Friday, January 29, 2010

ட்வின் டவர் பாண்டேவும் கென்டிங் பாண்டியும்- 3



ஊரிலிருந்து, முதல் முதல் வெளிநாடு போன, கசமுத்துவின் மகன் சுந்தர் என்பதை அறிந்தேன். ஊர்க்கதைகள் பேசி, அவனுக்கான ஏக்க பெண்கள் சிலரின் பெயரை சொல்லி, 'அவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகலையே' என்று கேட்டபோது, வெளிநாடு வந்தும் திருந்த மாட்டீங்களாடா என்றிருந்தது.
'குழந்தைகுட்டிகளோட இருக்காங்க' என்ற உண்மையை சொன்னால், அவனது இன்றைய இரவு தூக்கமின்மையாகி போகுமென்பதால்,'இல்ல'என்று சொல்லி வைத்தோம்.

எங்கெங்கு என்ன கிடைக்குமென்று சொன்னான். அதுக்கெல்லாம் ரிங்கெட் வேணுமே மகனே என்று திரும்பவும் அறைக்கு வந்தால், மணி 8.30. சாப்பிடலாமென்று இரண்டு தெரு தள்ளி சென்றோம். வீச்சு புரோட்டா சுற்றல் வாசம் தெரிந்ததில் நின்று, விசாரித்தோம். நம்மூர் அண்ணன்கள்தான்.



படங்கள்: விக்கிபீடியா

அருகில் இருந்த தெருவில் இருட்டு. கடையில் கீழ்பக்கம் அரைகுறை இருட்டாக இருந்த இடத்தில் நான்கைந்து விலைமகளிர்! அங்கங்கள் தெரிவது போல வழு வழு உடையில் நின்றிருந்தனர். முனுசாமி மூச்சடைத்து நின்றான். இவர்களைத்தாண்டி கடை ஒன்றிருந்தது. பீர் வாங்கலாமே என்ற சாக்கில் அவர்க்ளை கடந்தோம். சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த காரில் சாய்ந்திருந்த ஒருவனை, ஒருத்தி சைகையால் அழைத்துக்கொண்டிருந்தாள். இந்த அழைப்பு தன் பக்கம் வருமோ என்று காத்திருந்தான் முனுசாமி. எனக்கு கைகாலில் நடுக்கம்.
அங்கிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. புரோட்டைவை வீசிக்கொண்டிருந்த திண்டுக்கல் அண்ணன், நமட்டு சிரிப்பு சிரித்தார். அர்த்தம் என்னவென்று தெரியவில்லை.

ரூமுக்கு வந்ததும் இந்தப் பெண்கள் பற்றி பேச ஆரம்பித்தான் முனு. தேவையில்லாத பேச்சு.
நாங்கள் போன நேரத்தில் இந்தியாவில் கிரிக்கெட். அறை சேனலை அங்குமிங்கும் மாற்றியதில் எங்கெங்கும் காணினும் புட்பாலடா என்றிருந்தது. ரெண்டு பெக்கிற்கு பிறகு தூக்கம்.

காலையில் 9.30க்கு ரிசப்ஷன் வந்துவிட்டோம். 10 மணிக்கு வேன் வருமாம். ரூமை காலிபண்ணிவிட்டு காத்திருந்தால், 9.45க்கே வேன். ஏறினோம். கென்டிங் பயணம்.

போகும் வழியில் பத்துகேவ் முருகனுக்காக நின்றது வண்டி. இப்போது வேனியில் வேறு சில புதிய நபர்கள் இருந்தனர். அவர்களின் குடும்ப தலைவர் பாண்டி. மதுரை பாண்டி.
படியேறி உள்ளே செல்ல அதிகமாக சிரமப்பட்டார் பாண்டியனார்.
'உள்ளே போனா நெஞ்சுவலிக்கும் சொன்னாங்க... போகவா வேண்டாமான்னு தெரியலையே' என்று பாதி வழியில் பயத்தை வரவழைத்துவிட்டு நின்றுவிட்டார்.

கூட வந்த வட இந்திய பார்டிகள் வேக வேகமாக படியேறி உள்ளே போன பிறகுதான் மதுரை பாண்டிக்கும், எங்களுக்கும் நிம்மதி. சாமி கும்பிட்டு விட்டு, வெளியே வந்து விதவிதமாக போட்டோ எடுத்துக்கொண்டோம். வாசலில் அநியாயத்துக்கு புறாக்கள்.

'ஏல மலேசிய புறா... அது பக்கத்துல நின்னுல, போட்டோ எடுக்கேன்"
'முனுஸ், புறால என்னடா மலேசியா, இந்தியா!'

கீழே இருந்த கடையில் இளநீரை குடித்துவிட்டு வேனில் ஏறினால் தூக்கம். குறிப்பிட்ட பகுதிக்கு சென்றதும் ஜில் காற்று. தூக்கம் கலைந்த போது மலைமீது ஏறிகொண்டிருந்தது வேன்.

'இந்த ஐலேண்ட் முழுவதும் சீனாக்காரர் ஒருத்தருக்கு சொந்தமானது. அவர் இறந்துட்டாரு. அவரு மகன்தான் இதை இப்ப பார்த்துக்கிறார். ஆசியாவிலேயே மிகப்பெரிய சூதாட்ட கிளப், இங்கதான் இருக்கு... கடல் மட்டத்தில இருந்து 2000 அடி உயரத்துல இருக்கிற இடம் இது. உங்களுக்கு புது அனுபவமா இருக்கும்" என்ற டிரைவர், ஒரு பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு, 'நீங்க இங்க இறங்கி, வீஞ்ச்ல வாங்க. நான் நீங்க இறங்குற இடத்துக்கு வந்துடறேன்' என்று சொல்லி கிளம்பினார்.

வீஞ்ச் நிற்பதே இல்லை. திரும்பும் இடத்தில் மெதுவாக நகரும். ஓடிப்போய் ஏறவேண்டும். மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் என்றால் வீஞ்ச்சை நிறுத்தி ஏற்றுவார்களாம்.

ஏறி, மேலே மேலே... கீழ பார்த்தால் கெதக் என்றிருந்தது. காடு. பெரு மரங்களின் உச்சந்தலை தெளிவாக தெரிந்துகொண்டிருந்தது. இவ்வளவு உயரத்துக்கு இதை எப்படி கொண்டு வந்திருப்பார்கள் என்று அந்த உழைப்பை வியந்தோம்.

போகும்போது எதிரில் போகும் வீஞ்ச் பெண்களுக்கு டாட்டா காட்டிக்கொண்டிருந்தான் முனு.

இறங்கி வெளியே வந்தால் மெகா ஹோட்டல்கள் நிறைய. எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது ஹோட்டல் பர்ஸ்ட் வேர்ல்டு. உள்ளே போனால் ரூம் புக்கிங்கிற்கு மெகா க்யூ. லக்கேஜ்ஜை தூக்கிக்கொண்டு நின்று டோக்கன் வாங்கி, ரிசர்ப்ஷன் அருகில் வெயிட்டிங்.
போர்டில் நம்பர் வரும். வெளிநாட்டுக்காரர்களுக்கு நான்கு டிஜிட் நம்பர். லோக்கல் பார்ட்டிகளுக்கு மூன்று டிஜிட்.
வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும்போது மதுரை பாண்டி வந்தார். அவரது லக்கேஜ்ஜுக்கு முனு உதவியதால் கொஞ்சம் கூச்சம் மறந்து சகஜமாக பழக ஆரம்பித்தார்.
'நீங்க எந்த ஊரு... மலேசியாதானா?"
'சென்னை'
'ஏம்தம்பி இதை சொல்லலை'
'நீங்க கேக்கலையே'

--நாங்கள் வைத்திருந்த நம்பர் 4242 போர்டில்.
ஓடிப்போய் பாஸ்போர்ட் காண்பித்து, அதை இதை கேட்டு, கார்ட் கொடுத்தார்கள். சாவி.

எங்களுக்கு அடுத்த ரூம் மதுரை பாண்டி அண்ட் பேமிலிக்கு. மூன்றாவது புளோரில் சந்து சந்தாய் போய், குட்டி ரூமில் பெட்டி வைத்துவிட்டு, குளியல் போட்டோம்.
பிறகு வெளியே வந்தால், குழந்தைகள் விளையாட ஏராளமான விஷயங்கள்.
'நம்மளும் குழந்தைதாம்ல'
-ஒவ்வொரு ரைடாய் போய், இறங்கி, ஹீலிங் டச் போர்டு பார்த்து, மச்சான் மஜாஜ்.
'வா போலாம்'.
உள்ளே இருந்த ரிசப்ஷன் பெண், எல்லாம் கேட்டுவிட்டு, 'டூ யூ வான்ட் ஹேப்பி எண்டிங்?' என்றாள்.
அவள் மூக்கால் பேசியதை வைத்து இதைதான் கேட்டிருப்பாள் என்கிற யூகம்தான்.
அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல், நோ என்றோம்.
உள்ளே, இளம் பெண்கள் மசாஜ் செய்ய தொடங்கினார்கள். மூன்று பெக் உள்ளே போயிருந்ததால் தூங்கிவிட்டேன். அவ்வவ்வோது சுடு தண்ணீரில் நனைத்த டவ்லை கொண்டு அமுக்கி கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் ஞாபகம்.

வெளியில் வந்து பாதத்துக்கு மசாஜ் பண்ணிக்கொண்டிருந்த போது பார்த்தால், உள்ளிருந்து அவசரமாக வெளியே போய்க்கொண்டிருந்தார் பாண்டி.

'அண்ணாச்சி...'
'நீங்களும், இங்கதான் இருக்கீங்களா?' என்று கேட்டுவிட்டு, அவர்கள் கொடுத்த பச்சை தேனீரை இன்னுமொரு குடித்தார்.
'நல்லா இருக்குலா' என்று பாண்டி சொன்னதும் மசாஜ் பெண்ணுக்கு என்ன கேட்டதோ தெரியவில்லை.
'இந்தியால ஆயுர்வேத மசாஜ் பேமஸ் இல்ல' என்றாள்.
'ஆமா, 6 மாசத்துக்கு ஒரு முறை அதை பண்ணுவேன்'----பாண்டி முந்தினார்.
மூணு மாசத்துக்கு ஒருமுறை மசாஜ் செய்தால் ரத்தஓட்டம் சூப்பராக இருக்கும் என்று ஆரம்பித்து பெரிய லெக்சர் கொடுத்தார் மலாய் லேடி.

வெளியே வந்து ஜில் குளிரில் ஸ்வெட்டர் கூட இல்லாமல், நாங்கள் சுற்ற, பாண்டியும் சேர்ந்துகொண்டார். அவரது குடும்பம் மகன் தலைமையில் தனியாகச் சுற்றிக்கொண்டிருந்தது.

அடுத்து, சூதாட்ட விடுதிக்குள் நுழைந்தோம். டீசண்டான சந்தைக்கடை மாதிரி இருந்தது. அநியாயத்துக்கு அருகருகே எஸ்கலேட்டர்.
'எப்படி விளையாடுறாங்க?' என்று ஒரு இடத்தில் நின்று பார்த்தால், ஒவ்வொரு டேபிளிலும் வெவ்வேறான ஆட்டங்கள்.
இது நமக்கு சரிபட்டு வராதுப்பா என்று நகரும்போது தெரிந்த முகமாக இருக்கிறதே என்று பார்த்தால், அட நம்ம ஹீரோ ஷாம்!

'என்ன பாஸ் இங்க'
'நீங்க..."
'இங்கதான தில்லாலங்கடி ஷூட்டிங்'
பாண்டியை அவருக்கு அறிமுகப்படுத்திவிட்டு, கொஞ்ச நேரம் ஆச்சரிய கதை பேசினோம்.

விளையாட்டை கட் பண்ணிவிட்டு, வெளியே வந்தார் ஷாம். அவருடன் மலேசிய தமிழ் பத்திரிகை ஒன்றின் ஓனர், மலேசிய பிரதமரின் நெருங்கிய நண்பர்...இன்னும் சில மெகா தலைகள் தெரிந்தன.

'நான் டயட்ல இருக்கேன். நீங்க... பீர்...'
'பின்ன'
ஒரு தூக்குவாளி முழுவதும் ஐஸ். அதற்குள் 5 பீரை குத்தி வைத்திருந்தார்கள். அதெல்லாம் நம்மூர் ஸ்பிரைட் பாட்டில் மாதிரி இருந்தது.
ஜில்லென்று குடித்தால் ஒரு மண்ணும் தெரியவில்லை. நான், நான்கை காலி பண்ண, முனு ஒன்றை மட்டும். இன்னும் குடிக்கலாம் போலிருந்தது. நாகரிகம் கருதி போதும்.

'அப்புறம் எத்தனை நாள் இங்க இருக்கீங்க'
'காலைல பிளைட்'
'இன்னும் ரெண்டு நாள் டேரா போடுங்க, பினாங்குலாம் போயிட்டு வரலாம்'.
'ஆபீஸ்ல அவ்வளவுதான் லீவு பாஸ். இவ்வளவு தூரத்துல வந்து உங்களை சந்திச்சதுல மகிழ்ச்சி'.
அவர் கிளம்ப, நாங்களும்.

சுற்றி சுற்றி வந்து டயடாகி ரூமுக்கு செல்லும்போது, இரவு 11. காலையில் 6 மணிக்கு பிக்கப் வேன் வருமென்பதால் பேக்கிங் ஞாபகம் வந்தது.
லிப்டில் ஏறும்போது, முனு, பாண்டியிடம் கேட்டான்,
'அண்ணாச்சி, மசாஜ் சென்டர்ல, ஹேப்பி எண்டிங்னாங்களே... என்ன அர்த்தம்"
'ச்சீ போங்க தம்பி'.

முற்றும்

5 comments:

துபாய் ராஜா said...

ஸ்தம்தா... :))

ஆடுமாடு said...

துபாய் ராஜா அப்படின்னா?

☼ வெயிலான் said...

கலக்கலான பயணக்கட்டுரை அண்ணாச்சி!

ஆடுமாடு said...

நன்றி வெயிலான்.

துபாய் ராஜா said...

//துபாய் ராஜா said...
ஸ்தம்தா... :))//

// ஆடுமாடு said...
துபாய் ராஜா அப்படின்னா?//

அப்படின்னா அரேபில என்ஜாய்ன்னு அர்த்தம். :))

நமக்கும் அம்பாசமுத்திரம்தான். :)) உங்க ஊர்லயும் கொஞ்சம் தெரிஞ்ச ஆட்கள் உண்டு.