Friday, December 5, 2014

கொடை 10


பொழுது இன்னும் முழுவதுமாக விடியவில்லை. தொழுவில் ஆடு களை அவிழ்த்துக் கொண்டிருந்தாள் ஆண்டாள். 'போய் ஐயமாரு வீட்டு பின்னால போயி மேயுங்கோ' என்று அவற்றுக்கு செல்ல உத்தரவு போட்டுவிட்டு ஒவ்வொரு ஆட்டின் முதுகையும் தடவிக் கொடுத்தாள். இவளைப் பார்த்ததும் செவளைப்பசு, ம்மா என்று இழுத்தது. 'ஒனக்கு அதுக்குள்ளயா நேரமாயிட்டு, பொறு' என்றவள் கரைக்கப்பட்டிருந்த புண்ணாக்கு சட்டியை மாட்டின் முன் வைத்து விட்டு கன்னுக்குட்டியை அவிழ்த்துவிட்டாள். அது ஓடிப்போய் மடு வில் வாய் வைத்து இழுத்தது. முகத்தைத் திருப்பி குட்டியை நக்கி யது பசு.
வீட்டின் கீழ்ப்பக்க சுவரில் இருந்து விழும் நிழல், பரந்து விரிந்து கிடந் தது. பொங்கலுக்கு அடித்துப் போட்டிருந்த ஆற்று மணலின் மீது இளங்கருப்பாக பரவிக் கிடந்தது அந்நிழல். சின்ன பயல்கள் நேற்று வி ளையாடிவிட்டு எடுக்காமல் விட்ட ரெண்டு கோலிக்காய்கள் மண லின் கீழ்ப்பக்கம் கிடந்தன.  அதன் அருகில், துண்டு துண்டாக மாட்டு சாணங்கள்.

தினமும் காலையில் வாய்க்காலுக்குப் போய் விட்டு இங்கு வந்து விடும் ஆண்டாளின் தம்பி கணேசன், சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு வழக்கம்போல மணலில் உட்கார்ந்து, வீட்டு சுவரில் முதுகை சாய்த்தான். வாய்க்காலில் இருந்து அவருடன் வந்த சுக்குவும் இடுப் பில் இருந்து வெற்றிலை டப்பாவை எடுத்துக் கொண்டு காலை விரித் து உட்கார்ந்தார். மணல், இடுப்புக்குள் ஈரம் செலுத்திக் குளிர்ச்சியைத் தந்து கொண்டிருந்தது. 'அப்டியே துண்டை விரிச்சு படுத்தா தூங்கிருவெம் போலருக்கு' என்ற சுக்கு கண்களை மூடி திறந்தார்.

இவர்களைப் பார்த்ததும் ரோட்டில் சென்றுகொண்டிருந்த நாராயண கொத்த னும் வந்து உட்கார்ந்தான். வந்தவன் 'தீப்பெட்டி இருக்கா?' என்று கேட்டான். இல்லை என்று தெரிந்ததும், 'ஆண்டாளக்கா தீப்பெட்டி இருந்தா போடென்' என்று சத்தம் கொடுத்தான். ஜன்னல் வழியாக எறிந்தாள் ஆண்டாள். எடுத்து பீடியைப் பற்ற வைத்தான். இழுத்து புகையை விட்ட பிறகுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

மேலத்தெரு அம்மாசி, ஒட்டாங்காளைகளைப் பத்திக்கொண்டு தெப்பக் குளத்துக்குச் சென்றுகொண்டிருந்தான். மாட்டின் மணி சத்தம் அதிகாலை அமைதியை கலைத்துச் சென்றுகொண்டிருந்தது. இவர்களைப் பார்த்ததும், 'என்ன சுக்கு ஒக்காந்துட்டெ. தண்ணிப் பாய்க்கப் போணும்னு சொன்னெ?' என்றான்.

'ஆமா. சொன்னென். எங்க போவ? காலயிலயே எழவ இழுத்து வச்சுட்டு வந்திருக்காம், ஒம் மருமவன்?' என்றார் சுக்கு. ஒம்ம மருமகன் என்று அவர் சொன்னது தன் மகனை.

'ஏம்?'

'ஏமா? கொடை நேரத்துல வெள்ளி, செவ்வாய்ல பாத்து அலைங்கன்னா கேக்கானுவளா? பூவங்குறிச்சிக்கு கெழக்க, வயல்ல கெடை போட்டிருக்காம் கொம்பன். தொணக்கு கூப்டாம்னு போயிருக்கானுவோ, இவனும் செவனு நம்பியார் மவனும். காலையில நாயிவோ வந்திருக்குன்னு வெரட்டிருக்கானுவோ. ஒரு நாயி கால கவ்விட்டுங்காம். கெரண்ட கால் பூரா ரெத்தம். அப்படியே சைக்கிள்ல பின்னால ஒக்கார வச்சு கூட்டியாந்திருக்காம் செவனு நம்பியார் மவன். அவன் ஆத்தா, கால்ல சுண்ணாம்பை தடவிட்டு ஒக்காந்திருக்கா. வைத்தியரு பத்து மணிக்குலா வருவாரு'

'சரியா போச்சு. நேரங்கெடக்க கெடயில இதுவேறயா?'

'அதான். கணேசன பாத்ததும் அவங்கூடய வந்துட்டென்'

ஒட்டங்காளைகள் கயிற்றை மீறி தலையை இழுத்துக்கொண்டு நின்றது.

'செரிடே நீ போ. ஒன்ன விட ஒம் மாடுவோவளுக்கு என்ன அவசரமோ? சிலுப்பிட்டுல்லா இருக்கு' என்ற சுக்கு, வெற்றிலை டப்பாவைத் திறந்தார்.

கடையத்தில் இருந்து சிவந்திபுரம் செல்லும் டவுண் பஸ் அதிக புகையை கக்கியபடி சென்று கொண்டிருந்தது.

வீட்டுக்குள்ளிருந்து வந்த ஆண்டாள், 'காப்பி போடட்டால கணேசா?' என்றாள்.
 'வேண்டாம்' என்றவன் பிறகு ஏதோ நினைத்தவனாக, 'நீத்தண்ணி இருந்தா கொண்டா?' என்றான். சுக்கு வெற்றிலையை சவைத்து சாறைத் துப்பிவிட்டு, 'கணேசா, வெசயத்தை அப்டியே உட்ர முடியாது, கேட்டியா?' என்று ஆரம்பித்தான்.

நாராயண கொத்தன், 'என்னது?' என்றான் ஒன்றும் தெரியாமல்.
நேற்று பல்லி முருகன் வீட்டுக்கு, வரி வாங்க போனவர்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு கொடைக்கும் ஏதாவது வம்பை இழுக்கும் பல்லி முருகன், இந்த வருடம் வரி கொடுக்க முடியாது என்றான். தனக்கு கோயில் தேவை இல்லை என்றான். வரி வாங்க போன இளைஞர் அணியின் வன்னிய நம்பியும் ராமசாமியும் அவன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார்கள். முப்பிடாதி ஓரமாக நின்றிருந்தான். அவனை ஏறிட்டுப் பார்த்த பல்லி முருகன், ஏதும் சொல்லாமல் வன்னிய நம்பியைப் பார்த்தான்.

'இந்த தடவைல இருந்து சண்ட சச்சரவு வரக்கூடாதுன்னுதான் நாங்க கொடைய நடத்துதோம். நீரு இப்டி சொல்லுதேர மாமா' என்றான் ராமசாமி.

'ரொம்ப பேச்ச வளக்காண்டாம் கேட்டேளாடே? சொன்னது சொன்னது தான். எங்களுக்கு கோயிலு வேண்டாம். அவெனுவ புழங்குத கோயிலுல நாங்க வர முடியாது' என்றான் பல்லி முருகன்.

'ஒங்க சண்டய கோயிலு வெவாரத்துல ஏம் இழுக்கேரு சின்னய்யா?' என்றான் வன்னிய நம்பி.

'எய்யா, நீங்களாம் எளவட்ட பிள்ளேலு. ஒங்ககிட்ட நான் வெளக்கிட்டு இருக்க முடியாது. நான் இப்டி சொன்னேன்னு ஒங்க பெரிய மனுஷங்ககிட்ட சொல்லுங்கெ. எங்களுக்கு அவங்க சங்காத்தம் வேண்டாம்'

'திடுதிப்புனு இப்டி சொல்லிட்டேரு. இவ்வளவு நாளு வரி கொடுத்துட்டுதானே இருந்தேரு கோயிலுக்கு'

'ஆமா. மனசு கஷ்டத்தோட எவ்ளவு நாளு அப்டி லாந்திட்டு இருக்க முடியும் சொல்லு? அதான் இப்டியொரு முடிவ எடுத்தாச்சு'

'அப்டிலாம் உட்ர முடியுமா மாமா?'

'பின்னெ என்ன செய்ய சொல்லுத?' என்ற பல்லி முருகன், வீட்டுக்குள் திரும்பி, 'ஏ செல்லா, கொஞ்சம் தண்ணி கொண்டா?' என்று சொல்லிவிட்டு, 'காபி குடிக்கேளா, போட சொல்லட்டா?' என்றார் இவர்களிடம்.

முப்பிடாதி ஆச்சரியமாகப் பார்த்தான். இவனுக்கு என்ன ஆனது திடீர் என்று? கசமுத்து வகையறாக்களுடன் பல்லி முருகன் வகையறாவினர் பேச்சுவார்த்தை இல்லாமல்தான் இருந்தனர். முப்பிடாதி சின்ன வயதாக இருக்கும்போது பேசிக்கொண்டிருந்தனர். அவன் வளர வளர அவனிடமும் பேச்சை நிறுத்தியிருந்தனர். வீட்டுப் பொம்பளைகள் தெரியாமல் பேசிக்கொள்வார்கள்.

பல்லி முருகன் இப்படியொரு முடிவை எடுத்திருந்தால் அதில்  சொம் பு தங்கம், மாரிச்சாமி வகையறாக்களும் சேர்ந்திருப்பார்கள் என்று யூகித்தார்கள் இவர்கள்.

'சின்னையா, ஊர மீறாண்டாம்?'

'எய்யா, எனக்கு ஒங்க கோயிலுதான் வேண்டான்னு சொன்னென். ஊரை வேண்டான்னு சொல்லலயே?'

'கோயிலுதான் ஊரு'

'அப்டின்னா ஊரும் வேண்டான்னு வச்சுக்கெ'

'நெசமாதான் சொல்லுதேரா மாமா?'

'நெசமாதான்டா சொல்லுதென். ஒங்க கோயிலு எனக்கு வேண்டாம். எங்க எடத்துல நாங்க இன்னொரு பூடத்தை விட்டுக்கிடுதோம். பூதத்தாரு எங்க எடத்துக்கு வரமாட்டேம்னா சொல்ல போறாரு?' என்றான் பல்லி முருகன்.

அவன் ஒரு முடிவோடுதான் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.
'சரி பெறவு ஒங்க இஷ்டம்' என்ற இளைஞர் அணி அங்கிருந்து கிளம்பியது. முப்பிடாதிதான் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக  ஆண்டாளிடம் இதைச் சொன்னான். அவள், கணேசனிடம் இதைத் தெரிவித்திருந்தாள். விஷயம் ராத்திரி அரசல் புரசலாக எல்லாருக்கும் தெரிந்து விட்டது.

பொழுது நன்றாக விடிந்ததும் ராசு முன்னிலையில் இதை பேச வேண்டும் என்றார்கள். அதைதான் சுக்கு, கணேசனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

'இந்த வெசயத்த அப்டியே விட்டுரக்கூடாது. கோயிலு வேண்டாம், ஊரு வேண்டாம்னு போனா, எல்லாத்தையும் விட்டுட்டுதான் போணும்' என்றான் சுக்கு.

'நீங்க தேவையில்லன்னு ஒருத்தென் சொல்லுதான், அவன என்ன செய்ய முடியுங்கெ? போன்னா போன்னு விட்டுர வேண்டியதானெ' என்றான் கணேசன்.

'அதெப்டி முடியுங்கெ?' என்றான் நாராயண கொத்தன்.

'ஏம் முடியாது?'

'கோயிலுக்கு சொத்துவோ இருக்குடெ. நாளைக்கு வந்து அதப் பிரிச்சு தான்னு கேட்டாம்னு வையி..?'

'அத எப்டி கேட்பானுவோ?

'கேட்க எடம் இருக்குல்லாடா? தனியா அவன் தோட்டத்துல சாமிக்கு பூடம் கொடுக்காம்னு வச்சுக்கோ. சாமிய நாங்க தனியா வச்சுட்டோம். சொத்து கணக்கை காட்டுங்க, எங்களுக்கும் பாதி வேணும்னு கேப்பானுவள்லா'

'அவனுவளுக்கு அப்டி நெனப்பே இல்லன்னாலும் நீரு சொல்லிக் கொடுப்பீரு போலுக்கெ?'

'ஏ மூதி. நா ஏம்ல சொல்லிக்கொடுக்கணும். நாளைக்கு இதெல்லாம் பிரச்னயானா அதுக்கும் தயாரா இருக்கணும்லா'

'சர்தாம். ஆங்கங்கெட்ட மூதியோ எழவை எப்டிலாம் இழுக்கானுவோ பாரென்'

'பெறவு என்னத்த சொல்லுதென்' என்ற சுக்கு வெற்றிலைச் சாறை, பின்பக்கம் திரும்பித் துப்பினான். அதற்குள் ஆண்டாள் ஒரு போணியில் நீத்தண்ணி யையும் ரெண்டு மூணு ஈராய்ங்கத்தையும் கொண்டு வந்து கணேசனிடம் கொடுத்தாள். வீட்டுக்குள் முப்பிடாதி இன்னும் எழுந்திரிக்காமல் உருண்டு கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

'ஊரு வேண்டாம்னு சொல்லுதாம்னா, அவெனுக்கு மத்த சாதிக்காரனுவோ சப்போட்டு இருக்குல்லா'

'அவன் பக்கத்து வயக்காரன் ஒருத்தன் போதும், பல்லி முருகனுக்கு சொல்லிக்கொடுக்க?'

'யாரு'

'மிளா'

'அவெனா? அவென் செய்வாம்ல. ஆளு கண்டா ஒரு பேச்சு, இல்லன்னா ஒண்ணு பேசுதவம்லா அவென். அவென் எப்டி பண்ணுனா நல்லாருக்கும்னு எடுத்துக்கூட கொடுப்பான்'

'செரி அவனுவள வழிக்கு கொண்டார என்னய்ய?'- போணியை கீழே வைத்து விட்டு கேட்டான் கணேசன்.

'ஒங்க சொக்காரனுவோ எப்டியிருப்பானுவோ. சொன்னதயே சொல் லிட்டு இருப்பானுவோ. புடிச்சா ஒரே புடியா தொங்கிட்டு இருப்பா னுவோ. லேசுபட்ட காரியமா, அவனுவள வழிக்கு கொண்டார?'

'பெறவு?'

'பெரிய மனுஷனுவோ போயி பேசணும். என்ன சொல்லுதாம்னு பார்ப்போம். அதுக்குப் பெறவுலா மத்ததை பார்க்கணும்' என்ற நாராயண கொத்தன், 'வேற எதும்னா சொல்லுங்க, னா. எனக்கு பண்டாரம் வீட்டுலதான் இன்னக்கு வேல. மேல தளம் போட்டுட்டு இருப்பென், கேட்டேளா?' என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

சுக்குவும் கணேசனும் பேசிக்கொண்டிருந்தார்கள். தூங்கி எழுந்து கொட்டாவி விட்டுக்கொண்டே வெளியே வந்தான் முப்பிடாதி.

(தொடரும்)

No comments: