Monday, December 22, 2014

கொடை 12

'சீக்கிரம் குளிடெ, போவும்' என்றான் ராஜா. காதல் கனவு கலைந்து எழுந்த முப்பிடாதி சோம்பல் முறித்தபடி ஆற்றுக்குள் இறங்கினான். கீழ்பக்க தென்னை மரங்களின் நிழல் தண்ணீரில் விழுந்து ஆடிக்கொண்டிருந்தது. மேற்கே சுபலட்சுமியும் அவளுடன் வந்தவர்களும் மண்டபத்துக்கு அருகில் குளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அதன் மறைவில் நின்று துணி மாற்றிக்கொள்ளலாம் என்பதால் பெரும்பாலான பெண்கள் அந்தப் பகுதியைத்தான் குளிக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். முப்பிடாதி அவளைப் பார்த்துக்கொண்டே, ஓடும் தண்ணீருக்குள் நின்று, காலால் மணலைப் பறித்து ஆழம் தோண்டினான். இரண்டு கால்களாலும் அங்கும் இங்கும் மணலைத் தள்ளியதில் முங்கிக் குளிப்பதற்குப் போதுமான ஆழம் கிடைத்தது. முங்கி னான். உடலும் மனதும் குளிரத் தொடங்கியது.

கரையில் கீழ்ப்பக்கத்து தாழைக்குள் இருந்து சர் புர் சத்தம் வந்துகொண்டிருந்தது. இரண்டு ஓணான்களின் ஓட்டமாகவோ அல்லது வெருவுகளின் விரட்டலாகவோ அது இருக்கலாம் என்று நினைத்தபடி கரையில் பார்த்தான். அங்கு டிப்டாப் செல்வம் நின்றுகொண்டு சாரத்தை அவிழ்த்து துண்டைக் கட்டிக் கொண்டிருந்தான்.

'என்ன முப்பிடாதி, இன்னைக்கு சாந்தரம் வில்லங்கம் இருக்கு போலுக்கு?' என்றபடியே தண்ணீருக்குள் இறங்கினான் டிப்டாப். தண்ணீரின் குளிரில் உடல் சிலிர்த்து கை, கால்களின் முடிகள் நிமிர்ந்து நின்றன. பனியனையும் உள்ளாடையையும் நனைத்து அங்கிருந்த கல்லில் வைத்துவிட்டு பார்த்தான்.

'ஏன் வில்லெங்கம்?'

'வில்லெங்கம் இல்லாம அவனுவட்டே பேசிட்டு வந்துர முடியுமா? இன் னைக்கு எவனெ ஏசப் போறானுவளோ?'

'அதெல்லாம் கேட்டுக்கிடுவானுவோ. ஊரை பகைச்சுட்டு இருந்துருவானு வலோ'

'ஆமா, பெரிய ஊரு. இதெ பகைக்கது பெரிய விஷயம்லா?'

'ஏம்?'

'அவனுவெ கேக்கமாட்டானுவோடா. பூத்தாருக்கு இன்னொரு பூடத்தை அவனுவோ தொழுவுல விடுவானுவோ பாரென்'

'நீயே  எடுத்துக்கொடுப்பெ போலுக்கெ?'

'நாம் ஏன்டே எடுத்துக்கொடுக்கப் போறென். அவனுவ என்னா ஒண்ணும் தெரி யாதவனுவளா? இருந்தாலும் ஊருக்கு ரெண்டு பூதத்தாரு நல்லதுதானடெ?'
என்று சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தான் டிப்டாப்.

சிரித்துக்கொண்டிருந்த ராஜா, 'ஒங்க சாமிதானடெ' என்றான் முப்பிடாதியைப் பார்த்து.

'ஒரு பூத்தாரு இருந்தே கோயில்ல களவாண்டுட்டு போனவனெ ஒண்ணுஞ் செய்யல. ரெண்டு பூதத்தாரு வந்து என்ன செய்யப் போறாரோ?' என்ற டிப்டாப்பிடம், 'நீ வேற எழவ இழுக்காத' என்ற முப்பிடாதி கிளம்பினான்.

'காலேஜுக்குப் போயிட்டு சீக்கிரம் வந்துருடெ. சாந்தரம் வில்லங்கம் பாக்க நல்லாருக்கும்' என்றான் டிப்டாப்.

'எவன்டா சண்டை போடுவாம்னு அலையுததெ பாரென்' என்ற முப்பிடாதி, சைக்கிளை எடுத்தான். மேற்கே பார்த்தான். சுப லட்சுமியும் அவளுடன் வந்த வர்களும் கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்தனர். ஏக்கமாகப் பார்த்துவிட்டு சைக்கிளை அழுத்தினான்.

வீட்டின் வெளியே சைக்கிளைச் சாத்தினான். ஆண்டாள், சோறு பொங்கி யிருந்தாள். புளித்தண்ணியும் தேங்காய்த்துவையலும் என்பது தெரிந்தது.

'குளிச்சுட்டு வந்ததும் நெத்தில முத்திரியை பூசுன்னா, ஏம்ல கேக்க மாட்டேங் கெ?' என்ற ஆண்டாள், விளக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த முத்திரியை எடுத்து அவன் நெற்றியில் கீழிருந்து மேலாக இழுத்தாள்.

'சாமிய கும்புட்டுட்டு சோத்தை திங்க வா' என்று சொல்லிவிட்டு அடுக் களைக்குப் போனாள். அங்ஙணங்குழியில் பாத்திரங்கள், கழுவுவதற்காகக் கிடந்தன. அவனுக்காக வாங்கப்பட்டிருந்த சில்வர் தட்டில் சோறை வைத்தாள்.

முப்பிடாதி, ஆண்டாளின் ஆசைக்காக, பேருக்கு கைகளை ஒன்று சேர்த்து சாமியைக் கும்பிட்டான். வீட்டுக்குள் நாராயண சாமியின் முத்திரி. ஆனால், பூதத்தார் கோயில், சொந்த கோயில். அது எப்படி? என்று அடிக்கடி யோசித்துக் கொள்வான். நாராயணனுக்கு நாமம். பூதத்தாருக்கு பட்டை. இரண்டு வெவ் வேறு கலாசாரம் வீட்டுக்குள் வந்த கதை பற்றி ஆராய்ச்சி ஒன்றை பண்ண வேண்டும் என்று நினைத்தான். அவள் சொன்னபடி தலையில் எண்ணெய் தேய்க்க மனம் இப்போது ஒப்பவில்லை. சட்டையை மாட்டிக்கொண்டு தரையில் உட்கார்ந்தான். வெளியே காக்கா ஒன்று கத்தியபடியே கழுத்தைச் சாய்த்து வீட்டுக்குள் பார்த்தது.

'காலைலயே காக்கா வந்து தொண்டய போடுது, யாரு வாராவோன்னு தெரி யலயே' என்ற ஆண்டாள், ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாகச் சோறை வைத்து அதைத் திண்ணையில் வைக்கச் சொன்னாள் அவனிடம். வைத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.

'இங்க இருக்க நிலமையில விருந்தாளுவோ வந்தா நல்லாருக்கும்?' என்று முகத்தை இழுத்த ஆண்டாள், தட்டை அவன் முன் வைத்துவிட்டு, அம்மிக் கல்லின் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

வேகவேகமாகச் சாப்பிட்டான் அவன். 'மெதுவா தின்னுல. இப்பம் என்ன அவசரம்?' என்ற ஆண்டாளை அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. தின்றுவிட்டு இன்னும் கொஞ்சம் கேட்டான்.

'நீ ஒரு புளித்தண்ணி மாடென். மத்த கொழம்பு, கறின்னா ஒரு தட்டுக்கு மேல எறங்காது. அதுக்காவ தெனமும் புளித்தண்ணியவே வச்சுட்டு இருக்க முடியுமால?' என்று சொல்லிவிட்டு சோறைப் போட்டுத் தட்டை வைத்தாள்.

அவன் சிரித்துவிட்டு, 'இதான் நல்லாருக்கு. அதுக்கு என்ன செய்ய சொல்லுதெ. ஒனக்கு மத்த கொழம்புவோள ருசியா வய்க்க தெரியல?' என்றான் முப்பிடாதி.

'ஏ கொள்ளேல போவான், என்னய பாத்தால அப்டி சொல்லுதெ? ஒங்க தாத்தா, 'ஆண்டாளு கொழம்பு வச்சா அடுத்த ஊரு வரை மணக்கும்'னு சொல்வாரு'

'மணக்கும் சரி, ருசிக்கணும்லா' என்ற முப்பிடாதியை, சிரித்துக் கொண்டே செல்லமாக அடிக்கப் போனாள் ஆண்டாள்.

'ஒங்கப்பம் புத்தி அப்படியேதாம் இருக்கு. அவருதான் இப்டி சொல்லுவாரு. எடக்குக்கு சொல்லுதாரா, நெசமா சொல்லுதாரான்னு கண்டுபிடிக்க முடியாது. நீயும் அப்டிதான் வந்திருக்கெ'

'நா ஒண்ணும் எடக்குக்குலாம் சொல்லல. நெசமாதான் சொல்லுதென்'

'அப்பம் சீக்கிரம் ஒரு கல்யாணத்தெ முடி. அவா வந்தா ஒனக்கு ருசியா வச்சு தருவா. எனக்கு ஒரு வேல மிச்சம்'

'காலேஜ்ல நெறய பிள்ளைலுவோ கூட படிக்கி. செவத்த தோலு உள்ளத யாரயாது பாத்து கூட்டியார வேண்டியதாம்'

'எடு செருப்பெ. என்ன பேச்சுல பேசுதெ?. கூட்டிட்டு வருவியோல அப்டி. வந்தன்னா, அவளெ அங்ஙனயே சங்காங்குழிய நெறிச்சிருவேம், பாத்துக்கெ?' என்றாள் ஆண்டாள்.

'ஆண்டாளுக்கு கோவத்த பாரென்" என்று அவள் நாடியை பிடித்து ஆட்டிய முப்பிடாதி, 'நா எப்டிழா கூட்டியாருவென். நீ என்னய வச்சே நிறைய கணக்கு போட்டிருக்கன்னு தெரியாதா எனக்கு?' என்றான்.

'நா என்னல கணக்கு போட்டிருக்கென்?'

'ஆய்க்குடிகாரிட்ட பேசிட்டிருந்ததெ கேட்டென்'

'அவாட்ட நா என்ன சொன்னென்?'

'ஒண்ணும் படிக்காத குண்டி சூம்பி மவனுக்கே இவ்ளவு நகை கேக்காவோ. எம்மவம் காலேஜு முடிச்சாம்னா நான் எவ்வளவு கேப்பேன் தெரியுமான்னு சொன்னல்லா'

'ச்சீ. அவாட்ட சும்மா பேச்சுக்கு சொன்னம்ல. ஒனக்கு பொண்ணு ரெடியா இருக்கு. அவ்வோட்ட இவ்ளவு வேணும்னு நான் ஏன் கேக்க போறென்?'

'யாருழா, அது?'

'ம். அதெல்லாம் இப்பமே எழுதணும் இவென்ட்ட' என்ற ஆண்டாள், அவன் வைத்த எச்சில் தட்டை அங்ஙணக்குழியில் போட்டாள். முப்பிடாதி அந்த முகம் தெரியாத தேவதையை நினைத்தபடி வெளியே வந்து மாமாவின் சைக்கிளை விட்டு விட்டு தனது சைக்கிளை எடுத்தான்.

0
சங்கத்தில் எல்லாரும் கூடியிருந்தார்கள். ராசு மாமா என்கிற ராசய்யாவிடம் பேசினார்கள். அப்படி செய்யலாம், இப்படி செய்ய லாம் என்று ஆளாளுக்கு யோசனை. எல்லோரும் சொல்வதைக் கேட்டுக்கொண்டார் ராசு. பிறகு, 'செரி, இன்னும் நாலு நாள்ல கொடை. இந்த நேரத்துல அவனுவட்ட ரொம்ப முண்டாண்டாம், சரியா? 'இன்னொரு பூடம் வேண்டாம், இங்கெ ஒனக்கு என்ன பிரச்னை'ன்னு கேப்போம். சொன்னதயே சொன்னானுவோன்னா, 'கொடை முடிஞ்சு பேசிக்கிடுவோம். அதுவரை எந்த வெவாரமும் வச்சுக்கிட கூடாது, கோயில்ல வந்து பிரச்னை பண்ணக் கூடாது'ன்னுட்டுவந்துருவோம்,
கேட்டேளா?' என்றார் ராசு.

அவர் சொன்னது ஏற்றுக்கொள்ளப் பட்டது. பிறகு சங்கத்தில் இருந்து அவன் வீடு இருக்கும் முடுக்குக்குப் போனார்கள் எல்லாரும். அவன் வீட்டுத் தொழுவத்துக்கு வெளியே கிடந்த ஆட்டுரலின் மேல் உட்கார்ந்திருந்தார் பல்லி முருகன். தலையை அங்கும் இங்கும் திருப்பிக்கொண்டிருந்த மஞ்சளும் சிவப்பு வண்ணமும் கொண்ட கோழியின் பின்பக்கத்தில் கையை விட்டு, முட்டை இருக்கா என்பதை பார்த்துக்கொண்டிருந்தார் அவர். தோளில் கிடந்த துண்டு வயிற்றில் விழுந்துகிடந்தது.

மண்சுவரில் வைக்கப்பட்டிருந்த சின்ன முள்வேலியைத் தூக்கித் தள்ளி வைத்துவிட்டு முதலில், ராசுதான் உள்ளே போனார். அவர் பின்னால் எல் லாரும் போனார்கள். முப்பிடாதியும் டிப்டாப் செல்வமும் கடைசியில் நின்றார்கள்.

இவர்களைப் பார்த்த பல்லி முருகன் அப்படியே உட்கார்ந்து கொண்டு, 'என்ன கூட்டமா வந்திருக்கியோ' என்றார், இன்னொரு கோழியைப் பிடித்தபடி. அவர்கள் வந்திருப்பதன் காரணம் அவருக்குத் தெரிந்ததுதான் என்பதால் அவர் முகத்தில் ஒரு எக்காளம் தெரிந்தது.

வந்தவர்கள் அப்படியே நின்றார்கள். ஈயப்போணியில் இருக்கும் நனைத்த அரிசியை தின்றுக்கொண்டே அம்மணமாக வீட்டுக்குள்ளிருந்து வந்த சிறுவன, இவர்களைப் பார்த்ததும் வீட்டுக்குள் ஓடினான். அவனின் பயம், கையில் இருக்கும் போணியை யாரும் பிடுங்கி விடக்கூடாது என்பதாக இருந்தது.

பட்டியில் அடைய காத்திருக்கும் வெள்ளாட்டுக்குட்டிகள் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு, 'ம்மே' என்று கத்தின.

ராசுதான் சொன்னார், 'எதுக்கு வந்திருக்கோம்னு தெரியலயோ' என்று.

'வரி இல்லன்னு சொல்லிட்டேன். திரும்பவும் கேக்க வந்திருப்பியோ, வேற எதுக்கு இந்த வாசல மிதிக்கப்போறியோ?' என்றார் பல்லி முருகன். இப்போது துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டார்.

'வீட்டுக்குள்ள வாங்க ஒக்காந்து பேசுவோம்' என்ற பல்லி முருகனிடம்,  'இங்கயே நின்னுகிடுதம்' என்றார்கள் இவர்கள்.

'இப்பம், கோயிலுக்கு வரி கொடுக்க மாட்டேரு, அப்டித்தானெ?

'ஆமா. ஏற்கனவே சொல்லிட்டனே'

'செரி. என்ன பிரச்னன்னு தெரிஞ்சுக்கிடலாமா?'

'எனக்கு சரிபட்டு வரல'

'சரிபட்டு வரலன்னா, எப்டி?'

'போலீஸ்காரன் மாரிலாம் கேள்வி கேக்காதியே, கேட்டேளா? எங்களுக்கு ஒங்க கோயிலு வேண்டாம் அவ்ளவுதான்'

'செரி ஒம்ம முடிவு அப்டியே இருக்கட்டும். இன்னும் நாலு நாள்ல கொடை நடக்க போவுது. அது முடிஞ்ச பெறவு மத்தத பேசிக்கிடுவோம். இடையில கோயில்ல வந்து நீரோ உங்க அண்ணன் தம்பியளோ வந்து சலம்பக் கூடாது கேட்டேளா, சொல்லியாச்சு, ஆமா'

'நான் என்ன வம்ப இழுக்கப் போறேன். எனக்கு கோயிலே வேண்டாம்னாச்சு. பெறவு நங்க எதுக்கு அங்க கால் வைக்கப் போறோம். அப்டிலாம் ஒண்ணும் நடக்காது. நீங்க நல்லபடியா கொட கொடுங்க, போதும்'

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் எல்லாரும் திரும்பினார்கள். அப்பதத்தா டீக்கடைக்கு வந்துவிட்டார்கள்.

திடீரென்று இப்படி மொத்தமாக இவர்கள் டீ குடிக்க வருவார்கள் என்பதை அவர் நினைத்திருக்கவில்லை. தண்ணீரை எடுத்து பாலில் ஊற்றி கொதிக்க வைத்தார். அடுப்பில் இன்னும் இரண்டு விறகுகளை வைத்து ஊதினார். புகை கொஞ்சமாக மேலேழுந்து கடைக்குள் பரவியது.

'ஏ மெதுவா ஊதுய்யா. கண்ணு எரியுதுலா'

'ஒம்ம வீட்டுலலாம் புகை வராமதான் அடுப்பெரிக்கேளோ?' என்று கேட்டார் அப்பதத்தா.

'அதுக்கு?'

'பேசாம இரும்வே'

சிறிது நேரத்துக்குப் பிறகு டீ வந்தது. குடித்துவிட்டு, 'இப்பம் சொல்லியாச்சு. கொடை நேரத்துல எதுவும் வம்பு தும்புன்னா, சாத்திர வேண்டியதாம். இதுல சொக்காரன், வேண்டியவன்னுலாம் பாக்க முடியாது, ஆமா' என்று ராசு சொல்லிவிட்டு அவர் வீட்டுக் குப் போனார். இளைஞர் அணியின் வன்னிய நம்பியும் ராமசாமியும் 'சரிதாம், அடிதடியில எறங்காம இந்தப் பிரச்னை முடியாது' என்று நினைத்தார்கள்.

(தொடரும்)

1 comment:

துபாய் ராஜா said...

தண்ணிக்கு தவிச்ச மாடு தவிடும், புண்ணாக்கும் கலந்த கழனித்தொட்டியை கண்டா பாய்ஞ்சு உறிஞ்சுற மாதிரி 'கொடை' பாகங்கள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

கொட்டு, மேளம், பந்தல் அலங்காரம், வேட்டுச் சந்தங்களோடு 'கொடை' தொடரட்டும்.குதித்து, குதித்து கொண்டாடி நாங்கள் ஆட எங்கள் குலதெய்வம் பூதத்தார் அருள் புரியட்டும்.