைத்துகொண்டு வந்தவர்களுக்குப் புளியங்காய் ஆசை. காரணம் சுப்பையா தோப்பிலுள்ள புளியங்காய்கள் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையை இயற்கையாகப் பெற்றிருந்தது.

பேய்கள் உலவும் இடம் என்று ஊர்க்காரர்களால் வர்ணிக்கப்பட்டிருப்பதால் தனியாகச் செல்ல அவர்கள் பயம் கொண்டனர். இதன் காரணமாகத் தூங்கிகொண்டிருந்த முத்துசாமி எழுப்பப்பட்டான். இளம் பெண்களின் ஆசையை பூர்த்தி செய்யாமல் இருக்க, அவனால் முடியவில்லை. காரணம் அதுமட்டுமல்ல. அவனுக்குள் சின்னதாக கிறக்கத்தை ஏற்படுத்தும் பொன்னம்மாள் சகதி அப்பிய தாவணியோடு, தரையில் கோடு கிழித்துக்கொண்டிருந்தாள்.

கோடுகள், சிற்றின்ப மூளையின் நரம்புகளை உசுப்பேற்றியதன் விளைவாக, வேலி தாண்ட துணிந்தான். வேலி என்பது பெயருக்குத்தான். பலமுறை பலர் அந்த வழியை பயன்படுத்தி சென்று அது பாதையாகவே மாறியிருந்தது.

சுப்பையா தோப்பு பசுஞ்சோலைகளாலானது என்று நினைத்திருந்தால் எண்ணத்தை மாற்றிக்கொள்ளலாம். இந்த தோப்பு பொத்தைக்காட்டுக்குள் புழுதிகளால் சூழ்ந்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்னை, புளிய, மா மரங்கள். பம்பு செட் தண்ணீர் தொட்டி இருப்பதற்கு அருகில் நெல் விளையும் வயல்களும், உள்ளி, மிளகாய் உள்ளிட்டவை விளையும் வயல்களும் இருந்தன.

முத்துசாமிக்கு புளியங்காய்கள் பறிப்பது கை வந்த கலை. இடுப்பு சாரத்தை தூக்கி கட்டிக்கொண்டு மரத்தில் ஏறி உலுப்பினான். இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பது மாதிரி கொத்துக்கொத்தாக விழுந்தன. பக்கத்து புளிய மரத்திலிருந்து ஒரக்காய்கள் தானாக விழுந்து கிடந்தன. (ஒரக்காய்கள் என்பது பாதி புளி ஆகியும் பாதி ஆகாமலும் இருக்கின்ற ரெண்டுங்கெட்டான் பருவம்). பாதி பச்சை, பாதி காப்பிக் கலரினாலான அதன் சுவை வித்தியாசமானது. புளியம் பிஞ்சுகள், மற்றும் ஒரக்காய்களை சாரத்துக்குள் போட்டுக்கொண்டு வந்தான். பச்சத்தி மாடன் சந்நிதியில் ஆளாளுக்குப் பிரித்துக்கொடுத்தான்.

பொன்னம்மாள் தாவணியின் ஓரத்தில் புளியம் பிஞ்சுகளைக் கொட்டி, அதை முடிய போனாள். அப்போதுதான் கண்ணில் பட்டது. வளைந்து நெளிந்து கிடக்கும் புளியம்பிஞ்சுகளில் ஒன்று இதய வடிவத்தில் வளைந்திருந்தது. அதை கையில் எடுத்துவிட்டு அவனைப் பார்த்தாள். அவன் வழக்கமான பல்லிளிப்பை உதிர்த்து, அவளது மேனி அளந்தான். எல்லோருக்கும் கொடுத்த அவன், நமக்கு மட்டும் இருதய வடிவிலான புளியம் பிஞ்சை கொடுத்திருப்பது அவனது உளக்கிடக்கையை வெளிப்படுத்தத்தான் என்பதாக அவளுக்குப் பட்டது. அடுத்த வினாடியிலிருந்து காதல் பிரவாகமெடுத்து ஓடத் தொடங்கியது. புன்னகைத்தாள். மனசுக்குப் பிடித்தவளின் இம்மாதிரியான புன்னகைகள் கிடைப்பது அரிதென்பதால் கனவுலகில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான் முத்துசாமி. அந்த சைக்கிளின் கேரியரில் பொன்னம்மாள் வெட்கப்பட்டுக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் போன மாதம்தான் புதிதாக டூரிங் தியேட்டர் வந்திருந்தது. அது தொடங்கி, திரையிடப்பட்ட ஏழெட்டு காதல் படங்களைப் பார்த்ததன் விளைவாக இதய வடிவம் என்பது காதலின் அடையாளம் என்பதை அவள் அறிந்திருந்தாள். இப்படி தொடங்கிய அவர்கள் காதல், டூரிங் டாக்கிஸ், சின்ன வாய்க்கால், மாத்ராங்குளத்துப் பொத்தை, கடனாநதி ஆறு, சாணம் சுமந்து போகும் எருக்கெடங்குகள் என்று சந்தித்ததின் விளைவாக அதிகரித்தது. இந்தச் சந்திப்புகளுக்காக அவன் சில நாட்கள் மாடுமேய்க்க கட் அடித்திருந்தான். அந்த நாட்களில் மாடுகளை யார் மேய்த்திருப்பார் என்ற அதீத ஆவல் உங்களுக்குத் தேவையில்லாதது.

காதல் கண் மண் தெரியாமல் வளர்ந்த நேரத்தில்தான், செம்மறியான் மகள் பார்வதி, கப்பைக்காலன் மகன் கணேசனுடன் ஓடிப்போனாள். இந்த காதல் பற்றியும், இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஓடிப்போய் (இதுவும் திருச்செந்தூர்) திருமணம் செய்துகொண்டது பற்றியும் ஊரில் முக்குக்கு முக்கு உட்கார்ந்து பரபரப்பாக்கிக் கொண்டிருந்தனர். முத்தையா டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில், மேல கோயில் பூசாரி ஒரு விஷயத்தைச் சொன்னார்.

‘‘காலம் கலிகாலாம்னு சும்மாவாயா சொன்னான். பார்வதி யாரு? கணேசன் யாரு? பெத்தவளும் மகனும். இப்படி நடக்கலாமா?''

அவர் இப்படிச் சொன்னதும், பத்தாம் கிளாஸ் வரை படித்திருந்த முத்துப்பாண்டி, ‘‘அதுக்கும் இதுக்கும் ஏம்யா முடிச்சு போடுதீரு... ஒம்ம பொண்டாட்டி பேரு மீனாட்சி, உம்ம பேரு பாலசுப்ரமணியன். ரெண்டும் சரியான்னு நீரு பாத்திராவே''என்றான்.

சம்மந்தமில்லாமல் ஒரு உறவு குழப்பத்தை ஏற்படுத்தி மாட்டிக்கொண்டோமோ என்று நினைத்தாரோ என்னமோ, ‘என்னமோ போங்க' என்று சொல்லிவிட்டுக் கழன்றார்.

சரியாக நான்கு நாட்கள் கழித்து, திருக்குறுங்குடியில் கணேசனின் மாமா வீட்டில் தங்கியிருந்த புதுமண ஜோடி, உள்ளூர் சொந்தங்கள் முன்னிலையில் அழைத்து வரப்பட்டனர். பிறகு நெருங்கியவர்களை மட்டும் அழைத்து, திருமண வரவேற்பு நடந்தது. முட்டிக்கொண்டவர்கள் உறவுக்காரர்களானார்கள்.

இந்த பரபரப்பில்தான் முத்துசாமி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டான். முதலில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பெற்றோர்கள், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டால் ஏற்றுக்கொள்வார்கள் என்ற உண்மை அது.

இந்த தைரியத்தில் இருக்கும்போதுதான், இவர்கள் காதல் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்க்காரர்களுக்கு அவல் ஆனது. இந்த அவலின் உச்ச பட்சமாக வடக்குவா செல்வி அம்மன் கோயிலுக்கு கொடை கொடுப்பது பற்றி சங்கத்தில் நடந்த நள்ளிரவுக் கூட்டத்தின் போது நடந்தது அந்த சம்பவம்.

இரண்டு பாட்டில் பட்டை சாராயத்தை அவனின் சேக்காளி, பக்கத்து ஊரில் இருந்து வாங்கி வந்திருந்தான். இதை இவனுடன் மாடு மேய்க்கும் சேக்காளிகள் குடிப்பதற்கு தயாராக இருந்தனர். குடிப்பதற்கான சிறந்த இடத்தை தேர்வு செய்யும் பொறுப்பு முத்துசாமிக்கு விடப்பட்டிருந்தது. தெப்பக்குள திண்டு, பஞ்சாயத்து அலுவலகத்தின் பின்பக்கம், வடக்குத் தெரு புளிய மரம் என்பது உள்ளிட்ட இடங்கள் அலசப்பட்ட பின், சின்ன வாய்க்கால் ஓடும் சந்திரமய்யர் வீட்டின் பின்பக்க இடம் ஒரு மனதாக முடிவாகியது. அந்த இடம், வீட்டின் சுவரோடு சேர்ந்த வாய்க்கால் படித்துறை. பெண்கள் மட்டுமே குளிக்கும், துணி துவைக்கும் இடம்.

நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு நண்பர்கள் குலாம் சம்பந்தப் பட்ட இடத்துக்குச் சென்றது. கொஞ்சம் கொஞ்சமாகப் போதை தலைக்கேற, முத்துசாமி காதல் வலியில் விழுந்தான். மற்றவர்களும் போதை தள்ளாட்டத்தில் இருந்த நேரம், அந்த சுவற்றைப் பார்த்தான். சிலரது பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அனைத்தும் தனித் தனிப் பெயர்கள். முத்துசாமியின் மூளை உடனே வேலை செய்தது. பக்கத்தில் இருந்த எருக்குழிக்குப் போய், அடுப்புக்கரித் துண்டை எடுத்து வந்து, எழுத ஆரம்பித்தான். தனது அறிவுக்கு எட்டிய வரையில் பொன்னம்மாளை ‘பென்னம்மள்' என்றும் அவனை சரியாகவும் எழுதி, அதற்கு கீழே ‘கதலி' என்று எழுதிவிட்டு, சுற்றி ‘ஆட்டின்' வடிவத்தை வரைந்தான்.

முழு திருப்தியில் படித்துறையிலேயே நண்பர்களுடன் தூங்கி, அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டான். பதினோரு மணி வாக்கில் மாடுகளை தெப்பக்குளத்தில் இறக்கிக்கொண்டிருக்கும் போது, மேலத்தெரு சங்கன் விஷயத்தைச் சொன்னான்.

‘‘ஏல, சந்திரமய்யர் வீட்டு சுவர்ல யாருல அப்படி எழுதுனா?''

‘‘என்ன எழுதியிருக்கு'' என்ற முத்துசாமிக்கு உணர்வு வந்து, அதை தான் எழுதவில்லை என்று எரியும் சூடத்தில் சத்தியம் செய்தும் வேறு யாரோ எழுதியிருப்பார்களென்றும் சொன்னான்.

அதற்குள் ஊருக்குள் பரவி, பேசத் தொடங்கியிருந்தனர். அப்பாவின் திட்டுக்கும், அம்மாவின் அடிக்கும் உட்பட்டிருந்தாள் பொன்னம்மாள்.

ஒரு பகல் முழுவதும் பொறுத்திருந்துவிட்டு, ஆட்கள் நடமாட்டமில்லாத நள்ளிரவில் வாய்க்காலுக்குப் போனான். தென்னங் கூந்தலில் தண்ணீர் மொண்டு, மனதால் அழிக்க முடியாததை சுவற்றில் ஊற்றி அழித்தான்.

விஷயம் அதற்கு பிறகுதான் வெவகாரமானது. பொன்னம்மாளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்கும் ஏற்பாடுகள் நடந்தன. வழக்கமான எதிர்ப்பாக அவள் அதை எதிர்த்தாள்.

‘எந்தப் பயலாவது பொண்ணு கேட்டு வரட்டும்; வெளக்கு மாத்தால சாத்துதேன்' என்று அவளும், ‘பொட்ட செரிக்கி இப்டியாட்டி பேசுவே' என்று அவள் அம்மாவும் சுகமான சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவன் வீட்டில் வேறு விதமான பிரச்னை. ‘‘ஒனக்கு என்னல தெரியும். கருத்த பிள்ளையூர்ல கெடை போட்டிருக்கும்போது, ரெண்டு ஆட்டை களவாண்டுட்டு போன பயதான் அவன். அந்த வீட்டு கேணச்சிய கல்யாணம் முடிக்கணுங்கியாக்கும். எனக்குலா கேவலமா இருக்கு'' என்றார் அப்பா.

இம்மாதிரியான பெற்றோர்களின் கவுரவ குறைச்சல்களை ஒரேடியாக கொன்று விடுவது என்ற முடிவுடன், இருவரும் நள்ளிரவில் முடிவெடுத்தனர் ஊரை விட்டு ஓடிவிடுவது என்று.

அதற்கு பிறகு நீங்கள் படித்ததுதான் இந்தக் கதையின் தொடக்கம். இன்றைய இரவு முடிந்ததும் நாளை மேலும் ஒரு தகவல் வரும். அவன் உங்கள் ஊரில் இருக்கலாம் என்று. தகவல்கள் காதலை விடவும் வலிமையானவை.

-குங்குமம் வார இதழில் வெளியான என் சிறுகதை.

கொஞ்சம் பிசி. அதனால பழைய பதிவு.

Sunday, February 14, 2010

கண்ணாடி வளையல் காரி

அமுங்கி உறையும் ஆயிரக்கணக்கான நினைவுகளுடன் உன்னையும் சேர்த்து வைக்க முடியவில்லை. நீ கட்டுக்குள் அடங்காத காயம். எப்போது வலிப்பாய் எப்போது செழிப்பாய் என்பதை சொல்லிவிட முடியாது. நீ வற்றிய கடலை வானம் ஆக்கும் ஆற்றல் பெற்றவள். ஆழ்மனதிலிருந்து பீறிட்டு எழுகிறாய், இல்லை எழுந்து பீறிடுகிறாய்.


என்னை நான் தொலைக்கிற நாட்கள் எல்லாம் உன்னாலே மீள்கிறேன். அல்லது மீட்கப்படுகிறேன். தொடர்ந்து கொலை செய்யும் வன்மத்தையும் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் ஞானத்தையும் எப்போதும் உன் தாவணியில் முடிந்து வைத்திருக்கிறாய்.

உன் ஒற்றைக்கல் மூக்குத்தி, தாக்கும் ஒலியில் தெருவெங்கும் சிதறி தெறிக்கிறது என்னுயிர். மிதித்து செல்லும் பல நூறு கால்களில் ஒட்டிக்கொள்கிறேன். ஒவ்வொரு பாதங்களும் உன்னைப்பற்றியே கேட்கின்றன. சொல்லவோ, சொல்லாமல் இருக்கவோ முடியாதவனாகிறேன். கேட்கிற செவிகளெங்கும் ரவுத்திரம் பொங்கும் உன் விழிகள். அதில் எழும், தீ பிழம்புகள் என்னை தாக்கித் தாக்கிச் செல்கின்றன.

அடங்கமாட்டாத என் ஆணவம், அத்தீப்பிழம்பை விழுங்கச் சொல்கிறது. தொண்டைக்குள் செல்லும் தீப்பிழம்பின் ஓசையில், எப்போதோ நீ கொடுத்த முத்தம் வடிகிறது சொட்டு சொட்டாய். நான் இறந்து பிறக்கிறேன். பிறந்து இறக்கிறேன்.

இருந்தும், உயிரின் ஆழத்தில் இருந்து கொண்டு ஏதோ கேட்கிறாய். கண்ணாடி வளையல் அணிந்த உன் கரங்களைப் பிடித்துக்கொண்டே, உனக்காக வாழ்வேன் என்கிறேன். நீயும் அதையே சொல்கிறாய். எல்லாம் சொல்லிவிட்டு அவரவர்களுக்கான வாழ்க்கையை அவரவர் பார்த்துக்கொண்டோம். வேண்டாத நினைவுகளை மட்டும் நானும் சுமக்கிறேன், நீயும் சுமப்பாய் என்றே.


(காதலர் தினமாமே... அதான்)

Friday, July 24, 2009

அலையில் நீந்தும் மனவெளி (அ) அவஸ்தையின் ரசிகை

இன்னும் எழ முடியாமல் இருக்கிறது உன் ஞாபகங்கள் அழுத்தும் மனசு. இமைகளை அறுத்து கண்களை எடுத்து செல்லும் உன் நினைவுகள், ஆயுதமானது பற்றிய யோசனை வரவே இல்லை. சாணம் மெழுகிய மண் தரை முற்றத்தில் மல்லாந்து படுத்தபடி வான் பார்த்து பேசுகிறேன். வானம் பூமியை காதலிப்பதாய் ரகசியம் சொல்கிறது.

வலிகளை உணர்ந்த வானுக்கு நானும், எனக்கு வானும் ஆறுதல் பரிமாறிக் கொண்டோம். ஊடே, தெரிந்தோ தெரியாமலோ பாய்ந்து வந்த அருவம் காற்றாகவும் இருக்கலாம். அப்போது அதை தென்றல் என்றேன். அது நான் நானாக இருந்த காலம்.

சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருகிறது என் உயிர் குடிக்கும் உன் வாசம். வானிடம் பேச்சை நிறுத்திவிட்டு கண்கள் மூடி வாசனை நுகர்கிறேன். விழி திறக்கையில் மண் தரை முற்றமெங்கும் உன் வார்த்தைகள் சிதறி கிடக்கின்றன. ஒவ்வொன்றாய் பொறுக்குகிறேன். கைகளுக்குள் அகப்படாமல் கீழே விழுவதில் ஒன்று என் முகமாக இருக்கிறது.

உன் கூந்தலில் சிந்தும் நீர் பட்டு, மீண்டும் முளைக்கிறது முகம். உன் வேடிக்கைப் பார்த்து ஆளரவமற்ற மனவெளியெங்கும் சிரிப்பலைகள். அதில் என்னால் நீந்த முடிகிறது. ஆழ்கடல் இருட்டில் திசையின்றி செல்கிறது பயணம். திடீரென முளைக்கும் மரத்திலிருந்து அழைக்கிறது உன் கைகள். நீந்திய களைப்பில் உன்னருகே அமர்கிறேன்.

கண்களில் நீ தீட்டிய மை பெயர்ந்து என் கைகளில் விழுகின்றன. ஒவ்வொன்றும் கனம். தாங்கும் சக்தியற்று நடுங்குகின்றன கைகள். ‘விழப்போகிறது... விழப்போகிறது... ம்... எடுத்துக்கொள்’ என்கிறேன். நீ என் அவஸ்தையை ரசிக்கிறாய். உடல் கோணலாகி, என் பாதத்திலேயே விழுகின்றன மை.

கனம் தாங்காத நோஞ்சான் கால்கள் வலியால் அலறி தனியாக அமர்கிறது. உன் சிரிப்பின் சத்தத்தில் ஆல மர இலைகள் அந்தரத்தில் தொங்கின்றன. விடாமல் தொடர்கிறது சிரிப்பு. சுற்றும் முற்றும் பார்க்கிறேன். நீ மட்டுமே சிரிக்கிறாய். வானம் அதிர்ந்து அங்கிருந்து ஒரு துண்டு நிலம் பெயர்ந்து வருகிறது. என் மீது விழுமோ என் அருகில் விழுமோ தெரியாது.

( பழைய பதிவுதான்)

Thursday, July 23, 2009

ஆட்டுமந்தையிலிருந்து ஒரு காதல்...

தூங்க முடியாத இரவுகளில் நினைவுகளைச் சுமப்பது சுகங்களின் பாக்கியம். நீர்த்துப் போகிற பண்டங்களில் இருக்கிற நீரின் சதசதப்பை உணர்கின்ற தருணம் அது.

நீ உன் கணவனுடனும் நான் என் மனைவியுடனும் இரண்டற கலந்துபோன கால சூழ்நிலையிலும் காதலில் வலிகள் உக்கிரமாகவே இருக்கிறது. நடு நிசியில் எழுந்து அழும் என் குழந்தையை தோளோடு அணைத்துக்கொண்டு மொட்டை மாடியில் உலாத்துகிற நேரம் கூட, சமீபத்தில் சந்தித்த உன் நினைவுகள் என்னை உறிந்து எடுக்கின்றன.

அது கோயில் திருவிழா. நீ வருவாய் என்பதற்காகவே நான் வந்தேன். நான் வருவேன் என்பதற்காகவே நீயும் வந்திருந்தாய். சொந்தங்கள் முன்னிலையிலேயே நலம் விசாரித்தோம். நீ என் மகனையும் நான் உன் மகனையும் முத்தமிட்டோம். அதிகம் பேச முடியாத அந்த சாயங்காலத்தில் எல்லார் முன்பும் நீ கிசுகிசுத்தாய். இரண்டு பேருமே நம் குழந்தைகளாக இருந்திருக்க வேண்டும் என்று.

வார்த்தையால் கொன்றுவிட்டு கண்ணீர்விட்டாய். உன் கண்ணீரின் தகதகப்பிலேயே பிரிந்தோம்.

வானமாக நீளும் ஆசைகளில் ஒன்றிரண்டு நிறைவேறியிருந்தாலும் உன் செம்மறியும் என் வெள்ளாடும் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக ஆகியிருக்கும். அப்படி எந்த கொலைப்பழியும் வந்துவிடாமல் தெய்வங்கள் பார்த்துக்கொண்டது. சாமிகள் பாக்கியவான்கள்.

அப்போது எங்கள் வயலில் சிறுகிழங்கு முளைத்திருந்தது. உன் வயலில் கத்தரிக்காய். இரண்டு வயலுக்கும் பொதுவாக இருக்கும் வடக்குவா செல்வி அம்மன் கோயிலில், உன் ஆசைக்காக பூ போட்டுப் பார்த்தோம். நம் கல்யாணம் நடக்குமென்று அம்மன் சொன்னாள். அன்றிலிருந்து உன் முகம் சிரிப்பை மட்டுமே சுமந்தது. ஆனால், காலம் உன்னையும் என்னையும் பிரித்துவிட்டது. அதே அம்மன் கோயிலில் காதலர்கள் நம்மைப் போலவே இன்னும் பூப்போட்டு பார்க்கிறார்கள். நினைத்த பூ வந்துவிடுகிறது. அம்மன் வைக்கின்ற பூ பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை.

அடுத்த திருவிழா வரும் வரை நம் தவிப்புகள் நமக்குள்.

(பழைய பதிவு.)