Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Tuesday, October 15, 2024

சாத்தா - கவனிக்கப்பட வேண்டிய நாவல்

 


குலதெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் முக்கியமான ஓர் அங்கம். குறிப்பாக, தமிழக தென்மாவட்ட மக்களின் `சாத்தா’ (சாஸ்தா) வழிபாடு மிகவும் தொன்மையானது. அதை மையமாக வைத்துக்கொண்டு விரிகிறது நாவல். குலதெய்வக் கோயிலுக்கே அதுவரை சென்றிருக்காத முத்துசாமி சந்திக்கும் எளிய மனிதர்கள்தான் கதை மாந்தர்கள். அதிகம் அறியப்படாத சாத்தா வழிபாடு, அதன் மூலம், நாட்டின் எந்தெந்த மூலையிலிருந்தோ ஆண்டுக்கொரு முறை குலதெய்வத்தைக் கும்பிட வரும் மக்கள் என வித்தியாசமான ஒரு களத்தை இந்நாவலில் முன்வைக்கிறார் எழுத்தாளர் ஏக்நாத்.

ஒரு நாவலுக்கு, கதைக்களனும் கதாபாத்திரங்களும் முக்கியமானவை. இந்நூலில் அவற்றைத் தெளிவாகக் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் ஏக்நாத். தெக்கத்தி மக்களின் வட்டார வழக்கு உரையாடலும், கதை விவரிப்பும் நம் மனதில் காட்சிகளாகப் பதிந்துவிடுகின்றன. எளிதாக கதைக்குள் ஆழ்ந்துபோகச் செய்துவிடுகின்றன. சாமிகளுக்கு எப்படி நம் மொழி தெரிகிறது, சாமியாடிகள் வழியாக அவை எப்படி நம்முடன் உரையாடுகின்றன, மக்களின் கோரிக்கைகளை சாமியாடிகள் வழியாக அவை எப்படித் தீர்க்கின்றன என்பதையெல்லாம் குறிப்பிடுகிறது நாவல். அதேநேரத்தில் யதார்த்தத்தையும், அநியாயம் செய்பவர்களை சாமிகள் ஒன்றும் செய்வதில்லை என்கிற உண்மையையும் போட்டுடைக்கிறது.

சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் முத்துசாமி ஒரு ஜோசியக்காரர் சொன்னதற்காகவும், அம்மாவின் வற்புறுத்தலின் பேரிலும் குலதெய்வத்தைத் தேடிப் போகிறான். அவனுடைய குலதெய்வம் பேச்சியம்மன், இணை தெய்வங்களான தளவாய் மாடசாமி, சுடலை ஆகியோரை காட்டுக்குள் பார்த்துவிட்டு வரும்போது நிகழும் சம்பவங்களின் கோர்வைதான் கதை.  முத்துசாமியின் பழைய காதல், சாமி கும்பிடப்போன இடத்தில் பார்த்த நாகர்கோவில் பெண் அழகு மேல் ஏற்படும் ஈர்ப்பு, சென்னை வாழ்க்கை, டிராக்டரிலும் லாரியிலும் ஒற்றுமையாகக் கிளம்பிப்போன மனிதர்கள் கோயிலில் மோதிக்கொள்வது என எதையெதையோ தொட்டு கதை நகர்கிறது. அதேநேரத்தில், இந்தச் சம்பவங்கள் மையப்புள்ளியைவிட்டு விலகாமல் நகர்கின்றன.

மருத்துவமனையில் படுத்திருக்கிறார் ஆச்சி. அவர் கையைத் தொட்டுப் பார்க்கும் டாக்டருக்கு, சட்டென சுருக்குப்பையிலிருந்து திருநீறை எடுத்துப் பூசிவிடுகிறார். இது எங்காவது நடக்குமா... நடக்கும். வெள்ளந்தி மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பதைப் போகிற போக்கில் உணர்த்திவிடுகிற சம்பவம் அது.

எங்கோ மலை உச்சியிலிருக்கும் சாமி, மனிதர்களின் கோரிக்கையை ஏற்று அடிவாரத்துக்கு வர சம்மதிக்கிறது. அடிவாரத்தில் சாமி அறிகுறி காட்டிய இடத்தில், குலதெய்வத்தை வைத்து வழிபட முடிகிறதா... சாமி சம்மதித்தாலும், அதற்குக் குறுக்கே நிற்கும் மனிதர்களை என்ன செய்வது? இந்தப் பெரும் கேள்வியை தனக்கே உரிய பாணியில் முன்வைக்கிறார் ஏக்நாத். சாமானியர்களின் வாழ்க்கையில் இன்னமும் மீதமிருக்கும் பழைய நம்பிக்கைகளையும், இன்றைய யதார்த்தத்தையும் எடுத்துவைக்கும் 'சாத்தா’கவனிக்கப்படவேண்டிய நாவல்.

நன்றி: பாலு சத்யா

விகடன் படிப்பறை 




சாத்தா

ஆசிரியர்: ஏக்நாத்

வெளியீடு: நெடில் வெளியீடு

விற்பனை உரிமை: ஸ்நேகா, 8, ரமணி நகர் மெயின் ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை - 600 045.

தொடர்புக்கு: 7550098666

பக்கங்கள்: 152

விலை: ரூ. 220


Sunday, June 19, 2016

நூல் அறிமுகம்: சல்மாவின் மனாமியங்கள்


வாழ்ந்த ஊரின் பக்கத்துத் தெருவில், நமக்குத் தெரியாமல் நடந்த ஒரு சம்ப வத்தை நண்பன் ஒருவன் அல்லது தோழி ஒருத்தி தோள் தட்டிச் சொன்னால் எப்படியிருக்குமோ, அப்படிச்  சொல்லிப் போகிறது சல்மாவின் 'மனாமியங் கள்'. 

வாழ்க்கையின் வெவ்வேறு சந்துகளில் சிக்கி, சின்னாபின்னமாகிற சில பெண்களின் வலி நிறைந்த வாழ்க்கையை யதார்த்தம் மீறாமல் பேசுகிறது, இந்நாவல். வாசித்துக்கொண்டிருக்கும்போதே மெஹரும் அவர் அம்மா ஆசியாவும் நமக்குள் ஓடி வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். அவர்களின் ஆற் றாமையும் தவிப்பும் நம்மையும் கொதிக்க வைக்கின்றன. அவர்களின் க ண்ணீர் துடைக்க, அல்லது அருகில் அமர்ந்து ஆறுதல் சொல்ல, புறப்பட நினைக்கிற மனதை  கட்டுப் படுத்துவது கஷ்டம்தான்.


பர்வீன் மற்றும் அந்த பார்வையற்ற நன்னியின் கதைகள் இன்னும் பரிதாபப்பட வைக்கின்றன. நான்கு சுவற்றுக்குள் அடைபட்டு கிடக்கும் அவர்களின் வாழ்க்கையும் உடலின் வேட்கை உந்தித்தள்ளும்போது வரும் ஏக்கங்களும் குறைவாகச் சொல்லப்பட்டிருந்தாலும் பெரும் வலியை தந்து போகின்றன. பெண்களின் அக உலகங்களை சல்மாவின் எழுத்து இன்னும் விரிவாக எழுதிப் போகிறது. 

கணவன் வேறொரு பெண்ணுடன் வாழத் தொடங்கிவிட்ட பிறகு, அதிகார ஆணுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆங்காரமும்  இயலாமை காரணமாக அந்த ஆங்காரம் கண்ணீரோடு அடங்கிப்போகும் போதும், பிறகு, குலாஆ கொடுத்துவிட்டு தனக்குள் திருப்திப்பட்டுக்கொள்ளும் போதும் இன்னும் உயர்ந்து நிற்கிறாள் மெஹர்.  அவளுக்கு சம்பிரதாயத்துக்கு நடக்கிற மற்றொரு திருமணம் பாதியிலேயே பிரியும் பரிதாபமாமும், குழந் தைகள் மீதான பெற்றவளின் அளவில்லா பாசமும் நாவல் முழுவதும் விரவி கிடக்கிறது. பல இடங்களில் நம்மையறியாமல் கண்ணீர் வந்து முட்டுவ துதான் இந்நாவலின் வெற்றி. 

கல்லூரியின் சேரும் சாஜியின் தோழி, யாரோ ஒருவனை காதலித்து விட்டாள் என்பதற்காக சாஜியின் படிப்பை நிறுத்த சொல்லும் அந்த போன் காலில் முடிகிறது நாவல். ஆனால் அங்கிருந்துதான் தொடர்கிறது எல்லாம். 


Tuesday, October 28, 2014

கிழிபடும் சீட்டுகள்


கிழிபடும் சீட்டுகள்


சமீபத்தில் வாசித்த நாவல்களில் இப்படியொரு மனஅலைகழிப்பை எந்தவொரு நாவலும் தந்ததில்லை. படித்து முடித்து இரண்டு நாட்களாகி விட்டாலும் இன்னும் ஏதோ செய்துகொண்டிருக்கிறது அந்நாவல்.

புலம்பெயர் வாழ்வின் வலிகளை, வேதனைகளை, ரணங்களை பல நாவல்கள், கதைகள் சொல்லி இருந்தாலும், விகடனில், அ. முத்துலிங்கம் எழுதும் 'கடவுள் தொடங்கிய இடம்' எனக்கு அதிக ஈர்ப்பைக் கொடு(த்திரு)க்கிறது.

இலங்கையில் இருந்து அகதிகளாகச் செல்ல முடிவெடுப்பவர்கள் ஏஜென்ட்களின் மூலம் எப்படி, எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்? அப்பெரும்பயணத்தில் அவர்கள் படுகிற அவஸ்தைகளில் இருந்து எல்லாமே நுட்பமான விவரிப்பாக இருக்கிறது முத்துலிங்கத்தின் தொடர் கதையில். ஆனால் அப்படியொரு விவரிப்பு இல்லையென்றாலும் ஜீவகுமாரனின் 'கடவுச்சீட்டு' அந்த வலிகளை எளிதாகக் கடத்திவிடுகிறது நமக்குள்.


தமிழ், சுபாவுடன் பத்து பதினைந்துபேர் ஏர்லங்கா மூலம் பிராங்க்போர்ட் செல்கிறார்கள். பாஸ்போர்ட்டை விமானத்தின் கழிவறைக்குள்ளேயே கிழித்து பிளஷ் செய்துவிட்டு இமிக்ரேஷனில் பிடிபடுகிறார்கள். ஜெர்மன் அகதி முகாம். அங்கு இவர்களைப் போல அதிகமானோர் இருக்கிறார்கள். அதில் நம்மூரைச் சேர்ந்தவர், அல்லது தெரிந்தவர் யாராவது இருக்கிறார்களா எனத் தேடுவதும் இல்லையென்றதும் அவர்கள் முகம் வாடித் திரும்புவதும் ரணத் தின் உச்சம். அவர்களில் ஒருவனாக  என்னை நினைத்துப் பார்த்தேன். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு அங்கிருந்து இன்னொரு ஏஜென்ட். ரோட்டில் காட்டில் ஓடி, எல்லைக்கம்பிகளை வெட்டிக்  கடந்து பள்ளத்தில் இறங்கி, மேலேறி இன்னொரு வேலி தாண்டி, பெட்ரோல் லாரிக் குள்ளும் பன்றி லாரிக்குள்ளும் பயணித்து டென்மார்க்கை அடைவதும் அங்கு படித்து நல்ல வாழ்க்கை வாழ்வதும் அங்கும் நம் பண்பாடு வளர்ப்பதும் பிறகு அந்நாட்டின் கலாசாரத்தில் தமது பிள்ளைகளைப் பறித்து கொடுத்து விட்டு தமிழும் சுபாவும் படும் துன்பங்களும் பின்னர் எடுக்கும் முடிவும் என நிறைவேறுகிறது நாவல்.

வாழ்க்கை நம் கைக்குள் அகப்படுவதில்லை. அதைத் தீர்மானிப்பவர்க ளாகவும் நாம் இல்லை. நம் வாழ்க்கையை நாம் முடிவு செய்யாதவர்களாக வே இருக்கிறோம். அப்படி முடிவு செய்யும் நிலை இருந்தால், ஈழம் ஈழமாக வும் நீங்கள் நீங்களாகவும் நான் நானாகவும் அவர்கள் அவர்களாகவும் அப்படி அப்படியே இருந்திருப்போம். ஆனால் சாத்தியமானாதா அது?

பிழைப்புக்காக டென்மார்க் போயும் அங்கும் சாதி பார்த்துக்கொண்டிருக்கும் நம் மக்களும் அங்குள்ள பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு கர்ப்பமானதும் விட்டு விட்டு வேறுநாடுச்செல்லும் நம் இளைஞனும் நெஞ்சைக் குத்திச் செல் கிறார்கள்.  இதையெல்லாம் விட நாவலில் எனக்கு அதிர்ச்சி தந்த இடம், கல் லூரி பிரின்ஸிபால் போன்ற அதிகாரி கேட்பதுதான்:
'டூர் போகும்போது பிள்ளைக்கு நீங்க, கருத்தடை மாத்திரை கொடுத்தனுப்ப வில்லையா?'

புலம்பெயர் வாழ்வின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் சொல்லும் இந்நாவல், அங்கு நம் கலாசாரத்தை இழந்து நிற்பதை  பெரும் வலியோடு பதிவு செய்தி ருக்கிறது.

..........................

தண்டனைகளின் வலி


அப்பாவின் தண்டனைகளை நான் அனுபவித்ததில்லை. அம்மாவின் தண்டனைதான் எனக்கு. அதில் அதிக தாக்கம் இருக்காது. அதிகப்பட்சம் போனால் கையில் சூடு வைக்கலாம். அதுவும் முந்தானையில் திருடியது போன்ற பெரிய தவறுகளுக்கு. அதைத்தாண்டி அம்மாவின் தண்டனையில் பேரன்பே நிறைந்திருக்கும். ஆனால் தவசியின் 'அப்பாவின் தண்டனைகள்' அப்படிப்பட்டதல்ல. அது கொடூரத் தண்டனைகளைக் கொண்டிருக்கிறது.

அப்பாவும் மகனுக்குமானத் துரத்தலும் அதனூடாக காலங்காலமாக கொடுக்கப்படும் தண்டனைகளும் வலிகள் மிகுந்து வளர்ந்து நிற்கின்றன. பெரும்பனையென, ஆகாயத்தைப் பிடிக்க நினைக்கும் ஏக்கமென,  நெருப்பைக் கொண்டிருக்கிற கோபமென, அத்தண்டனைகள் என்னை நோக்கி பார்க்கிறது. அல்லது என்னை குறிவைத்து வருகிறது.


தவசி, நாவலில் சொல்லும் நிலகாட்சிகளில் என்னால் இயல்பாக ஒன்றிப்போக முடிகிறது. அதன் வழிகள் எங்கும் என்னால் நீச்சலடிக்க முடிகிறது. உச்சி மரத்தில் இருந்துகொண்டு படமெடுக்கும் ஐந்துதலைநாகத்தை பார்க்க நானும் செல்கிறேன்.  பாலை ஒழுகவிட்டுச் சிரிக்கும் காவக்காட்டு பொக்கைச் சிரிப்பில் நானும் ஓவென சிரித்து விழுகிறேன். அவர் காட்டும் காடு கரைகளும் மாடுகளும் திண்ணையும் சண்டையும் சச்சரவும் என்னையும் அதற்குள் இறக்கிவிட்டு விளையாட்டு காட்டுபவையாகவே இருக்கிறது. தவசியின் எழுத்தில், அனல் என்றால் என் மேனியில் வெக்கையை உணர்கிறேன். வேகமாக நம்மை இழுத்துச்செல்லும் எழுத்து தவசியுடையது.

தவசி எனக்குத் தெரிந்தவர்தான். நான் பணியாற்றும் நிறுவனத்தின் வேறொரு கிளையில் வேலை பார்த்தவர். சில நண்பர்களோடு அவரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவரை நோய் அரித்துக் கொண்டிருப்பது தெரிந்தும் வெளியில் சொல்லிக் கொள்ளாதவர். அவரின் 'சேவற்கட்டு' நாவல் எனக்குள் ஏற்படுத்தியிருந்த தாக்கம் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்தியே வைத்திருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஓர் நாளில் இறந்துபோனார் தவசி. புற்றுநோய் அவரை காவுக்கொண்டிருந்தது.
இறந்துவிடுவோம் என்று தெரிந்து, உடல் வலியைத் தாங்கிக்கொண்டு, 'அப்பாவின் தண்டனைகள்' நாவலை அவர் வேகமாக எழுதினார் என்றார்கள்.

தவசியின் இடத்தில் அவர் நாவல் இருக்கிறது. தவசியை விட அவர் நாவல் அதிகமாகப் பேசும் என்றே தெரிகிறது.

.........................


Friday, October 10, 2014

புதிய வடிவமைப்பில் கெடை காடு

'கெடை காடு' அடுத்த பதிப்பு வெளியாக இருக்கிறது. முதலில் காவ்யா வெளியிட்டது. இப்போது டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் வெளியிடுகிறார். முந்தையை அட்டைப்படம் அழகாக இருந்தும், அடுத்தப் பதிப்புக்கு மாற்றிவிட்டேன்.


'அருமையா இருந்தது. இது வழக்கமான நாவல் இல்லை. வேறு நாவல் வகை' என்று சொன்ன  ஐயா, பா.செயப்பிரகாசம், 'எடுத்து ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. அந்த ஏரியாவுக்கு நானும் வந்து போயிருக்கிறேன்ங்கறதால இன்வால்மென்டோட வாசிக்க முடிஞ்சது' என்று தட்டிக்கொடுத்த நாஞ்சில் நாடன் அவர்கள், 'அப்பா முடியாமல் இருந்த நேரம் அது. உங்கள் பிரதியைப் படித்து, எதை எதைச் சொல்ல வேண்டும் என்ற குறிப்புகளையும் எடுத்து எழுதிவைத்திருந்த நிலையில், மடிக்கணினியில் உட்காரும் நேரம் வராமலே போய்விட்டது' என்று அஞ்சல் செய்த பிரியத்துக்குரிய வண்ணதாசன் அண்ணாச்சி, 'இந்த நாவலின் கதைகளம் தமிழுக்கு மிகவும் புதியது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமப்புற மேய்ச்சல் மாடுகளின் வாழ்வியலை  சிறந்த நாவலாக்கியிருக்கிறார்' என்று எழுதிய, பாராட்டிய, எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள், 'வீட்டுக்கு வந்த உச்சியை, தேக்கி வைத்திருந்த சந்தோஷச் சிரிப்புடன் வரவேற்கும் அவன் அம்மா, புண்ணியத்தாயி, ‘காட்டுல என்னத்தல கண்ட?’ என்று கேட்கும் போது, அவிழ்ந்து விழுந்த சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்ட உச்சிமகாளி சொல்கிறானே, ‘காட்டையே பாத்தாச்சு. வேற என்னத்த பாத்தியான்னு கேக்கே?’ என்று. அந்த ஒரு பதிலுக்குள், நாவல் அடங்கி விடுகிறது' என்று வாழ்த்திய இயக்குனர் சுகா, 'அருந்ததிராயின் 'தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்' எனக்கு நேற்றைய இன்றைய கேரளாவை காட்டியது போல, தமிழர்களின் ஆதிபண்பான மேய்ச்சல் நிலம் சார்ந்த வாழ்வை தம்பி ஏக்நாத் வனங்களின் பச்சை வாடையோடு கொடுத்திருக்கிறார்' என்ற அண்ணாச்சி கவிஞர் வித்யாஷங்கர், 'மேய்ச்சல் வாழ்க்கை என்பது, மனித இனத்துடன் ஒன்றிப்போன ஒன்று. அந்த வாழ்க்கையை மனித இனம் படிப்படியாக இழந்து வரும் நிலையில், அதன் முக்கியத்துவத்தை, கொடை காடு மீண்டும் நமக்கு உயிர்ப்பித்து தருகிறது' என்ற நண்பர் நா.முத்துகுமார், 'முடிவை வேற மாதிரி வச்சிருக்கலாம்' என்று போன் வழி வாழ்த்திய நண்பர் க.சீ.சிவகுமார், 'பழந்தமிழ் வாழ்வின் சாரங்களை ஒவ்வொன்றாக தமிழகம் இழந்துவருகிறது. நவீனம் என்று அதற்குப் பெயர் வைத்து பெருமைப்படுகிறோம். பொருளாதாரம் பெருகுகிறது. வாழ்வாதாரம் உயர்கிறது. அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில் மலையும் காடும் மயங்கும் மலங்காட்டை அணு அணுவாக அனுபவிக்க வைத்திருக்கிறார் ஏக்நாத்' என்ற நண்பர் புத்தன், இன்னும் நாவலை வாசித்துவிட்டு பேசப்போகிற எழுதப்போகிற அனைவரையும் இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.

முதல் நாவல் இப்படியொரு கவனிப்புக்கு வந்ததே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு அடுத்த நாவலை எழுத ஆயத்தமாகிவிட்டேன்.
...................

நாவல் பற்றி நண்பர் பாலு சத்யா, குங்குமம் தோழி டாட் காமில்...


‘இந்த நாவலின் கதைக் களம் தமிழுக்கு மிகவும் புதியது’ என்று புகழ்ந்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

‘காடு, அது சார்ந்த வாழ்க்கை, மாடுகள், மேய்ச்சல், காதல், காமம் என மேய்ச்சல் காடுகளின் கசப்பும் இனிப்புமான தனித்துவமான இனத்தின் வாழ்வியலைப் பேசும் தமிழின் முதன்மையான புதினங்களில் ‘கெடை காடு’க்கு மிகப் பெரிய இடம் இருக்கிறது…’ என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் சுந்தர புத்தன்.

-இந்த நூல் குறித்த அறிமுகத்துக்கு இவையெல்லாம் அவசியமாக இருக்கின்றன. எழுத்தில் கொங்கு வட்டார வழக்கை முன்னிறுத்திய ஆர்.சண்முகசுந்தரம் தொடங்கி கரிசல் பூமி வட்டார வழக்கை வெகு லாவகமாகக் கையாண்ட கி.ராஜநாராயணன் வரை தமிழகத்தின் கிராமங்களும் மனிதர்களும் அவர்கள் வாழ்க்கையும் எத்தனையோ படைப்புகளில் மிளிர்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘கெடை காடு’ நாவலுக்கு மிக முக்கியமான, அதே நேரத்தில் தனித்துவமான இடமுண்டு. வழக்கம் போல ஒரு கிராமம், அதில் ஏதோ ஓர் ஆண் அல்லது பெண்ணை மையப்படுத்தி, ஏதோ ஒரு பிரச்னையை முன்னிலைப்படுத்தியபடி நகரும் நாவலாக ‘கெடை காடு’ இல்லை. ஒவ்வொரு மலருக்கும் ஓர் வடிவம், மணம் என்று தனித்தன்மை இருப்பது போல இந்நாவலில் காட்சிப்படுத்தப்படும் மனிதர்களும் அவரவர்களுக்கான இயல்புகளுடனும் குணங்களுடனும் வலம் வருகிறார்கள்.

கணவன், இன்னொருத்தியின் வீட்டில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாலும், அவன் வெளியே வரும் வரை காத்திருந்து, ‘‘ஆம்பள யோக்கியம் தெரியாண்டாமா? அதான். இன்னையோட முடிஞ்சாச்சு. இனி ஒட்டும் இல்ல. உறவும் இல்ல’’ என்று உதறிவிட்டுப் போகிற புண்ணியத்தாயி…
‘‘இவங்க நினைச்சா சேர்க்கதுக்கும் நீக்கதுக்கும் நான் என்ன இவ்வோ வீட்டு மாடா, ஆடா? எனக்கு சங்கமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்’’ என படபடக்கிற தனித்து வாழும் கல்யாணி…

எதிர்ப்பாலினத்தின் மேல் எழும் வேட்கையும் பார்க்கிற பெண்ணின் மேலேல்லாம் காதல் வயப்படத் தூண்டுகிற பருவத்திலிருக்கும் உச்சிமகாளி என நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாம் நேரில் சந்தித்துப் பேசும் எத்தனையோபேரின் சாயலைக் கொண்டிருக்கிறார்கள். பாத்திரப் படைப்புகளின் யதார்த்த தன்மை நாவலின் போக்குக்கு பெரும் பலம்.
குள்ராட்டிக்கு மேய்ச்சலுக்குப் போன இடத்தில் அட்டளையில் தொங்கும் பாம்புச் சட்டைகள்… அநாமதேயமாக நடு வழியில் நிற்கும் பட்றையன் கோயில்… அமைதி சூழ் மலைப் பகுதியில் அவ்வப்போது கேட்கும் ஓநாய்களின் இரைச்சல்… இவற்றுக்கு மத்தியில் மாடுகளையும் காபந்து பண்ணி, தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் மேய்ச்சலுக்கு வந்த மனிதர்களின் வாழ்க்கை… என இந்த நாவல் பதிவு செய்யும் விஷயங்கள் ஏராளம்.

மனித வாழ்வின் வசீகரத்தையும் அவலத்தையும் வலிந்து திணிக்காமல், போகிற போக்கில் யதார்த்தமாக கோடிட்டுக் காட்டுகிறது ஏக்நாத்தின் எழுத்து நடை. கால்நடை மேய்த்தல் தொடர்பாக தமிழில் பூமணியின் ‘ரீதி’ சிறுகதை போல வெகு சில படைப்புகளே வெளியாகியுள்ளன. அதையே முக்கியக் களமாகக் கொண்டு வெளியான முதல் நாவல் ‘கெடை காடு’ என்று தோன்றுகிறது. தங்கு தடை இல்லாத எழுத்து நடை, திடீர் திருப்பங்கள் என்று சலிப்பூட்டாத இயல்பான நிகழ்வுகள், இது வரை பார்த்தும் கேட்டும் அறியாத புதிய அனுபவத்தை தரும் கதைக் களம் என விரிகிற இந்நாவல் ஒரு வாழ்வியலை ஆவணப்படுத்தியிருக்கிறது. அது ஒவ்வொருவரும் படித்து, அனுபவிக்க வேண்டிய வாழ்வியல்!

கெடை காடு
விலை: 170
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,
முகவரி: எண் 6, மஹாவீர் காம்ப்ளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை – 600078.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்).
போன்: 044-65157525. செல்: 9940446650.


Tuesday, July 1, 2014

கெடை காடு பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்


சமீபத்தில் ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவலைப் படித்தேன். இன்று பெரும்பான்மை நாவல்கள் நகர்மய வாழ்க்கையை எழுதிக் கொண்டிருக்கையில் மண்மணத்துடன், கிடைமாடுகளின் யதார்த்தமான வாழ்க்கையைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் ஏக்நாத்.


மலை கிராமங்களில் இருந்து மாடுகளைக் கெடை காடு நோக்கி அழைத்துச் செல்வது கண்கொள்ளாத காட்சியாக விரிகிறது.
ஒநாய் குலச்சின்னம் நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை எவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன், அந்த விவரணைகளுக்கு இணையாகக் கிடை மாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் தனது இயல்பான மொழியில், நுட்பமான கதை சொல்லலில் விவரிக்கிறார் ஏக்நாத்.

மேய்ச்சலுக்கு செல்லும் மனிதர்களின் காதல், காமம், வாழ்க்கை நெருக்கடிகள்  என உயிரோட்டமான நிகழ்வுகளை பதிவு செய்திருப்பது நாவலின் தனித்துவம் என்பேன்

இந்த நாவலின் கதைகளம் தமிழுக்கு மிகவும் புதியது. உச்சிமகாளி, மீசை சுப்பையா,தவிட்டான், கேசரி, நண்டு என மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் வழியே கதை நீள்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமப்புற மேய்ச்சல் மாடுகளின் வாழ்வியலை  சிறந்த நாவலாக்கியிருக்கிறார். காவ்யா பதிப்பகம் இந்நாவலை வெளியிட்டுள்ளது. ஏக்நாத்திற்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.


காவ்யா பதிப்பகம்
16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்
கோடம்பாக்கம்
சென்னை- 24

Wednesday, June 11, 2014

ஏக்நாத்தின் 'கெடை காடு' : சுந்தரபுத்தன்



எனது கெடைகாடு நாவல் பற்றி சுந்தரபுத்தன் நடப்பு.காமில் எழுதியது...

ஏக்நாத்தின் 'கெடை காடு' – இன வாழ்வியல் பேசும் முதன்மையான புதினம் : சுந்தரபுத்தன்

ஏதோ நேற்று பார்த்ததுபோல இருக்கிறது. நதியில் புரளும் கூழாங்கற்களைப் போல வேகமாக காலம் உருண்டோடுகிறது. எனக்கும் அவருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இருவருமே கிராமத்தைப் பற்றி எழுதுகிறவர்கள்.
என்னைவிட ஏக்நாத் பல படி மேலே சென்றுவிட்டார். கிராமத்தை, அது தந்த அற்புதங்களை துயரங்களை கட்டுரையாக எழுதி காற்றில் பறக்கவிட்டு விடுவேன். ஆனால் ஏக்நாத், காலமெல்லாம் வாழப்போகும் படைப்பிலக்கியமாக மாற்றும் ரஸவாதம் கற்றுவைத்திருக்கிறார். அந்த வகையில் அவர் சிறந்த கதைசொல்லி.

கீழாம்பூர் செழிக்க ஓடும் கடனாநதி வழங்கிய ஆழமும் அழகும் மிகுந்த நடைமிளிரும் படைப்பாளி. பத்தாண்டுகள் இருக்கலாம். மாலை நேர சந்திப்புகளில் ஏக்நாத் கவிதை சொல்வார். அதைக் கேட்டுவிட்டு தொகுப்பு வெளியிடலாமே என்று நண்பர் வசந்த் செந்திலும் நானும் உற்சாகப்படுத்த கெடாத்தொங்கு என்றொரு கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

அதைத்தொடர்ந்து அவ்வப்போது கவிதைகளும், சிறுகதைகளும் எழுதிவந்தார். பின்னர் காவ்யா பதிப்பக வெளியீடாக பூடம், சந்தியா பதிப்பக வெளியீடாக குள்ராட்டி என சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்தார். கல்கியில் நிறைய சிறுகதைகள் எழுதினார். இணையம் பரவலாகி வலைப்பூக்கள் பூத்தபோது சிறுகதைகளும், கட்டுரைகளும் கவிதைகளுமாக எழுதினார். அதன் தொடர்ச்சிதான் கெடை காடு என்ற இந்தப் புதினம்.

காடுகள் குறித்த புதிர்களும் சுவாரசியங்களும் நிரம்பிவழியும் கதைக்காடாக வாசகனின் முன் விரிகிறது. வாதாமடக்கி மர நிழலில் நின்றிருந்த மாட்டு வண்டியின் நோக்காலில் உட்கார்ந்திருந்தான் உச்சமகாளி…. கெடை காடு புதினத்தின் முதல் வரி இதுதான். கிராமிய வாழ்வும் அதில் கொட்டிக்கெடக்கும் செழுமையான சொல்வழக்கும் கரைபுரளத் தொடங்குகிறது. வரிக்கு வரி கதை சொல்லத் தொடங்கிவிடுகிறார் கதையாசிரியர். இதுதான் ஏக்நாத் என்ற படைப்பாளியின் தனித்துவம்.



காடு, அது சார்ந்த வாழ்க்கை, மாடுகள்… மேய்ச்சல்… காதல்… காமம்…. என மேய்ச்சல் காடுகளின் கசப்பும் இனிப்புமான தனித்துவமான இனத்தின் வாழ்வியலைப் பேசும் தமிழின் முதன்மையான புதினங்களில் கெடை காடுக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. ஏக்நாத் வரிகளிலேயே சொல்லலாம்…. காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக்கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக்கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக்காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. அதாவது… அப்படியான பல கதைகளை சுருக்குப்பையில் கிடக்கும் காசுகளைப் போல புதினத்தின் மூலை முடுக்கெல்லாம் சம்பவங்களை பதுக்கிவைத்திருக்கிறார். மலையடிவார கிராமங்களில் இருந்து மாடுகளை விரட்டிக்கொண்டு கெடை காடு செல்வதும், அங்கு கிடைக்கிற அனுபவங்களும், முற்றிலும் தமிழ் வாசகனுக்கு புதியதாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். இது முழுமையாக எழுதப்படாத பிரதேசம். அது ஏக்நாத்த்துக்கு எழுத வாய்த்திருப்பது தமிழுக்கு நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது. காட்சிரீதியான அனுபவத்தை அவருடைய எழுத்தில் வைத்திருக்கிறார் ஏக்நாத். அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக சில வரிகளைச் சொல்லவேண்டும். கெடை எப்படி இருக்கும்… புதினத்தின் நான்காவது அத்தியாயத்தின் முதல் சில வரிகள் இப்படித்தான் தொடங்குகின்றான. படிப்பதற்கு… ஏதோ கேமராவை வைத்து படம்பிடிப்பதுபோல இருக்கிறது.
“கோயில் கெடை வட்ட வடிவிலான காடாக இருந்தது. பெரும் மைதான அளவில் இடம்விட்டு மரங்கள் தனியாக வளர்ந்து நின்றன. இந்த வட்ட வடிவத்தில் மட்டும் எப்படி மரங்கள் வளராமல் இருந்தது. இது இயற்கையே செய்துவைத்திருக்கிற காட்டின் மைதானம். ஆச்சரியமாக இருந்தது உச்சிமாகாளிக்கு…”

படிக்கிற நமக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இப்படித்தான் எழுத்து இருக்கவேண்டும். எதார்த்தமில்லாத எழுத்து ஒரு கட்டத்தில் தோல்வியைத் தழுவுகிறது. புனைவுகள் சுவாரசியமானவைதான். ஆனால் கொஞ்சமும் வாழ்க்கையின் எதார்த்தம் தொடாத எழுத்துக்கள் எந்த பாதிப்பையும் வாசகனுக்கு ஏற்படுத்துவதில்லை. ஏக்நாத் இதில் வித்தியாசப்படுகிறார். இளம்பிராயத்தில் பார்த்து, ரசித்துப் பேசிப் பழகியவற்றின் சாரத்தைத்தான் எழுத்தாக மாற்றியிருக்கிறார். கிராமம் என்றால் கிராமம் அல்ல. வாழ்க்கை முறை. அதைப் பற்றிப் பேசவேண்டும். பெயர்களில் தொடங்கி பேசும் மொழிவரையில் கிராமத்தின் மணம் வீசவேண்டும். அது கெடை காட்டில் வீசுகிறது.

உச்சிமகாளி, மீசை சுப்பையா, சிவப்பு ராசு, புண்ணியத்தாயி, தாட்டாம்பட்டிக்காரி, நொடிஞ்சான் குட்டி, தவிட்டான், கேசரி, நண்டுபிடி சுப்பையா என புதினத்தில் வந்துபோகும் கதாபாத்திரங்களின் பெயர்களின் பின்னணியில் கதைகள் இருக்கின்றன. குள்ராட்டி, கருவேலப்பிறை, அம்மன்கோயில் கொடை, பூதத்தார், கதலிப் பழங்கள், அட்டளை, அர்தலி, கிணற்றுக் குளியல் என மேற்குத் தொடர்ச்சி மலைவாழ்வின் வட்டார வழக்குகளையும் அந்தப் பகுதியின் புவியியல் அமைப்பையும் இடங்களின் பெயர்களையும் ஏக்நாத் எழுத மறக்கவில்லை. எந்தவித எத்தனங்களும் அற்று வாழும் மனிதர்களின் பூமியாக கெடை போடும் குள்ராட்டி இருக்கிறது. மேய்ச்சல் எளிதல்ல. காட்டின் சுபாவம் தெரிந்தவர்கள் மட்டுமே அங்கே காலம் தள்ளமுடியும். வேட்டைகள் நிகழும் அங்கு மேய்ச்சல் வீரவிளையாட்டுதான்.

விவசாய நிலங்களே வீடுகளாகி அருகிவரும் காலம் இது. மாடுகளின் மேய்ச்சலுக்கு சொல்லவா வேண்டும். நினைவுகள் மட்டுமே மிச்சமிருக்கும். எதிர்காலத் தமிழ்த்தலைமுறைக்கு இவருடைய கெடை காடுதான் மேய்ச்சலின் அனுபவம் கொடுக்கும். பழந்தமிழ் வாழ்வின் சாரங்களை ஒவ்வொன்றாக தமிழகம் இழந்துவருகிறது. நவீனம் என்று அதற்குப் பெயர் வைத்து பெருமைப்படுகிறோம். பொருளாதாரம் பெருகுகிறது. வாழ்வாதாரம் உயர்கிறது. அடையாளங்களை இழந்துகொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில் மலையும் காடும் மயங்கும் மலங்காட்டை அணு அணுவாக அனுபவிக்க வைத்திருக்கிறார் ஏக்நாத். இன்னும் காட்டு வாழ்வை கூடுதலாக எழுதியிருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது. பார்வை விரியும் திசையெங்கும் இயற்கையோடு கட்டிப்புரளும் பிரதேசங்களும், பொங்கிப் பெருகும் காதல்களும், காமமும் என பலமும் பலவீனங்களுமாய் திரியும் ஆண்களும் பெண்களும் ஏக்நாத்தின் எழுத்தில் புதிய பரிமாணங்களைத் தொடுகிறார்கள். கவிதை, சிறுகதை, கட்டுரை என மெல்ல மெல்ல முளைத்து இன்று அவர் புதின எழுத்தாளராக தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். வாழ்த்துகள். அடுத்தடுத்த படைப்புகளில் அவர் எழுத்தின் புதிய உச்சங்களைத் தொடுவார்.

வெளியீடு: காவ்யா
விலை ரூ.170

நன்றி: நடப்பு.காம்