Showing posts with label சுந்தரபுத்தன். Show all posts
Showing posts with label சுந்தரபுத்தன். Show all posts

Wednesday, June 11, 2014

ஏக்நாத்தின் 'கெடை காடு' : சுந்தரபுத்தன்



எனது கெடைகாடு நாவல் பற்றி சுந்தரபுத்தன் நடப்பு.காமில் எழுதியது...

ஏக்நாத்தின் 'கெடை காடு' – இன வாழ்வியல் பேசும் முதன்மையான புதினம் : சுந்தரபுத்தன்

ஏதோ நேற்று பார்த்ததுபோல இருக்கிறது. நதியில் புரளும் கூழாங்கற்களைப் போல வேகமாக காலம் உருண்டோடுகிறது. எனக்கும் அவருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இருவருமே கிராமத்தைப் பற்றி எழுதுகிறவர்கள்.
என்னைவிட ஏக்நாத் பல படி மேலே சென்றுவிட்டார். கிராமத்தை, அது தந்த அற்புதங்களை துயரங்களை கட்டுரையாக எழுதி காற்றில் பறக்கவிட்டு விடுவேன். ஆனால் ஏக்நாத், காலமெல்லாம் வாழப்போகும் படைப்பிலக்கியமாக மாற்றும் ரஸவாதம் கற்றுவைத்திருக்கிறார். அந்த வகையில் அவர் சிறந்த கதைசொல்லி.

கீழாம்பூர் செழிக்க ஓடும் கடனாநதி வழங்கிய ஆழமும் அழகும் மிகுந்த நடைமிளிரும் படைப்பாளி. பத்தாண்டுகள் இருக்கலாம். மாலை நேர சந்திப்புகளில் ஏக்நாத் கவிதை சொல்வார். அதைக் கேட்டுவிட்டு தொகுப்பு வெளியிடலாமே என்று நண்பர் வசந்த் செந்திலும் நானும் உற்சாகப்படுத்த கெடாத்தொங்கு என்றொரு கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

அதைத்தொடர்ந்து அவ்வப்போது கவிதைகளும், சிறுகதைகளும் எழுதிவந்தார். பின்னர் காவ்யா பதிப்பக வெளியீடாக பூடம், சந்தியா பதிப்பக வெளியீடாக குள்ராட்டி என சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்தார். கல்கியில் நிறைய சிறுகதைகள் எழுதினார். இணையம் பரவலாகி வலைப்பூக்கள் பூத்தபோது சிறுகதைகளும், கட்டுரைகளும் கவிதைகளுமாக எழுதினார். அதன் தொடர்ச்சிதான் கெடை காடு என்ற இந்தப் புதினம்.

காடுகள் குறித்த புதிர்களும் சுவாரசியங்களும் நிரம்பிவழியும் கதைக்காடாக வாசகனின் முன் விரிகிறது. வாதாமடக்கி மர நிழலில் நின்றிருந்த மாட்டு வண்டியின் நோக்காலில் உட்கார்ந்திருந்தான் உச்சமகாளி…. கெடை காடு புதினத்தின் முதல் வரி இதுதான். கிராமிய வாழ்வும் அதில் கொட்டிக்கெடக்கும் செழுமையான சொல்வழக்கும் கரைபுரளத் தொடங்குகிறது. வரிக்கு வரி கதை சொல்லத் தொடங்கிவிடுகிறார் கதையாசிரியர். இதுதான் ஏக்நாத் என்ற படைப்பாளியின் தனித்துவம்.



காடு, அது சார்ந்த வாழ்க்கை, மாடுகள்… மேய்ச்சல்… காதல்… காமம்…. என மேய்ச்சல் காடுகளின் கசப்பும் இனிப்புமான தனித்துவமான இனத்தின் வாழ்வியலைப் பேசும் தமிழின் முதன்மையான புதினங்களில் கெடை காடுக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. ஏக்நாத் வரிகளிலேயே சொல்லலாம்…. காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக்கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக்கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக்காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. அதாவது… அப்படியான பல கதைகளை சுருக்குப்பையில் கிடக்கும் காசுகளைப் போல புதினத்தின் மூலை முடுக்கெல்லாம் சம்பவங்களை பதுக்கிவைத்திருக்கிறார். மலையடிவார கிராமங்களில் இருந்து மாடுகளை விரட்டிக்கொண்டு கெடை காடு செல்வதும், அங்கு கிடைக்கிற அனுபவங்களும், முற்றிலும் தமிழ் வாசகனுக்கு புதியதாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். இது முழுமையாக எழுதப்படாத பிரதேசம். அது ஏக்நாத்த்துக்கு எழுத வாய்த்திருப்பது தமிழுக்கு நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது. காட்சிரீதியான அனுபவத்தை அவருடைய எழுத்தில் வைத்திருக்கிறார் ஏக்நாத். அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக சில வரிகளைச் சொல்லவேண்டும். கெடை எப்படி இருக்கும்… புதினத்தின் நான்காவது அத்தியாயத்தின் முதல் சில வரிகள் இப்படித்தான் தொடங்குகின்றான. படிப்பதற்கு… ஏதோ கேமராவை வைத்து படம்பிடிப்பதுபோல இருக்கிறது.
“கோயில் கெடை வட்ட வடிவிலான காடாக இருந்தது. பெரும் மைதான அளவில் இடம்விட்டு மரங்கள் தனியாக வளர்ந்து நின்றன. இந்த வட்ட வடிவத்தில் மட்டும் எப்படி மரங்கள் வளராமல் இருந்தது. இது இயற்கையே செய்துவைத்திருக்கிற காட்டின் மைதானம். ஆச்சரியமாக இருந்தது உச்சிமாகாளிக்கு…”

படிக்கிற நமக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இப்படித்தான் எழுத்து இருக்கவேண்டும். எதார்த்தமில்லாத எழுத்து ஒரு கட்டத்தில் தோல்வியைத் தழுவுகிறது. புனைவுகள் சுவாரசியமானவைதான். ஆனால் கொஞ்சமும் வாழ்க்கையின் எதார்த்தம் தொடாத எழுத்துக்கள் எந்த பாதிப்பையும் வாசகனுக்கு ஏற்படுத்துவதில்லை. ஏக்நாத் இதில் வித்தியாசப்படுகிறார். இளம்பிராயத்தில் பார்த்து, ரசித்துப் பேசிப் பழகியவற்றின் சாரத்தைத்தான் எழுத்தாக மாற்றியிருக்கிறார். கிராமம் என்றால் கிராமம் அல்ல. வாழ்க்கை முறை. அதைப் பற்றிப் பேசவேண்டும். பெயர்களில் தொடங்கி பேசும் மொழிவரையில் கிராமத்தின் மணம் வீசவேண்டும். அது கெடை காட்டில் வீசுகிறது.

உச்சிமகாளி, மீசை சுப்பையா, சிவப்பு ராசு, புண்ணியத்தாயி, தாட்டாம்பட்டிக்காரி, நொடிஞ்சான் குட்டி, தவிட்டான், கேசரி, நண்டுபிடி சுப்பையா என புதினத்தில் வந்துபோகும் கதாபாத்திரங்களின் பெயர்களின் பின்னணியில் கதைகள் இருக்கின்றன. குள்ராட்டி, கருவேலப்பிறை, அம்மன்கோயில் கொடை, பூதத்தார், கதலிப் பழங்கள், அட்டளை, அர்தலி, கிணற்றுக் குளியல் என மேற்குத் தொடர்ச்சி மலைவாழ்வின் வட்டார வழக்குகளையும் அந்தப் பகுதியின் புவியியல் அமைப்பையும் இடங்களின் பெயர்களையும் ஏக்நாத் எழுத மறக்கவில்லை. எந்தவித எத்தனங்களும் அற்று வாழும் மனிதர்களின் பூமியாக கெடை போடும் குள்ராட்டி இருக்கிறது. மேய்ச்சல் எளிதல்ல. காட்டின் சுபாவம் தெரிந்தவர்கள் மட்டுமே அங்கே காலம் தள்ளமுடியும். வேட்டைகள் நிகழும் அங்கு மேய்ச்சல் வீரவிளையாட்டுதான்.

விவசாய நிலங்களே வீடுகளாகி அருகிவரும் காலம் இது. மாடுகளின் மேய்ச்சலுக்கு சொல்லவா வேண்டும். நினைவுகள் மட்டுமே மிச்சமிருக்கும். எதிர்காலத் தமிழ்த்தலைமுறைக்கு இவருடைய கெடை காடுதான் மேய்ச்சலின் அனுபவம் கொடுக்கும். பழந்தமிழ் வாழ்வின் சாரங்களை ஒவ்வொன்றாக தமிழகம் இழந்துவருகிறது. நவீனம் என்று அதற்குப் பெயர் வைத்து பெருமைப்படுகிறோம். பொருளாதாரம் பெருகுகிறது. வாழ்வாதாரம் உயர்கிறது. அடையாளங்களை இழந்துகொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில் மலையும் காடும் மயங்கும் மலங்காட்டை அணு அணுவாக அனுபவிக்க வைத்திருக்கிறார் ஏக்நாத். இன்னும் காட்டு வாழ்வை கூடுதலாக எழுதியிருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது. பார்வை விரியும் திசையெங்கும் இயற்கையோடு கட்டிப்புரளும் பிரதேசங்களும், பொங்கிப் பெருகும் காதல்களும், காமமும் என பலமும் பலவீனங்களுமாய் திரியும் ஆண்களும் பெண்களும் ஏக்நாத்தின் எழுத்தில் புதிய பரிமாணங்களைத் தொடுகிறார்கள். கவிதை, சிறுகதை, கட்டுரை என மெல்ல மெல்ல முளைத்து இன்று அவர் புதின எழுத்தாளராக தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். வாழ்த்துகள். அடுத்தடுத்த படைப்புகளில் அவர் எழுத்தின் புதிய உச்சங்களைத் தொடுவார்.

வெளியீடு: காவ்யா
விலை ரூ.170

நன்றி: நடப்பு.காம்