Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Wednesday, September 8, 2010

முன்னாள் கவிதைகள் 3

கரைகரையாய் மரமேறி
காய்க்காய் முட்டைக்குடித்த
கருப்பசாமி
பெயர்மாற்றத்தோடு
சினிமா இயக்குனரானான்

தெப்பகுளத்தில் மீன் பிடித்து
பிள்ளையார் கோயிலில்
சுட்டுத்தின்ற பிச்சிமணி
சயின்ஸ் வாத்தியாரானான்

கொண்டை ஐயர் மண்டையில்
கல்லெறிந்து குற்றத்துக்கு
ஏழுமுறை பெருமாள் கோயிலை சுற்றிய
டவுசர் மணி
ஜெயில் சூப்ரண்டண்ட்

கோயில் விழாவில்
நாங்களெல்லாம் சந்தித்தோம்
'ஹாய் அங்கிள்' என
அவர்கள் குழந்தைகள் கைநீட்ட
'எப்பா' என ஒடுங்கிக்கொண்டான்
என் மகன்.

.............

ஊரெல்லாம் வில்லடிச்ச
வெறுவாகெட்ட பயலுக்கு
மொதப்பொண்டாட்டி இறந்ததும்
பெரிய்வர் பண்ணிவச்சார்
இரண்டாம் கல்யாணம்


பக்க பாட்டுக்கு வந்த பொம்பளை
மூணாவது மனைவியானதில்
ஊரெல்லாம் த்தூ
மாடன் கதை கேட்டு
மயங்கி வந்தவள்
நாலாவது மனைவி

இதோடு களையெடுக்க வரும்
கருத்தப்பிள்ளையூர் காரியுடனும்
தொசுக்கு உண்டு

நாலாவது மனைவிக்கு
ஆம்பிளை பிள்ளை பிறந்தப்போ
முதல் மகனுக்கு
பொம்பளை பிள்ளை

அப்பன் போனான்
பேத்தியை பார்க்க
மகன் போனான்
தம்பியை பார்க்க.
................................

சாணம் மெழுகிய
மண்த்ரை முற்றத்தில்
மல்லாந்து படுத்த படி
நட்சத்திரம் வியப்பேன்
கோட்டைத் தெரு பொன்னம்மா
குடத்தோடு போகையில்
வெறித்த பார்வை
நெஞ்சோடு நிற்கும்

மந்தை தெரு மாரியப்பன்
காதல் செய்யப்போய்
கல்தூணில் கட்டி வைத்த
பஞ்சாயத்தும் பயமுறுத்தும் இதனூடே

கண்மூடி சொல்லமாடனை வேண்டுகையில்
கவுரவம் பேசும் அப்பா தெரிவார்
மீசையை தடவிக்கொண்டே


படுக்கையில் கிடந்தாலும்
பயத்தில் முங்கி போகும்
ஆசையும் எண்ணமும்

அடகு வைத்த
அம்மாவின் நகை போல!

Friday, April 2, 2010

முன்னாள் கவிதைகள்-2

0
அம்மாவின் வேப்ப மர ஆத்தா
இப்போதும் பயமுறுத்துகிறார்
அருகில் போகும்போது

நள்ளிரவில்
நொடிச்சான் மகன்
பாம்பு கடித்து
இறந்ததிலிருந்து
அதிகரிக்கிறது
ஆத்தா பற்றிய பயம்.

ஆத்தாவுக்கும்
பாம்புக்குமான உறவு பற்றி
இதுவரை அம்மா சொன்னதில்லை

எப்போதாவது
எதிர்படும் பாம்புகளை
ஆத்தாவாகவும்
வேப்பமரங்களை
பாம்பாகவும் பார்க்கின்ற
குழப்பத்தில்
இரவுகள் நீர்த்துபோகின்றன.

இரண்டு முட்டைகளை திருடி
முந்தா நாள் குடித்ததற்காக
அடிக்கிறாள் அம்மா.
ஆத்தா அடிப்பதாகவே
படுகிறதெனக்கு.
.................

0
'நீயில்லையின்னா
செத்துருவேன்' என்ற நீ,
உன் கணவனுடனும்
நான் என் மனைவியுடனும்
அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

காதல், கல்யாணத்தில் முடிய
பூக்கட்டிப் பார்த்ததில்
சாதக பதில் தந்த
வடக்குவா செல்வி அம்மன்
அப்படியே இருக்கிறாள்
ஆக்ரோஷமாக.

கோயில் சுற்ற வரும் இளசுகள்
நம்மைப்போலவே இன்றும்
காதலிக்கிறார்கள்
பூக்கட்டுகிறார்கள்.
அம்மனும் தயாராகவே
இருக்கிறாள்
அருள்பாலிக்க.

.............................
0
தடுமாறும் நடை
தொலையாத தூக்குச்சட்டி
மிட்டாய்களும்
காரசேவு பொட்டலமும்
இல்லாத கை
சிரிக்காத முகம்

ஆங்...
அங்கே வருவது
அப்பாதான்.

இன்று அவர் குடிக்கவில்லை.

Sunday, March 28, 2010

முன்னாள் கவிதைகள்-1

0

யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.
யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.

0
தெரிந்தோ தெரியாமலோ
நடந்துவிடுகிற எல்லா சந்திப்புகளிலும்
தெரிந்தே சாகிறது தவிப்பு!

...............................

சாமிகள்

0
பிணமெரியாத சுடுக்காட்டுக்கு
வேட்டைக்குப் போகும்
பெரிய சாமி கொண்டுவரும்
எலும்புத்துண்டு யாருடையது ?

0
வாயைக்கட்டிய சாமிக்கு
மீண்டும் ஆங்காரம் வர
கும்பாபிஷேகம் நடத்தணுமாம்.
தலைக்கட்டுக்கு
ஆயிரம் வரியென விதித்ததில்
வாயைக்கட்டஆரம்பித்தேன் நான்.

0
எல்லா பெண்களுக்கும்
குங்குமம் வைக்க
சாமியாடிகளால்
மட்டுமே முடிகிறது

0
வேட்டைக்குப்போன
மந்திரமூர்த்தியடித்து
செத்துப்போனாள்
சொல்லமாடனுக்கு ஆடும்
வயித்து பாப்பாவின் மனைவி

0
பூதத்தாருக்குச் சங்கிலி.
மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி.
பலவேசக்காரனுக்கு வீச்சருவா.
கருப்பசாமிக்கு கோங்கருவா
பட்றையனுக்கு வல்லயம்
ஆயுதங்கள் எல்லாம்
சாமிகள் கையில்
பலிகளை மட்டும்
மனிதர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.

Sunday, March 21, 2010

முன்னாள் கவிதைகள்

0
உன் சாயலைப்போல் தெரியும்
பெண்களிடமெல்லாம்
ஏதாவது பேசிவிடுகிறேன்.
ஆழ்வார்க்குறிச்சி தேரோட்டத்தில்
உன்னை போலவே தெரிந்த
பெண்ணிடம்பேச நினைக்க,
அது நீயாகவே இருந்தாய்
பேசாமலேயே திரும்பினேன்.
........................................................
0
காய்ந்த தென்னமட்டை, சில்லாட்டைகளுடன்
எப்போதாவது வந்து விழும்
தூங்கணாங் குருவி கூடு.
குருவி வீடென்பென் நான்
கூடென்று திருத்துவாள் அக்கா.
ஒவ்வொரு முறையும் தோப்புக்கு போனதில்
சேர்ந்தது பத்து பதினொன்று.

ஒரு மழை நாளில்
ஆச்சிக்கு வந்த தலைவலியில்
சுக்குதண்ணிக்காக எரிந்தன கூடுகள்.
வீடுகள் எரிவதை
வேடிக்கைப்பார்ப்பதை தவிர
வேறெதுவும் செய்யமுடியவில்லை என்னால்.
.....................
0
கடைசியாகச் சொல்லிவிடுவதென
முதலில் நினைத்து விடுகிறதென் நீள் மனது
கடைசியைப் பற்றிய சிந்தனையில்
முதலை மறந்துவிடுகிறேன்.

முதலும் இல்லாமல்
கடைசியும் இல்லாமல்
தொடங்குகிறது உரையாடல்

நீ பேசுவது எனக்கும்
என் மவுனம் உனக்கும்
புரியாமலேயே
கேட்பதாக ஆடுகிறது
அனிச்சையானதென் தலை.
புரிவதாயும் புரியாமலும் செல்லும்
வாழ்க்கை போல.
.....................
0
வட்டு ஒட்டவோ
செல்லாங்குச்சி ஆடவோ
கீழ்வீட்டுப் பிள்ளைகளுடன்
‘கொல கொலயா
முந்திரிக்கா" பாடவோ
தூண்டில் கொண்டு
தெண்டல் பிடிக்கவோ
எப்போதும்
அனுமதிக்காத அம்மா
ஆசையோடு அனுப்புகிறாள்
இன்று.

அடுப்புக்கு அரிசி வரும்வரை
அலைகழியும் தாய் மனசு.
...............
0
'எனக்கு வல்லயம்செஞ்சு போடுவியா ?'
''திருநாத்துக் கொப்பறை
எடுத்து வைப்பியா ? '
பட்றையனை கும்பிடும்போதெல்லாம்
கேட்கிறார் சாமிக் கொண்டாடி.
கோரிக்கை வைக்க போனவன்
கோரிக்கை எற்று திரும்புகிறேன்.
............
-பழைய கவிதைகள்.